பாசனத்துக்குப் பயன்படுத்துவது எப்படி ?
புறா பாண்டி
''எனது நிலத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்று நீர், உப்புத் தன்மையுடன் உள்ளது. நெல் சாகுபடி செய்தால், கதிர் பிடிக்காமல் காய்ந்துவிடுகின்றது. இதற்குத் தீர்வு சொல்லுங்கள்? நீர்ப் பரிசோதனை முடிவுகளை இத்துடன் இணைத்துள்ளேன்!''
பி. பொன்னுசாமி, துங்கபுரம்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் மைய உதவிப் பேராசிரியர் வேல்முருகன் பதில் சொல்கிறார்.
''நீர்ப் பரிசோதனை அறிக்கையின்படி நீரின் கார அமில நிலை 7.6 உள்ளது. ஆனால், 'எஞ்சியுள்ள சோடியம்-பை-கார்பனேட்’ (RSC) அளவு அதிகமாக இருக்கிறது. இது, பயிர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும். மண்ணில் உப்புத் தன்மையை அதிகரித்து, பயிர்களுக்குக் கிடைக்க வேண்டிய சத்துக்களைத் தடுத்துவிடும். மண்ணின் வளத்தைப் படிப்படியாகக் குறைத்துவிடும்.

இந்த தண்ணீரைப் பாய்ச்சியதன் காரணமாக நிலத்தில் உப்புத் தன்மை ஊடுருவியிருந்தால், அதை நீக்குவதற்கு சணப்பு, தக்கைப் பூண்டு போன்ற பசுந்தாள் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். இவை, மண்ணில் உள்ள உப்புத் தன்மையைக் குறைக்கும் தன்மை கொண்டவை. உப்புத் தன்மையான நிலத்தில், நன்றாக விளைச்சல் கொடுக்கக்கூடிய திருச்சி-1, திருச்சி-3 ஆகிய நெல் ரகங்களை சாகுபடி செய்யலாம். இவை நீர் மற்றும் நிலத்தில் உப்புத் தன்மை அதிகமாக இருந்தாலும் தாங்கி வளரும். கூடவே, இயற்கை உரங்களையும் நிறைய பயன்படுத்த வேண்டும். உப்புத் தன்மையால் இறுகியுள்ள மண்ணில், இயற்கை உரங்களால் இளகுத் தன்மை உருவாகி, காற்றோட்டம் ஏற்படும். தொடர்ந்து நெல் சாகுபடி மட்டும் செய்யாமல், கேழ்வரகு, வரகு போன்ற உப்புத் தன்மையைத் தாங்கி வளரும் சிறுதானியங்களையும் சாகுபடி செய்யலாம். பழ மரங்களைப் பொறுத்தவரை கொய்யா, புளி, நாவல், நெல்லி போன்றவை இந்த மாதிரியான நிலத்துக்கு ஏற்றவை. இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றி பயிரிட்டால், விளைச்சலும் பாதிக்காது. மண்வளமும் குறையாது.
ஆழ்துளை கிணற்றுக்கு அருகில், மழைநீரைச் சேகரிக்கப் பண்ணைக் குட்டை அல்லது மழைநீர்ச் சேகரிப்புத் தொட்டியை அமைக்கலாம். ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் மூன்றடி நீளம், இரண்டரை அடி அகலம், நான்கடி ஆழத்துக்குக் குழி எடுத்து, அதில் மூன்றடி உயரத்துக்கு ஜல்லிக் கற்களை நிரப்ப வேண்டும். அதற்கு மேல் ஒரு அடி உயரத்துக்கு மணல் நிரப்பினால்... மழைநீர்ச் சேகரிப்புத் தொட்டி தயார். இதன் மூலம் ஆழ் துளைக் கிணற்றின் நீர்மட்டம் உயரும்... காலப்போக்கில் உப்புத் தன்மையும் குறைய வாய்ப்புகள் உள்ளன.''
தொடர்புக்கு, தொலைபேசி: 044- 27452371.
''மீன் பண்ணை வைக்க, குளம் வெட்டினோம். ஆனால், குளத்தில் தண்ணீர் நிற்கவில்லை. என்ன காரணம்?''
ஆர். கணபதி, தஞ்சாவூர்.
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, மீன்வளத்தொழில்நுட்ப நிலையத்தின் பேராசிரியர் முனைவர். பாலசுந்தரி பதில் சொல்கிறார்.
''குளத்தைத் தேர்வு செய்யும்போது, நிலத்திலிருக்கும் மண்ணின் தன்மையைக் கண்டறிய வேண்டும். இதற்காக பரிசோதனைக் கூடம் செல்லவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. தேர்வு செய்துள்ள இடத்தில் 4 அடி நீளம், 4 அடி அகலம், 4 அடி ஆழத்தில் குழி எடுக்கவும். இதை மூன்று நாட்களுக்கு தண்ணீர்விட்டு நிரப்பவும். நான்காம் நாள் குழியில் உள்ள தண்ணீரின் அளவு 75 சதவிகிதத்துக்கு இருந்தால், அது மீன் குளம் அமைக்க ஏற்றது.

