மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் !

ஓவியம்: ஹரன்

பக்கத்துத் தோட்டத்தில் கிணறை ஆழப்படுத்துவதற்காக வெடி வைத்துக் கொண்டிருந்தனர். மேட்டாங்காலில் நின்றபடி, நீண்ட நேரமாக அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர் 'ஏரோட்டி’ ஏகாம்பரமும், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும். சற்றுநேரத்தில் 'காய்கறி’ கண்ணம்மா வந்துசேர, அந்த மேட்டாங்காலிலேயே ஒரு செய்தியுடன் அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், வாத்தியார்.

மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் !

''விளைச்சல் குறைஞ்சுட்டதால பச்சைப்பட்டாணி விலை ஏறிட்டே இருக்குதாம். நீலகிரி, கொடைக்கானல் பகுதிகள்லதான் இது அதிகம் விளையும். இப்போ சீசன் இல்லாததால வரத்து கம்மியா இருக்கு. இதுக்கு எப்பவுமே தேவை அதிகம் இருக்கும். இதனால டெல்லி, நாக்பூர் பக்கமிருந்தும் வரவழைக்கிறாங்க. இப்படி வர்ற பச்சைப்பட்டாணியில சில ரசாயனங்களைக் கலந்து, பச்சைபசேல்னு ஆக்கி விக்கிறாங்களாம். குறிப்பா, வெளியூர்ல இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வர்ற பயணிகளை குறிவெச்சு இப்படி ஏமாத்துறாங்களாம். கொஞ்ச நாளைக்கு முன்ன ஊட்டி மலையில, 'உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை' அதிகாரிங்க நடத்தின சோதனையில இதைக் கண்டுபிடிச்சிருக்காங்க. ரசாயனம் கலந்த பட்டாணியைச் சாப்பிட்டா, உடல் உபாதைகள் வந்து சேருமாம்'' என்றார் கவலையான குரலில்.

''மின்னுவதெல்லாம் பொன்னல்லனு சும்மாவா பெரியவங்க சொல்லி வெச்சுருக்காங்க. ஏமாத்துறவனுங்களுக்குதான் காலம் நல்லாயிருக்கு. நாமதான் சூதனமா பார்த்து நடந்துக்கணும்'' என்ற காய்கறி, ''நானொரு நல்ல சங்கதி சொல்லப் போறேன்'' என்ற பீடிகையோடு அடுத்த செய்தியைச் சொன்னார்.

''ஈரோடு மாவட்டத்துல அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல இருக்குற... ஈரோடு-பெரியமாரியம்மன் கோவில், பவானி-சங்கமேஸ்வரர், கொடுமுடி-மகுடேஸ்வரர் கோவில், சென்னிமலை-சுப்ரமணியசுவாமி கோவில், சத்தியமங்கலம்-பண்ணாரியம்மன் கோவில் உட்பட 250 கோவில்கள்ல மழை நீர் சேகரிப்பு வசதியை அமைச்சிருக்காங்களாம். அந்த மாவட்டத்துல மொத்தம் 1,200 கோவில்கள் இருக்குதாம். மிச்ச கோவில்களுக்கும் இன்னும் கொஞ்ச நாள்ல மழைநீர்ச் சேகரிப்பு வசதி செஞ்சுடுவாங்களாம். இப்படி எல்லா இடத்துலயும் மழைத் தண்ணியை சேகரிக்கிறதைக் கட்டாயமாக்கிட்டா, எப்படியும் இன்னும் கொஞ்ச வருஷத்துல அக்கம்பக்கமிருக்குற, கிணறு, போர்வெல்ல எல்லாம் தண்ணி ஊறிடும். லட்சக்கணக்குல செலவழிச்சு, கிணறு, போர்வெல்னு ஆழப்படுத்த வேண்டிய அவசியமிருக்காது'' என்று குரலில் உற்சாகம் பொங்கச் சொன்னார் காய்கறி.

''எல்லாம் சரிதான் கண்ணம்மா. ஆனா, இருக்குற தண்ணியையும் கழிவு நீரைக் கலந்து அசுத்தப்படுத்துறாய்ங்களே... அவங்களை என்ன பண்றது?'' என்று அலுத்துக் கொண்ட ஏரோட்டி, தொடர்ந்தார்.

''ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு அடுத்தபடியா, ஜவுளி உற்பத்தியில முன்னணியில இருக்குற மாவட்டம் கரூர். இதே காரணத்தால சுற்றுச்சூழல் விஷயத்துல பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறதும் இந்த மாவட்டங்கள்தான். திருப்பூர்ல நொய்யலாறு... ஈரோடுல பவானியாறுனு சாயப்பட்டறைங்களால களங்கப்பட்டு கிடக்குதுங்க. இதேபோல, கரூர்ல ஓடற அமராவதி ஆறும் பரிதாபமான நிலைக்கு போயிட்டிருக்கு. மத்த ஊர்கள்லயாச்சும் பேருக்கு கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையம்னு இருக்குதாம். ஆனா, கரூர்ல அதுகூட கிடையாது. 2009-ம் வருஷமே அரசாங்கம் உத்தரவு போட்டும், இன்னமும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காம... கிட்டத்தட்ட 800 சாயப்பட்டறைகள் இயங்கிட்டிருக்கு. இந்தப் பட்டறைகள்ல இருந்து வெளியேறுற கழிவு நீரால, நிலத்தடி நீர் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்குதாம்!''

மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் !

''இதைப் பத்தி இந்த விவசாயிகள் அதிகாரிங்கமாருகிட்ட சொன்னாங்களா..?'' என்று இடையில் புகுந்து, ஒரு கேள்வியைப் போட்டார் காய்கறி.

''ஆத்தாமார்... அம்மாமார்... அதிகாரிமார்னு.... எல்லாமார்கிட்டயும் சொல்லிட்டாங்க. ஆனா, எந்த நியாயன்மாரும் உதவிக்கு வரல. மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்துல, ஒரு மாசம் பாக்கியில்லாம இந்தப் பிரச்னையை விவசாயிகள் சொல்லிட்டே இருக்காங்களாம். மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம், அப்பப்போ பேருக்கு நடவடிக்கை எடுக்கறதோட சரியாம். இந்த ஜூலை மாச துவக்கத்துல திருமாநிலையூர்-சணப்பிரட்டி ராஜவாய்க்கால்ல, சாயக்கழிவுநீர் கலக்குறதைச் சுட்டிக்காட்டி அதிகாரிகள்கிட்ட விவசாயிகள் புகார் சொல்லியிருக்காங்க. யாரும் கண்டுக்காததால, பாதிக்கப்பட்ட அம்பது விவசாயிகள் சேர்ந்து, மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்துக்குப் பூட்டுபோட முயற்சி பண்ணியிருக்காங்க. அதுக்குப் பிறகு பதறி ஓடிவந்த அதிகாரிகள், 'அஞ்சு நாள்ல நடவடிக்கை எடுக்கிறோம்'னு சொல்லி சமாதானப்படுத்தியிருக்காங்க'' என்றார் ஏரோட்டி.

''ம்... திருநெல்வேலியில ஓடற தாமிரபரணியும்கூட இப்ப பிரச்னையில சிக்கிட்டிருக்கு'' என்று சொன்ன வாத்தியார்,

''ஏற்கெனவே தாமிரபரணி ஆத்துல தண்ணியில்லாம ஜூன் மாசம் ஒண்ணாம் தேதி, கார் நெல் சாகுபடிக்கு திறக்க வேண்டிய தண்ணியை இன்னும் திறக்கல. அதனால, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள்ல கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர்ல நெல் சாகுபடி நின்னு போயிருக்கு. இந்த நிலைமையில கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்துல 'பெப்சி’ குளிர்பான கம்பெனிக்கு 36 ஏக்கர் நிலம் கொடுத்து, மினரல் வாட்டர் கம்பெனி அமைக்கிறதுக்கு அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்கு. இந்த கம்பெனிக்கு ஒரு லிட்டர் தாமிரபரணி தண்ணியை 37 பைசானு அரசாங்கம் கொடுக்கப் போகுதாம். அந்த கம்பெனி அதை சுத்திகரிச்சு பாட்டில்ல அடைச்சு லிட்டர் 18 ரூபாய்னு விற்பனை செய்யுமாம். ஏற்கெனவே இங்க கோகோ கோலா கம்பெனிக்கு இடம் கேட்டப்போ, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிச்சதால கொடுக்க முடியாம போயிடுச்சு. இப்போ சத்தமில்லாம பெப்சிக்கு இடம் கொடுத்து பூமி பூஜை போட்டுட்டாங்களாம். அதனால, கொந்தளிச்சுப் போயிருக்கற விவசாயிகள், பெரியளவுல போராட்டங்கள நடத்தப் போறாங்களாம்'' என்றார், வாத்தியார்.

