9 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.10,75,000... நெல்லி, நாட்டுமாடு, சண்டைக்கோழி! வெற்றிநடைபோடும் இளம் விவசாயி!

மகசூல்
படிச்சோம் விதைச்சோம்
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள பாரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம் விவசாயி சிபி. கல்லூரி படிப்பு முடித்ததுமே முழுநேர விவசாயியாக மாறியவர், 8 ஏக்கரில் இயற்கை முறையில் பெருநெல்லி சாகுபடி செய்வதோடு... சண்டைச் சேவல், நாட்டு மாடு, ஆடு ஆகியவற்றை வளர்த்து, நிறைவான வருமானம் பார்த்து வருகிறார்.
ஒரு பகல் வேளையில் சிபியின் தோட்டத்திற்குச் சென்றோம். இங்குள்ள கிணற்றில் சேவலுக்கு நீச்சல் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தவர், புன்னகையோடு நம்மை வரவேற்று, உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். ‘‘என்னோட அம்மா, டாக்டர். அப்பா, விவசாயி. திண்டுக்கல்ல எங்களுக்கு இன்னொரு தோட்டம் இருக்கு. அதை எங்கப்பா பார்த்துக்கிறார். நான் டெல்லியில உள்ள ஒரு கல்லூரியில பி.காம் படிச்சேன். சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல எனக்கு ஈடுபாடு அதிகம். அதனால பட்டப்படிப்பு முடிச்சதுமே விவசாயத்துல இறங்கிட்டேன். இது என் தாத்தாவோட தோட்டம். இதோட மொத்த பரப்பு 9 ஏக்கர். 8 ஏக்கர்ல நெல்லி சாகுபடி செஞ்சிருந்தார். இதைப் பராமரிக்க முடியாததுனால இந்தத் தோட்டத்தைக் குத்தகைக்கு விட்டிருந்தார். அவங்க ரசாயன உரங்கள் கொடுத்துதான் நெல்லியை பராமரிச்சுக்கிட்டு இருந்தாங்க.

‘இந்தத் தோட்டத்தை என்னோட பொறுப்புல விடுங்க; இதுல இயற்கை விவசாயம் செய்யப்போறேன்’னு தாத்தாகிட்ட சொன்னேன். அவரும் என்னை நம்பி பொறுப்பை ஒப்படைச்சார். 2016-ம் வருஷம் இந்தத் தோட்டத்தை என்னோட கட்டுப்பாடுக்குக் கொண்டு வந்து இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். இதுக்குப் பசுமை விகடன் யூடியூப் வீடியோக்கள்தான் ரொம்பவே உறுதுணையா இருந்துக்கிட்டு இருக்கு. தங்களோட அனுபவங்களைப் பகிர்ந்துக்குற விவசாயிகள், தொழில்நுட்பங்களைத் துல்லியமா விவரிக்குறதுனால, எளிமையா புரிஞ்சுக்க முடியுது.
நான் இயற்கை விவசாயத்துல இறங்கின முதல் வருஷம்.. மண்ணை வளப்படுத்த ஒரு ஏக்கருக்கு வருஷத்துக்கு 5 டன் வீதம் எரு போட்டேன். 2 மாசத்துக்கு ஒரு தடவை பாசனநீர்ல ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் ஜீவாமிர்தம் கலந்துவிட்டேன். மூணு மாசத்துக்கு ஒரு தடவை, 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் வீதம் பஞ்சகவ்யா கலந்து தெளிச்சேன். அடுத்த மூணு வருஷத்துல மண்ணு நல்லா வளமாகிடுச்சு. நெல்லி மரங்கள்ல காய்ப்பு அதிகரிக்க ஆரம்பிச்சுது. 8 ஏக்கர்ல உள்ள நெல்லி மரங்கள்ல இருந்து இந்த வருஷம் மொத்தம் 35 டன் நெல்லிக்காய்கள் மகசூல் கிடைச்சுது.
இங்க உள்ள மரங்கள் எல்லாமே 15 வருஷ மரங்கள். நெல்லியைப் பொறுத்தவரைக்கும் பலவிதமான ரகங்கள் ஒரே தோட்டத்துல வளர்ந்துச்சுன்னா, மகரந்தச்சேர்க்கை நல்லா நடந்து, விளைச்சல் அதிகமா கிடைக்கும். கிருஷ்ணா, என்.ஏ 7, காஞ்சன், சக்கையா, பி.எஸ்.ஆர்-னு மொத்தம் அஞ்சு வகையான ரகங்கள் இங்க இருக்கு. 8 ஏக்கர்ல மொத்தம் 1,100 மரங்கள் இருக்கு. ஒவ்வொரு வருஷமும் மார்ச் மாசத்துல பூ பிடிக்க ஆரம்பிச்சு, மே மாசத்துல இருந்து மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். அடுத்த 6-7 மாசங்களுக்குத் தொடர்ச்சியா நெல்லிக்காய்கள அறுவடை செய்யலாம். டிசம்பர் மாசம் கடைசியில காய்ப்பு ஓய்ஞ்சி, இலைகள் கொட்ட ஆரம்பிக்கும். பிப்ரவரி கடைசியில மறுபடியும் மரங்கள் துளிர்விட ஆரம்பிக்கும்.

