நாட்டு நடப்பு
Published:Updated:

இளநீருக்குக் குட்டை தென்னை... எத்தனை அடியில் சைடு போர் எடுக்க வேண்டும்...

புறாபாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறாபாண்டி

விவசாயிகள் விரும்பும் செடிமுருங்கை...

நீங்கள் கேட்டவை

‘‘எங்கள் நிலத்தில் தென்னை சாகுபடி செய்ய உள்ளோம். இளநீருக்கு ஏற்ற தென்னை ரகம் எது?’’

@பரமேஸ்வரி.

சேலம் மாவட்டம், பேளூர் பகுதியைச் சேர்ந்த தென்னை விவசாயி அப்போலோ பதில் சொல்கிறார்.

‘‘இளநீருக்கு மிகவும் ஏற்ற ரகம், குட்டை ரக தென்னை. இதைத்தான் நான் சாகுபடி செய்து வருகிறேன். இந்த ரகத்தைத் தேர்வு செய்தது என்னுடைய நேரடி அனுபவம் மூலம்தான். அதாவது, ஒரு முறை சேலம் சென்றிருந்தபோது, தாகம் எடுத்தது. சாலை யோரம் இருந்த இளநீர் கடைக்குச் சென்று, என்ன விலை என்று கேட்டேன். சாதாரண இளநீர் 20 ரூபாய், பெரிய இளநீர் 25 ரூபாய் என்று சொன்னார்.

அப்போலோ
அப்போலோ

இந்த இளநீருக்கு மட்டும் விலை அதிகம் என்று கேட்டேன். ‘இதுல தண்ணி அதிகமா இருக்கும். இந்தப் பகுதியில இது அதிகமா கிடைக்காது. இதைப் பொள்ளாச்சியில இருந்து வாங்கிட்டு வந்து விற்பனை செய்றேன். கோயில்கள்ல அபிஷேகத்துக்கு இந்த இளநீரைத்தான் பயன்படுத்துறாங்க. அதனாலதான் இதுக்கு கூடுதல் விலை’ என்று கடைக்காரர் சொன்னார். அந்த இளநீரைக் குடித்துப் பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இளநீர் குடித்து முடிப்பதற்குள் இந்த ரகத்தை ஏன் நாம் சாகுபடி செய்யக் கூடாது என்று நினைத்தேன். உடனே, இது சம்பந்தமான தகவல்களைத் தேடத்தொடங்கினேன். கூடவே எங்கள் பகுதியில் இந்த ரகத்துக்கு விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது என்று ஆய்வு செய்தேன்.

நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது என்று தெரிந்து கொண்டேன். இதன் கன்றுகளை பொள்ளாச்சி யிலிருந்து வாங்கி வந்து நடவு செய்தேன். ‘சவுக்காட் குட்டைத் தென்னை’ (Chavakkad Dwarf Coconut) ரகத்தில் ஆரஞ்சு, மஞ்சள், பச்சை மூன்று ரகங்களும் சேர்த்து வாங்கி வந்து நடவு செய்தேன். எங்கள் பகுதியில் இந்த இளநீர் ரகத்தை சாகுபடி செய்த முதல் ஆள் நான்தான். அதைப் பார்த்த எங்கள் ஊர் விவசாயிகள், ‘இது இளநீருக்கு மட்டும்தான் போகும். தேங்காய்க்கு தேறாது. இளநீரா விற்பனை செய்ய முடியாட்டி நஷ்டமாகிடும்’ என்று அச்சப்படுத் தினார்கள். ஆனால், நான் அசரவில்லை. நடவு செய்த மூன்றரை ஆண்டுகளில் இளநீர் அறுவடைக்கு வரத் தொடங்கியது.

இளநீர் ரகம்
இளநீர் ரகம்



மற்ற ரகத்தில் நன்றாகப் பராமரிப்பு செய்தால் ஆண்டுக்கு 100 காய்கள் எடுக்கலாம். ஆனால், இந்த ரகத்தில் 150 காய்கள் கிடைக்கின்றன. நல்ல விலையும் கிடைத்து வருகிறது. விற்பனைக்கும் பிரச்னை இல்லை. மொத்த வியாபாரிகள், தோப்புக்கே வந்து வாங்கிச் செல்கிறார்கள். தேங்காயாக விற்பனை செய்வதைக் காட்டிலும், இளநீர் விற்பனையில் கூடுதல் விலை கிடைக்கிறது. ஒரு தேங்காய்க்கு 10 ரூபாய் வரைதான் விலை கிடைக்கும். ஆனால், இந்த இளநீருக்கு 20 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. குளிர், மழைக்காலங்களில் மட்டும்தான் விலை குறையும். அப்போதுகூட 13 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளேன். ஆகையால், உங்கள் பகுதியில் விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது என்று ஆய்வு செய்துவிட்டு, இந்த ரகத்தை நடவு செய்யயுங்கள்.’’

