
நீங்கள் கேட்டவை
‘‘தென்னை நடவு செய்து 5 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் காய்ப்பிடிக்கவில்லை. குரும்பை கொட்டிக்கொண்டே இருக்கிறது. காய்ப்பிடிக்க என்ன செய்ய வேண்டும்?’’
கே.பாஸ்கரன், உடுமலைப்பேட்டை.
திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி மையத்தின் பேராசியர் மற்றும் இணை இயக்குநர் முனைவர் இளங்கோவன் பதில் சொல்கிறார்.
‘‘தென்னை மரங்களில் காய்ப்பிடிக்காமல் இருப் பதற்குப் பல காரணங்கள் உள்ளன. தென்னைக்குப் பாய்ச்சும் தண்ணீரில் உப்பு இருந்தாலும், மண்ணில் உப்புத் தன்மை இருந்தாலும், தென்னை மரத்தின் வேர்களால், சுவாசிக்க முடியாது. இதனால், குரும்பைகள் உதிரலாம். பொள்ளாச்சியில் தென்னை வளர்கிறது என்று உடுமலைப்பேட்டையிலும் தென்னைச் சாகுபடி செய் துள்ளீர்கள். பொள்ளாச் சியில் மண் கண்டம் அதிகம். அங்கு தென்னை நன்றாக வளரும். ஆனால், உடுமலைப்பேட்டைப் பகுதிகளில் 5 அடி ஆழம் வரைதான் மண் கண்டம் இருக்கும். அதுவும் சுண்ணாம்பு கலந்த செம்மண் வகை. இது தென்னைச் சாகுபடி செய்ய ஏற்றதல்ல. நான் உடுமலைப்பேட்டை, தோட்டக்கலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த காலத்தில் இதை விவசாயிகளிடம் சொல்லியிருக்கிறேன். ஆனாலும், தென்னைச் சாகுபடி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

வளம் குறைந்த மண்ணாக இருப்பதால், மேல் மண்ணைச் சத்து நிரம்பியதாக மாற்ற வேண்டும். அதோடு நுண்ணூட்டச்சத்துகள் பற்றாக்குறையையும் போக்க வேண்டும். இதற்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை சணப்பு பயிரிட்டு, மடக்கி உழவு செய்ய வேண்டும். பாசன நீரில் ஏக்கருக்கு 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து விட வேண்டும். மாதம் ஒரு முறை 1 லிட்டர் அசோஸ்பைரில்லம் என்ற உயிர் உரத்தை நீரில் கலந்து விட வேண்டும். தொடர்ந்து மட்கிய தொழுவுரம் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்வதால், மண் வளம் பெருகும்.

காற்று வேகமாக வீசும் காலங் களில் மேல் மண் அடித்துச் செல்லப்படும். அதோடு மகரந்தச் சேர்க்கை நடப்பதிலும் பிரச்னை ஏற்படும். ஆகையால், நிலத்தைச் சுற்றி காற்றுத் தடுப்பு மரமான சவுக்கைப் பயிரிடவும். அயல் மகரந்தச் சேர்க்கை நடக்க ஏக்கருக்கு 20 தேனீப் பெட்டிகளை வைக்கவும். தோட்டக்கலைத் துறையில் இதை மானியமாகப் பெறலாம். தென்னையுடன் தேனீ வளர்ப்பு செய்யும்போது, கூடுதல் விளைச்சலும் கிடைக்கும். இங்கு குறிப்பிட்டுள்ள தொழில்நுட்பங்களைப் பின்பற்றினால், தென்னை மரம் காய்ப்பிடிக்கத் தொடங்கும்.’’
தொடர்புக்கு,
செல்போன்: 98420 07125.
‘‘மா சாகுபடி செய்ய விரும்புகிறோம். சாகுபடி குறித்தும் நல்ல மா ரகங்கள் பற்றியும் சொல்லுங்கள்?’’
கோகுல், குடியாத்தம்.
கிருஷ்ணகிரி மாவட்ட மா உற்பத்தியாளர் மற்றும் பழக்கூழ் தயாரிப்பாளர் கூட்டமைப்பின் உறுப்பினர் உதய்சிங் பதில் சொல்கிறார்.
‘‘மா சாகுபடி மட்டுமல்ல, எந்தப் பயிராக இருந்தாலும் அங்குள்ள மண், தண்ணீர்தான் விளைச்சலைத் தீர்மானிப்ப தாக இருக்கிறது. ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மா நடவு செய்யலாம். 20 அடி இடைவெளியில் 2 அடிக்கு 2 அடி அளவில் குழி எடுத்து, கன்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 3-ம் நாள் தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் கொடுத்து வர வேண்டும். ஆடு, மாடுகள் மேயாதவாறு பராமரிக்க வேண்டும். நடவு செய்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு, மகசூல் கொடுக்க ஆரம்பிக்கும்.



