
மரத்தடி மாநாடு
பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண் டிருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. அந்த வழியாக வந்த ‘காய்கறி’ கண்ணம்மா, “என்ன வாத்தியாரய்யா, காலையிலயே மாப்பிள்ளை கணக்கா, எங்கேயோ வெளியூர் கிளம்பிட்டீங்க. பொண்ணு கிண்ணு ஏதும் பார்க்கப் போறீங்களா’’ என நக்கலாகக் கேட்டார். ‘‘நீ வேற என்னை சும்மா வெறுப்பேத்தாத கண்ணம்மா. டவுன்ல ஒரு காதுகுத்து. பஸ்ஸுக்காக, ரொம்ப நேரமா இங்க காத்துக் கிடக்குறேன். ஆனா, வந்தபாட்ட காணோம்’’ என வாத்தியார் சலிப்புடன் சொன்னார். அப்போது ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும் அங்கு வந்து சேர, ஆரம்பமானது அன்றைய மாநாடு.
‘‘இனிமே நம்ம ஊருக்கு பஸ்ஸு வருமாங் கறதே சந்தேகம்தான். கிடா விருந்துல கலந்துக்க, நம்ம வாத்தியாரய்யாவுக்கு இன்னைக்குக் கொடுப்பினை இருக்கானு தெரியல... முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிவி-யில பேசினதை, நீங்க கேட்டிருந்தா, பஸ்ஸுக்காக இவ்வளவு நேரம் இங்க காத்துக்கிடந்து நேரத்தை வீணடிச்சிருக்க மாட்டீங்க’’ எனப் பீடிகை போட்ட காய்கறி, அது தொடர்பான தகவலை விவரித்தார்.
‘‘கிராமப்புறங்களுக்குச் செல்லக்கூடிய பேருந்துகள், பல பகுதிகள்ல நிறுத்தப் பட்டுக்கிட்டு இருக்குறதாகவும் இதனால், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுக்கிட்டு இருக்குற தாகவும் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிச்சிருக்காரு. இது சம்பந்தமா போக்குவரத்துத் துறை அதிகாரிகள் என்ன சொல்றாங்கனா... உள்ளூர் பேருந்துகள்ல, பெண்கள் இலவசமா பயணம் செய்யலாம்னு தமிழக அரசு அறிவிச்சது. உண்மையாகவே இது கிராமப்புற பெண்களுக்கு ரொம்பவே உதவியா இருக்கு. ஆனா, இதனால் வருவாய் இழப்பு ஏற்படுற துனால, கொஞ்சம் உள்ளடங்கி இருக்குற கிராமங்களுக்குள்ள பஸ்ஸை ஓட்ட வேண்டாம்னு மேலிடத்துல இருந்து மறைமுக உத்தரவு வந்திருக்காம். இது எவ்வளவு பெரிய ஏமாத்து வேலை. ஒரு பக்கம் இலவசம்னு அறிவிச்சுப்புட்டு, இன்னொரு பக்கம் இப்படியா நடந்துக்குறது. ‘இதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தெரியாம தான் நடக்குது’ன்னு சொல்லிக்கிட்டு, நாமளா மனச தேத்திக்க வேண்டியதுதான்’’ என்று விரக்தியுடன் சிரித்தார்.
‘‘பஸ்ஸை நிறுத்திப் போட்டதுக்கே நீ இவ்வளவு கோபப்படுறீயே கண்ணம்மா. டெல்டா பகுதியில தி.மு.க பிரமுகர்கள் ரெண்டு பேருக்குள்ளார ஏற்பட்ட கமிஷன் பிரச்னையால, தூர்வாரும் பணியே தடைப் பட்டுக்கிடக்குதாம். இதனால, அந்தப் பகுதி விவசாயிகள் கொந்தளிப்புல இருக்காங்க’’ என்று சொன்ன ஏரோட்டி, சற்று அமைதி காத்தார்.