தொடர்புக்கு, அப்போலா, செல்போன்: 97875 47367.

‘‘எங்கள் கிணற்றில் சைடு போர் போட உள்ளோம். எத்தனை அடியில் போடலாம்?’’

ஆர்.கணபதி,ராணிப்பேட்டை.

நீர் ஊற்றுப் பார்ப்பதில் அனுபவம் வாய்ந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த ‘அசோலா’ சதீஷ் குமார் பதில் சொல்கிறார்.

‘‘முதலில் அந்தக் கிணற்றில் சைடு போர் (பக்க வாட்டில் ஆழ்துளை) போடுவதால் நீர் கிடைக் குமா? என்று பார்க்க வேண்டும். ஊற்று இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு போர் போடுவது நல்லது. சைடு போர் என்பது 100 அடிக்குள் ஊற்று உள்ள பகுதிகளுக்கு மட்டும்தான் ஏற்றது. 300 அடியில் நீர்மட்டம் உள்ள பகுதிகளில் சைடு போர்வெல் போட்டால் தண்ணீர் கிடைக்க வாய்ப்புக் குறைவு. ஆகையால், உங்கள் பகுதியில் 100 அடிக்குள் நீர்மட்டம் உள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கிணறு
கிணறு

மேலும், சைடு போர் என்பது கிணற்றின் கிடை மட்டத்தில் உள்ள நீர் ஊற்றுக்களைக் கண்டறியும் பணி. இதற்குக் கிணற்றில் 70 - 100 அடிக்குள் இடத்தைத் தேர்வு செய்து போர் போட வேண்டும். சைடு போரில் 60 அடியில் தண்ணீர் வந்தால் 75 அடி முதல் 85 அடி வரை மட்டுமே போர் போட வேண்டும். அடுத்து, சைடு போரில் எப்போதும் தண்ணீர் வந்துகொண்டிருக்காது. வறட்சி ஏற்படும்போது, சைடு போர் வறண்டுவிடும். அப்போது, அந்த இடத்தில் குச்சி அல்லது கம்பி வைத்து அடைத்துவிடலாம். இப்படிச் செய்யாவிட்டால், வேறு ஊற்றிலிருந்து கிணற்றுக்கு வரும் நீர், இந்த போர் ஓட்டை வழியாக வெளியில் செல்ல அதிகம் வாய்ப்பிருக்கிறது.’’

தொடர்புக்கு, ‘அசோலா’ சதீஷ் குமார், செல்போன்: 98433 77470.

சதீஷ் குமார்
சதீஷ் குமார்

‘‘பி.கே.எம் ரக முருங்கை விதைகள் எங்கு கிடைக்கும். இதன் சிறப்புகள் என்ன?’’

க.மணிமாறன், கீரனூர்.

‘‘தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக் கலை ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப் பட்டதுதான் பி.கே.எம் முருங்கை ரகம். பி.கே.எம் 1, பி.கே.எம் 2 ரகங்கள் உள்ளன. இதில் இலைக்கு ஏற்றது பி.கே.எம் 1 ரகம். காய்க்கு ஏற்றது பி.கே.எம்-2 ரகம். உங்களின் தேவை எது என்று பார்த்து ரகத்தைத் தேர்வு செய்யுங்கள். இந்த ரக முருங்கையை மறு தாம்பு பயிராக 3 ஆண்டுகள் வரை பராமரிக் கலாம். முருங்கை விதைகளிலிருந்து எடுக்கப் படும் ‘பென் ஆயில்’ என்ற எண்ணெய், முருங்கை இலைப்பொடி... உள்ளிட்டவை மதிப்புக்கூட்டல் செய்யப்படுகின்றன. இந்தப் பொருள்களுக்கு வெளிநாட்டில் நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகச் செடி முருங்கை விதைகளை ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங் களில் உள்ள விவசாயிகளும் விரும்பி பயிர் செய்து வருகிறார்கள். பெரியகுளம் ஆராய்ச்சி நிலையத்தில் இந்த ரகங்களின் விதை விலைக்குக் கிடைக்கும்.’’

தொடர்புக்கு, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தேனி மாவட்டம்.

தொலைபேசி: 04546 231726.