ஓவியம்: ஹரன்
தோட்டத்தில் வெங்காய நடவு செய்வதற்காக, விதைவெங்காயம் வாங்கி வந்த 'ஏரோட்டி' ஏகாம்பரம், அவற்றை மாட்டுவண்டியிலிருந்து இறக்கிவிட்டு, மாடுகளுக்கு 'குலுவாடி’ (கழுநீர், தவிடு) கரைத்துக் கொண்டிருந்தார். 'வாத்தியார்' வெள்ளைச்சாமி வழக்கம்போல நாளிதழைப் புரட்டிக் கொண்டிருக்க... 'காய்கறி’ கண்ணம்மாவும் வந்து சேர்ந்தார்.
''ராஜஸ்தான் மாநிலத்துல... மாட்டுவண்டி, குதிரைவண்டி ஓட்டுறவங்க எல்லாம் இனிமே லைசென்ஸ் இருந்தாத்தான் ஓட்ட முடியுமாம். அந்த மாநிலத்துல இந்த வண்டிகள் அதிகமா இருக்குறதால, 'நல்லா ஓட்டத்தெரிஞ்சவங்க மட்டும்தான் வண்டிகளை ஓட்டணும்’னு மாநில அரசாங்கம் முடிவெடுத்திருக்கு. இதுக்காக போக்குவரத்து ஆபீஸ்ல முதல்ல ஒரு பரீட்சை எழுதணுமாம். இதுல பாஸ் பண்ணுன பிறகு, லைசன்ஸ் வேண்டி மனு கொடுத்தவங்க, அவங்க ஓட்டுற மாட்டையோ, குதிரையையோ சில உத்தரவுகளைச் சொல்லி கட்டுப்படுத்திக் காட்டணுமாம். இதுல குறிப்பிட்ட அளவு உத்தரவுகளுக்கு குதிரை, மாடுகள் கட்டுப்பட்டுச்சுனா... லைசென்ஸ் கிடைக்குமாம். இல்லேனா திரும்பவும் மாடு/குதிரைகளைப் பழக்கிட்டு வந்து, மனு கொடுக்கணுமாம்'' என்று வியப்பான தகவல் ஒன்றுடன் மாநாட்டை ஆரம்பித்தார் வாத்தியார்.
''பரவாயில்லையே... நல்ல விஷயமா இருக்கே. எல்லா மாநிலத்துலயும் இதை அமல்படுத்தலாமே...'' என்று ஏரோட்டியை நக்கலாகப் பார்த்தபடி காய்கறி சொல்ல,
''ம்க்கும்... இது ஒண்ணுதான் குறைச்சல். இப்பவே அதிகமா லஞ்சம் புழங்குற துறை போக்குவரத்துத் துறைதான்னு லஞ்ச ஒழிப்புத்துறை புள்ளிவிவரத்துல சொல்லியிருக்காங்க. இன்னும் அவங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கறதுக்கு நீயும் புது வழி சொல்லுறியாக்கும்?'' என்று எரிந்துவிழுந்த ஏரோட்டி, அப்படியே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

''போன வருஷம் இதே மாசத்துல வறட்சி காரணமா... பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாச்சு, ஞாபகம் இருக்குதா? ஹோட்டல்கள்ல எல்லாம், வெங்காய தோசை விற்பனையையே நிறுத்தி வெச்சிருந்தாங்க. பல ஹோட்டல்கள், பார்கள்ல வெங்காயத்துக்கு பதிலா முட்டைக்கோஸைப் பயன்படுத்தினாங்கள்ல, இந்த வருஷம் மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள்ல பெரிய வெங்காயம் அதிகளவுல விளைஞ்சிருக்குதாம். தமிழ்நாட்டுல வெங்காய வரத்து குறைவா இருக்குறதால... இந்த மாநிலங்கள்ல இருந்து கோயம்புத்தூர் சுத்து வட்டார சந்தைகளுக்கு தினமும் 400 டன் அளவுக்கு வெங்காயம் வந்துக்கிட்டிருக்குதாம். இப்போதைய நிலவரப்படி, மொத்த விலையில ஒரு கிலோ பதினெட்டு ரூபாய் அளவுக்கு விற்பனையாகுதாம். சில்லரை விலையில ஒரு கிலோ முப்பது ரூபாய் அளவுக்கு விற்பனையாகுதாம். புயல், வெள்ளம் ஏதும் வராம இருந்தா... அடுத்த வருஷம் ஜூன் மாசம் வரைக்கும் இதே விலைதான் இருக்கும்னு சொல்றாங்க'' என்றார், ஏரோட்டி.
''அதான் விலை கிடைக்காதுனு சொல்றே... அப்பறம் எதுக்கு நீ வெங்காயம் விதைச்சுட்டு இருக்குறே?'' என்றார், காய்கறி.