''விவசாயிகள் பொழப்பு, போராட்டத்துலேயே முடிஞ்சுடும்போல. இந்த மனுசங்கதான் காசுக்காக இப்படி பண்றாய்ங்கனா, இயற்கையும் விவசாயிகளை வஞ்சிக்குதே'' என்று வேறு எங்கோ முடிச்சுப் போட்ட ஏரோட்டி,

''கர்நாடகா மாநில மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில வழக்கமா ஜூன் மாசத்துல தென்மேற்கு பருவமழை கொட்டும். இதனால அங்க உற்பத்தியாகற காவிரி ஆத்துல அதிக அளவுல தண்ணி வரும். இந்த வருஷம் மழை சரியா பெய்யவே இல்லை. கிட்டத்தட்ட

30 வருஷத்துக்கு பிறகு இப்படி ஆகியிருக்குதாம். கவலையில இருக்கிற கர்நாடகா விவசாயிகள், 'பருவமழை நல்லா பெய்யணும்'னு தலைக்காவிரியில இருக்குற 'காவிரி அன்னை’யை வேண்டிட்டு இருக்காங்களாம். இந்த வருஷமும் மேட்டூர் அணைக்கு தண்ணி வர்றதுக்கான வாய்ப்பு இதுவரைக்கும் இல்லைனு ஆகிப்போனதால... டெல்டா விவசாயிகள் பலரும் குறுவை போக சாகுபடியை மறந்துட்டாங்க. 'சம்பா சாகுபடிக்காவது தண்ணி வந்து சேர்ந்தா பரவாயில்லை'னு அவங்களும் காவிரித்தாயை வேண்ட ஆரம்பிச்சிருக்காங்க'' என்று சொன்னார்.

''ரெண்டு மாநில விவசாயிகளோட வேண்டுதல்களையும் காவிரித்தாய் கனி வோட கேட்டு, ஏதாச்சும் அதிசயம் செய் வானு நம்புவோம்'' என்று காய்கறி சொல்லிக் கொண்டிருக்கும்போதே...

'ஊத்து உடைச்சுக்கிச்சு’ என்ற சந்தோஷக் குரல்கள், கிணறுக்கு வெடி வைத்த இடத்தின் அருகிலிருந்து கேட்க... வாத்தியார், ஏரோட்டி மற்றும் காய்கறி மூன்று பேருமே ஆவலுடன் எழுந்தோட... அத்தோடு முடிவுக்கு வந்தது மாநாடு!

வாத்தியார் சொன்ன கொசுறு: தமிழ்நாட்டில் 'வாட்டர் ஆப்பிள்’

''திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி மலையில இருக்குற தடியன்குடிசை, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்துல, 'வாட்டர் ஆப்பிள்’ங்கிற பழச்செடியை சோதனைக்காக மூணு வருஷமா நட்டு வளத்துட்டு இருக்காங்க. அது, இந்த வருஷம் நல்லா காய்ச்சு குலுங்கிட்டிருக்கு. இது, கர்நாடகா, கேரளா மாநில மலைப்பகுதியில அதிகமா விளையுதாம்.

மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் !

தாண்டிக்குடி சீதோஷ்ண நிலையும் இதுக்கு இணங்கி வர்றதால, இங்கயும் நல்லா விளையுதாம். ஒரு தடவை நட்டுட்டா, 40 வருஷம் வரை காய்க்குமாம். இந்தப் பழத்துல நிறைய சத்துக்கள் இருக்குதாம். விலையும் நல்லா கிடைக்குமாம். அதனால, இதை வளர்க்கச் சொல்லி விவசாயிகள்கிட்ட பரிந்துரை செய்ய ஆரம்பிச்சிருக்குது தோட்டக்கலைத்துறை!''