மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை : இயற்கை அங்காடி நடத்த பயிற்சி அவசியமா?

படங்கள்: தி.விஜய்

புறா பாண்டி

 ''தென்னிந்தியாவில் 'காலா நமக்’ என்கிற கருப்பு ரக நெல் பயிரிடப்படுவதாகக் கேள்விப்பட்டேன். எங்களுக்கு மியான்மர் நாட்டில் இருந்து, அந்த அரிசி வருகிறது. இதன் சிறப்புத் தன்மை என்ன?''

-அமீன் அகமது, பூடான்.

காலா நமக் ரகத்தை சாகுபடி செய்துவரும் திருவண்ணாமலை மாவட்டம், பெரிய கொழப்பளூர் கிராமத்தைச் சேர்ந்த, முன்னோடி விவசாயி, மருத்துவர் மணி, பதில் சொல்கிறார்.

''காலா என்ற சொல்லுக்கு ஹிந்தியில 'கருப்பு’ என்று அர்த்தம். 'நமக்’ என்றால், 'உப்பு’. உடம்புக்கு மொத்தம் 72 வகையான தாது உப்புகள் தேவை. இதில் கிட்டத்தட்ட 40 தாது உப்புகள், காலா நமக் ரக அரிசியை உண்ணும்போது கிடைக்கின்றன என்கிறார்கள். மூளைநரம்பு இயங்காமை, சிறுநீரகப் பிரச்னை, கேன்சர், தோல் சம்பந்தமான நோய்கள், ரத்த சம்பந்தமான நோய்கள் என்று நிறைய நோய்கள் இந்த அரிசியைச் சாப்பிட்டால், கட்டுப்படும். கௌதம புத்தர் இந்த அரிசி உணவைச் சாப்பிட்டார் என்று புத்த நூல்கள் சொல்கின்றன. இப்போதும்கூட புத்தத் துறவிகள் இந்த அரிசியை வழிபட்டு, உணவாக உட்கொள்ளும் வழக்கத்தைக் கடைபிடிக்கின்றனர்.

நீங்கள் கேட்டவை : இயற்கை அங்காடி நடத்த பயிற்சி அவசியமா?

இந்த நெல் ரகத்தின் பெயரை வைத்துப் பார்க்கும்போது, வடஇந்தியாவில் இது அதிகமாக பயிர் செய்யப்பட்டிருக்கலாம். குறிப்பாக, டெல்டா பிரதேசமான ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டிருக் கலாம். தென்னிந்தியாவில் புத்த மதம் பரவியபோது, இங்கேயும் வந்திருக்கலாம்.

இந்தப் பாரம்பரிய நெல் ரகம், தமிழ்நாட்டிலும் ஒரளவுக்கு சாகுபடி செய்யப்படுகிறது. நானும் ஆண்டுதோறும் சாகுபடி செய்கிறேன். இந்த ரகத்தின் வயது 120 நாட்கள். ஆடி முதல், கார்த்திகை வரை உள்ள மாதங்களில் சாகுபடி செய்யலாம். ஏக்கருக்கு, சராசரியாக 20 மூட்டை (75 கிலோ) கிடைக்கிறது. விதைநெல் கிலோ ரூ.40 வீதம் விற்பனையாகிறது. அரிசியாக விற்கும்போது, கிலோ 60 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.''

தொடர்புக்கு, மணி, செல்போன்: 96294-66328

''இயற்கை வேளாண் விளைபொருட்கள் விற்பனை அங்காடி நடத்தப் பயிற்சி கொடுக்கிறோம், வழிகாட்டுகிறோம் என்று ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்தப் பயிற்சிகளுக்குச் செல்லலாமா? இயற்கை விளைபொருட்கள் அங்காடி தொடங்குவதற்குத் தேவையான அடிப்படைத் தகவல்களைச் சொல்லுங்கள்?''

ஆர். சுதா, திருப்பூர்

சென்னையில் ரீஸ்டோர் இயற்கை அங்காடி நடத்தி வரும் அனந்து பதில் சொல்கிறார்.

