
தற்சார்பு வாழ்வில் தடம் பதிக்கும் கால்நடை மருத்துவத் தம்பதி!
மகசூல்
பணம், பதவி, படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. தற்சார்பு, ஆரோக்கியமான உணவு, கணிசமான வருமானம், மற்ற உயிரினங்களையும் வாழ வைத்தல்... ஆகிய அனைத்தும் அடங்கியதுதான் மனித வாழ்க்கை. நம் முன்னோர்களின் வாழ்வில் இவையெல்லாம் இழையோடி இருந்தன. ஆனால் இன்றைய நவீன உலகில், மனித வாழ்வு என்பது பணம் உற்பத்தி செய்யும் எந்திரமாகவே சுழல்கிறது.

இந்நிலையில்தான் அமெரிக்காவில் வசித்து வந்த கால்நடை மருத்துவர்களான ஆனந்த் - ஆனந்தி தம்பதி, சொந்த ஊர் திரும்பி, தற்சார்பு வேளாண்மை செய்வது கவனத்தை ஈர்த்து வருகிறது. பொது இடங்களில் குறுங்காடு உருவாக்குதல், தெரு நாய்களைப் பராமரித்தல், பறவைகளுக்கு உணவு படைத்தல் உள்ளிட்ட உயரிய செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே தில்லையம்பூரில் 13 ஏக்கரில் பச்சை பசேல் எனச் செழிப்பாகக் காட்சி அளிக்கிறது இவர்களது பண்ணை. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை இளம் நெற்பயிர்கள் மென்மை யாகக் காற்றில் அசைந்தாடிப் பரவசப்படுத்து கின்றன. தண்ணீர்ப் பாய்ச்சிக்கொண்டிருந்த ஆனந்த்-ஆனந்தி தம்பதி, நம்மை மகிழ்ச்சி யோடு வரவேற்று பண்ணையைச் சுற்றிக் காண்பித்துக்கொண்டே பேசினார்கள். “என்னோட பூர்வீகம் கும்பகோணம். என் மனைவியோட சொந்த ஊர் தர்மபுரி. சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியில படிச்சிக்கிட்டு இருந்தப்பதான், நாங்க ரெண்டு பேரும் காதலிச்சி, திருமணம் செஞ்சிக்கிட்டோம். பிறகு, மேற்படிப்புக்காக, அமெரிக்கா போயி செட்டில் ஆயிட்டோம். எங்களுக்கு ரெண்டு குழந்தைங்க. நான் கால்நடை மருத்துவ ஆராய்ச்சியில ஈடுபட்டுக்கிட்டு இருந்தப்பவே, மென்பொருள் துறையிலயும் எனக்கு ஆர்வம் எற்பட்டுச்சு. அந்தத் துறையிலயே எனக்கு வேலையும் கிடைச்சிது. கை நிறையச் சம்பளம். ‘வெயில்லதான், நிழலோட அருமை தெரியும்’னு சொல்லுவாங்க. உண்மைதான். அமெரிக்காவுல இருக்கும்போதுதான், சொந்த மண்ணுல, சுயசார்பா வாழணும்கிற ஏக்கம் அதிகமாச்சு.
2010-ம் வருஷம், கும்பகோணம் திரும்பினோம். சொந்தமா நிலம் வாங்கி, இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சோம். ஆரோக்கியமான உணவு சாப்பிடணும். உறவினர்கள், நண்பர்களுக்கும் கொடுக்கணும் கிறதுதான் எங்க நோக்கம். லாபத்தைப் பெருசா எதிர்பார்க்குறதில்ல. அதேசமயம், பண்ணையை வெற்றிகரமாக நிர்வாகம் செய்யவும் எங்களோட குடும்பச் செலவு களுக்கும் இதுல இருந்து கணிசமான வருமானம் வந்துடுது.

இப்ப நான் ஒரு மென்பொருள் நிறுவனத்துல வேலைபார்க்குறேன். என் மனைவிதான் விவசாயத்தைக் கவனிச்சிக்குறாங்க. இவங்களோட கடுமையான உழைப்பு னாலதான், இந்தப் பண்ணை இந்தளவுக்குச் செழிப்பா காட்சி அளிக்குது. எங்களோட வீட்லயிருந்து 10 கிலோமீட்டர் தூரம். தினமும் டூவீலர்ல பண்ணைக்கு வந்துட்டுப் போறாங்க’’ என்றவர், தன் மனைவி ஆனந்தியை நோக்கி, “இதுக்கு மேல நீ பேசினாதான், சரியா இருக்கும். பேசு...’’ என்று உற்சாகப்படுத்தினார்.

