மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்!

ஓவியம்: ஹரன்

விதைப்புக்காக வாங்கிய வெங்காய மூட்டைகளை மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு, 'ஏரோட்டி’ ஏகாம்பரம் கிளம்ப... அவருடன் 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் நாளிதழ்களோடு கிளம்பினார். தோட்டத்துக்கு வந்ததும், மூட்டைகளை பத்திரப்படுத்திவிட்டு, மாடுகளை அவிழ்த்து மேயவிட்டுவிட்டு வந்தார், ஏரோட்டி. மாட்டு வண்டி மீதே நாளிதழ்களைப் பரப்பி வைத்து படித்துக் கொண்டிருந்த வாத்தியார், 'காய்கறி’ கண்ணம்மா வந்து சேர்ந்ததும், ஒரு செய்தியைச் சொல்லி, அன்றைய மாநாட்டைத் துவக்கினார்.

மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்!

''தமிழ்நாட்டுல, தோட்டக்கலைத்துறை மூலமா கொடுக்குற மானியங்களுக்கெல்லாம் இவ்வளவு கமிஷன் கொடுக்கணும்னு அதிகாரிங்க நிர்ணயம் பண்ணி வெச்சிருக்காங்களாம். குறிப்பா ஈரோடு, கோயம்புத்தூர் பகுதிகள்ல அதிகாரிகள் கமிஷன் கேட்டு ரொம்ப கெடுபிடி பண்றாங்களாம். பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில மானியத்தொகையில கிட்டத்தட்ட

40 சதவிகித அளவுக்கு அதிகாரிகள் கமிஷனா கேக்குறதால, விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அடிக்கடி பிரச்னை வருதாம். அதனால, நிறைய விவசாயிகள், 'உன் பூசாரி வேலையும் வேணாம்... பொங்கச்சோறும் வேணாம்’னு மானியம் கேட்டுப் போறதேயில்லையாம்'' என்றார்.

''இதே கதைதான்யா சொட்டு நீர் மானியத்துக்கும்'' என்ற ஏரோட்டி,

''பட்ஜெட் கூட்டத்தொடர், வேளாண்மை மானியக் கோரிக்கை சமயத்துல எல்லாம் 'இந்த வருஷமும் 100% மானியத்துல சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கிற திட்டம் தொடரும்’னு சொல்லியிருந்தாங்க. ஆனா, இந்த வருஷத்துக்கான பணத்தை இதுவரைக்கும் ஒதுக்கவே இல்லையாம். அதனால, அரசு அங்கீகாரம் கொடுத்திருக்குற சொட்டு நீர் கம்பெனிகள் விவசாயிகளுக்கு சொட்டு நீர் அமைச்சுக் கொடுக்க மாட்டேங்குறாங்களாம். திட்டத்துல சொட்டு நீர்க்கருவிகள் கேட்டு விண்ணப்பம் கொடுத்த விவசாயிகள், கம்பெனிக்கும், விவசாய ஆபீஸுக்கும் நடையா நடந்துக்கிட்டு இருக்காங்க'' என்றார்.

''சூரியன் மேற்கே உதிச்சாலும்கூட, இந்தப் பிரச்னை எதுவும் அழியப்போறதில்ல?'' என்று குரலில் அதீத வருத்தம் காட்டிய காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்கு இரண்டு கொடை ஆரஞ்சு பழங்களை எடுத்துக் கொடுத்தார்.

''என்ன கண்ணம்மா... பழம் இத்துனூண்டா இருக்கு?'' என்று கேட்டார், ஏரோட்டி.

''ஒரு சம்சாரியா இருந்துக்கிட்டு இப்படிக் கேக்கலாமாய்யா? மூணு வருஷமா மாரி மழை இல்லாம தவிச்சுட்டு இருக்குறோம். ஏதோ இந்த மட்டுக்காவது பழம் கிடைக்கிதேனு சந்தோஷப்படுவியா? நக்கல் பண்ணிக்கிட்டு இருக்குறே'' என்று காய்கறி கடுகடுக்க...