''தமிழ்நாடு முழுவதும், இயற்கை வேளாண் அங்காடிகள், புதியதாகத் திறக்கப்படுவதும், சில மாதங்களில் மூடப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இதற்கு காரணம், தவறான வழிகாட்டல்கள்தான். எந்தவிதமான செயல்பாட்டுக்கும், பயிற்சி என்பது அவசியம். ஆனால், அந்தப் பயிற்சி வெறும் வியாபார நோக்கத்திலிருந்தால், அதன் நோக்கமே செயல் இழந்துவிடும்.

இயற்கை வேளாண் விளைபொருட்களுக்கு நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டுதான், 'பயிற்சி கொடுக்கிறோம். பொருட்களை நாங்களே வாங்கி, கடை வைத்துக் கொடுக்கிறோம்' என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் காட்டுபவர்கள் பெருகி வருகின்றனர். இவர்களிடம் லட்சக்கணக்கில் ஏமாறுபவர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இதில் எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலரும் ஏமாந்துள்ளார்கள்.

ஆரம்பத்தில், 'அங்காடி தொடங்க இத்தனை உதவிகள் செய்கிறார்களே!' என்று நம்பி பணத்தைக் கட்டிவிடுகிறார்கள். ஆனால், அதன் பிறகுதான் சுயரூபம் தெரிந்து புழுங்குகிறார்கள். இப்படி அமைத்துத் தரப்படும் கடைகளுக்கு விற்பனைக்காக அவர்களால் தரப்படும் விளைபொருட்கள், பெரும்பாலும் ரசாயன விவசாயத்தில் விளைந்ததாகவே இருக்கின்றன. பொருட்களை எங்கே, எந்த இயற்கை விவசாயியிடம் வாங்கினீர்கள்? என்று கேட்டால், பதில் வருவதில்லை. அதிக வாடகைக்கு, இடத்தைப் பிடித்து, கடை நிறைய பொருட்களை நிரப்பிக் கொடுத்து விடுகிறார்கள். இரண்டு, மூன்று மாதங்களில் எதிர்பார்த்த விற்பனை இல்லாமல் போவதால், கடைசியில் மூடுவிழா நடத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

நீங்கள் கேட்டவை : இயற்கை அங்காடி நடத்த பயிற்சி அவசியமா?

எனவே, ஏற்கெனவே இருக்கும் இயற்கை அங்காடிகளின் செயல்பாடுகளை நன்கு தெரிந்துகொண்டு இதில் இறங்குவது நல்லது. தேவைப்பட்டால், ஏற்கெனவே நன்றாக செயல்படும் நிறுவனங்களில் சேர்ந்து பயிற்சி எடுக்கலாம். புதிதாக இயற்கை அங்காடிகளைத் தொடங்க விரும்புபவர்கள் கட்டாயம் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். பதப்படுத்தப்பட்ட, நெல்லி, கற்றாழை... போன்ற சாறு வகைகளை விற்பனைக்கு வைக்க வேண்டாம். காரணம், நீண்ட நாட்கள் அவை கெட்டுப்போகமல் இருக்க ரசாயனம் கலக்கிறார்கள். அடுத்து, சிறுதானிய பிஸ்கட்கள். இதில் 15% மட்டுமே சிறுதானியம் கலக்கப்படுகிறது, மீதி வனஸ்பதி, மைதா... போன்றவை கலந்துதான் செய்கிறார்கள். இதையும் தவிர்த்துவிடலாம்.

