மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை!

ஓவியம்: ஹரன் படம்: கு. கார்முகில்வண்ணன்

'ஏரோட்டி’ ஏகாம்பரம் களை எடுக்கும் வேலையில் மூழ்கி இருக்க... பொழுதுபோகாமல் இருந்த 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, ஏரோட்டியின் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு கண்மாய் கரையைச் சுற்றக் கிளம்பிப்போனார். அதற்குள், தோட்டத்துக்கு வந்துவிட்ட 'காய்கறி’ கண்ணம்மா மரத்தடியில் காத்திருக்க... வியர்க்க விறுவிறுக்க மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தார், வாத்தியார். ஏரோட்டியும் ஆட்களுக்கு வேலையைப் பிரித்துக் கொடுத்துவிட்டு வர, அங்கேயே அன்றைய மாநாடு தொடங்கியது.

'என்னங்கய்யா சைக்கிள்ல சுத்திட்டு வர்றீங்க போல...' என்று கேட்டார், காய்கறி.

'சைக்கிள் ஓட்டி ரொம்ப நாளாகிப்போச்சு. வேலைக்குப் போயிட்டிருந்தப்போ பாதி நாள் பஸ்ல போவேன். பாதி நாள் புல்லட்ல போவேன். இப்போ புல்லட் ஓட்டுறதையும் விட்டாச்சு. சும்மா ஓட்டிப்பாக்கலாம்னு எடுத்துட்டுப் போனேன். இன்னமும் நம்ம உடம்பு நல்லாத்தான் இருக்குது' என்று சந்தோஷப்பட்டுக் கொண்டார், வாத்தியார்.

'யோவ்... நாம தின்னு வளந்த சாப்பாடு அப்பிடிய்யா. கம்பு, சோளம்னு சாப்பிட்டோம். அரிசியிலகூட ஆறு மாசத்துக்கு மேல விளைஞ்ச அரிசியைத்தான் தின்னோம். அதனாலதான் உடம்பு கல்லாட்டம் இருக்குது. இப்பல்லாம் அப்பிடியா? என்னத்தையோ அரிசினு திங்கிறாங்க. அதனாலதான் எல்லா நோயும் வந்து அல்லாடுறாங்க' என்றார்.

மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை!

'அதுவும் சரிதான்யா. அப்போலாம் அரிசியைக்கூட ரகத்தோட பேரைச் சொல்லித்தான் வாங்குவாங்க. இப்போல்லாம் கடையில போய், 'அம்பது ரூபா சாப்பாட்டு அரிசி கொடுங்க... நாப்பது ரூபா சாப்பாட்டு அரிசி கொடுங்க’னு விலையைச் சொல்லியில்ல வாங்கித் திங்கிறாங்க' என்று வருத்தப்பட்டார், வாத்தியார்.

ஆமோதித்த காய்கறி, தான் கொண்டு வந்திருந்த சிவப்பரிசி அவல் பொங்கலை எடுத்து, ஆளுக்குக் கொஞ்சமாகக் கொடுத்தார்.

அதைச் சாப்பிட்டுக் கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார்.

'மழை வெள்ளம் வந்து பயிர்கள் பாதிச்சா காப்பீடு கொடுக்குறதுக்காக 'தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம்’னு இருந்துச்சு. இதுல காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையில பாதியை விவசாயிகள் கொடுக்கணும். மீதியை மாநில அரசு கட்டிடும். அதில்லாம ஏதோ சூழ்நிலையில நிவாரணம் கொடுக்கவேண்டி வர்றப்போ... நிவாரணத் தொகையானது காப்பீடு செய்த தொகைக்கு உள்ள இருந்தா, காப்பீட்டு நிறுவனம் கொடுத்துடும். கூடுதலா இருந்தா, கூடுதல் தொகையை மத்திய அரசு பாதி, மாநில அரசு பாதினு கொடுப்பாங்க.

ஏற்கெனவே நடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில, 2013-ம் வருஷம் மாநில அரசுகளைக் கேக்காம இந்தத் திட்டத்தை ரத்து செஞ்சுட்டு, 'தேசிய பயிர் காப்பீட்டு திட்டம்’னு புதுத்திட்டத்தை அறிமுகப்படுத்தினாங்க. இதுல, பிரீமியம் தொகை அதிகம். அதோட, காப்பீட்டுத்தொகை முழுசையும் காப்பீட்டு நிறுவனமே கொடுக்குற மாதிரி மாத்தி அமைச்சாங்க.  மத்திய அரசு இழப்பீடு கொடுக்காம இருக்குறதுக்காகத்தான் இப்படி மாத்துனாங்க. ஆனா, 'இந்தத் திட்டத்துல, விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கம்மியா கிடைக்க வாய்ப்பு இருக்கு’னு சொல்லி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 'பழைய மாதிரியே வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தணும்’னு கோரிக்கை வெச்சாங்க. அதனால, இந்த வருஷத்துக்கு மட்டும் பழைய மாதிரியே காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்தியில இருக்கிற பி.ஜே.பி அரசு ஒப்புதல் கொடுத்துருக்குதாம்.

இந்த வருஷம், சம்பா, தாளடி, பிசானம் பருவங்கள்ல பயிர் பண்ற நெல்லுக்கும், ராபி பருவத்தில் பயிர் பண்ற மத்த பயிர்களுக்கும் பழையத் திட்டமே நடைமுறையில இருக்கும்னு முதலமைச்சர் சொல்லியிருக்காங்க'' என்றார்.

'அதென்ன இந்த வருஷத்துக்கு மட்டும்... பழைய முறையையே முழுசா நடைமுறைப்படுத்தலாம்ல' என்று சிடுசிடுத்தார் காய்கறி.