தண்ணீரின் அளவு 50 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால், தண்ணீரைத் தேக்கி வைக்கும் திறன் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். இப்படிப்பட்ட நிலத்தில் குளத்தை வெட்டி, அதில் களிமண்ணை ஓர் அடி அளவுக்குப் பரப்பிவிட வேண்டும். பிறகு தண்ணீர் விட்டு, நெல் வயலுக்கு சேறு அடிப்பது போல... ரோட்டோவேட்டர் கொண்டு உழவு செய்ய வேண்டும். இதனால், குளத்தில் நீர் தேங்கி நிற்கத் தொடங்கும். குழிவெட்டி, நீர்விட்டு பரிசோதனை செய்யும்போது, மண்ணில் சுண்ணாம்புக் கல் தென்பட்டால், மண்ணை முறையாகப் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து ஆய்வு செய்யவேண்டும். மண்ணில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக இருந்தால், மீன்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, பரிசோதனை முடிவுகளைப் பார்த்த பிறகு, மீன் வளர்ப்பில் ஈடுபடவும்.
மீன் பண்ணைத் தொடங்கும் முன்பு, அதுகுறித்த அடிப்படைத் தகவலுக்குப் பயிற்சி பெறுவது நல்லது. எங்கள் நிலையத்தில் இத்தகைய பயிற்சிகளைக் கொடுத்து வருகிறோம்.''
தொடர்புக்கு, தொலைபேசி: 044-27971556.
''சந்தனம், செம்மரம்... 5 கிலோ வரை வைத்திருக்கலாம்!''

கடந்த இதழின் 'நீங்கள் கேட்டவை’ பகுதியில், செம் மரம் தொடர்பான கேள்விக்கு, தமிழக வனத்துறையின் முன் னாள் வனச்சரகர் சி.சுப்பையா பதில் சொல்லி யிருந்தார். இதுதொடர்பாக மேற்கொண்டும் சில விளக்கங்களைத் தரவேண்டும் என்றபடி நம்மைத் தொடர்புகொண்ட சுப்பையா, ''கடந்த இதழில் வெளியான பதிலைப் படித்துவிட்டு, நிறைய விவசாயிகள் என்னிடம் தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். குறிப்பாக, மரத்தை தங்களிடம் கையிருப்பு வைப்பது தொடர்பாக, அவர்களுடைய சந்தேகம் தீரவில்லை. இதைத் தெளிவுபடுத்தும் வகையில் கூடுதல் விளக்கங் களை இங்கே தருகிறேன்.
செம்மரம் மற்றும் சந்தன மரங்களை தங்களது நிலங்களில் விவசாயிகள் வளர்த்து லாபம் பெற, எந்தவிதமான தடையும் இல்லை. தமிழ்நாடு மரம் கடத்தும் விதி 1968, பிரிவு 9-ன் படி, சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரிடம், படிவம் 6-ல் அனுமதி பெறாமல், 5 கிலோவுக்கு மேல் மரமாகவோ, தூளாகவோ, எந்த வடிவிலும் செம்மரம் மற்றும் சந்தன மரத்தைக் கையிருப்பு வைத்திருப்பது, தடை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், முறையாகப் பதிவு செய்தால், இந்த மரங்களை வைத்திருப்பதற்குத் தடை இல்லை. அதாவது, தமிழக வனத்துறை அரசாணைப்படி(Tamil Nadu Maintenance of Accounts in respect of Schedule Timber for Industrial or. Commercial Purposes Rules, 1988 SEC.3 & 3-A (G.O M.S NO.51 E & F. DEPARTMENT DATED 31.3.2010) ஒரு பட்டாதாரர், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று, தன்னுடைய நிலத்தில் விளைவிக்கப்பட்ட செம்மரம் மற்றும் சந்தன மரங்களை 5 கிலோவுக்கு கீழ் கையிருப்பு வைத்திருப்பதற்கோ, எடுத்துச் செல்வதற்கோ தடை இல்லை'' என்று சொல்கிறார்.
