6 வகையான சர்க்கரைவள்ளிக் கிழங்குகள்... பழுப்பு வெல்லத்தின் சிறப்பு... மரக்கூழ் மரச்சாகுபடி...

நீங்கள் கேட்டவை
‘‘சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்ய விரும்புகிறோம்; இதற்கான விதைக்கொடி எங்கு கிடைக்கும், சாகுபடி செய்வது எப்படி?’’
@சாந்தி தேவி, பெரம்பலூர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்த கிழங்கு வகைகள் சேகரிப்பாளர் பிரபாகரன் பதில் சொல்கிறார்.
‘‘ஏறத்தாழ அழியும் நிலையிலிருந்த சர்க்கரை வள்ளி கிழங்கு ரங்களைச் சேகரித்து, விவசாயிகளிடம் பரப்பி வருகிறேன். இந்தப் பணி செய்யத் தூண்டுகோலாக இருந்தது பசுமை விகடன் இதழ்தான் என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

தற்சமயம் என்னிடம் 6 வகையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு ரகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நிறத்திலும் சுவையிலும் சிறப்புத்தன்மைக் கொண்டவை. இதைச் சேலம், வேலூர், மைசூரு போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள்தான் எனக்கு வழங்கினார்கள். அதை நாற்று விட்டுப் பெருக்கி உங்களைப் போன்ற விவசாயிகளுக்கு விலைக்குக் கொடுத்து வருகிறேன்.


சர்க்கரைவள்ளிக் கிழங்கின் ஆயுட்காலம் 3 - 4 மாதங்கள். அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலம் நடவுக்கேற்ற பருவம். மற்ற பருவங்களிலும் நடவு செய்யலாம். ஆனால், விளைச்சல் சற்றுக் குறைவாக இருக்கும். தண்ணீர் தேங்காத, வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளும் இதற்கு ஏற்றவை. இது, வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையது. நிலத்தைத் தயார் செய்யும் முன்பு, கொடிகளை வளர்த்து வைத்துக்கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு 5 சென்ட் நிலத்தில் கொடியைப் பதியம் வைத்து நாற்றுத் தயார் செய்ய வேண்டும். ஒரு மாதத்துக்குள் வளர்ந்துவிடும். இதை வெட்டி நடவு செய்யலாம்.


முதலில் கொக்கிக் கலப்பையில் உழவு செய்து, 2 டிப்பர் மட்கிய எருவை கொட்டிக் கலைத்துவிட வேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் இரண்டு சால் உழவு செய்ய வேண்டும். பார் பிடித்து இளம் சர்க்கரைவள்ளிக் கொடிகளை நடவு செய்ய வேண்டும். நடவு செய்யும்போது கொடிகளின் நீளம் முக்கால் அடி இருக்க வேண்டும். நடவு செய்த 7-ம் நாளில் வேர் பிடித்து வளரத் தொடங்கும். 15-ம் நாளில் களைக்கொத்துக் கொண்டு களை எடுக்க வேண்டும். அதற்குப் பிறகு, கொடிகள் படர்ந்து நிலத்தை மூடிக்கொள்வதால், களை எடுக்கத் தேவையிருக்காது. 30-ம் நாளில் வேர்களில் கிழங்கு பிடிக்க ஆரம்பிக்கும். 60-ம் நாளில் கிழங்குகள் விரல் அளவுக்குப் பெருத்துவிடும். நிலத்தின் தன்மைக்குத் தகுந்தபடி 10 நாள்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது. பாசன நீருடன் ஏக்கருக்கு 200 லிட்டர் அமுதக்கரைசலைக் கலந்து விடலாம். பொதுவாக, சர்க்கரை வள்ளிக் கொடிகளை பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை.
90-ம் நாளுக்கு மேல் கிழங்கைத் தோண்டிப் பார்த்தால் முத்தி இருக்கும். கொடிகளை அறுத்துவிட்டு, அறுவடை செய்யலாம்.’’
தொடர்புக்கு, பிரபாகரன், செல்போன்: 87789 04182.
‘‘இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்தை வாங்கினோம். சில வாரங்களில் வெள்ளி நிறத்தில் பூஞ்சணம் பூத்துள்ளது. ஏன் இப்படி ஆனது? எந்த நிறத்தில் உள்ள வெல்லத்தை வாங்க வேண்டும்?’’
-கீர்த்திவர்மன், திருக்குழுக்கன்றம்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை வழி கரும்பு விவசாயியும், வெல்லம் உற்பத்தியாளருமான ‘புளியங்குடி’ அந்தோணிசாமி பதில் சொல்கிறார்.