''நான் விதைக்கிறது, சின்னவெங்காயம். இதை வாங்கப் போனப்போ வெங்காய மார்கெட்லதான் இந்தத் தகவல் எனக்கு கிடைச்சுது'' என்று ஏரோட்டி சொல்ல,
''அப்படியா...'' என்று இழுத்த காய்கறி, ''என்கிட்டயும் ஒரு சேதி இருக்கு. இதுவும் மார்கெட்ல கிடைச்சதுதான்'' என்றபடியே ஆரம்பித்தார் அந்தச் செய்தியை.
''ஒட்டன்சத்திரத்தைச் சுத்தி இருக்குற ஊர்கள்ல முருங்கைக்காய் அதிகளவு பயிராகுறதால, ஒட்டன்சத்திரம் மார்க் கெட்டுக்கு செடிமுருங்கையும், மர முருங்கையும் அதிகளவுல வரும். இப்போ, கொஞ்ச நாளா முருங்கை வரத்து குறைஞ்சிருக்குறதால, தேனி, திருநெல்வேலி மாவட்டங்கள்ல இருந்து இந்த மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் வருது. இந்த மாவட்டங்கள்ல 'குச்சி’ங்கிற முருங்கைக்காய் ரகம்தான் அதிகளவுல விளையும். இந்த ரகத்துல தினமும் 14 டன் அளவுக்கு இப்போ வரத்து இருக்குதாம். ஒட்டன்சத்திரத்துல இருந்து, கொல்கத்தாவுக்கு அனுப்பி, அங்க இருந்து இதை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பண்றாங்களாம் இந்த ரக முருங்கை இப்போதைக்கு ஒரு கிலோ முப்பது ரூபாய் வரை விலை போகுதாம். கிலோவுக்கு 20 காய்கள் வரை பிடிக்குமாம்'' என்றார்.
அந்த நேரத்தில், வயலில் இருந்து ஏரோட்டிக்கு அழைப்புக் குரல் வர எழுந்து ஓடினார். அத்துடன் அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.
உருவானது, ஒரு சங்கம்!

கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கம் ஒன்றின் மாநிலத் தலைவராக இருந்த 'பொங்கலூர்’ இரா. மணிகண்டன், அதிலிருந்து விலகி, 'உழவர் உழைப்பாளர் சங்கம்’ என்கிற பெயரில் புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். செப்டம்பர் 21 அன்று, பொங்கலூரில் நடந்த விழாவில், சங்கக் கொடியை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய மணிகண்டன், ''மறைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் வழியில் உழவர்களின் பல்வேறு உரிமைகளைப் பெற்றிட குரல் கொடுக்கவும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா சொல்லித் தந்த இயற்கை வழி வேளாண்மையை, விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்திலும் இச்சங்கத்தைத் துவங்கியுள்ளோம்.
எத்தனால் பயன்பாட்டை அதிகரித்து, கரும்பு விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கச் செய்வது; மழை ஈர்ப்பு மையங்களாக உள்ள பனைமரங்களை அழிவிலிருந்து காப்பாற்றுவது; தமிழகத்தில் மதுவை ஒழித்து தென்னை, பனை மரங்களில் கள் இறக்க அனுமதி பெறுவது; விவசாய நிலங்களை வீட்டுமனைகள் உள்ளிட்ட வேறு பயன்பாட்டுக்கு விற்பதை தடை செய்வது; உணவுப்பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதைத் தடுப்பது; அனைத்துப் பள்ளிகளிலும் விவசாயத்தை சிறப்புப் பாடமாக கற்பிக்க வைப்பது... போன்றவற்றுக்காக இச்சங்கம் குரல் கொடுக்கும்'' என்று பயனுள்ள பல விஷயங்களைப் பட்டிய லிட்டார்.
- ஜி. பழனிச்சாமி
மஞ்சளை இருப்பு வைக்கலாம்!
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சந்தைத் தகவல் மையம், மஞ்சள் விலை விவரம் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், ''தமிழகத்தில் பெரும்பாலும், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் நாட்டு மஞ்சள் ரகங்கள் பரவலாகப் பயிரிடப்பட்டுள்ளன. இதில், சேலம் நாட்டு ரக மஞ்சள், அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் ஓராண்டுக்கான மஞ்சள் தேவை 75 லட்சம் மூட்டைகள். ஆனால், இந்தியாவில் தற்போது 45 லட்சம் மூட்டைகள்தான் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில், தமிழகத்தில் மட்டும் 20 லட்சம் மூட்டைகள் உள்ளன. தற்போது ஒரு குவிண்டால் மஞ்சள், 6 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தவிர, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கடந்தாண்டைவிட, இந்த ஆண்டு மஞ்சள் சாகுபடி பரப்பு
20 சதவிகிதம் குறைந்துள்ளது. உற்பத்தி குறைவு, குறைவான இருப்பு ஆகிய காரணங்களால்... அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில், ஒரு குவிண்டால் மஞ்சளுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் விலை கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அதனால், மஞ்சளை சேமித்து வைத்து, அக்டோபர், நவம்பர் மாதங்களில் விற்பனை செய்யலாம்'' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஜி. பிரபு