மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு !

தங்கமுட்டையிடுமா ஈமு ?

நிலக்கடலைத் தோட்டத்தில் களையெடுக்க ஆட்களை வரச் சொல்லி இருந்ததால், காலையிலேயே கம்பஞ்சோறைத் தூக்குவாளியில் கரைத்துக் கொண்டு 'ஏரோட்டி’ ஏகாம்பரம் கிளம்பிவர, செய்தித்தாள்களை கக்கத்தில் இடுக்கியபடி வழியில் சேர்ந்து கொண்டார் 'வாத்தியார்' வெள்ளைச்சாமி. வேலையாட்களை முடுக்கி விட்டபடி வரப்பில் ஏரோட்டி வலம் வர... மரத்தடியில் அமர்ந்து செய்தித்தாளில் மூழ்கினார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு !
##~##

''என்னங்கய்யா, நான் வந்ததுகூட தெரியாம, பரீட்சைக்குப் படிக்கிற மாதிரி விழுந்து விழுந்து படிச்சுட்டுருக்கீங்க. அப்படி என்ன முக்கியமான சேதி?'' 'காய்கறி’ கண்ணம்மாவின் சத்தம் கேட்டு வாத்தியார் நிமிர, துண்டை உதறியபடி ஏரோட்டியும் வந்து அமர... களை கட்ட ஆரம்பித்தது, அன்றைய மாநாடு.

''பேப்பர், டி.வி-னு எல்லாத்துலயும் அண்ணா ஹஜாரேதான் தலைப்புச் செய்தி. அந்த சேதியைத்தான் படிச்சுட்டுருந்தேன்.

எப்படியெல்லாமோ தடைபோட பார்த்தும், அசராம 'லோக்பால் மசோதா'வுக்காக உண்ணாவிரதத்தை ஆரம்பிச்சுட்டார். அவருக்கு ஆதரவா நிறைய குரல் கேக்கறதால அரசியல்வாதிகளெல்லாம் பயந்து நடுங்கறாங்களாம்'' என்றார் வாத்தியார்.

'இவ்வளவு செல்வாக்கா அவருக்கு?' என்று ஆச்சரியமாகக் கேட்டார், காய்கறி.

''பதவிக்கு வர்றவன் அத்தனைப் பேரும் சுருட்டுற மட்டுக்கும் சுருட்டறாய்ங்க. ஊழல் செஞ்சு கமிஷன் அடிக்கறதோட நிறுத்திக்காம... நில அபகரிப்பு, கற்பழிப்புனு பதவியையும், செல்வாக்கையும் பயன்படுத்தி அநியாயம் பண்ணுறானுங்க. அது பொறுக்காத மக்கள், சமயம் பார்த்துக்கிட்டிருந்தாங்க. இப்ப ஒரு ஆள் குரல் கொடுத்ததும்... அவரோட கைகோக்க ஆரம்பிச்சுட்டாங்க'' என்ற வாத்தியார்,

''அடுத்தாப்புல நமக்காகவும் போராடப் போறதா சொல்லியிருக்கார் அண்ணா. 'விவசாய நிலத்தைக் கையகப்படுத்தறதுல இருக்கற முறைகேடுகளைக் களையறதுக்காக போராடுவேன்'னு சீறலா சொல்லியிருக்கார். ம்... பார்ப்போம், அப்படியாச்சும் நமக்கு விடியுமானு!'' என்று சொல்ல...

வேக வைத்த குச்சிக்கிழங்கைக் கூடையில் இருந்து எடுத்து ஆளுக்குக் கொஞ்சமாகக் கொடுத்தார் காய்கறி.

அதை சாப்பிட்டுக் கொண்டே... ''முன்னயெல்லாம் இந்தக் கிழங்கை மட்டுமே அவிச்சித் தின்னு பசியாத்தியிருக்கோம். இன்னிக்கு இருக்குற இளசுக... இதையெல்லாம் தொட்டுக்கூடப் பாக்குறதில்ல.

இதை சாப்பிடுற பொருளாவே நிறைய பேர் பாக்குறதில்ல. ஆனாலும், கிழங்கு மாவு தயாரிக்க உபயோகப்படுறதால நிறைய ஊர்கள்ல இது முக்கியப் பயிராவே மாறிடுச்சு. தர்மபுரி மாவட்டத்துல நெல், கரும்பு, மஞ்சளுக்கு அடுத்தபடியா குச்சிக் கிழங்குதான். தேவை அதிகமானதால... இதுல வீரிய ரகமெல்லாம்கூட வந்துருச்சு. ஆனாலும் நாட்டுரகம்தான் நல்லா ருசிக்கும்'' என்று சப்புக் கொட்டியபடியே வாத்தியார் முடிக்க,

காய்கறி தொடர்ந்தார், ''இந்த சங்கதி மின்னல் வேகத்துல பரவிக்கிட்டிருக்கு. ஈமு கோழி விஷயத்தைத்தான் சொல்றேன். காய்கறிக் கடை வெச்சுருக்கற எந்தங்கச்சி, அதை மூடிட்டு ஈமு கோழிய வளர்க்கப் போறேன்னு சொல்ற அளவுக்கு ஆகிப் போச்சுதுனா பார்த்துக்கோங்க. தங்க முட்டை போட்டுற வாத்து கணக்கா, ஊரெல்லாம் இதே பேச்சுதான். நிஜத்துல இந்த ஈமு கோழி விஷயத்துல என்னதான் நடக்குதுனு சொல்லுங்கய்யா...?'' என்று கவலையோடு கேட்டார் காய்கறி.