வாரத்துக்கு ஒருமுறை சொட்டுநீர் மூலமா பாசனம் பண்ணுவோம். பூ பிடிக்கிறப்போ 20 லிட்டர் தண்ணீருக்கு 600 மி.லி பஞ்சகவ்யா மற்றும் 50 மி.லி வேப்பெண்ணெய் கலந்து ஒரு மரத்துக்கு ஒரு லிட்டர் வீதம் கரைசல் தெளிப்போம். பூச்சித்தாக்குதல் இருந்தா அக்னி அஸ்திரம் பயன்படுத்துவோம். மூணு வருஷத்துக்கு ஒருமுறை எல்லாக் கிளைகளையும் வெட்டி கவாத்து பண்ணிவிடுவோம். அந்த நேரத்துல வேப்பம் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, எள்ளுப் புண்ணாக்கு, மாட்டு எரு... இதையெல்லாம் சரிவிகிதத்துல கலந்து, ஒரு மரத்துக்கு 2 கிலோ வீதம் வேர்ப்பகுதியில போட்டு மண் அணைப்போம்’’ என்று சொன்னவர், இந்தத் தோட்டத்தில் உள்ள மற்ற பயிர்கள் மற்றும் கால்நடை வளர்ப்புக் குறித்துப் பேசினார்.
‘‘நெல்லி மரங்களுக்கு இடையில 50 தென்னை மரங்கள் இருக்கு. அதுல இருந்து வருமானம் கிடைச்சுக்கிட்டு இருக்கு. நெல்லி தோட்டம் போக, மீதியுள்ள ஒரு ஏக்கர்ல 40 சப்போட்டா மரங்கள் இருக்கு. எந்தவித பராமரிப்பு இல்லாமலே சப்போட்டா, நல்ல செழிப்பா விளைஞ்சுக்கிட்டு இருக்கு” என்றவர், அங்கு நம்மை அழைத்துச் சென்றார்.
‘‘இங்கதான் கால்நடைகளுக்கான கொட்டகைகள் அமைச்சிருக்கேன். பெருவிடை ரகத்தைச் சேர்ந்த சேவல்கள் வளர்க்குறேன். இதை முறையான பயிற்சிகள் கொடுத்து, சண்டை சேவலாக உருவாக்கி விற்பனை செய்றேன். இதைக் கட்டுசேவல்னும் சொல்வாங்க. இப்ப 35 சேவல்கள் இருக்கு. பொதுவா சேவல்கள் 7-8 மாசங்கள்ல பருவத்துக்கு வந்து கொக்கரிச்சி கூவ ஆரம்பிக்கும். அப்ப மூர்க்கத்தனம் அதிகமா இருக்கும். ஒண்ணுக்கு ஒண்ணு கடுமையா சண்டைப்போட்டுக் காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு. அதனால, பருவத்துக்கு வந்த சேவல்களைத் தனித்தனியா பிரிச்சு வளர்ப்பேன்.