ஆனந்தி பேசத் தொடங்கினார். ‘‘எங்க பண்ணையில 5 போர்வெல் இருக்கு. கோடைக் காலத்துலயும் தாராளமாகத் தண்ணீர் கிடைக்குது. ஆனாலும் நிலத்தடி நீரை விரயப்படுத்தக் கூடாதுங்கறதுனால, ஒரு போகம்தான் நெல் சாகுபடி. கோடையில எள்ளு, உளுந்து, காய்கறி, மிளகாய் பயிர் பண்ணுவோம்.
பசுமை விகடன் மூலமா நிறைய தொழில் நுட்பங்களைக் கத்துக்க ஆரம்பிச்சோம். வெற்றிகரமா இயற்கை விவசாயம் செய்யக் கூடியவங்களைத் தேடிப் போயி, அவங்களோட அனுபவங்களையும் தெரிஞ்சிக்க ஆரம்பிச்சோம். இதுக்காக நானும் என் கணவர் ஆனந்தும் பல ஊர்களுக்குப் பயணம் செஞ்சிருக்கோம். சில காரணங்களால, மாடு வளர்க்க முடியலை. மற்ற விவசாயிகள்கிட்ட இருந்து காசு கொடுத்துதான் எரு, மாட்டுச் சிறுநீர் வாங்கிக்கிட்டு இருந்தோம். ஆரம்பத்துல ஏக்கருக்கு 3 டன்னுக்கு மேல எரு போட்டோம். அதுக்கு செலவும் உழைப்பும் அதிகம். பிறகு, மண்ணை வளப்படுத்த, ஏக்கருக்கு 15 கிலோ தக்கைப்பூண்டு விதைச்சி, பூப்பூக்கும் தருணத்துல மடக்கி உழுதோம். ஓரளவுக்கு நல்ல மாற்றம் தெரிஞ்சிது. இதுக்கு இடையில ஈரோட்டைச் சேர்ந்த விவசாயி ஒருவர், ஊட்டமேற்றிய தொழுவுரத் தோட மகத்துவத்தைப் பத்தி சொன்னார். அதுல சில தனித்துவங்களைக் கடைப்பிடிக்கிறோம். அதுதான் எங்களுக்கு ரொம்பவே கைகொடுத்துக் கிட்டு இருக்கு.
இது தவிர, அமுதக்கரைசல், மீன் அமிலம், ஐந்திலைக் கரைசலும் பயன்படுத்துறோம். பூச்சிகளைக் கட்டுப்படுத்த, சோலார் இனக்கவர்ச்சிப் பொறி வெச்சிருக்கோம். அதோட பறவைத் தாங்கிகளும் அமைச்சிருக் கோம். இதுல இரட்டைவால் குருவிகளும், ஆந்தை உட்பட இன்னும் பல பறவைகள் வந்து பூச்சிகளைக் கட்டுப்படுத்துது. எங்களோட பண்ணையில எலிகளைக் கட்டுப்படுத்த பாம்புகள் உதவியா இருக்கு. கவனமா இருந்தா போதும். அது நம்மை ஒண்ணும் செய்யாது.

இந்தப் பகுதியில மத்த விவசாயிகளோட வயல்கள்ல பூச்சித்தாக்குதல் அதிகம். ஆனால், எங்களோட நெற்பயிர்ல பெரும்பாலும் பூச்சிகள் வர்றதில்லை. வரப்பு ஓரத்துல செண்டுமல்லியும், வரப்புக்கு நடுவுல உளுந்தும் விதைச்சிடுவோம். எப்பயாவது ஒரு சில முறை பூச்சிகள் வந்தாலும்கூட, செண்டு மல்லி, உளுந்து செடிள்ல இருந்துட்டு போயிடுது. இதனால நெற்பயிர்கள் பாதுகாக்கப்படுது. இதையும் மீறி ஏதாவது பூச்சிகள் நெற்பயிர்ல தென்பட்டால், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல் தெளிப்போம்.