‘‘அங்க அப்படி என்னதான் நடந்துச்சு. சீக்கிரம் சொல்லுங்க. எனக்குத் தலையே வெடிச்சுடும்போல இருக்கு’’ என்று அவசரப் படுத்தினார் காய்கறி.

‘‘தஞ்சாவூர் மாவட்டத்துல உள்ள ஆறு, வாய்க்கால்கள் தூர்வார, இந்த வருஷம் 20.45 கோடி ரூபாய், தமிழக அரசு நிதி ஒதுக்கியிருக்கு. கடந்த ஏப்ரல் 27-ம் தேதி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி... இந்த மூணு பேரும் பூதலூர் ஆனந்த காவேரிக் கால்வாய் பகுதிக்குப் போயி, தூர்வாரும் பணியைத் தொடங்கி வச்சாங்களாம். அந்தக் கால்வாயை தூர்வார, ஒப்பந்தம் எடுத்தவர், அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க-காரராம். அவர்கிட்ட இன்னொரு தி.மு.க பிரமுகர், தூர்வாரும் பணியில தனக்கும் கமிஷன் வேணும்னு கேட்டுப் பிரச்னை பண்ணி யிருக்காரு. இதனால் ஏற்பட்ட தகராறுனால அங்க தூர்வாரும் பணி பாதிக்கப்பட்டு முடங்கிக் கிடக்குதாம். அதுமட்டுமல்லாம, அங்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொக்லைன் எந்திரம் சேதப்படுத்தப்பட்டதா, பொதுப் பணித்துறை உதவிப் பொறியாளர் பூதலூர் காவல் நிலையத்துல புகார் கொடுத்திருக்கார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியா, இந்தப் பிரச்னையில தலையிட்டுத் தீர்வு காணணும்னு, காவிரி உரிமை மீட்புக்குழுவினர் கோரிக்கை எழுப்பியிருக்காங்க. டெல்டா மாவட்டங்கள்ல பல பகுதிகள்லயும், தூர்வாரும் பணி கமிஷன் தொடர்பா, ஆளுங்கட்சி பிரமுகர்களுக் கிடையில நடக்குற கோஷ்டி மோதலால, பணிகள் தடைப்படுது. குறுவைப் பாசனத் துக்கு ஜூன் மாசம், மேட்டூர் அணை திறக்குறதுக்குள்ளார, இந்தப் பணிகளை முடிச்சாகணுமேனு அந்தப் பகுதி விவசாயிகள் பெரும் கவலையில இருக்காங்க’’ முழுமை யாகச் சொல்லி முடித்ததும், ‘‘கல்லணை யைப் பாதுகாக்குறது சம்பந்தமா, மதுரை உயர் நீதிமன்றம் ஓர் அருமையான உத்தரவு பிறப்பிச்சிருக்கு. அந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா?’’ என அடுத்த தகவலுக்குத் தாவினார் வாத்தியார்.
‘‘கல்லணைக்குக் கொஞ்ச தூரத்துலயே, கொள்ளிடம் ஆற்றுல 25 இடங்கள்ல மணல் குவாரி அமைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துக்கிட்டு இருக்குறதாகவும். குவாரி அமைக்கப்பட்டா, கல்லணை பாதிக்கப்படும்... அதனால் குவாரிகள் அமைக்கத் தடை விதிக் கணும்னு அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சங்க நிர்வாகி ஜீவக்குமார், மதுரை உயர் நீதிமன்றத்துல வழங்கு தொடர்ந் திருக்கார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தப்ப, நீதிபதிகள் சற்றுக் காட்டமான குரல்ல, ‘குவாரி அமைக்கப்பட்டால், பாரம் பர்ய சின்னமான கல்லணை சேதமடைய வாய்ப்பிருக்கு’னு கவலையோடு சொல்லி யிருக்காங்க. கொள்ளிடம் ஆற்றைச் சுத்தப் படுத்திட்டு குடிநீர்தான் எடுக்கப்போறோம். குவாரி அமைக்கும் எண்ணம் இல்லைனு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவிச்சுருக்கார். ஆனாலும், நீதிபதிகள் அதோடு சும்மா விடல. கல்லணைக்கு அருகில் மணல் குவாரி அமைக்கவில்லைனு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யச் சொல்லி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிச்சிருக்காங்க’’ என்றார் வாத்தியார்.
