
நீங்கள் கேட்டவை
‘‘மலேசியா சிறகு அவரைச் செடியைப் பற்றிக் கேள்விப்பட்டோம். நம் நாட்டில் இது நன்றாக வளருமா?’’
ஆர்.சுகுணா, அவிநாசி.
மலேசியா நாட்டில் உள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி பிரிவு அலுவலர் என்.வி.சுப்பாராவ் பதில் சொல்கிறார்.
‘‘மலேசியாவில் இதைக் கோழி அவரை என்று சொல்வோம். சிறிய வயதில் எங்கள் பாட்டி வீட்டில் இதைப் பார்த்து இருக்கிறேன். இடைப்பட்ட காலத்தில் இதைப் பார்க்கவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு, பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தில் வீட்டுத்தோட்டம் அமைக்கும்போது, மலேசியாவில் உள்ள பாரம்பர்ய விதைகளைச் சேகரித்தோம். அப்போது சிறகு அவரை (Winged Beans) விதைக் கிடைத்தது. அதைப் பயிர் செய்து, மலேசியா மக்களுக்கு விதையாகக் கொடுத்து வருகிறோம். மலேசியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்த சில தமிழ்நாட்டு நண்பர்கள், இந்த விதைகளை வாங்கிச் சென்றார்கள். இவர்கள் மூலம் தமிழ்நாட்டில் சிறகு அவரைப் பரவியுள்ளது. இது அவரைக் கொடிபோலப் படர்ந்து காய்க்கும். இதன் தாவரவியல் பெயர், ‘சொபோகார்பஸ் டெட்ரா கோனலோபஸ்’ (Psophocarpus tetragonolobus) ஆகும்.

தமிழில் இதன் வடிவத்தை வைத்து ‘சிறகு அவரை’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தாயகம் ‘நியூகினியா’ என்றாலும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும், வெப்ப மண்டலங்களான தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டிலும் நன்றாக வளரும். நான் தமிழகம் வந்தபோது, இதை நேரில் பார்த்துள்ளேன்.
சிறகு அவரைக்காய், பயறு வகைக் குடும்பத் தைச் சேர்ந்தது. தனக்குத் தேவையான தழைச்சத்தை வேரில் வாழும் பாக்டீரியாக் களின் துணையுடன் தயாரித்துக்கொள்ளும் தன்மைகொண்டது. பூச்சி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட பயிர் இது. ஒருமுறை விதை ஊன்றினால் போதும், அடுத்த முறை விதைக்கத் தேவையில்லை. பல்லாண்டு காலப் பயிர். விதைத்த 90-ம் நாளில் நீல நிறப் பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும். மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற இரண்டாம் வாரத்தில் 15-லிருந்து 22 செ.மீ நீளமுடைய, மிருதுவான காய்கள் உருவாகும். ஒரு செடியிலிருந்து நான்கு முதல் 5 கிலோ காய்கள் கிடைக்கும்.

இவற்றின் இலைகள், பூக்கள், வேர்க்கிழங்கு களைக்கூட உணவாகப் பயன்படுத்தலாம். சோயாபீன்ஸ் போலவே அதிக அளவில் புரதச்சத்துக் கொண்டது. இலையில் வைட்டமின் ஏ, சி மற்றும் தாதுப்பொருள் களான சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, போலிக் அமிலங்களும் உள்ளன. வீட்டுத் தோட்டங்களுக்கு ஏற்ற காய்கறிச் செடிகளில் இதுவும் ஒன்று. சிறகு அவரைக்காய்ச் சிறந்த உணவாக உள்ளது. மலேசியா மக்களிடம் பீட்டா கரோட்டீன் உள்ள சிறகு அவரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வீட்டுத்தோட்டத்தில் இதை வளருங்கள் என்று தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறோம். தமிழ்நாட்டு மக்களும் இதை வீட்டுத்தோட்டத்தில் வளர்த்து பயன் பெறுங்கள்.’’
தொடர்புக்கு, என்.சுப்பாராவ்,
வாட்ஸ்அப் : 060125374899.