திடகாத்திரமான பெட்டை கோழியோட தான், சண்டை சேவலை இணை சேர்ப்பேன். அந்த நேரத்துல சேவல்களுக்குப் பாதாம், பிஸ்தாவை உணவா கொடுப்பேன். இரவு ஊற வெச்ச கொண்டைக்கடலையைத் தலா பத்து வீதம் ஒவ்வொரு சேவலுக்கும் காலையில உணவா கொடுப்பேன். மாலையில கம்பு கொடுப்பேன். கோழிகளுக்கும் சேவல்களுக்கும் ஆண்டுதோறும் தடுப்பூசி போடுவேன்.
கட்டுச்சேவலுக்கு நீச்சல் பயிற்சி ரொம்பவே அவசியம். வாரத்துக்கு ஒருமுறை அரை மணி நேரம் நீச்சல் பயிற்சி கொடுக்குறேன் சண்டைக்குத் தயாரானதுமே சேவல்களை விற்பனை செய்ய ஆரம்பிப்போம். 12 மாச வயசுள்ள ஒரு சண்டை சேவலை 5,000 - 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்றேன். பொங்கல் பண்டிகை நேரத்துல கிராமப்புறங்கள்ல அரசு அனுமதியோடு சேவல் சண்டை உரிய விதிமுறைகளுடன் நடத்தப்படுது. அந்தப் போட்டிகள்ல கலந்துக்குறதுக்காக, பலரும் ஆர்வத்தோடு சண்டைச்சேவல்களை வாங்கிகிட்டுப் போயி வளர்க்குறாங்க. 13 பெட்டைக்கோழிகள் வளர்க்குறேன். கோழிக் குஞ்சுகள் சுமார் ஒன்றரை மாசம் வரைக்கும் தாய் கோழிக்கிட்ட பாதுகாப்பா வளரும். அதுக்குப் பிறகு, மேய்ச்சலுக்கு விடுவோம்.

மூன்று வகையான நாட்டு மாடுகள்!
காங்கிரேஜ், தார்பார்க்கர், காங்கேயம் ரகங்களைச் சேர்ந்த 12 நாட்டு மாடுகள் வளர்க்கிறேன். இங்க உள்ள மாடுகள் எல்லாமே நல்லா திடகாத்திரமா இருக்கு. நெல்லித் தோட்டத்துல மேய்ச்சல் முறையிலதான் இதை வளர்க்குறேன். நிறைய களைச்செடிகளும், புற்களும் இங்க வளருது. மேய்ச்சல்லயே மாடுகளுக்குப் போதுமான பசுந்தீவனம் கிடைச்சுடுது. மாடுகளோட சாணம் மட்கி, உரமாகி மண்ண வளப்படுத்துறதுனால, நெல்லி மரங்கள் நல்லா செழிப்பா வளருது. நான் வளர்க்குற இந்த மாடுகளோட பால் ரொம்பவே தரமானதா இருக்கு. வருஷம் முழுக்க ஏதாவது மூணு மாடுகள் கறவையில இருக்கும். தினமும் 10 லிட்டர் பால் கிடைக்கும். எங்க தேவைக்குப் போக, மீதியுள்ள 5 லிட்டர் பாலை, இந்தப் பகுதி மக்கள்கிட்ட நேரடியா விற்பனை செய்றேன். ஒரு லிட்டருக்கு 70 ரூபாய் வீதம் விலை கிடைக்குது. தீவனச்செலவு, பராமரிப்புச் செலவு போக வருஷத்துக்கு 60,000 ரூபாய் லாபமா கிடைக்கும்.
பொங்கல் முடிந்ததும் ஆடு வளர்ப்பு...
மழைக்காலத்துல ஆடுகளுக்கு நோய்ப் பாதிப்புகள் ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் அதிகம். அதனால, அந்த நேரத்துல மட்டும் ஆடு வளர்ப்பைத் தவிர்த்திடுவோம். ஒவ்வொரு வருஷமும் பொங்கல் முடிஞ்சதும் சராசரியா 40 கிடாய்க்குட்டிகளை வாங்கிட்டு வந்து வளர்ப்போம். அதை பக்ரீத் பண்டிகை நேரத்துல வித்துடுவேன்.
தோட்டத்தைப் பாதுகாக்கும் நாய்கள்
பெல்ஜியன் மலினாய்ஸ் (Belgian malinois) இன நாய் ஒண்ணு வளர்க்கிறேன். நாள் முழுக்க எப்பவும் என்கூடவேதான் இருக்கும். இதுதவிர... டாஷ்ஹண்டு (Dachshund) வகையில ரெண்டு நாய்களும், அமெரிக்கன் புல்லி (American bully) மற்றும் சிப்பிப்பாறை இனத்துல தலா ஒரு நாயும் வளர்க்கிறேன். இந்த நாய்கள் எல்லாமே தோட்டத்துலயே ஒண்ணா சேர்ந்துதான் விளையாடிகிட்டிருக்கும். வாரம் ஒருமுறை நாய்களுக்கு அசைவ உணவு கொடுப்பேன். இதுங்கதான் என்னோட தோட்டத்தைப் பாதுகாக்குதுங்க. இங்க கோழிகள் வளர்க்குறதுனால நிறைய பாம்புகள் வரும். அதனால கோழிகளுக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாம, நாய்கள்தான் பாதுகாக்குது’’ என்று சொன்னவர், நெல்லி சாகுபடி மற்றும் கால்நடைகள் வளர்ப்பு மூலம் கிடைக்கும் வருமானம் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் லாபம்...
8 ஏக்கர்ல உள்ள 1,100 நெல்லி மரங்கள்ல இருந்து, இந்த வருஷம் மொத்தம் 35 டன் நெல்லிக் காய்கள் மகசூல் கிடைச்சது. ஒரு கிலோவுக்கு 16-40 ரூபாய் விலை கிடைச்சுது. இந்த வகையில கணக்குப் பார்த்தா, ஒரு கிலோவுக்குச் சராசரியா 25 ரூபாய் விலை கிடைச்சுருக்கு. 35,000 கிலோ நெல்லிக்காய்கள் விற்பனை மூலமா 8,75,000 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. பராமரிப்பு, அறுவடை, போக்குவரத்துச் செலவுகள் உள்பட 3,00,000 ரூபாய் போக மீதி 5,75,000 ரூபாய் லாபமா கிடைச்சிருக்கு. மாடுகள் வளர்ப்பு மூலம் வருஷத்துக்கு 60,000 ரூபாய் லாபம் கிடைக்குது.
வருஷத்துக்குச் சராசரியா 40 சண்டைச்சேவல்களை விற்பனை செய்றேன். ஒரு சேவலுக்குக் குறைந்தபட்சம் 4,000 ரூபாய் வீதம் 40 சேவல்கள் மூலம் 1,60,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். தீவனம் செலவுப் போக 1,20,000 ரூபாய் ரூபாய் லாபமா கிடைக்கும்.

