மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மலைவேம்பு மரங்களை விற்பனை செய்வது எப்படி?

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

‘‘மலைவேம்பு மரங்களை எப்போது விற்பனை செய்யலாம். யார் வாங்குவார்கள் என்ற விவரத்தைச் சொல்லவும்?’’

ஜெ.நடராஜன், குத்தாலம், மயிலாடுதுறை மாவட்டம்.

கோயம்புத்தூர் வேளாண் காடுகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் நாராயணசாமி பதில் சொல்கிறார்.

‘‘மலைவேம்புச் சாகுபடி செய்பவர்களின் எண்ணிக்கை கூடுவதுபோல அதன் தேவையும் கூடி வருகிறது. ஒட்டுப்பலகை செய்யும் பிளைவுட் நிறுவனங்கள், மலைவேம்பு மரங்களை விரும்பி வாங்குகின்றன. ஃபேஸ் வெனியர்(Face Veneer) என்பது மலைவேம்பு மரத்தின் மேலும், கீழும் உள்ள பகுதி. இது இயற்கையாக அழகான வரிகளுடன் இருக்கும். இதைத்தான் ஒட்டுப்பலகையின் மீது ஒட்டுவார்கள். ஒரு காலத்தில் இந்த ஃபேஸ் வெனியர் இறக்குமதி செய்யப்பட்டது. இப்போது இறக்குமதி செய்வது குறைந்துள்ளது. காரணம், நம் ஊரிலேயே மலைவேம்பு மூலம் சிறப்பான ஃபேஸ் வெனியர் உற்பத்தி செய்யப்படுக்கிறது.

மலைவேம்பு
மலைவேம்பு

பொதுவாக மலைவேம்பு வேகமாக வளரக்கூடியது. நடவு செய்த 4 ஆண்டுகளிலிருந்து அறுவடை செய்யலாம். குறைந்தபட்சம் 18 இன்ச் சுற்றளவும் அதிகபட்சம் 30 இன்ச் சுற்றளவுக்குள் இருந்தால் பெரும்பாலான பிளைவுட் நிறுவனங்கள் விரும்பி வாங்குகின்றன. இதற்குக் காரணம், அவர்களிடம் உள்ள இயந்திரங்களில் இந்த அளவுக்கு மரங்களைப் பயன்படுத்தித்தான் பிளைவுட் தயாரிக்க முடியும். சரி, இந்த அளவுக்கு மேல் உள்ள மரங்களை என்ன செய்யலாம் என்று நினைக்கலாம். இந்த மரங்களையும் நிச்சயம் விற்பனை செய்ய முடியும். இதை வாங்குவதற்குச் சில நிறுவனங்களே உள்ளன. எனவே, விற்பனை வாய்ப்பு கொஞ்சவும் குறைவாக இருக்கும். தற்போது பிளைவுட்டுக்கான மரங்கள் டன் 7,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. பிளைவுட் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், இன்னும் பல தேவைகளுக்கும் மலைவேம்பு மரம் பயன்படுத்தப்படுகிறது. மலைவேம்பு மரத்தைப் பதப்படுத்தினால் உறுதியானதாக ஆகிவிடும். கறையான் அரிக்காத இதன் தன்மையால், கட்டட உள் அலங்காரப் பணிகளுக்கும் மேஜை, நாற்காலி, தேயிலை பேக்கிங் பெட்டி... போன்றவற்றைச் செய்யவும் பயன்படுத்துகிறார்கள். என் அனுபவத்தையும் கட்டாயம் சொல்ல வேண்டும். மலைவேம்பு நடவு செய்த இரண்டாம் ஆண்டு முதல் காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் கொடுத்தால் போதும். வேகமாக வளரும் என்று ஆசைப்பட்டுத் தினமும் பாசனம் செய்தால், மரம் மட்டும் வளரும். ஆனால், அதன் தடிமன் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. தண்ணீர் குறைவாகக் கொடுக்கும்போது, மரம் உறுதியாகும். இதனால், அதன் தரமும் கூடும். மலைவேம்பு அறுவடை செய்தவுடன் மறுதாம்பு விட்டால், அதுவும் சிறப்பாக வளர்ந்து வருமானம் கொடுக்கும்.’’


தொடர்புக்கு,
1.மேலாளர்,
ஷரான் பிளைவுட்
செல்போன்: 98844 13267

2.மேலாளர்,
ஆம்பி பிளைவுட்
(30 இன்ச்சுக்கு மேல் உள்ள மரங்கள்)
செல்போன்: 94427 37550


3.தலைமை செயல் அலுவலர்,
கோயம்புத்தூர் வேளாண் காடுகள்
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்,
செல்போன்: 94433 84746.

செந்தில்குமார், நாராயணசாமி
செந்தில்குமார், நாராயணசாமி

‘‘இயற்கை விவசாய முறையில் தர்பூசணி சாகுபடி செய்ய விரும்புகிறோம். அதன் நுட்பங்களைச் சொல்லுங்கள்?’’

டி.ஜெயசங்கர்,கோயம்புத்தூர்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தர்பூசணி விவசாயி செந்தில்குமார் பதில் சொல்கிறார்.

