இரண்டு முறை காய்க்கும் பலா... விதை நுட்பத்துக்கு பயிற்சி... சோப்பு, திருநீறு தயாரிப்பு...

நீங்கள் கேட்டவை
‘‘எங்கள் தோட்டத்தில் பலா மரக்கன்றுகள் நடவு செய்ய உள்ளோம். இதற்குக் கர்நாடகா மாநிலத்தில் பிரபலமாக உள்ள சிவப்பு நிற பலா ரகத்தைச் சாகுபடி செய்யலாமா அல்லது பண்ருட்டி ரகப் பலாவை சாகுபடி செய்யலாமா? ஏக்கருக்கு எத்தனை கன்றுகள் தேவைப்படும்?’’
@ஆர்.பாலமுருகன்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த முன்னோடி பலா விவசாயியும் வேளாண்மைத் துறை முன்னாள் உதவி இயக்குநருமான பி.ஹரிதாஸ் பதில் சொல்கிறார்.
‘‘உலக அளவில் 70 பலா ரகங்கள் உள்ளன. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சிவப்பு ரகப் பலாவை தற்போது தமிழக விவசாயிகள் அதிகம் விரும்பி நடவு செய்கிறார்கள். என் அனுபவத்தில் இதை அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்ய வேண்டாம் என்று கூற விரும்புகிறேன். காரணம், 10 ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகாவில் உள்ள சிவப்பு நிற பலா ரகங்களை என் தோட்டத்தில் நடவு செய்தேன். இந்த ரகங்கள் பலன் கொடுக்க 8 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஆனால், இதே ரகம் கர்நாடகாவில் 4 ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்துவிடுகிறது.

அதேசமயம் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு இரண்டு முறை பலன் கொடுக்கும் பாலூர்-1 என்ற பலா ரகம், கர்நாடகாவில் ஒரு முறை தான் காய்ப்புக்கு வருகிறது. பலா மரம் வெப்ப மண்டலப் பயிராக இருந்தாலும் இடத்துக்குத் தக்கபடி விளைச்சல் கொடுக்கிறது. ஆகையால், வெளிமாநில ரகங்களை அதிக அளவுக்குச் சாகுபடி செய்யாமல், சிறிய அளவில் சாகுபடி செய்து அதன் பலன்களை முழுமையாக அறிந்துகொண்டு, விரிவாகச் சாகுபடி செய்யுங்கள். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள பாலூர், காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் பலா குறித்து நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகிறார்கள். என்னைப் போன்ற விவசாயிகளின் தோட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட பலா மரங்களிலிருந்து பாலூர்-1, பாலூர்-2 ரகங்களை உருவாக் கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரகங்கள் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக விளைச்சல் கொடுக்கின்றன. எனவே, பண்ருட்டி (பாலூர் ரகங்கள்) பலாவை பயமில்லாமல் நடவு செய்யலாம் என்பது என் பரிந்துரை.