அங்காடியை, அதிக வாடகை கொடுத்து நடத்தக் கூடாது. முதல் ஆறுமாத காலத்துக்கு, அரிசி, பருப்பு, செக்கு எண்ணெய், மஞ்சள், மிளகாய் தூள் போன்றவற்றை மட்டும் விற்பனை செய்யவும். ஆறு மாதம், கழித்து ஓரளவு, உங்கள் அங்காடி அக்கம்பக்கத்தில் பிரபலமாகியிக்கும். அதன்பிறகு காய்கறிகளை வாங்கி விற்பனை செய்யவும். ஆரம்பத்திலேயே, காய்கறிகளை விற்பனைக்கு வைத்தால், அதிகமாக விற்பனையாகாது. சில நாட்களில் அழுகி, நஷ்டத்தைக் கொடுக்கும். இதை தவிர்ப்பதற்காகத்தான், ஆறு மாதம் கழித்து, காய்கறிகளை விற்பனை செய்யச் சொல்கிறோம். அப்போது, அங்காடிக்கு வருபவர்களின் தேவை, எண்ணிக்கை ஓரளவு தெரியும். அதற்கு தக்கப்படி திட்டமிட முடியும்.

விவசாயிகளிடம் வாங்கும் பொருட்களுக்கு, போக்குவரத்துச் செலவு போக, அதிகபட்சம் 25% லாபம் வைத்து விற்கலாம். கடைசியாக, அங்காடிக்கு, பொருட்களை சப்ளை செய்யும் விவசாயிகளின் பெயரையும், ஊரையும் குறிப்பிட்டு அறிவிப்பு அட்டை வைக்கலாம். இது பொருட்களின் மீதும், உங்களின் மீதும் மதிப்பை ஏற்படுத்தும்.''

தொடர்புக்கு, செல்போன்: 94441-66779

''எங்கள் கறவை மாட்டின் மடியில் உண்ணிகள் அட்டைப் போல ஒட்டிக் கொள்கின்றன. அதை அகற்றினால், அந்த இடத்திலிருந்து ரத்தம் வருகிறது. ஆங்கில மருந்துகளால் பெரிதாக பலன் இல்லை. இயற்கை மருத்துவத்தில் தீர்வு கிடைக்குமா?''

ஐ.எஸ். சுந்தரமூர்த்தி, ஐவதுகுடி.

தஞ்சாவூரில் உள்ள  மரபுசார் மூலிகை வழி கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர். புண்ணியமூர்த்தி.

நீங்கள் கேட்டவை : இயற்கை அங்காடி நடத்த பயிற்சி அவசியமா?

''நிச்சயம், நமது பாரமபரிய மூலிகை மருத்துவத்தில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உண்டு. தும்பை, துளசி, திருநீற்றுப்பச்சிலை, குப்பைமேனி ஆகியவற்றை தலா, ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ளவும். இத்துடன், ஓமவல்லி இலைகள் 4, பூண்டு 1 பல், மஞ்சள்தூள் 1 ஸ்பூன், கற்பூரம் 1 வில்லை ஆகியவற்றை அம்மியில் வைத்து, மையாக அரைக்கவும். இந்தக் கலவையில் தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணெய் 100 மில்லி கலந்து எடுத்துக் கொள்ளவும். பால் கறந்த நேரம் போக, மற்ற நேரங்களில் இந்த மருந்தை மடியில் தடவி வரவும். மூன்று நாட்களுக்கு இப்படிச் செய்தால், உண்ணிகள் மடிப்பக்கம் எட்டிப் பார்க்காது. மருந்து தடவும் முன்பு, மடியில் உள்ள உண்ணிகளை அகற்ற, தேங்காய் நாரை தண்ணீரில் நனைத்துத் தேய்க்கவும். இதனால், உண்ணிகள் எளிதாக வந்துவிடும். தேங்காய் நார் கொண்டு தேய்ப்பதால், மடியில் புண் வரலாம். அதற்காக பயப்பட வேண்டாம், நாம் தடவும் மருந்துகள் புண்ணை ஆற்றிவிடும்.''

தொடர்புக்கு, மரபுசார் மூலிகை வழி கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர்.
தொலைபேசி: 04362-204009
செல்போன்: 98424-55833

நீங்கள் கேட்டவை : இயற்கை அங்காடி நடத்த பயிற்சி அவசியமா?