''அதெல்லாம் நீ பிரதமரா ஆன பிறகுதான் நடக்கும்'' என்று சொல்லி சிரித்த ஏரோட்டி,

'கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் சுற்று வட்டார கிராமங்கள்ல விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலமா இலவசமா கொத்தமல்லி விதையைக் கொடுத்திருக்காங்க. கிட்டத்தட்ட, 50 ஏக்கர்ல விவசாயிகள் கொத்தமல்லியை விதைச்சிருக்காங்க. வழக்கமா நாப்பது நாள்ல முழுசா வளர்ச்சி அடையும். அப்பதான் செடியைப் பறிச்சு விற்பனை செய்வாங்க. ஆனா, இந்த விதைகளை விதைச்ச நிறைய இடங்கள்ல இருபத்தஞ்சு நாள்லயே செடிகள் பூத்துடுச்சாம். பூத்துடுச்சுனா விலை கிடைக்காதாம். அதனால எல்லாரும் செடிகளை அப்படியே உழுது விட்டுட்டாங்களாம். ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட பதினஞ்சாயிரம் ரூபாய் வரைக்கும் நஷ்டமாம். இதுபத்தி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு பண்ணப் போறாங்களாம்'' என்றார்.

'எல்லாம் முடிஞ்சு போச்சு... இனிமே ஆய்வு பண்ணி என்ன பண்ணப் போறாங்களாம். ஒருவேளை சத்தமில்லாம கொத்தமல்லியிலயும் பி.டி. விதைகளைக் கொடுத்துட்டாங்களோ?'' என்று சந்தேகம் கிளப்பிய வாத்தியார்,

'இந்த பால் கொள்ளையைப் பத்தி கேட்டீங்களா?''' என்று பீடிகைபோட்டுவிட்டு,

''பால் விலையை உயர்த்திக்கொடுனு காலம் பூரா போராடிட்டிருக்காங்க, அப்பாவி விவசாயிங்க. ஆனா, 'ஆவின் நிர்வாகம் நஷ்டத்துல இருக்கு... அதெல்லாம் முடியாது'னு சொல்லிக்கிட்டே இருக்குது அரசாங்கம். ஆனா, இன்னொருப் பக்கம் பால்ல கலப்படம் பண்ணி கோடி கோடியா கொள்ளையடிக்க விட்டு வேடிக்கை பார்த்துட்டிருந்திருக்காங்க. இதுல ஆளுங்கட்சி புள்ளிதான் முக்கியமான ஆளா மாட்டியிருக்காரு. ஏற்கெனவே பால்வளத்துறை மந்திரி மாதவரம் மூர்த்திய மாத்தினாங்க. அடுத்தாப்புல ஆளுங்கட்சி புள்ளி வைத்தியநாதன புடிச்சி உள்ள போட்டிருக்காங்க. 'இதுல யார் யாருக்கு என்னென்ன பங்கு போச்சோ தெரியல. ஆனா, இப்போதைக்கு எல்லாத்தையும் இவரு தலையில மட்டும் கட்டி கதையை முடிச்சுடு வாங்க. உண்மை மொத்தத்தையும் வெளியில கொண்டுவரணும். தப்பு செஞ்ச அத்தனை பேருக்குமே தண்டனை கிடைக்கணும்'னு சீறிகிட்டிருக்கார் தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லசாமி'' என்றார் வாத்தியார்.

''நாசமா போக...'' என்று காய்கறி சத்தமாக நெட்டி முறிக்க...

தோட்டத்தில் களை பறித்துக் கொண்டிருந்த ஆட்கள் ஏரோட்டியை சத்தம் போட்டு அழைக்க... அவர் எழுந்து ஓடினார். அத்துடன் அன்றைய மாநாடு முடிவடைந்தது.

மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை!

கரும்பு விவசாயிகளின் வருத்தம்!

'கரும்புக்கான நிலுவைத்தொகையை தனியார் ஆலைகள் கொடுக்காம இழுத்தடிச்சுட்டே இருக்குதுங்க. இதையெல்லாம் விவசாயிகளுக்கு வாங்கித் தரவேண்டிய அரசாங்கம் கையைக் கட்டிக்கிட்டிருக்கு. இதைக் கண்டிச்சு, தமிழ்நாடு முழுக்க இருந்து கரும்பு விவசாயிகள் சென்னை, சேப்பாக்கத்துல செப்டம்பர் 18- ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க.

இந்த வருஷம் செப்டம்பர் 30-ம் தேதியோட இந்த வருஷத்துக்கான கரும்புப் பருவம் முடியுதாம். அதுக்குள்ள நிலுவைத் தொகையை அரசாங்கம் வாங்கித்தராட்டி பெரிய அளவுல போராட்டம் நடத்துறதுனு முடிவு பண்ணியிருக்காங்களாம். அக்டோபர் மாசம் தொடங்குற அடுத்த வருஷத்துக்கான கரும்புப் பருவத்துல... 'தனியார் ஆலைகளுக்கு கரும்பை அனுப்பப் போறதில்லை’னும் அறிவிச்சிருக்காங்க விவசாயிகள். 'இந்தப்பிரச்னை சம்பந்தமா முதலமைச்சரை சந்திச்சு பேசணும்னு ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கோம். ஆனா, முதலமைச்சர் தேதி கொடுக்க மாட்டேங்கிறாங்க' ரொம்பவே வருத்தப்பட்டு பேசியிருக்கார், இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப் பின் மாநிலப் பொதுச் செயலாளர் விருத்தகிரி.'