பலா மரங்கள் வளர்ந்துள்ளதை வைத்தே, அந்த நிலத்தின் மண் வளத்தை அறிந்து கொள்ள முடியும். நல்ல மண் வளம் கொண்ட நிலத்தில் பலா மரங்கள் செழித்து வளரும். வடிகால் வசதியுள்ள நிலங்களில் பலா நன்றாக வளரும். 25 அடி இடைவெளியில் ஏக்கருக்கு 75 மரங்கள் சாகுபடி செய்யலாம். கொஞ்சம் நெருக்கி நடவு செய்தால், 100 மரங்களைக்கூட சாகுபடி செய்ய முடியும். இதைத் தனிப்பயிராகத் தோட்டத்தில் சாகுபடி செய்ய இட வசதியில்லை என்றாலும் வருத்தப்பட வேண்டாம். மா, கொய்யா, தென்னை... போன்ற பயிர்களுடன் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். வரப்பு பயிராகவும்கூட சாகுபடி செய்ய முடியும். உதாரணத்துக்கு 5 ஏக்கர் கொண்ட நிலத்தின் வரப்பில் சுமார் 50 மரங்கள் வரை சாகுபடி செய்ய முடியும். பல்லாண்டுகள் பலன் தரும் பலா மரங்கள் பல தலைமுறைக்கு வருமானம் கொடுத்து வாழ வைக்கும் சிறப்புகளைக் கொண்டது.’’
தொடர்புக்கு, செல்போன்: 86108 81046.
‘‘விதை உற்பத்தி செய்து விற்பனை செய்ய விரும்புகிறோம். இதற்கான பயிற்சி எங்கு கொடுக்கிறார்கள்?’’
சி.மாரியம்மாள், திண்டுக்கல்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் மனோன்மணி பதில் சொல்கிறார்.
‘‘விதையின் தரத்தைக் கண்டறிவதற்காக விதைப் பரிசோதனை முறைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி எங்கள் துறையின் சார்பில் நடத்தப்படுகிறது. விதையின் புறத்தூய்மை, விதை முளைப்புத்திறன் மற்றும் வீரியம், விதை நலம், துரித முறை விதைப் பரிசோதனை விதையின் தரத்தைக் கண்டறிவதற்கான பின்வரும் விதைப் பரிசோதனை முறைகள்... உள்ளிட்டவை குறித்து விரிவாகப் பயிற்சி கொடுத்து வருகிறோம்.

இந்தப் பயிற்சியில் கலந்துகொள்வதன் மூலம் விதை உற்பத்தி குறித்த பல தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இதில் விவசாயிகள், தொழில் முனைவோர், சுய உதவிக் குழு பெண்கள், உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பங்கு கொண்டு பயன் பெறலாம். ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி அன்று இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது.
மேலும், பூமியைப் பசுமையாக்கும் ஒரு முயற்சியாக விதைப்பந்து எறியப்படுகிறது. அதற்குத் தேவைப்படும் விதைப் பந்தை உரிய விதத்தில் தயாரிக்கும் தொழில்நுட்பப் பயிற்சியை மாதம்தோறும் 20-ம் தேதி நடத்தி வருகிறோம். இதில் விதை உறக்கம் நீக்குதல், விதையின் முளைப்புத் திறனைக் கண்டறிதல், விதை ஊட்டமேற்றுதல், விதைப் பந்து தயாரிக்கும் செய்முறை பயிற்சி... உள்ளிட்ட தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொடுக் கிறோம். இந்த இரண்டும் கட்டணப் பயிற்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.’’

தொடர்புக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 641 003
தொலைபேசி : 0422 6611363
‘‘கோசாலை அமைத்து பசுவின் பொருள் களைப் பயன்படுத்தி, சோப்பு, திருநீறு... உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்க விரும்புகிறோம். இதற்கான பயிற்சி எங்கு கிடைக்கும்?’’
கே.பழனிச்சாமி, சங்ககிரி.

‘‘மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் கோ விக்ஞான் அனுசந்தன் கேந்திரா செயல்பட்டு வருகிறது. இங்கு பெரிய அளவில் பசுவின் பொருள்களை உற்பத்தி செய்வதுடன் ஆராய்ச்சியும் செய்து வருகிறார்கள். மத்திய அரசின் ஆதரவுடன் இயங்கும் இந்த அமைப்பு, இந்திய அளவில் பசுவின் பொருள்கள் தயாரிப்புக்கு வழிகாட்டி வருகிறது. இங்கு பயிற்சி பெற்றவர்கள் தமிழ்நாட்டிலும் உள்ளனர். சேலம் சுரபி கோசாலையைச் சேர்ந்த சுவாமி ஆத்மானந்தா, இதில் முன்னோடியாக உள்ளார்.
தொடர்புக்கு,
1.Go-vigyan Anusandhan Kendra, Kamdhenu Bhavan, Pt. Baccharaj Vyas Square, Chitar Oli, Mahal, Nagpur - 440 002
Ph: 0712-2772273, 2734182 /2731639, 2731385.
2. சுவாமி ஆத்மானந்தா, சுரபி கோசாலை.
செல்போன்: 94432 29061.