கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமுரளி (37), சாப்ட்வேர் இன்ஜினீயர். இவர், 2013 முதல் விவசாயிகளின் நலனுக்காக இலவசமாக, Vivasayam In Tamil என்ற பெயரில் மொபைல் ஆப் நடத்தி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் டெல்லிக்கு வந்திருந்த கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சையை இவர் சந்தித்துப் பேசியுள்ளார். இது குறித்தான தகவல்கள், சமூக வலைதளங்களில் வைரலானது.

சுந்தர் பிச்சையுடன் நடந்த உரையாடல் என்ன? என்ற கேள்வியுடன் செல்வமுரளியைத் தொடர்புகொண்டு பேசினோம், ``Google Ad. அகாடமி வாயிலாக, இந்தியா முழுவதிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆப் டெவலப்பர்களைத் தேர்வு செய்த கூகுள், டயர்1, டயர்2 என்ற இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளது. இவர்கள் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்து சர்வதேச சந்தை அளவுக்கு வளர, கூகுள் நிறுவனம் இலவச பயிற்சியும் கொடுக்கிறது. இந்தத் திட்டத்தில், நான் மேம்படுத்தி வரும் விவசாயம் இன் தமிழ் மொபைல் ஆப்–க்காக, டயர்1 பிரிவில் நானும் தேர்வாகியுள்ளேன்.
இது தொடர்பான சந்திப்பின்போது சுந்தர் பிச்சையை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. எனது ஆப் மற்றும் அதன் பின்னணி தொடர்பாக,
விவசாயிகளுக்காக எதற்காக ஆப் டெவலப் செய்தீர்கள்?
அதில் என்னென்ன வசதிகள் உள்ளன?
இன்னமும் என்னென்ன சேர்க்க வேண்டியுள்ளது?
விவசாயிகளுக்கு தொழில்நுட்பம் எந்த அளவுக்கு தேவை?
என்ற கேள்விகளை அவர் என்னிடம் முன்வைத்தார்.
நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்திருப்பதால், விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஆப் டெவலப் செய்துள்ளேன். `Text to Speech’ என்ற ஆப்ஷன் வழியாக விவசாயிகள் தகவல்களைப் படிக்க வழிவகை செய்துள்ளேன். விவசாயிகள் பயிர்களின் நோய், வகை உள்ளிட்டவற்றை புகைப்படம் எடுத்து பிரச்னைகளை அனுப்பும்போது, அந்த தகவல்களைக் கணினி தானாகக் கண்டறிவதற்கு `டேட்டா செட்’ தேவைப்படுகிறது.

இதை உருவாக்க அதிக செலவாகிறது, கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் உதவினால் இது போன்ற செயலிகள் அதிகரிக்கும். அதன் மூலம் தொழில்நுட்பத்தால் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். விவசாயிகளுக்கு அவை உதவியாக இருக்கும் என அவரிடம் தெரிவித்தேன்.
அதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, இன்னும் ஓராண்டில் கூகுள் நிறுவனம், 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை, இந்தியாவில் விவசாயம் தொடர்பான தொழில்நுட்ப பணிகளுக்காக முதலீடு செய்யும் எனத் தெரிவித்தார். அவரை சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சி’’ என, நமக்கு விரிவாக விளக்கமளித்தார்.