''பழம் சின்னதா இருந்தாலும் ருசியா இருக்கு...'' என்று இடையில் புகுந்த வாத்தியார்,

''விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்துக்குப் பக்கத்துல இருக்குற சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துகுமார், ராஜ்குமார், வினோத்பாரதி, நவீன், விவேக், கார்த்தி, வெங்கடேஷ், கோவர்த்தனன்னு எட்டு இளைஞர்கள் சேர்ந்து அந்தப் பகுதியில இருக்குற சீமைகருவேலமரங்களை அழிச்சுட்டு இருக்காங்க. இவங்க எல்லாருமே வேறவேற வேலையில இருந்தாலும், சமூக அக்கறையோட விடுமுறை நாட்கள்ல இந்த வேலையைச் செய்றாங்க. சீமைக்கருவேல் மண்டிக்கிடக்குற நிலங்களோட உரிமையாளரைப் பார்த்து, இந்த மரம் எந்தளவுக்குத் தண்ணீரை உறிஞ்சி நிலத்தடி நீரை காலி பண்ணுங்கிறதை எடுத்துச் சொல்லி... அனுமதி வாங்கி மரங்களை வெட்டி அழிச்சுட்டிருக்காங்களாம். சின்னச்சின்ன மரங்களை இவங்களே வெட்டிடுறாங்க. பெரிய மரங்களை பொக்லைன் மூலம் வெட்டுறாங்க. விற்பனை செஞ்சு கிடைக்கிற பணத்தை பொக்லைனுக்கு வாடகையா கொடுக்குறாங்களாம்'' என்றார்.

''நல்ல விஷயமா இருக்கே... எல்லா பக்கமும் இந்த மாதிரி ஆரம்பிச்சா, கொஞ்ச நாள்ல சீமைகருவேல மரத்தை இல்லாம பண்ணிடலாமே'' என்று ஆர்வம் பொங்கச் சொன்னார், காய்கறி.

மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்!

''செய்யணுமில்ல... பார்த்தீனிய செடியை அழிக்கறதுக்காக திட்டமே போட்டாங்க அரசாங்கத்துல. அதை அப்படியே கிடப்புல போட்டுட்டாங்க. சீமைக்கருவேல மரம் அதிக ஆழத்துக்கு வேரை அனுப்பி, நிலத்துல இருக்குற தண்ணியை உறிஞ்சிடுமாம். இதை அழிச்சாலே, ஓரளவுக்கு நிலத்தடி நீரைப் பெருக்கலாம்'' என்ற வாத்தியார், அடுத்த செய்திக்குத் தாவினார்.

''இப்பல்லாம் இன்ஜினீயரிங் படிக்கிறவங்களுக்கு அதிகமா வேலை கிடைக்கிறதில்லை. அதனால ரெண்டு வருஷமா விவசாயப் பட்டப்படிப்புக்கு மவுசு கூடிடுச்சு. நிறைய பேர் ஆர்வம் காட்டுறதால... தனியார் விவசாயக் கல்லூரிகள் சிலதுல ஒரு மாணவருக்கு பத்து லட்ச ரூபாய் வரை டொனேஷன் வாங்கி, கல்லா கட்டியிருக்காங்களாம். அரசாங்கமே இந்த வருஷம் மூணு விவசாயக் கல்லூரிகளை ஆரம்பிச்சுட்டாங்க. அதில்லாம, 5 தனியார் விவசாயக் கல்லூரிகளுக்கு அரசாங்கம் அனுமதி கொடுக்கப் போகுதாம். இப்படியே போனா, ஊருக்கு நாலு இன்ஜினீயரிங் கல்லூரியும், டீச்சர் டிரெயினிங் கல்லூரியும் இருக்குற மாதிரி ஊருக்கு ஒரு விவசாயக் கல்லூரியும் வந்துடும். அவ்வளவு பேரும் விவசாயப் படிப்புல சேர்ந்துட்டு, கடைசியில இந்தப் படிப்பையும், இன்ஜினீயரிங் கணக்கா ஆக்கப் போறாங்க'' என்று கவலையுடன் சொன்னார்.

''இப்போதைக்கு பள்ளிக்கூடமும், கல்லூரியும்தானய்யா பணம் கொட்டுற பிசினஸா இருக்கு. புதுசா வரப்போற 5 கல்லூரிக்கும் பின்னணியைப் பாத்தா யாராவது ஆளுங்கட்சி, அமைச்சர்னு இருப்பாங்க. அரசியல்வாதிகள்தான இப்போ கல்வித்தந்தையா உலா வர்றாங்க'' என்று ஏரோட்டி சொல்லி முடிக்க...

''வானம் மோடமா இருக்கு... மழை வரும்போல இருக்கு. அதுக்குள்ள நாலு வீட்டுக்கு காய் கொடுத்துட்டு வீடு போய் சேரணும்'' என்று சொன்ன காய்கறி, கூடையைத் தூக்கிக்கொண்டு கிளம்ப, அத்துடன் அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.