‘‘தர்பூசணியைப் பொறுத்தவரை கார்த்திகை மாதத்திலிருந்தே சாகுபடி செய்யலாம். தேவையும் சந்தை வாய்ப்பும் கோடைக்காலமான பங்குனி முதல் ஆனி மாதம் வரையிலும் அதிகம் என்பதால், இந்தப் பட்டங்களில் அறுவடை செய்வதைப்போலச் சாகுபடியைத் தொடங்க வேண்டும். எந்தப் பட்டத்தில் விதை ஊன்றுகிறோமோ, அதற்கு முந்தைய மாதத்தில் நிலத்தைத் தயார்படுத்த வேண்டும். 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை நிலத்தை நன்கு உழவு செய்துவிட வேண்டும். பிறகு, ஏக்கருக்கு நான்கு டிராக்டர் மட்கிய தொழுவுரத்தைக் கொட்டி, பரவலாக்கி உழவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை ஏழு அடி இடைவெளிவிட்டு, அரையடி உயரத்தில் மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். உடனே நீர்ப்பாசனத்துக்குச் சொட்டு நீர் அல்லது வடிகால் வசதி ஏற்படுத்தி, நடவுக்கு முந்தைய நாள் மாலையில் தண்ணீர்ப் பாய்ச்சி மண்ணை ஈரப்பதமாக்க வேண்டும்.

தர்பூசணி
தர்பூசணி

ஒரே வரிசையில், ஓரடி இடைவெளியில் வரிசையாக ஐந்து விதைகள் ஊன்ற வேண்டும். பிறகு, ஐந்தடி இடைவெளிவிட்டு மீண்டும் ஓரடி இடைவெளியில் வரிசையாக ஐந்து விதைகள் ஊன்ற வேண்டும். இந்த இடைவெளியால் கொடிகள் நன்கு வீசிப் படரும். இவ்வாறு நட்டால், ஏக்கருக்கு 250 கிராம் விதைகள் தேவைப்படும். ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மி.லி பஞ்சகவ்யா கலந்து விதைநேர்த்தி செய்து 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்திவிட்டு ஊன்றலாம். இப்படிச் செய்வதால் வேர் அழுகல், வேர்த்தாக்குதல் தொடர்பான நோய்கள் வராது. விதை ஊன்றிய மூன்று முதல் ஐந்தாம் நாளில் முளைப்பு தெரியும். தொடர்ந்து ஈரப்பதத்தைப் பொறுத்துப் பாசனம் செய்துவந்தால் போதும். ஏழு முதல் 10-ம் நாள்களுக்குள் முதல் களையும், 15 முதல் 20-ம் நாள்களுக்குள் இரண்டாவது களையும் எடுக்க வேண்டும். 20-ம் நாளுக்கு மேல் கொடி பரவத் தொடங்கும். அந்த நேரத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். இலைகளில் துளை துளையாகக் காணப்படுவதே இதன் அறிகுறி.

புறாபாண்டி
புறாபாண்டி

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி பஞ்சகவ்யா அல்லது 200 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். தொடர்ந்து வாரம் ஒரு முறை பஞ்சகவ்யாவை (10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி) கலந்து தெளித்து வர வேண்டும். 25 முதல் 30-ம் நாளில் பூப்பூக்கும். 30-ம் நாளுக்கு மேல் பிஞ்சு பிடிக்கும். 40-ம் நாளுக்கு மேல் பழங்கள் பருமனாகும். 35 முதல் 40-ம் நாள், 40 முதல் 45-ம் நாள் என இரண்டு முறை 10 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி மீன் அமிலம் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இதனால் காய்கள் பருமனாவதுடன், இனிப்புச்சுவையும் கூடும். 55 முதல் 60-ம் நாள்களுக்குள் அறுவடையைத் தொடங்கலாம். தொடர்ந்து ஐந்து முதல் எட்டு நாள்களுக்கு ஒரு முறை என்ற கணக்கில் மூன்று முதல் நான்கு முறை அறுவடை செய்யலாம். பழத்தைத் தட்டிப் பார்க்கும்போது ‘கணீர் கணீர்...’ எனச் சத்தம் கேட்டால் பழம் பழுக்கவில்லை என்றும், மந்தமான சத்தம் கேட்டால் பழம் முதிர்ந்துவிட்டது என்றும் தெரிந்துகொள்ளலாம். மேலும், தண்ணீர் வசதி குறைவாக இல்ல இடங்களில் சாகுபடி செய்வதை தவிர்க்கவும். உங்கள் சுற்று வட்டாரத்தில் தர்பூசணி விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை அறிந்துகொண்டு, சாகுபடியை தொடங்கவும்.’’

தொடர்புக்கு, செந்தில்குமார், செல்போன்: 90423 19396.

‘‘பால் பண்ணை வைத்துள்ளோம். பாலை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய விரும்புகிறோம். இதற்கு எங்கு பயிற்சி கொடுக்கிறார்கள்?’’

சி.குணவதி, திருத்தணி.

‘‘தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த அலமாதி- கொடுவேளி எனும் பகுதியில் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி என்ற பெயரில் இயங்கி வருகிறது. செயல்வழிக் கற்றலுக்காகப் பால் பதப்படுத்தும் நிலையம், பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்தும் நிலையம், இறைச்சி பதப்படுத்தும் நிலையம் மற்றும் சாக்லேட் தயாரிக்கும் தொழில் மையம் உள்ளிட்ட பல மையங்கள் இருக்கின்றன. இங்கு தொடர்ந்து பயிற்சிகளையும் நடத்தி வருகிறார்கள்.’’

தொடர்புக்கு:
முதல்வர்,
உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, அலமாதி - கொடுவேளி,
சென்னை - 600052.
தொலைபேசி: 044 27680214/15 .

புறா பாண்டி பகுதிக்கான கேள்விகளை 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமும் அனுப்பி வைக்கலாம்.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும்,

pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.