படம்: தி. விஜய்
புறா பாண்டி
''துளசியில் இருந்து நிறைய மருந்துப் பொருட்கள் தயாரிப்பதாகக் கேள்விப்பட்டேன். இதை ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்தால், லாபம் கிடைக்குமா?''
எம். கிருஷ்ணமூர்த்தி, மணப்பாறை.
மதுரையில் செயல்பட்டு வரும் 'தமிழ்நாடு கவுன்சில் ஃபார் எண்டர் பிரைசஸ் டெவலப்மென்ட்’ அமைப்பைச் சேர்ந்த எம். ஜெயகுமார் பதில் சொல்கிறார்.
''துளசியை, 'மூலிகைகளின் ராஜா’ என்பார்கள். சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் துளசிக்கு முக்கிய இடமுண்டு. அழகு சாதனப் பொருட்களிலும்கூட துளசியைப் பயன்படுத்துகிறார்கள். ஆன்மிக ரீதியாக பார்த்தால், பெருமாள் கோயில்களில் துளசிக்கு தனிமரியாதை உண்டு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பெரும்பாலும் இயற்கையாக வளர்ந்து கிடக்கும் துளசி இலைகள்தான் விற்பனைக்கு வருகின்றன.
அண்மைக் காலத்தில் எங்கள் அமைப்பு மூலம், இதன் சாகுபடியை ஊக்குவித்து வருகிறோம். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டைப் பகுதியில் சில விவசாயிகள் சாகுபடி செய்துள்ளார்கள். அதிகபட்சம் ஒரு ஏக்கர் வரையே விவசாயிகளை சாகுபடி செய்யச் சொல்கிறோம். காரணம், முதலில் துளசியை சாகுபடி செய்யும் நுட்பத்தை இதில் அறிந்து கொள்ளலாம். அடுத்து, விற்பனை வாய்ப்பில் உள்ள யுக்திகளையும் தெரிந்துகொள்ள முடியும். ஒரு ஏக் கரில் துளசி சாகுபடி செய்தால், 30 நாட்களுக்கு ஒரு முறை, ஒரு டன் துளசி இலைகள் கிடைக்கும். ஆண்டுக்கு சராசரியாக பத்து முறை அறுவடை செய்யலாம்.

தற்போது, பச்சைத் துளசி கிலோ இருபது ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி பார்த்தால், 10 டன் மூலம் 2 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்சினால் போதும். பூச்சி-நோய் தொல்லை இருக்காது. இயற்கை உரங்கள் கொடுத்தால் போதும். உள்ளூர் பூ வியாபாரிகள் முதல், மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வரை தோட்டத்துக்கே வந்து விலைக்கு வாங்கிச் செல்லும் அளவுக்கு விற்பனை வாய்ப்புகள் உள்ளன. வடநாட்டைச் சேர்ந்த பிரபல நிறுவனங்களான டாபர், ஹிமாலயா போன்றவையும் துளசி இலைகளை வாங்கிக் கொள்கின்றன. இதில் எங்கள் நிறுவனத்தின் பணி, துளசி சாகுபடிக்கு உண்டான தொழில்நுட்பங்கள் மற்றும் விற்பனை வாய்ப்புகள் பற்றி பயிற்சி கொடுப்பதுதான். இதற்கு மிகவும் குறைந்தக் கட்டணத்தையே விவசாயிகளிடம் பெற்றுக் கொள்கிறோம்.''
தொடர்புக்கு, செல்போன்: 94875-59345.
''நாட்டுக்கோழிப் பண்ணை வைத்துள்ளோம். கோழிகள் உள்ள கொட்டகையில், கரையான் பிடித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்துவது எப்படி? லாபகரமாக கோழி வளர்க்க வழி சொல்லுங்கள்?'
எஸ். சுகந்தி, உடுமலைப்பேட்டை.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்புப் பயிற்றுநர் ராஜ் டேனியல் பதில் சொல்கிறார்.
''நாட்டுக்கோழிப் பண்ணையில் கரையான் வந்தால் சந்தோஷப்படுங்கள். கரையான்கள் நாட்டுக் கோழிகளுக்கு சிறந்த உணவு. எந்தக் காரணம் கொண்டும், ரசாயன மருந்துகளைப் பண்ணையில் தெளித்துவிட வேண்டாம். அது கரையான்களுக்கு மட்டுமல்ல, கோழிகளின் உயிருக்கும் ஆபத்தை உருவாக்கும். கரையான்கள் இருக்கும் இடத்தை, கோழிகளுக்குக் காட்டிவிட்டால் போதும், அதைப் பிடித்து உண்டுவிடும். என்னுடைய அனுபவத்தில் நாட்டுக்கோழிகளுக்காக அதிக செலவுசெய்து கொட்டகை அமைக்கத் தேவையில்லை. ஆனால், இப்போது, நாட்டுக்கோழி வளர்ப்பு என்பதை பிராய்லர் கோழி வளர்ப்பு போல, அதிக செலவு செய்து தொடங்குகிறார்கள்.

