மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்!

படங்கள்: ஹரன்

ஆடுகளுக்கு தீவனம் அறுத்துக் கொண்டிருந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரத்திடம், வரப்பில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தார், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி. சற்று நேரத்தில் 'காய்கறி’ கண்ணம்மாவின் தலை தெரிய... அறுத்த இலை, தழைகளை ஆடுகளுக்கு வைத்துவிட்டு... ஏரோட்டி வந்து வரப்பில் அமர்ந்துகொள்ள... ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் தொடங்கி வைத்தார், வாத்தியார்.

''முதல்வர் பிறந்த நாளுக்காக... மாசுக்கட்டுப்பாடு வாரிய நிதியில இருந்து 'மாபெரும் மரம் நடும் திட்டம்’ மூலமா வருஷா வருஷம் லட்சக்கணக்குல மரம் நட்டுக்கிட்டிருக்காங்க. இதுல, '2013-14-ம் வருஷத்துக்கு 66 லட்சம் மரக்கன்னுகளை நடணும்’னு திட்டம் போட்டு, இந்த வேலையை வனத்துறைகிட்ட ஒப்படைச்சிருந்தாங்க. 'ஆள் பற்றாக்குறை’னு வனத்துறை சார்புல பிரச்னை கிளப்பினாங்க. இதபத்தி, நாமகூட முன்ன பேசியிருக்கோம். இதனால, '33 லட்சம் மரக்கன்றுகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலை திட்டம்) மூலமா நட்டுடலாம்’னு அரசாங்கம் முடிவெடுத்து... வேலைகளை ஆரம்பிச்சுடுச்சு. இதே வேகத்துல திரும்பவும் புகைச்சலும் ஆரம்பிச்சுடுச்சு. 'ஏற்கெனவே, 100 நாள் வேலை திட்டத்துல பெரும்பாலும் பொய் கணக்கு எழுதித்தான் சம்பளம் போட்டுக்கிட்டு இருக்காங்க. இதேமாதிரிதான் மரக்கன்னு நடுற திட்டமும் ஆகிட்டிருக்கு. இதைவிடக் கொடுமை... காடு, சாலை ஓரம்னு குழி எடுக்கிறப்போ, ஆட்கள் மூலமா எடுக்க முடியாம, பொக்லைன் வெச்சுதான் குழி எடுக்கிறாங்களாம் வனத்துறைகாரங்க. 'இந்த மாதிரி காட்டுப்பகுதியில எல்லாம் கடப் பாரையை வெச்சுக்கிட்டு கையால குழி எடுக்க யாரு வருவாங்க'னு கேக்கறாங்களாம் வனத்துறை அதி காரிங்க'' என்றார் வாத்தியார்.

''வாஸ்தவம்தானே..! இந்த அரசியல்வாதிங்க செய்றது எல்லாமே 'பெருமைக்கு மாவு இடிச்ச கதை’யாத்தான் இருக்கும்போல. எதுக்கு இந்த வேண்டாத வேலை. மக்களோட வரிப்பணத்துக்குத்தான் வேட்டு'' என்ற காய்கறி, தான் கொண்டு வந்திருந்த பப்பாளிப் பழத்தைத் துண்டுகளாக்கி, ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தார்.

பப்பாளியைச் சுவைத்துக் கொண்டே ஒரு செய்தியைச் சொன்னார் வாத்தியார். ''கேரளாவுல ஏகப்பட்ட ஆறுகள், குளங்கள் இருந்தாலும்... அங்கெல்லாம் கைப்பிடி மணலைக்கூட அள்ள முடியாது. அரசாங்கத் தேவைக்கு மட்டும்தான் மணல் எடுக்கலாம். தனியார், 'மண்ணை அள்ளக்கூடாது’னு சட்டமே இருக்கு. தனியார் தேவைக்கெல்லாம் பக்கத்து மாநிலங்கள்ல இருந்துதான் மணல் வாங்குறாங்க. குறிப்பா, தமிழ்நாட்டுல இருந்துதான் அதிகளவுல மணல் போகுது. 'மணல் கொண்டு போறாங்க’னு சொல்றதைவிட 'கடத்திட்டுப் போறாங்க’னு சொல்றதுதான் சரி.  

மரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்!

மணலுக்கு அதிகத்தேவை இருக்கிறதால... செயற்கை மணல் உற்பத்திக்கும் கேரள அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்குது. இதுக்கான முலப்பொருள், கருங்கல்தான். இதையும் தமிழ்நாட்டுல இருந்துதான் கடத்திட்டு போறாங்க. இதை, நம்ம கனிம வளத்துறையோ... வருவாய்த்துறையோ... இல்லை போலீஸோ கண்டுக்கிறதில்லையாம். மாமூலை வாங்கிட்டு கையைக் கட்டி நிக்கறாங்களாம். இப்படியே போனா, இன்னும் கொஞ்ச நாள்ல தமிழகத்து மணல் மொத்தமும் மாயமா போயிரும்... மலையெல்லாம்

கரைஞ்சு போயிரும்னு சூழல் ஆர்வலர்கள் பயப்படுறாங்க'' என்றார்.

