ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

டெல்டாவில் மூலிகைப் பயிர்கள்... கறவை மாடு வாங்க மானியம்... வேளாண் ஏற்றுமதிக்குப் பயிற்சி...

புறாபாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறாபாண்டி

நீங்கள் கேட்டவை

‘‘காவிரி டெல்டா மாவட்டங்களில் மூலிகைப் பயிர்கள் சாகுபடி செய்யலாமா. விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது?’’

மு.அழகிரிசாமி, உதயமார்த்தாண்டபுரம், திருவாரூர் மாவட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள மத்திய வணிக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் தலைவரும் முதன்மை விஞ்ஞானி யுமான முனைவர் மணிவேல் பதில் சொல்கிறார்.

‘‘நெல் சாகுபடி செய்யப்படும் ஈரக் களிமண்நிலம் மற்றும் மேட்டுப்பகுதி நிலம் எனக் காவிரி டெல்டாவில் இரண்டு வகையான நில அமைப்புகள் உள்ளன. முதலில் நெல் சாகுபடி செய்யப்படும் நிலங்களுக்கான மூலிகைகள் பற்றிப் பார்ப்போம். இந்த நிலத்தில் நீர்பிரம்மி என்ற மூலிகை அற்புதமாக விளையும். பல்லாண்டு பயிர் இது. ஒரு முறை சாகுபடி செய்துவிட்டால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்துகொண்டே இருக்கலாம்.

அஸ்வகந்தா
அஸ்வகந்தா


அடுத்து, வசம்பு சாகுபடி செய்யலாம். இதுவும் ஓர் ஆண்டு பயிர். இந்த இரண்டு வகை மூலிகைகளுக்கும் சந்தை வாய்ப்பு நன்றாகவே உள்ளது.

டெல்டா பகுதியில் தண்ணீர் தேங்காத மேட்டு நிலங்களில் நிலவேம்பு, அஸ்வகந்தா என இந்த இரண்டு மூலிகையும் நன்றாகவே வளரும். அஸ்வகந்தா பற்றிக் கொஞ்சம் விரிவாகவே சொல்கிறேன். ஈரக்களிமண் தவிர மற்ற அனைத்து மண் வகையிலும் வளரக்கூடிய அற்புதமான மூலிகை இது. அஸ்வகந்தா 5 மாத காலப் பயிர். நல்ல வடிகால் வசதி கொண்ட நிலத்தில் பயிர் செய்ய வேண்டும். பகலில் வெப்பம் அதிக மாகவும், இரவில் வெப்பம் குறைவாகவும் இருந்தால் பயிர் நன்றாக வளரும். இதைச் சாகுபடி செய்ய நவம்பர் - டிசம்பர் மாதங்கள் ஏற்றவை. இதில் 18 வகையான மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. இது ‘அமுக்குரான் கிழங்கு’ எனவும் அழைக்கப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வட இந்தியாவில் அஸ்வகந்தா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ‘சைனீஸ் ஜின்ஸெங்’ என்ற பெயரில் சீனாவில் அதிகமாகச் சாகுபடி செய்யப்படுகிறது.

அஸ்வகந்தா
அஸ்வகந்தா

இந்த அஸ்வகந்தாவுக்கு உலகச் சந்தையில் வரவேற்பு உள்ளது. ஆனால், மிகவும் தரமாகச் சக்திவாய்ந்த அஸ்வகந்தா இந்தியாவில்தான் விளைகின்றது. ஆனால், நம் நாட்டில் பெரிய அளவில் சாகுபடி செய்யப்படுவது இல்லை. இவ்வளவு சிறப்பு மிக்க மூலிகையைத் தமிழ்நாட்டு விவசாயிகள் இன்னும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. எனவே, எங்கள் ஆராய்ச்சி மையம் சார்பில் இது போன்ற மூலிகைப் பயிர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

மணிவேல்
மணிவேல்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மூலிகைப் பயிர்களை ஒரு ஏக்கர், 2 ஏக்கர் என்று பயிர் செய்யாமல், 20 ஏக்கர், 30 ஏக்கர் என்று பல விவசாயிகள் இணைந்து சாகுபடி செய்யலாம். இப்படிச் சாகுபடி செய்யும்போதுதான், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தேடி வந்து மூலிகைகளை வாங்கிச் செல்லும். சிறிய பரப்பில் சாகுபடி செய்தால், விற்பனை செய்ய அலைய வேண்டும். மேலும், மூலிகைப் பயிர்களைச் சாகுபடி செய்யும் முன்பு, அதன் சந்தை வாய்ப்புகளை அறிந்துகொள்வது நல்லது. முடிந்தால் நல்ல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு மூலிகை சாகுபடி செய்வது லாபம் தரும்.’’