தொண்டையைப் பெரிதாகக் கனைத்துக் கொண்ட வாத்தியார், ''கரும்புக்காட்டுக்கு தீ வெச்சது மாதிரி... சடசடனு அது பத்தி பரவிக்கிட்டேதான் இருக்குது. ஆனா, இந்த ஈமு விஷயத்துல என்னதான் நடக்குதுனு ஒண்ணும் வெளங்கல.

ஒரு காலத்துல... 'பயோ-டீசலுக்காக காட்டாமணக்கு பயிரிடுங்கள். லட்சாதிபதி ஆகலாம்'னு பத்த வெச்சாங்க. அதை நம்பி பல விவசாயிக சுருண்டு போனாங்க. அந்தக் கதையா இதுவும் ஆயிடுமோனு பயமாத்தான் இருக்கு. எதுக்கும் நாலு இடத்துல விசாரிச்சு, என்ன உண்மைனு தெரிஞ்சுக்கிட்டு இறங்கச் சொல்லு உன் தங்கச்சிய!'' என்று அக்கறையோடு பதில் தந்தார் வாத்தியார்.

முகத்தில் மாறாத புன்னகையை ஏற்றிக் கொண்ட ஏரோட்டி, ''வறட்சிக்கு இலக்காகும் பகுதிகள் திட்டப்படி, 1980-ம் வருஷம் சிவகங்கை மாவட்டத்துல 12 ஆயிரம் போர்வெல் போட்டாங்களாம். விவசாயிகளெல்லாம் சங்கம் அமைச்சு, தண்ணியைப் பிரிச்சு எடுத்துக்கணுங்கிறதுதான் நோக்கம். அந்தச் சங்கம்லாம் இப்போ சரியா செயல்படலையாம். அதைப் பத்தி அதிகாரிக ஆய்வு செய்தப்போ... ஆயிரக்கணக்கான போர்வெல்லையே காணலையாம்'' என்றார்.

''என்னய்யா இது... ஒரு சினிமாப் படத்துல 'எங் கிணத்தைக் காணோம்'னு போலீஸ்கிட்ட 'வைகைப் புயல்' வடிவேலு கம்ப்ளயிண்ட் கொடுத்தக் கதையால்ல இருக்கு'' என்று சொல்லிச் சிரித்தார் காய்கறி.

''கிட்டத்தட்ட அதேதான் கண்ணம்மா! போர்வெல் போட்டு அது தூர்ந்து போச்சா... இல்லை போடாமயே போட்டதா கணக்கு எழுதிட்டாங்களானு குழம்பிப் போய்க் கிடக்குறாங்களாம் விஷயத்தை விசாரிக்கப் புறப்பட்ட அதிகாரிக'' என்றார் ஏரோட்டி.

''ம்... இதெல்லாம் ஒரு அதிசயமா, ஏற்கெனவே நடந்ததைத்தானே சினிமாவுல காமிச்சிருக்காங்க. அந்தக் காட்சி நிஜத்துல தொடர்ந்துகிட்டே இருக்கு'' என்று அலுத்துக் கொண்ட வாத்தியார்,

''பட்ஜெட்ல விவசாயத்துக்காக ஏகப்பட்ட திட்டங்களை அறிவிச்ச மாதிரி... வேளாண்துறை மானியக் கோரிக்கையிலயும் நிறைய விஷயங்களை வேளாண் துறை அமைச்சர் சொல்லியிருக்கார்.

ஆனா, நெல். கரும்பு, பாலுக்கெல்லாம் விலை ஏத்திக் கேட்டு ரொம்ப நாளா சம்சாரிக போராடிக்கிட்டுருக்காங்க. அதைப் பத்தி எந்த அறிவிப்பும் வரல. எதிர்பார்ப்போட காத்திருக்காங்க பால் விவசாயிங்க'' என்றார்.

அதை ஆமோதிக்கும் வகையில் வேகமாகத் தலையாட்டிய ஏரோட்டி, '' உண்மைதான். எப்படி கணக்குப் பாத்தாலும்... நெல் விவசாயிக்கு 2,000 ரூபாய்க்கு குறையாம நஷ்டம்தான் வரும். ஏதோ வீட்டுச் செலவுக்கு சாப்பாட்டுக்கு ஆகுறதாலதான் திரும்பத் திரும்ப அதை சாகுபடி பண்ணுறாங்க'' என்றவர், ''தோட்டத்துல வேலையாளுங்க என்ன பண்றாங்கனு தெரியலையே..?'’ என்று கிளம்ப, முடிவுக்கு வந்தது அன்றைய மாநாடு.

 வாத்தியார் சொன்ன கொசுறு:

 கோயம்புத்தூர் மாவட்டம், பொங்கலூர் பக்கமெல்லாம் வைகாசிப் பட்டத்தில் விதைச்ச மக்காச்சோளம் இப்போ அறுவடைக்கு வந்திருக்கு. இந்த சமயத்துல அதிகத் தேவை இருக்கறதால விலை ஏறிக்கிட்டே இருக்காம். குவிண்டால் 900 ரூபாய்... 1,000 ரூபாய்னு வித்துக்கிட்டிருந்த மக்காச்சோளம் இப்போ குவிண்டால் 1,300 ரூபாய்க்கு மேல வித்துக்கிட்டிருக்காம். இன்னும் விலை ஏறும்னு சொல்றாங்களாம். அதனால விவசாயிகளுக்கு சந்தோஷமாம்.