மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்!

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

‘‘சூடான் முள் மூலம் உயிர்வேலி அமைக்க விரும்புகிறோம். இதன் சிறப்புகள் என்ன, கன்றுகள் எங்கு கிடைக்கும்?’’

ம.வாசுதேவன், முசிறி,

மூலிகை மற்றும் உயிர்வேலியில் அனுபவம் வாய்ந்த பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூரைச் சேர்ந்த முன்னோடி விவசாயி மோகன கிருஷ்ணன் பதில் சொல்கிறார். “சீமைக்கருவேல் மரமும் சூடான் முள்ளும் நம் நாட்டுக்கு ஒரே நேரத்தில் வந்தன. சீமைக்கருவேல் விதைகள் மூலம் வேகமாகப் பரவக்கூடியது. ஆனால், மெல்லிபேரா என்ற சூடான் நாட்டு முள் வேகமாகப் பரவாது. இதன் முளைப்புத் திறன் குறைவு. விதைகளைப் பக்குவப்படுத்தி விதைக்கும்போதுதான் நன்றாக முளைக்கும். அதாவது, விதைப்பதற்கு முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்தால், விதை உறக்கம் கலைந்துவிடும்.

மோகன கிருஷ்ணன்
மோகன கிருஷ்ணன்

பருவமழை தொடங்கும் முன் விதைகளை விதைத்துவிட்டால் போதும். கிடுகிடுவென வளர்ந்து வந்துவிடும். ஆடுகள், இதன் இலைகளைத் தின்னும் என்றாலும், செடிகளில் உள்ள முள்ளைத் தாண்டி நிலத்துக்குள் வர முடியாது. இந்த முள்ளை அப்படியே விட்டுவிட்டால், வளர்ந்து மரமாகிவிடும். ஆகையால் நமக்குத் தேவையான உயரத்தில் கவாத்து செய்துவிட வேண்டும். மானாவாரி நிலங்களுக்கு இந்த உயிர்வேலி பாதுகாப்பானது. செலவும் குறைவு. இதன் விதை, கிலோ 1,500 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. ஓர் ஏக்கர் நிலத்தைச் சுற்றிலும் உயிர் வேலி அமைக்க ஒரு கிலோ விதை போதுமானது.

மானாவாரி நிலங்கள் என்றால், நேரடியாக விதைப்பதைக் காட்டிலும் கன்றுகளாக வளர்த்து நடவு செய்வது நல்லது. சில நர்சரிகளில் இதன் கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மரப்பயிர்கள் சாகுபடி செய்யும் தோட்டங்களில், சூடான் முள்ளை உயிர்வேலியாக அமைத்து, பாதுகாப்பு அரணை உருவாக்கலாம். உங்கள் நிலத்திலிருந்து மூன்று அடி உள்ளே தள்ளித்தான் இந்த உயிர் வேலியை அமைக்க வேண்டும். காரணம், இது அடர்ந்து படர்ந்து வளரும். இரும்பு வேலிபோலத் தோட்டத்தின் எல்லையில் வைத்தால், அடுத்தவர்களின் நிலத்திலும் இந்த முள் அடைத்துக்கொண்டு வளரும். எனவே, இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவும். சில ஆண்டுகளுக்கு முன்பு சூடான் முள் பற்றி முதன்முதலில் பசுமை விகடன் இதழில்தான் தகவல் வெளிவந்தது. அந்தக் காலகட்டத்தில் ஒரு சில தோட்டத்தில் மட்டுமே, இந்த உயிர் வேலி இருந்தது. இப்போது தமிழ்நாட்டில் பல இடங்களுக்கும் பரவிவிட்டது. உயிர் வேலி அமைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டால், ஆடு, மாடுகள் நிலத்தில் நுழைய முடியாது. ஒரு முறை உயிர்வேலி அமைத்துவிட்டால், வாழ்நாள் முழுக்கப் பாதுகாப்பாக இருக்கும்.’’

தொடர்புக்கு,

செல்போன்: 98944 01680, 74483 97805.

மரவள்ளிக் கிழங்கு
மரவள்ளிக் கிழங்கு

‘‘மரவள்ளிச் சாகுபடி செய்ய விரும்புகிறோம். இதில் எத்தனை ரகங்கள் உள்ளன. அதன் விவரங்களைச் சொல்லுங்கள்?’’