இந்தப் பண்ணையோட மொத்த பரப்பு 13.5 ஏக்கர். அதுல 12 ஏக்கர்ல நெல் சாகுபடி செய்றோம். கால் ஏக்கர்ல மீன் குளம் இருக்கு. மீதி நிலத்துல கொய்யா, சீதா, மா, மாதுளை, பலா, சாத்துக்குடி, தென்னை உட்பட 50 மரங்கள் வெச்சிருக்கோம். இந்த மரங்களுக்கு 2-3 வயசு ஆகுது. இவை இன்னும் காய்ப்புக்கு வரலை. இதுல வீட்டுக்குத் தேவையான காய்கறிகளும் சாகுபடி செஞ்சிக்குறோம். மிளகாயும் சாகுபடி செய்றோம். வேலி ஓரத்துல, நொச்சி இருக்கு. நெல் வயல்ல பசுந்தாள் உரம் மடக்கி உழும்போது, நொச்சியோட இலைதழை களையும் வெட்டிக் கொண்டு வந்து போடுவோம்’’ என்றவர் நெல் மகசூல் பற்றிப் பேசத்தொடங்கினார்.
12 ஏக்கர் நெல் சாகுபடி
“சம்பா பருவத்துல தலா 2 ஏக்கர்ல கறுப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, 3 ஏக்கர்ல சீரகச் சம்பா, 5 ஏக்கர்ல பொன்னியும் சாகுபடி செய்றோம். கறுப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பாவுல ஏக்கருக்கு 18 மூட்டையும் (62 கிலோ) சீரகச் சம்பா, பொன்னியில 25 மூட்டையும் மகசூல் கிடைக்குது. சராசரியா ஏக்கருக்கு 22 மூட்டை வீதம் இந்த 12 ஏக்கர் நெல் சாகுபடி மூலம் மொத்தம் 16,368 கிலோ நெல் கிடைக்குது. அதுலயிருந்து, 8,800 கிலோ அரிசி கிடைக்குது. அதுல வீட்டுத்தேவைக்கு 1,000 கிலோ எடுத்துக்குவோம். கறுப்புக் கவுனி, 100 ரூபாய், சீரகச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா தலா 90 ரூபாய், பொன்னி 75 ரூபாய்னு விக்கிறோம். சராசரியா ஒரு கிலோவுக்கு 85 ரூபாய் வீதம் 7,800 கிலோ அரிசி மூலம் 6,63,000 ரூபாய் வருமானம். எல்லாச் செலவும் போக, 4 லட்சம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.

கோடையில 8 ஏக்கர்ல எள்ளும், 5 ஏக்கர்ல உளுந்தும் சாகுபடி செய்வோம். எள்ளு சாகுபடியை பொறுத்தவரைக்கும் விதைப்பு செஞ்ச, 30-ம் நாள் ஏக்கருக்கு 2 லிட்டர் பஞ்ச கவ்யாவை 40 லிட்டர் தண்ணீர்ல கலந்து தெளிப்போம். பூப்பூக்கும் தருணத்துல, 1 லிட்டர் மீன் அமிலத்தை 40 லிட்டர் தண்ணீர்ல கலந்து தெளிப்போம். ஏக்கருக்கு 100 கிலோ வீதம் மகசூல் கிடைக்குது. மொத்தம் 800 கிலோ எள்ளு கிடைக்கும். அதுல வீட்டுத்தேவைக்கு 100 கிலோ எண்ணெய் ஆட்டியது போக, மீதி 700 கிலோ எள்ளை, கிலோ 120 ரூபாய்னு விற்பனை செஞ்சிடுவோம். அதுமூலமா ரூ.84,000 கிடைக்கும். அதுல ஏக்கருக்கு ரூ. 4,000 செலவு வீதம் ரூ.32,000 போக, 52,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

உளுந்து
5 ஏக்கர்ல உளுந்துச் சாகுபடி செய்றோம். ஏக்கருக்கு 10 கிலோ வீதம் விதை உளுந்துல, தலா அரைக்கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா கலந்து விதைநேர்த்தி செஞ்சி விதைப்புச் செய்வோம். வேர் முடிச்சுகளை அதிகப்படுத்தவும், உளுந்துச் சாகுபடியில பெரும் சவாலாக உள்ள மஞ்சள் நோயைத் தடுக்குறதுக்காகவும் விதைப்பு செஞ்ச 3 மற்றும் 20-ம் நாள் ஏக்கருக்கு 1 கிலோ ரைசோபியத்தை 50 லிட்டர் தண்ணீர்ல கலந்து தெளிப்போம். 28-ம் நாள் 80 லிட்டர் தண்ணீர்ல 800 மி.லி வேப்பெண்ணெய், 250 கிராம் மஞ்சள்தூள், 100 கிராம் காதி சோப்பைக் கலந்து தெளிப்போம். இதனால் பூச்சி நோய்த்தாக்குதல் முழுமையா கட்டுப்படுத்தப்படுது. ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 100 கிலோ மகசூல் கிடைக்கும். 5 ஏக்கருக்கும் மொத்தம் 500 கிலோ. ஒரு கிலோ 100 ரூபாய்னு விற்பனை செய்றோம். அதுமூலமா ரூ.50,000 வருமானமாக் கிடைக்கும். இதுல ரூ.15,000 செலவுப் போக, ரூ.35,000 லாபம் கிடைக்குது’’ என்றவர் நிறைவாக,
காய்கறிகள், மிளகாய், மஞ்சள்
‘‘25 சென்ட்ல வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், மிளகாய், மஞ்சள் பயிர் பண்ணுவோம். எங்களோட தேவைக்குப் போக மீதியுள்ளதை நண்பர்கள், உறவினர்களுக்குக் கொடுப்போம். எங்க விவசாயம் வருமானத்தை முன்னிலைப்படுத்தாத தற்சார்பு விவசாயம். அதுதான் எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருது’’ என்று விடைகொடுத்தார்.