நாட்டுக்கோழி வளர்ப்பவர்களுக்கு இது நல்ல நேரம். இதைப் பயன்படுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை வெகுகுறைவு. நாட்டுக்கோழி வளர்ப்பு லாபம் தரும் என்று நம்பி பண்ணையைத் தொடங்கியவர்கள், கடனாளிகளாகப் பெருகி வருகிறார்கள். இதற்குக் காரணம், நாட்டுக்கோழி வளர்ப்பு முறையை அவர்கள் தெளிவாக அறியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். முதலில், நாட்டுக்கோழிகளுக்கு என்று தனியாக கொட்டகை தேவையில்லை. அதை சுதந்திரமாக மேயவிட வேண்டும்.
உதாரணத்துக்கு ஒரு கணக்குச் சொல்கிறேன். பத்து கோழி, ஒரு சேவல் கொண்ட ஒரு யூனிட் கோழி வளர்க்க, 1 சென்ட் நிலம் போதும். இந்த ஒரு சென்ட் நிலத்தில், கோழிகள் திறந்தவெளியில் மேயும். பாதுகாப்புக்காக சுற்றிலும் நிழல் வலைகளைக் கட்டி வைக்கலாம். இரவு மற்றும் மழை நேரத்தில் அடைய ஒரு கொடாப்பு செய்து வைத்தால் போதும். கோழிகள் நீர் குடிக்கவும், உடல் சூட்டைத் தணிக்கவும், சிறிய குழி எடுத்து, அதில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம். 10 நாட்டுக்கோழிகள் மூலம் சராசரியாக ஆண்டுக்கு 100 குஞ்சுகள் கிடைக்கும். இந்தக் குஞ்சுகள் ஓரளவு வளர்ந்தவுடன் அதைப் பிரித்து, அடுத்த ஒரு சென்ட் நிலத்தில், கொடாப்பு போட்டு வளர்க்க வேண்டும். நன்றாக தீவனம் கொடுத்து வளர்த்தால் மூன்று மாதத்தில், விடக்கோழிகளாக வளர்ந்துவிடும். ஒரு கோழி, குறைந்தபட்சம் மூன்று கிலோ வரை எடை இருக்கும். இன்றைய சந்தை நிலவரப்படி நாட்டுக்கோழி ஒரு கிலோ 300 முதல் 350 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி பார்த்தால், 100 கோழிகள் மூலம் சராசரியாக 1 லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இது எனது அனுபவ உண்மை.''
தொடர்புக்கு, செல்போன்: 96295-78183
''தைல மரம் சாகுபடி செய்ய நினைக்கிறேன். அது நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சிவிடும் என்கிறார்கள். இது உண்மையா?''
எம். பாலாஜி, காட்டுக்காநல்லூர்.
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், வனக்கல்லூரியின் பேராசிரியர் முனைவர். பார்த்திபன் பதில் சொல்கிறார்.
''தைல மரம் என்று அழைக்கப்படும் யூக்லிப்டஸ் மரம் நிலத்தடி நீரை அதிக அளவுக்கு உறிஞ்சிவிடும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. தைல மரம் 500 அடி ஆழத்திலிருந்தும்கூட தண்ணீரை உறிஞ்சி எடுத்துவிடும் என்றும்கூட சொல்கிறார்கள். ஆனால், இதற்கெல்லாம் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை. நம் நாட்டில் உள்ள தைல மரத்தின் வேர்கள், 5 அடி ஆழத்துக்குக் கீழ் செல்வதில்லை என்பதுதான் உண்மை. இதை ஆராய்ச்சி செய்து உறுதி செய்துள்ளோம்.

ஓர் அறையில் இரண்டு நபர்கள் இருக் கிறார்கள். ஒரு தட்டில் ஐந்து இட்லிகள் உள்ளன. அதை வேகமாக சாப்பிடுபவர், ஒரு இட்லி அதிகமாகக் கூட சாப்பிடலாம். மெதுவாக சாப்பிடுபவருக்கு ஓர் இட்லி குறைவாகக் கிடைக்கும். இது போலத்தான், தைல மரமும், மற்ற மரங்களுடன் இருக்கும்போது, சூழ்நிலைக்கு தக்கபடி தனக்குத் தேவையான நீரை கூடுதலாகவோ, குறைவாகவோ எடுத்துக் கொள்ளும். மற்றபடி நிலத்தடி நீரை உறிஞ்சிக்கொண்டு, மற்ற மரங்களை வாழ விடாது என்பதில் எள்ளளவும் உண்மையில்லை. சொல்லப் போனால், தைல மரங்களுக்கு அதிகமான நீர், ஆபத்தைத்தான் உருவாக்கும். தைல மரங்கள் உள்ள நிலத்தில் தொடர்ந்து 40 நாட்கள் தண்ணீர் நின்றால், அத்தனை மரங்களும் இறந்துவிடும். அதிக அளவுக்கு தண்ணீரை உறிஞ்சி வாழும் தைல மர ரகங்கள் ஆஸ்திரேலியா நாட்டில்தான் உள்ளன. அந்த ரகம் நம் நாட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.''
தொடர்புக்கு, செல்போன்: 94435-05844.
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை 'நீங்கள் கேட்டவை', பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.