அத்தனையும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. பொதுமக்கள் ஒரு பைசா செலவில்லாமல் அனைத்தையும் வாங்கிக்கொள்ளலாம் என்று மேடைக்கு மேடை அமைச்சர்களும் உயரதிகாரிகளும் முழங்கினாலும், கொள்ளைக்கார அதிகாரிகளுக்குப் 'படி அளக்காமல்' ஓர் அணுவும் அசையாது என்பதுதான் நிதர்சனமாக உள்ளது..

திருப்பூர் மாவட்டம், தண்டுகாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவர் ஆத்திக்காட்டு பாளையத்தைச் சேர்ந்த மகுடேஸ்வரன் என்பவரிடம் 0.67 ஹெக்டர் நிலத்தை வாங்கி உள்ளார். பட்டாவில் 0.67 ஹெக்டர் என்பதற்குப் பதிலாக 3.67 ஹெக்டர் என தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தது.
அதை திருத்தம் செய்தால் மட்டுமே சிட்டா மாறுதல் செய்ய முடியும் என கிராம நிர்வாக அலுவலர் கூறியதை அடுத்து, திருப்பூர் ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலுசாமி மனு அளித்துள்ளார்.

இதன்படி, அவரது மனு அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவைத் துறைக்கு நவம்பர் மாதம் மாற்றம் செய்யப்பட்டது. அங்கு, பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதுடன், இரண்டு மாதங்களாக வேலுசாமி அலைக்கழிக்கப்பட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வேலுசாமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அவிநாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்குள் வெள்ளிக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விவசாயி வேலுசாமி கூறுகையில், ''பட்டாவில் உள்ள பரப்பளவை திருத்தம் செய்து தரக்கோரி, நவம்பர் 2-ஆம் தேதி மனு கொடுத்தேன். எனது மனு மீது அவிநாசி தலைமை நில அளவையர் மோகன் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, அத்திக்காட்டுபாளையத்துக்கு நில அளவையாளர் இல்லை என்பதால், வேறொரு நில அளவையாளரை வைத்து அளக்க வேண்டும். அதற்கு ரூ.50 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். நான் கொடுக்க மறுத்ததால், கடந்த இரண்டு மாதங்களாக என்னை அலைக்கழித்து வருகிறார். தலைமை நில அளவையர் மோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் வட்டாட்சியர் ராகேஷ், காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து,அங்கிருந்து கலைந்து தனியார் மண்டபத்தில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து திருப்பூர் ஆட்சியர் வினித் கூறுகையில், ''விவசாயி வேலுசாமியின் புகார் குறித்து விசாரித்து வருகிறோம். அவரது குற்றச்சாட்டு உறுதியானால், தலைமை நில அளவையர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.