வடிகால் வசதியுள்ள, மண் கண்டம் அதிகமாக உள்ள பகுதிகள்தான் மா போன்ற வேர் விரிந்து செல்லும் பயிர்களுக்கு ஏற்றது. சுண்ணாம்பு தன்மை கொண்ட மண்ணில் மாவை நடவு செய்தால், எவ்வளவு உரம் கொட்டினாலும் மரம் வளராது. வளம் குறைவாக உள்ள களி மண்ணில்கூட மா வளரும். ஆனால், அதற்கு ஏற்ற ரகத்தைச் சாகுபடி செய்ய வேண்டும்.
இந்த வகை மண்ணில் ருமானி, இமாம் பசந்த், தோத்தாப்புரி என்று சொல்லப்படுகின்ற கிளிமூக்கு மா சிறப்பாக வளரும். வளம் நிறைந்த மண்ணும் நல்ல பராமரிப்பும் இருந்தால் மட்டுமே, அல்போன்சா, பங்கனப் பள்ளி ரகங்களைச் சாகுபடி செய்ய வேண்டும். இவற்றுக்கு நல்ல விலையும் கிடைக்கும். அதே சமயம் பூச்சிநோய்த் தாக்குதலுக்கும் அதிகம் உள்ளாகும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் ‘ருமானி’ ரகம், ஊறுகாய் தேவைக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

பளபளப்பாகவும், நல்ல உருண்டை வடிவத்திலும் இருக்கும் இந்த ரகக் காய்களைப் பச்சையாகவே சாப்பிடலாம். ஒரு காய், 100 கிராமிலிருந்து 200 கிராம் வரை எடை இருக்கும். இந்த ரகத்தில் பிஞ்சுகள் அதிகம் உதிரும். அப்படி உதிரும் பிஞ்சுகளில்தான் வடுமாங்காய் ஊறுகாய் தயாரிக்கிறார்கள். தோத்தாபுரி ரகம் ஊறுகாய் செய்யவும், பழக்கூழ் தயாரிக்கவும் பயன்படுகிறது. பருவமில்லாத சமயத்திலும் இந்த ரகம் காய்க்கும். அப்போது, கிலோ 50 ரூபாய்க்குக்கூட விற்பனையாகும். மா சீஸனில் கிலோ 10 ரூபாய் என்று மிகவும் குறைவான விலைக்கும் விற்பனையாகும் ரகம் இது. இமாம்பசந்த் நல்ல சுவையாக இருப்பதால், சாப்பிடுவதற்காக விற்பனை செய்யப்படுகிறது. இது ஓர் ஆண்டுவிட்டு, ஓர் ஆண்டுதான் நல்ல மகசூல் கொடுக்கும். எனவே, உங்களுக்கு ஏற்ற மா ரகத்தைப் பயிரிட்டு வருமானம் பெற வாழ்த்துகள்.’’
தொடர்புக்கு, உதய்சிங்,
செல்போன்: 99524 03300.

‘‘சின்னவெங்காயம் ஊறுகாய் மற்றும் தக்காளி தொக்கு தயாரிக்க விரும்புகிறேன். இதற்கான பயிற்சி எங்கு கிடைக்கும்?’’
ஆர்.சக்திவேல், திருப்பூர்.
‘‘தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவுப் பதனீட்டு தொழில்நுட்பக் கழகத்தில் (IIFPT) இதற்கான பயிற்சி மற்றும் தொழில் நுட்பம் கிடைக்கும். கையோடு, கொஞ்சம் சின்னவெங்காயம், தக்காளியை எடுத்துச் சென்றால், அதைப் பதப்படுத்தி, பாக்கெட்டில் அடைத்தும் கொடுத்துவிடுவார்கள். அந்த அளவுக்கு மதிப்புக்கூட்டலுக்குத் தேவையான உபகரணங்கள் அங்கு உள்ளன.’’
தொடர்புக்கு,
தொலைபேசி: 04362 228155