‘‘யாழ்ப்பாண ரகப் பனையின் சிறப்புகள் என்ன. இதன் விதைகள் எங்கு கிடைக்கும்?
வி.கலைவாணன், அரியலூர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மரம் வளர்ப்பு ஆர்வலர் ‘மரம்’ கருணாநிதி பதில் சொல்கிறார்.
‘‘விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள பூரிகுடிசைப் பகுதியிலும் விக்கிரவாண்டி ஒன்றியத் துக்கு உட்பட்ட நரசிங்கனூர் பகுதியிலும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட யாழ்ப்பாண ரகப் பனை மரங்கள் உள்ளன. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு, முன்பு இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வேலைக்காக இலங்கைக்குச் சென்றார்கள். அங்கிருந்து திரும்பும்போது, யாழ்ப்பாண ரகப் பனை விதைகளை எடுத்து வந்து, தங்களின் தோட்டத்தில் விதைத்துள்ளார்கள். அவை தான், இப்போது வளர்ந்து பலன் கொடுத்துக் கொண்டுள்ளன. இந்த ரக மரங்களில் அதிக மாகப் பதநீர் கிடைக்கும். மாசி மாதத்தில் இருந்து ஆனி மாசம் வரைக்கும் சீஸன் இருக்கும். சீஸன் சமயங்களில் பனை விதைகள், பனங்கிழங்கு, பதநீரென்று விற்பனை களைகட்டும். நம் பனை மரம், அடிப்பகுதியிலிருந்து மேல்பகுதிக்குப் போகப்போக மெல்லியதாக இருக்கும். ஆனால், யாழ்ப்பாணப் பனை மரங்கள் அடிப்பகுதியும், மேல் பகுதியும் தடித்திருக்கும். நடுவில் மெலிந்திருக்கும். யாழ்ப்பாணப் பனைமரங்களோடு ஓலைகள் பூ விரிந்த மாதிரி பார்ப்பதற்கு அழகுடன் இருக்கும். தண்ணீர் பாய்ச்சினால் 10 ஆண்டுகளில் பலன் கொடுக்கத் தொடங்கும். தண்ணீர் பாசனம் இல்லை என்றால், பலன் தர 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

இதன் பனம்பழம், பனங்கிழங்கு, பதநீர்... என எல்லாம் தனித்தன்மையுடன் இருக்கும். ஒரு பாளையில் ஒரு வேளைக்கு ஒரு லிட்டர் முதல் ஐந்து லிட்டர் வரை பதநீர் கிடைக்கும். இந்த ரகப் பனங்கிழங்குகள் திரட்சியாக இருக்கும். அதனால், கூடுதல் விலை கிடைக்கும். அண்மைக் காலமாகப் பனை விதைப்பில் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். விவரம் தெரிந்த சிலர் இந்தப் பகுதிக்கு வந்து யாழ்ப்பாண பனை விதைகளை வாங்கிச் செல்கிறார்கள். இதற்குத் தேவை அதிகமாக இருப்பதால், நாட்டுப் பனை விதை ஒரு ரூபாய் என்றால், இந்தப் பனை விதை இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.’’
தொடர்புக்கு, ‘மரம்’ கருணாநிதி,
செல்போன்: 93661 09510.
‘‘இலுப்பை மரக்கன்றுகள் எங்கு கிடைக்கும்? இதன் பயன்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள்?’’
‘‘பசுநெய்யில் உள்ளதுபோல இலுப்பை எண்ணெயில் சத்துகள் உள்ளதால், இதை ‘ஏழைகளின் நெய்’ என்று அழைக்கப்படுகிறது. முன்பு கோயில் நிலங்களில் பெரும்பாலும் இலுப்பை மரங்கள்தான் இருந்தன. இதற்குக் காரணமும் உண்டு. இலுப்பை எண்ணெய் விளக்கு எரிக்கவும், கோயிலில் உள்ள மடப்பள்ளியில் உணவு தயாரிக்கவும் பயன்படுத்தினார்கள். தேர் சக்கரங்கள் செய்வதற்கு இந்த மரத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். இலுப்பை எண்ணெய் பயன்பாடு குறைந்து போனதாலும், கோயில் நிலங்களில் இருந்த மரங்கள் பராமரிப்பு இல்லாமலும் கைவிடப்பட்டன. இதனால், இலுப்பை மரங்களின் எண்ணிக்கை சரியத் தொடங்கின. இப்போது, இலுப்பை எண்ணெயின் பயன் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இருமல் , நெஞ்சு வலி மருந்து பொருள்கள் தயாரிக்க இந்த எண்ணெயைத் தேடி வாங்குகிறார்கள். இதனால் மீண்டும் இலுப்பை மரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. தரமான இலுப்பை மரக்கன்றுகள், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. சில தனியார் நாற்றுப் பண்ணைகளிலும் கிடைக்கின்றன.’’
தொடர்புக்கு,
வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம். தொலைபேசி: 04254 222010.