தொடர்புக்கு, ஆனந்த், செல்போன்: 99760 64640
நடவு வயல்
தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் ஏக்கருக்கு 20 கிலோ வீதம் தக்கைப்பூண்டு விதைத்து, பூப்பூக்கும் சமயத்தில் மடக்கி உழுது, அடுத்த 15 நாள்களுக்குத் தொடர்ச்சியாகத் தண்ணீர் கட்ட வேண்டும். இதனால் களைகளும் கட்டுப்படுத்தப்படும். மீண்டும் உழவு ஓட்டி நிலத்தைத் தயார் செய்த பிறகு, 8 அடி பாத்தி முறையில் பட்டம் பிரித்து, வழக்கமான முறையில் நாற்றுகள் நடவு செய்ய வேண்டும். 10-ம் நாள் 50 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் இட வேண்டும். 20-ம் நாளிலிருந்து மாதம் ஒரு முறை பாசனநீரில் 20 லிட்டர் அமுதக்கரைசல் கலந்து தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். தேவைக்கு ஏற்பக் களையெடுக்க வேண்டும். 30-ம் நாள் 50 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் ஐந்திலைக் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 35-ம் நாள், 40 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். பூப்பூக்கும் தருணத்தில் 40 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் தேமோர் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும்.

மீன் குளம்
25 சென்ட் மீன் குளத்துல 300 மீன் குஞ்சுகள் வளர்க்குறோம். வருஷத்துக்கு 200 கிலோ மீன்கள் கிடைக்கும். எங்க தேவைக்குப் போக மீதியுள்ளதை வித்துடுவோம். இந்த ஊர்ல பங்குனி மாசம் மாரியம்மன் கோயில் திருவிழா சமயத்துல, உயிர் மீன்கள் கிலோவுக்கு 200 ரூபாய்க்கு மேல விலை கிடைக்குது.
மற்ற ஜீவன்களுக்கு உணவு!
“நெல் அரைக்கும்போது கிடைக்கக்கூடிய குறுணையை வேக வெச்சி, தெரு நாய்களுக்குத் தினமும் சாப்பாடு போடுவோம். மீன்களுக்கும் தீவனமா போடுறோம். நோய்வாய்ப்பட்ட தெருநாய்களுக்கும் சிகிச்சை அளிக்குறோம். எங்க வீட்டு மொட்டை மாடியில பறவைகளுக்கும் தீவனம் போடுறோம்’’ என்கிறார் ஆனந்தி.
குறுங்காடு
கும்பகோணம் அருகே சீனிவாச நல்லூரில் கோயில் நிலத்தில் 7,000 சதுர அடியில் மியவாக்கி குறுங்காடு உருவாக்கியுள்ளார்கள். இங்கு 950 மரங்கள் உள்ளன. வேம்பு, புங்கன், அத்தி, கொடுக்காப்புளி, மஞ்சள் கடம்பு, மனோரஞ்சிதம், பூவரசு, கொய்யா, சீதா உள்ளிட்ட 35 வகையான நாட்டு மரங்கள் உள்ளன. இரண்டே ஆண்டுகளில் இங்குள்ள மரங்கள், 25-30 அடி உயரத்தில் வளர்ந்து செழிப்பாகக் காட்சி அளிக்கின்றன. ‘‘நிலம் முழுக்கவே 4 அடி ஆழத்துக்குக் குழி எடுத்து, 100 டன் திடக்கழிவு மேலாண்மை உரம் போட்டுக் கன்றுகள் நடவு செஞ்சோம். சொட்டுநீர் அமைச்சி, 3 மாசம் வரைக்கும் தினமும் தண்ணீர்ப் பாய்ச்சினோம். வாதமடக்கி தான் நிலத்தோட வறட்சி தன்மையைக் காட்டக்கூடிய சிக்னல். வாதமடக்கி இலை சுருங்கி இருந்தால், மண்ணுல ஈரப்பதம் இல்லைனு புரிஞ்சிக்கிட்டு அதுக்கேத்த மாதிரி தண்ணீர் கொடுப்போம். இதே பகுதியில இன்னோரு 14,000 சதுர அடியில குறுங்காடுகளை உருவாக்கக் கன்றுகள் நடவு செஞ்சிருக்கோம்” என்கிறார் ஆனந்த்.