வருஷத்துக்கு 15 பெட்டை கோழிகள் விற்பனை மூலம் 13,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். தீவன செலவு போக 10,000 ரூபாய் லாபமா கிடைக்கும். பொங்கல் சமயத்துல ஒரு ஆட்டுக்கு 4,000 ரூபாய் வீதம் விலை கொடுத்து 40 ஆடுகளை வாங்கி ஆறு மாசம் வரைக்கும் வளர்ப்பேன். பக்ரீத் நேரத்துல ஒரு ஆடு சாரசரியா 8,000 ரூபாய்ங்கற விலையில வித்திடுவேன். 40 ஆடுகள் விற்பனை மூலம், 3,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். முதலீடு செஞ்ச 1,60,000 ரூபாயை கழிச்சோம்னா, மீதி 1,60,000 ரூபாய் லாபமா கையில நிக்கும். வருஷத்துக்குச் சராசரியா ஏழு நாய்க்குட்டிகள் விற்பனை செய்றேன். நான் வளர்க்கிற நாலு வகையான நாய்கள்ல... குறைந்தபட்ச விலையா, சிப்பிப்பாறை நாய்க்குட்டிக்கு 4,000 ரூபாயும்... அதிகபட்சமா பெல்ஜியன் மலினாய்ஸ் நாய்க்குட்டிக்கு 50,000 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்குது. நாய்க்குட்டிகள் விற்பனை மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்குது. பராமரிப்புச் செலவுகள் போக, 70,000 ரூபாய் லாபமா கிடைக்குது.