‘‘சோழநாட்டு மக்கள் சந்தோஷப்படுற மாதிரியே, பாண்டிய நாட்டு மக்களும் சந்தோஷப்படக்கூடிய வகையில, உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கு. அதுவும் பாரம்பர்யம் சம்பந்தமானதுதான்’’ என மிகுந்த உற்சாகத்தோடு அந்தத் தகவலை சொல்லத் தொடங்கினார் காய்கறி.
‘‘ஒவ்வொரு வருஷமும் பொங்கல் நெருங்குற சமயத்துல இந்த வருஷம் அலங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதானு மதுரை மாவட்ட மக்கள் ரொம்ப கவலையோடு இருப்பாங்க. ஜல்லிக் கட்டு நடத்த தடை விதிக்கணும்னு பீட்டா அமைப்பு கோர்ட்டுல வழக்கு தொடர்றது வாடிக்கையா இருந்துச்சு. சட்ட ரீதியான எந்தவித தலையீடும் இல்லாம, ஜல்லிக்கட்டு நடத்துறதுக்காகத் தமிழக அரசு ஒரு சட்டம் கொண்டு வந்துச்சு. ஆனா, அந்தச் சட்டம் செல்லாதுனு அறிவிக்கச் சொல்லி, பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்துச்சு. அந்த வழக்குல இப்ப இறுதித் தீர்ப்பு வெளியாகி இருக்கு. ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க முடியாது. தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும்னு அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியிருக்கு’’ என்ற காய்கறி, அங்கிருந்து கிளம்ப, அன்றைய மாநாடு கலைந்தது.
கால்நடைகளுக்கு எளிய மருந்து மூலிகை மசால் உருண்டை!

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில், மே 6-ம் தேதி, ‘பாரம்பர்ய உணவே, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. வள்ளியூர் வட்டார மகேந்திரகிரி பாரம்பர்ய விவசாயிகள் சங்கம், பணகுடி வட்டார ஒருங்கிணைந்த விவசாயிகள் நலச்சங்கம், ராதாபுரம் வட்டார விவசாயிகள் நலச்சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இக்கருத்தரங்கத்திற்குப் பசுமை விகடன் ஊடக ஆதரவு வழங்கியது.
‘கால்நடைகளுக்கான மூலிகை வைத்தியம்’ என்ற தலைப்பில் பேசிய மதுரை சேவா அமைப்பின் நிர்வாகி விவேகானந்தன், “இயற்கை விவசாயத்தோட அடிப்படையே கால்நடைகள்தான். அந்த கால்நடைகளுக்கு வரும் நோய்களை மூலிகை வைத்தியம் மூலம் மிக எளிதா குணப்படுத்தலாம். நம்ம முன்னோர்கள் பயன்படுத்திக்கிட்டு இருந்த மூலிகை வைத்தியம் காலப்போக்குல மறைஞ்சு போச்சு. எதிர்விளைவுகள் இல்லாத, அதிக செலவில்லாத மிக எளிமையான மருத்துவமுறை இது” என்று சொன்னவர், கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய கழிச்சல், கோமாரி, மடி நோய், நீல நாக்கு நோய், விஷக்கடி, எலும்பு முறிவு, பால் காய்ச்சல், கொம்பு முறிவு உள்ளிட்ட இன்னும் பலவிதமான நோய்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் விரிவாகப் பேசினார். அதனைத் தொடர்ந்து, மூலிகை மசால் உருண்டை தயாரிப்புக் குறித்துச் செயல்விளக்கமும் அளித்தார். இயற்கை விவசாயிகள் புளியங்குடி அந்தோணிசாமி, அறச்சாலூர் செல்வம் உள்ளிட்டோரும் இக்கருத்தரங்கில் உரையாற்றினார்கள்.
இ.கார்த்திகேயன்
படம்: எல்.ராஜேந்திரன்