‘பலே’ பண்டமாற்று
‘‘எங்களால மாடுகள் வளர்க்க முடியாததால, இந்தப் பகுதியில ரெண்டு விவசாயிகளுக்கு எங்க செலவுல சாண எரிவாயு கலன்கள் அமைச்சிக் கொடுத்திருக்கோம். அதுல எஞ்சியிருக்கக்கூடிய கசடு களை (சிலரி) எங்களுக்குக் கொடுத்துடுவாங்க. அதை மக்க வெச்சி, ஊட்ட மேற்றிய தொழுவுரம் தயார் செஞ்சிக்குவோம். நாங்க சாண எரிவாயு கலன் அமைச்சிக் கொடுத்திருக்குற விவசாயிகள்கிட்ட இருந்து கோமியமும் வாங்கிக்குவோம். எங்களோட நெல் வயல்ல கிடைக்கக்கூடிய வைக்கோலை அந்த விவசாயி களுக்குக் கொடுத்துடுவோம்.”
தென்னை
20 தென்னை மரங்கள் மூலமா வருஷத்துக்கு 2,000 காய்கள் கிடைச்சிக்கிட்டு இருக்கு. எங்களோட தேவைக்குப் போக, வருஷத்துக்கு 1,000 காய்கள் விற்பனை செய்றோம். ஒரு காய்க்கு 10 ரூபாய் வீதம் விலை கிடைக்குது.
நெல் சாகுபடிக்கான நாற்றங்கால்
12 ஏக்கர் நெல் சாகுபடிக்கு 70 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். 15 கிலோ தக்கைப்பூண்டு விதைத்து, பூப்பூக்கும் சமயத்தில் மடக்கி உழுது, தண்ணீர் கட்ட வேண்டும். பசுந்தாள் உரம் எளிதில் மக்குவதற்காக, 20 லிட்டர் சாணிப்பால் கரைத்து ஊற்ற வேண்டும். அடுத்த 15 நாள்கள் கழித்து, உழவு ஓட்டி, நாற்றங்காலைச் சமப்படுத்தி, ஏக்கருக்கு 30 கிலோ வீதம் விதை தெளிக்க வேண்டும். 3-ம் நாள் 20 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ சூடோமோனஸ் கலந்து தெளிக்க வேண்டும். 5-ம் நாள், 20 லிட்டர் தண்ணீரில் தலா 1 கிலோ வீதம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா கலந்து தெளிக்க வேண்டும். 7-ம் நாள் 50 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். 14-ம் நாள் பாசனநீரில் 20 லிட்டர் அமுதக்கரைசல் கலந்து தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். 25-ம் நாள் நாற்றுகள் நடவுக்குத் தயாராக இருக்கும்.
ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிப்பு
500 கிலோ சாண எரிவாயு கசடுகளை நன்கு மக்க வைத்து, அதோடு 30 லிட்டர் பஞ்சகவ்யா, 30 லிட்டர் பழக்காடி, 40 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 15 கிலோ எள்ளுப் பிண்ணாக்கு, பயறு மாவு 40 கிலோ, 10 லிட்டர் மீன் அமிலம், தலா 10 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூடி வைக்க வேண்டும். பிறகு, நன்கு கிளறிவிட்டு, உஷ்ணத்தை வெளியேற்ற வேண்டும். மீண்டும் 3 நாள்கள் மூடி வைத்து, அதன் பிறகு 10 கிலோ சூடோமோனஸ், 200 கிலோ வேப்பம்பிண்ணாக்கு கலந்து, ஏக்கருக்கு 50 கிலோ கொடுத்தாலே போதுமானது. இதில் ஏற்கெனவே பெருகியுள்ள நுண்ணுயிரிகள் மண்ணை வளப்படுத்தி மகசூலை அதிகரிக்கும். ஊட்டமேற்றிய தொழுவுரம் பெரும்பாலும் கட்டிகளாக இருக்கும். இதை வரப்புகளில் புதைத்தாலே, நுண்ணுயிரிகள் நிலம் முழுக்கப் பரவிவிடும்.