மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

மான்சான்டோ வலையில் பி.ஜே.பி.- சிவசேனா எம்.பி.க்கள்! ஓவியம்: ஹரன்

மோட்டார் அறையின் அருகே வளர்ந்திருந்த வாழை மரத்தில் தார் தொங்கிக் கொண்டிருக்க, அதை உன்னிப்பாகப் பார்த்தபடி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர், 'ஏரோட்டி’ ஏகாம்பரமும், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும். ''என்ன இது, வாழைத்தாரு இத்தனை ஆராய்ச்சி?'' என்று குரல்கொடுத்தபடியே 'காய்கறி’ கண்ணம்மா வந்தமர... திரும்பிப் பார்த்த இருவரும் அருகில் வந்தமர்ந்தனர்.

''வாழைத்தாரு வழக்கத்தைவிட கொழுக் மொழுக்னு இருக்கே... ஏதாச்சும் மரபணு மாத்தின வாழையா இருக்குமோனு ஒரு சந்தேகம்... அதான் கண்ணம்மா...'' என்று ஏரோட்டி சொல்ல...

''மரபணு மாற்றுப் பயிர்னு சொன்னதும்தான் ஒரு சேதி ஞாபகத்துக்கு வருது. ஒரு பக்கம் மரபணு மாற்றுப் பயிர்கள் வேண்டாம்னு பி.ஜே.பி-யோட தாய் அமைப்பான விசுவ ஹிந்து பரிஷத் சொல்லிட்டிருக்கு. கூட்டாளியான சிவசேனாவும் இதையேதான் சொல்லிட்டிருக்கு. பி.ஜே.பி-யும்கூட இதுக்கு தலையாட்டியிருக்கு. ஆனா, இன்னொருப் பக்கம் மரபணு மாற்று விதைகளோட பிரம்மாவா இருக்கிற, அமெரிக்காவின் மான்சான்டோ கம்பெனி விரிச்ச வலையில, இந்த பி.ஜே.பி, சிவசேனா எம்.பி-க்கள் விழுந்து கிடக்கிறதுதான் பயமா இருக்கு. ஒவ்வொரு எம்.பி-க்கும் 3 லட்ச ரூபாய்க்கு மேல செலவு செய்து, அமெரிக்காவுக்கு அழைச்சுக்கிட்டுப் போறதுக்கான திட்டத்தைத் தீட்டியிருக்கு மான்சான்டோ. இப்ப இந்த விஷயம்தான் தீயா பரவிக்கிட்டிருக்கு'' என்று நொந்துகொண்டார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு

''பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டிக்கிட்டு பொழைப்பை ஓட்டிக்கிட்டிருக்கிற விலாங்கு மீன் சாதியா இருப்பாங்களோ...'' என்று சிடுசிடுத்தார் காய்கறி.

''சாதி, மதம் இன்னும் என்னவெல்லாம் உண்டோ... அதெல்லாமும்தான் இருக்கும். எல்லாம் நம்ம தலையெழுத்து'' என்று விரக்தியாகச் சிரித்தார் வாத்தியார். அடுத்து பேசிய ஏரோட்டி, ''பி.ஏ.பி.னு சொல்லப்படுற பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டம் தமிழ்நாட்டுல இருக்குற பெரிய பாசனத்திட்டங்கள்ல ஒண்ணு. மேற்குத்தொடர்ச்சி மலையில இருக்குற பரம்பிக்குளம் அணைக்கு, சோலையாறு மூலமா வர்ற தண்ணி, சர்க்கார்பதி நீர்மின்சார நிலையத்தைக் கடந்து, காண்டூர் கால்வாய் வழியா திருமூர்த்தி அணைக்கு வருது. அங்க இருந்து குடிநீருக்கும், பாசனத்துக்கும் அனுப்புறாங்க.

கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள்ல கிட்டத்தட்ட 3 லட்சத்து 77 ஏக்கர் நிலங்கள்ல இதன் மூலமா பாசனம் நடக்குது. இந்தப் பகுதிகள்ல இருக்குற நிறைய தொழிற்சாலைக்காரங்க, இந்தக் கால்வாயை ஒட்டி இருக்குற நிலங்கள்ல 10 சென்ட் அளவுக்கு மட்டும் அதிக விலை கொடுத்து வாங்கிக்கிறாங்களாம். அந்த நிலத்துல கிணறு தோண்டி, மின்சார இணைப்பு வாங்கி மோட்டார் வெச்சு, குழாய் மூலமா தண்ணி கொண்டு போறாங்களாம். ராத்திரி நேரங்கள்ல நேரடியாவே கால்வாய்ல இருந்து மோட்டார் மூலமா உறிஞ்சுறாங்களாம். நெகமம், செஞ்சேரிமலை, கம்மாளப்பட்டி, சுல்தான்பேட்டை பகுதிகள்ல மட்டும் இதுமாதிரி நூறு திடீர் கிணறுகள் உருவாகியிருக்குதாம். இதனால கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணி போய் சேர்றதில்லையாம்'' என்றார்.

''பிச்சை எடுக்குதாம் பெருமாளு... அதையும் பிடுங்குச்சாம் அனுமாருங்கற கதையால்ல இருக்கு'' என்ற காய்கறி தொலைக்காட்சியில்தான் பார்த்த ஒரு செய்தியைச் சொன்னார்.

'கரூர்ல நான்குவழிச் சாலை அமைக்கிறதுக்காக நெடுஞ்சாலையில இருந்த ஏராளமான மரங்களை வெட்டிட்டு இருக்காங்களாம். கருப்பக்கவுண்டன்புதூர் சுங்கச்சாவடி பக்கத் துல 150 வயசான அரச மரத்தை வெட்டறதைக் கேள்விப்பட்ட சமூக அமைப்புகள், ஒப்பந்தக்காரங்ககிட்ட பேச்சுவார்த்தை நடத்தி, மரத்தோட அடிபாகத்தை மட்டும் விலைக்கு வாங்கி, கிரேன் மூலமா வேரோட எடுத்துட்டுப் போய் சேரன் பொறியியல் கல்லூரியில நட்டு வெச்சுருக்காங்க. வேர் சேதப்படாததால மரம் உயிர் பிடிச்சுடும்னு சொல்றாங்க'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே... சடசடவென மழை அடிக்க ஆரம்பிக்க... அன்றைய மாநாடு சட்டென முடிவுக்கு வந்தது.

''கம்பெனிகளுக்கு  

மரத்தடி மாநாடு

5 லட்சம் கோடி மானியம்!''

கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி, உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தமிழக விவசாய சங்கம் ஆகியவற்றின் சார்பாக, கோவில்பட்டி, காந்தி மைதானத்தில் 'வறட்சி நிவாரண கோரிக்கை மாநாடு’ நடத்தப்பட்டது. இதில் பேசிய உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் கு. செல்லமுத்து, ''கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் கோடி மானியம் கொடுக்கும் அரசு, விவசாயத்துக்கு மானியம் கொடுக்கத் தயங்குகிறது. இந்தியாவில் விவசாயத்தை முழுமையாக அழிப்பதற்கு உலக அளவில் சதி நடந்து கொண்டிருக்கிறது. தங்கு தடையற்ற உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்துப் போட்டிருப்பதால், 'விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நேரடியாக வெளிநாடுகளில் விற்று, அதிக லாபம் அடையலாம்' என்ற போலி பிரசாரம் நடக்கிறது. இதை முறியடித்தாக வேண்டும்.

மரத்தடி மாநாடு

தெலங்கானாவிலும், ஆந்திராவிலும் புதிய அரசுகள் பதவி ஏற்ற உடனேயே விவசாயக் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார், சிவாஜி என்கிற ஆந்திர எம்.பி. ஆனால், தமிழக எம்.பி-க்கள் யாருமே விவசாயத்தைப் பற்றியோ... விவசாயிகளைப் பற்றியோ பேசுவதே இல்லை. விவசாயிகளே மக்கள் பிரதிநிதிகளாக ஆகும் பட்சத்தில்தான் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும்'' என்று சொன்னார்.

இரா. ஸ்ரீராம்சுந்தர்ராஜ்