''சுருட்ட முடிஞ்சவரைக்கும் சுருட்டிக்கிட்டு, நம்ம பிள்ளைங்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வசதியா வாழ வைக்கலாம்ங்கிற மனநிலையிலதான அரசியல்வாதிங்க இருக்காங்க. இவங்களுக்கு ஓட்டுப்போட்டவன் நாசமாபோக வேண்டியதுதான்'' என்று கோபப்பட்ட ஏரோட்டி, ஒரு செய்தியைச் சொன்னார்.

''அந்தியூர், தாளவாடி, பர்கூர் மலைப்பகுதிகள்ல 'பர்கூர் மாடு’ (மலை மாடு)னு ஒரு நாட்டு மாட்டுஇனம் இருக்கு. உழுறது மாதிரியான விவசாய வேலைகளுக்கு இந்த மாடுகளைப் பயன்படுத்துறாங்க. குறிப்பா, தொழுவுரத்துக்காக இந்த மாடுகளை கிடை அடைப்பாங்க. நாட்டு மாடுங்கிறதால மலைகள்ல மேய்ச்சலுக்கு அனுப்பிதான் வளர்த்துட்டு இருந்தாங்க. இப்போ, இந்த மலைப் பகுதிகளை 'சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்’னு மாத்திட்டதால, ஆடு, மாடுகளை மேய்க்கிறதுக்கு வனத்துறை தடை விதிச்சுடுச்சு. அதனால, தோட்டங்கள்ல வளர்க்கிற மாடுகளுக்கு தீவனம் வாங்கிப்போட முடியாம வித்துட்டு இருக்காங்களாம். இந்த மாடுகள்ல பால் அதிகமா கிடைக்காது. கிடைக்கிற பால், கன்னுக்குட்டிகளுக்குத்தான் சரியா இருக்கும். அதனால, வருமானம் இல்லாம மாடுகளை வளர்க்க முடியலையாம். முன்ன, இயற்கை விவசாயத்துக்கு மாறுறவங்க நாட்டுமாடு தேவைக்காக ஒரு மாடு பத்தாயிரம் ரூபாய்னு வாங்கிட்டுப் போவாங்களாம். இப்போ விவசாயிங்க 'வயித்து வலி’க்காக விக்கிறதால அஞ்சாயிரம், ஆறாயிரம் ரூபாய்னுதான் விலை கேக்குறாங்களாம். வந்த வரைக்கும் லாபம்னு பலரும் விக்கிறாங்களாம். இதையெல்லாம் பார்த்துட்டு, இந்த நாட்டு ரக மாடும் அழியப்போகுதேனு பலரும் கவலைப்படுறாங்க'' என்றார்.

அந்த சமயத்தில் ஏரோட்டிக்கு செல்போனில் அழைப்பு வர எடுத்துப் பேசியவர், அழைப்பைத் துண்டித்துவிட்டு... ''மாமரங்களை கவாத்து பண்ண ஆளுங்கள வரச்சொல்லியிருந்தேன். வந்துட்டிருக்காங்களாம்'' என்றார்.

''கவாத்துனு சொன்னதும்தான்யா ஞாபகத் துக்கு வருது...'' என்ற வாத்தியார்,

''திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம் கிராமியப்பல்கலைக்கழகத்துல இருக்குற வேளாண்மை அறிவியல் மையம் மூலமா மாமரத்துல கவாத்து செய்ற கருவியை அறிமுகப்படுத்தியிருக்காங்க. வழக்கமா அரிவாளைத்தான் பயன் படுத்துவாங்க. ஆனா, அரிவாளால வெட்டும்போது மரத்துல காயம்பட்டு, அதன் மூலமா நோய்த் தாக்குதலும் வருமாம். இந்தக் கருவியைப் பயன்படுத்தினா காயம் படாம கவாத்து செய்யலாமாம். இதை எப்படிப் பயன்படுத்துறதுனு விவசாயிகளுக்கு இலவசப் பயிற்சி கொடுக்கப் போறாங்களாம். இதுக்காக முதல்கட்டமா தென்மாவட்டங் களைத் தேர்ந்தெடுத்திருக்காங்க'' என்று சொல்லும்போதே, நான்கைந்து இருசக்கர வாகனங்களில் வேலையாட்கள் வந்து இறங்க... ஏரோட்டி எழுந்து ஓடினார். அத்தோடு அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.

கோழிப் பண்ணைக்கு மானியம்!

தமிழக அரசு, கோழிப் பண்ணைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக கோழி வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. 2014-15-ம் ஆண்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பயனாளிகளுக்கு கோழிப் பண்ணைக்கான கொட்டகைகள் அமைப்பதற்கான செலவில் 25 சதவிகிதம் தமிழக அரசின் மானியமாகக் கிடைக்கும். தவிர, நபார்டு வங்கியின் மூலமாக 25 சதவிகிதம் மானியமாகக் கிடைக்கும். கிராமப்புற விவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர் ஆகியோர் இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

கோழிப் பண்ணை அமைக்க விரும்புபவர்கள் பெயரிலோ அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர் பெயரிலோ நிலம் இருக்க வேண்டும். ஏற்கெனவே கொட்டகை அமைத்துள்ளவர்கள், தொழிலை விரிவுபடுத்தி புதிய கொட்டகை அமைக்க வேண்டுமென்றாலும் மானியம் கிடைக்கும்.

பயன்பெற விரும்புவோர், அந்தந்த மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில், ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு, தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மையங்களில் மூன்று நாட்கள் பயிற்சி வழங்கி, பிறகு மானிய உதவிகளும் வழங்கப்படும்.