வருஷத்துக்கு 1,500 கிலோ சப்போட்டா பழங்களை விற்பனை பண்றேன். ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் வீதம் 30,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுக்கு எந்தவித செலவும் கிடையாது. 50 தென்னை மரங்கள் மூலம் வருஷத்துக்கு 6,000 தேங்காய்கள் கிடைக்குது. ஒரு காய்க்கு 10 ரூபாய் வீதம் மொத்தம் 60,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். அறுவடவை கூலி போக, 50,000 ரூபாய் லாபமா கிடைக்கும். ஆக மொத்தம் நெல்லி சாகுபடி, ஆடு, மாடு, கோழி, நாய்கள் வளர்ப்பு மூலம் வருஷத்துக்கு 10,75,000 ரூபாய் லாபம் கிடைக்குது” என்றார்.
தொடர்புக்கு, சிபி,
செல்போன்: 88831 14111.

நெல்லி கேண்டி விற்பனை!
“நெல்லிக்காய்க்குக் வியாபாரிகள்கிட்ட நியாயமான விலை கிடைக்காதப்போ, நானே மக்கள்கிட்ட நேரடி விற்பனையில இறங்கிடுவேன். என்னோட வண்டியில நெல்லிக்காய்களை வச்சுக்கிட்டு, ஊர் ஊரா சுத்தி வந்து, ஓரளவுக்கு லாபகரமான விலைக்கு வித்துடுவேன். பயிர் விளைச்சலை மட்டுமே நம்பியிருக்காம, கால்நடை வளர்ப்புலயும் கவனம் செலுத்துறனாலதான் எனக்கு நிறைவான வருமானம் கிடைக்குது. கால்நடைகளோட கழிவுகளால நெல்லித் தோட்டம் செழிப்பா இருக்கு. நெல்லி கேண்டிக்கு இப்ப மக்கள்கிட்ட அதிக வரவேற்பு இருக்கு.
நெல்லிக்காய்களைத் தண்ணீர்ல போட்டு, முக்கால் மணி நேரம் கொதிக்க விடணும். அதுக்குப் பிறகு காய்களைக் கையாலயே உடைச்சு விடணும். வெல்லத்தைத் தூளாக்கி, நெல்லித்துண்டுகளோட சேர்த்து கைப்படாம கலக்கிவிடணும். அடுத்தச் சில மணி நேரத்துல நெல்லுத்துண்டுகள்ல இருந்து, தண்ணீர் தனியே பிரியும். தண்ணீரை நீக்கிட்டு, நெல்லியை மட்டும் தனியே எடுத்து, வெயில்ல 2 - 3 நாள்களுக்குக் காய வெச்சா, சுவையான நெல்லி கேண்டி தயாராகிடும். 500 கிராம் 250 ரூபாய்னு விற்பனை செய்றேன். இப்பதான் நெல்லி கேண்டி விற்பனையை ஆரம்பிச்சிருக்கேன்’’ என்கிறார் சிபி.

மரபு வீடு
“2016-ம் வருஷம், கடும் வறட்சியால எங்க தோட்டத்துல இருந்த சில தென்னை மரங்கள் பட்டுப்போயிடுச்சு. அந்த மரங்களை அப்புறப்படுத்தி, என்னோட தோட்டத்துலயே போட்டு வச்சிருந்தேன். அந்த மரங்களைப் பயன்படுத்தி எளிமையான முறையில தங்கும் குடில் ஒண்ணு உருவாக்கினேன். அந்தக் குடில்லதான் நான் தங்கியிருக்கேன்.
ஊர்லேருந்து என்னோட அம்மா, அப்பா, நண்பர்கள் உள்பட யார் என்னோட தோட்டத்துக்கு வந்தாலும் குடில்லதான் தங்குவாங்க. என்னோட தோட்டத்துல மரபுவீடு ஒண்ணு கட்டிகிட்டு இருக்கேன். பழைய ஓடுகள், ஜன்னல்கள், மாட்டு வண்டிச் சக்கரம் உள்படப் பழைய பொருள்களையும்... சுண்ணாம்பு, மண், செங்கல் பயன்படுத்தியும் இந்த வீட்டை உருவாக்குறேன். வீட்டுக்கு உயிர்வேலியா கிளுவை மரங்களை வளர்க்கப் போறேன். எதிர்காலத்துல விருந்தினர்கள் வந்து தங்கி, இயற்கை வாழ்வியலை அனுபவிக்க இந்த வீடு பயன்படும்” என்கிறார்