‘‘நச்சுத்தன்மை வாய்ந்த எந்த ஒரு ரசாயன பொருளும் சேர்க்கப்படாத வெல்லத்தின் ஆயுள் காலம், அதிகபட்சம் 3 மாதங்கள் தான். இதைக் கடந்துவிட்டால், பூஞ்சணம் பிடிக்கத் தொடங்கும். காரணம், வெல்லத்தில் தண்ணீர் அதிகம் இருக்கும். மேலும், ரசாயனங்கள் சேர்க்கப்படவில்லை என்பதால் விரைவாக நிலை மாற்றம் அடையும். அதேசமயம், நாட்டுச்சர்க்கரை என்றால் 6 மாதங்களுக்கு மேல் தாங்கும். இதில் உள்ள தண்ணீரைக் காய வைத்து வடித்து விடுவதால், இதன் வாழ்நாள்கள் அதிகம்.

இயற்கை முறையில் வெல்லம் தயாரிக்கப்படும்போது அடர் பழுப்பு நிறத்தில்தான் இருக்கும். அந்த வெல்லம்தான் தரமாகவும் சுவையாகவும், நல்ல மணத்துடனும் இருக்கும். வெல்லம் வாங்கும்போது கொஞ்சம் அடர் பழுப்பான நிற வெல்லத்தைத்தான் வாங்க வேண்டும். ஆனால், பளிச்சென்று இருக்கும் வெல்லம்தான் சுத்தமானது என்று சிலர் நம்புகிறார்கள். கவர்ச்சியாக, பளிச்சென்று இருந்தால் அதில் அளவுக்கு அதிகமான ரசாயனம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். விரைவில் கெட்டுப் போகாமலிருந்தாலும் அதில் ரசாயனப் பொருள்கள் உள்ளன என்று அர்த்தம்.
வெல்லத்தில் சல்பர் டை ஆக்ஸைடு கலப்பதையே நாங்கள் கண்டித்து வருகிறோம். சில இடங்களில் வெல்லத்தில் விவசாயத் துக்குப் பயன்படுத்தும் சூப்பர் பாஸ்பேட் கலக்கிறார்கள். இதை மண்ணில் போட்டாலே விஷம். உணவில் கலந்தால் என்ன ஆகும்? ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்றால், வெல்லம் நிறமாகவும், உருண்டை பிடிக்க ஏற்ற வகையிலும் வேண்டும் என்பதற்குத்தான் இந்தப் பாதகத்தைச் செய்கிறார்கள்.

பாகு காய்ச்சிய பிறகு, குளிர விட வேண்டும். குளிரவிட்டாலே, வெல்லம் உருண்டை செய்யும் பதம் வந்துவிடும். ஆனால், அவசரமாக வேண்டும் என்பதற்காக சூப்பர் பாஸ்பேட் கலந்துவிடுகிறார்கள். இதனால், ஏற்படும் உடல் நலக்கோளாறுகள் ஏராளம். ஆகையால், இனி வெல்லம் வாங்கும் போது, இந்த விஷயங்களைக் கவனியுங்கள்.’’
தொடர்புக்கு, ‘புளியங்குடி’
அந்தோணிசாமி, செல்போன்: 99429 79141.
‘‘மரக்கூழ் மரங்களைச் சாகுபடி செய்ய விரும்புகிறோம். எங்கள் பகுதிக்கு ஏற்ற மரங்கள் குறித்த தகவல் எங்கு கிடைக்கும்?’’
- ஆர்.அழகிரி, விருதுநகர்.

‘‘கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப் பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், வேளாண் காடுகள் மற்றும் மதிப்புக்கூட்டுத் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகள் முகாம்கள் நடத்தி வருகிறார்கள். இதில் மரக்கூழ் காகித மரங்கள் மற்றும் தீக்குச்சி மரங்கள், ஆலை சார்ந்த வேளாண் காடுகளில் பயிரிடப்படும் மரங்கள் வளர்ப்பு முறைகள், அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ற மர வகை, மண், உரம் மற்றும் நீர் மேலாண்மை, பூச்சி, நோய்க்கட்டுப்பாடு, மரக் கழிவுகளிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள்... உள்ளிட்டவை பற்றிய பயிற்சிகளும் வழங்கி வருகிறார்கள்.’’
தொடர்புக்கு,
முதல்வர்,
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம்,
தொலைபேசி: 04254 222010.