தொடர்புக்கு: முனைவர் மணிவேல்,

செல்போன்: 94295 43209.

‘‘கறவை மாடு வளர்க்க ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப் படுகிறது என்று கேள்விப்பட்டோம். இதைப் பெறுவது எப்படி?’’

@ஆர்.சாந்தி.

‘‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் ‘தாட்கோ’ (TAHDCO) வாயிலாக, பழங்குடியினர் கறவை மாடு வாங்க, மானியம் வழங்கப்படுகிறது. கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உறுப்பின ராக இருக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள், கறவை மாடு வாங்க, 45,000 ரூபாய் மானியம் வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ‘தாட்கோ’ வாயிலாகச் செயல்படுத்தப்படும் பொருளா தார மேம்பாட்டுத் திட்டத்தில், 2022-23-ம் ஆண்டுக்கான மானிய தொகை பெற வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

மாடுகள்
மாடுகள்

கறவை மாடு வாங்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவராக இருக்க வேண்டும். 18 - 65 வயதுக்கு உட்பட்டோரின் குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர், ‘தாட்கோ’ திட்டத்தில் இதுவரை எந்த மானியமும் பெற்றிருக்கக் கூடாது.

வாங்கப்படும் மாடுகள் 3 - 4 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவரிடம் சான்றிதழ் பெற வேண்டும். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், ஒரு பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் அமைக்க, 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப் படுகிறது. தாட்கோ திட்டங்கள் மூலம் பயன் பெற விரும்புவோர்,

கறவை மாடு வாங்க விரும்புவோர், http://application.tahdco.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இணையம் மூலம் விண்ணப்பிக்க முடியாத விவசாயிகள், தங்கள் மாவட்டத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தில் நேரடியாகவும் விண்ணப்பம் அளித்துப் பயன்பெறலாம்.

மேலும், இந்தத் திட்டம் குறித்து விரிவான வழிகாட்டும் நெறிமுறைகளையும் தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.

அதில் ‘வங்கிகள் திட்ட அறிக்கையில் உள்ளபடி முழுக் கடனையும் வழங்காமல் மானியத் தொகையை மட்டுமே கடனாக வழங்குதல் கூடாது. வங்கியிலிருந்து நேரடியாகப் பயனாளிகள் பெயரில் காசோலை வழங்குதல் போன்ற நடைமுறை களைத் தவிர்க்க வேண்டும்.

தாட்கோ மூலம் பயனடையும் பயனாளி களுக்கு வங்கிக் கடனுடன் செயல்படுத்தப் படும் திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையை முன்னேற்பு மானியமாக (Front Ended Subsidy) கருதி மானியத் தொகைக்கு வட்டி கணக்கிடாமல், வங்கிக் கடனுக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்பட வேண்டும்...’ என்பது உள்ளிட்ட பல நல்ல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.’’

புறாபாண்டி
புறாபாண்டி

“வேளாண் பொருள்கள் ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம். இதற்கான பயிற்சி, ஆலோசனைகள் எங்கு கிடைக்கும்?’’

ம.ராமசாமி, திருப்பத்தூர்.

‘‘வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி ஆணையத்தின் (APEDA-Agricultural and Processed Food Products Export Development Authority) தமிழ்நாடு மண்டல அலுவலகம், சென்னையில் உள்ளது. இங்கு ஏற்றுமதி செய்ய விரும்புபவர்களுக்குத் தேவையான தகவல்களைக் கொடுத்தும், விளைபொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு உதவியும் செய்வதுதான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம்.

காய்கறி, பழங்கள், பூக்கள், அரிசி, நிலக்கடலை, வெல்லம், இறைச்சி, பால் பொருள்கள், தேன், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள்... என்று ஏற்றுமதிக்கு ஏற்ற பொருள்களையும் அவற்றை எந்த நாடுகளுக்கு, எந்த நிறுவனத்துக்கு அனுப் பலாம் என்றும்கூட ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்கள்.’’

தொடர்புக்கு:

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA),

தமிழ்நாடு மண்டல அலுவலகம், இரண்டாம் தளம்,
வேளாண்மை விற்பனை மற்றும்
வேளாண் வணிக ஆணையரக வளாகம்,
திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 600032.
தொலைபேசி: 044 29500249, 29500247.