ப.ராமமூர்த்தி, வடமதுரை.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மரவள்ளி விவசாயி புவனேஸ்வரன் பதில் சொல்கிறார்.‘‘மரவள்ளியை இறவையிலும், மானாவாரி யிலும் சாகுபடி செய்யலாம். பொதுவாக மலைப்பிரதேசங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யப்படுகிறது. மலைப்பகுதிகளில் மழை கிடைக்கும் காலங்களான செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் பயிர் செய்ய ஏற்றவை. இறவையில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடவு செய்யலாம். ஆண்டு முழுவதும் இந்தப் பயிரைப் பயிரிட முடிந்தாலும் அதிக மழை, வெயிலுள்ள காலங்களில் பயிரிட வேண்டாம்.நீர்ப்பாசன வசதியுள்ள சமவெளிப் பகுதிகளில் முள்ளுவாடி-1, கோ-2, கோ (டிபி)-4, குங்கும ரோஸ் போன்ற ரகங்களும் நீர்ப்பாசனம் குறைவாக உள்ள பகுதிகளில் ஹெச்-226 என்ற ரகமும் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் மரவள்ளி, ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத் திலிருந்து `ஏத்தாப்பூர் - 1’ என்ற புதிய மரவள்ளி ரகம் 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ரகம் இறவைச் சாகுபடிக்கு ஏற்றது. ஹெக்டேருக்கு 49 டன் மகசூல் கொடுக்கும், மாவுச்சத்தை 25-27 சதவிகிதம் கொடுக்கவல்லது. திருவனந்தபுரத்திலுள்ள மத்திய கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் பி-165, பி-226 ஸ்ரீவிசாகம், ஸ்ரீசாகியா, ஸ்ரீரேகா, ஸ்ரீபிரபா, ஸ்ரீபிரகாஷ், ஸ்ரீஜெயா, ஸ்ரீவிஜயா, ஸ்ரீபத்மநாபா, ஸ்ரீஅபூர்வா, ஸ்ரீஅதுல்யா ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இவற்றில் பி-165 மலைப்பகுதிகளில் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது. பி-226 என்ற ரகம் ‘வெள்ளை ரோஸ்’ என்ற பெயரில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பெருவாரியாகப் பயிரிடப்பட்டு வருகிறது. ஸ்ரீஜெயா, ஸ்ரீவிஜயா ரகங்கள் ஆறு மாதங்களில் விளைச்சலைத் தரும் தன்மை கொண்டவை.

வழக்கமாக 8-10 மாதங்களில்தான், மரவள்ளி அறுவடைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த ரகத்தை சிப்ஸ் தயாரிக்க விரும்பி வாங்கிச் செல்கிறார்கள் வியாபாரிகள். மரவள்ளியில் விதைக்கரணைத் தேர்வு மிகவும் முக்கியமானது. நன்கு வளர்ச்சி அடைந்த நோய் தாக்காத செடிகளிலிருந்து விதைக் கரணைகளைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்வுசெய்யப்பட்ட விதைக் கரணைகளை விதைக்கரணை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். இறவையில் மரவள்ளி பயிரிடும் போது அதிக இடைவெளிவிட்டும் மானா வாரியில் குறைந்த இடைவெளிவிட்டும் நடவு செய்ய வேண்டும். இறவையில் வரிசைக்கு வரிசை 90 செ.மீ இடைவெளியிலும் செடிக்குச் செடி 90 செ.மீ இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.

புறாபாண்டி
புறாபாண்டி

ஒரு ஏக்கருக்கு சுமார் 5,000 விதைக் கரணைகள் வரை தேவைப்படும். மானாவாரிப் பயிருக்கு வரிசைக்கு வரிசை 75 செ.மீ இடைவெளியும் செடிக்குச் செடி 75 செ.மீ நடவு செய்ய வேண்டும். மரவள்ளி ஒரு 8-10 மாதப் பயிர். எனவே, ஆரம்ப காலங்களில் ஊடுபயிர் சாகுபடி செய்யலாம். ஊடுபயிராகச் சிறிய வெங்காயம், உளுந்து, பச்சைப்பயறு, கொத்தமல்லி போன்ற குறுகிய காலப் பயிர்களைச் சாகுபடி செய்யலாம். மரவள்ளிச் சாகுபடி குறித்துக் கூடுதல் விவரங்கள் பெற மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தை அணுகவும்.’’

தொடர்புக்கு:
மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர், சேலம் மாவட்டம் - 636 119.
தொலைபேசி: 04282 293526/221901.


‘‘ரோமத்துக்காக வளர்க்கப்படும் ஆடுகள் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறோம். இதற்கான பயிற்சி எங்கு கிடைக்கும்?’’

கிருத்திகா, அறந்தாங்கி.

‘‘ராஜஸ்தான் மாநிலத்தின் டோங் மாவட்டத்தில் மத்திய செம்மறியாடு மற்றும் ரோம ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது. இதன் தென் மண்டல மையம் (Southern Regional Research Centre, Central Sheep and Wool Research Institute) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகில் உள்ள மன்னவ னூரில் உள்ளது. ரோமத்துக்காக ஆஸ்திரேலி யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மெரினா வகை ஆடு, முயல் குறித்த ஆராய்ச்சி இங்கு நடைபெற்று வருகிறது. ஆடு, முயல் வளர்ப்புக்கான பயிற்சியும் கொடுத்து வருகிறார்கள்.’’

தொடர்புக்கு, தென் மண்டல மையம், மன்னவனூர், திண்டுக்கல் மாவட்டம். செல்போன்: 99433 71164 (காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை).