ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

பணம் கொடுக்கும் தேசிய பல்லுயிர் ஆணையம்... தென்னை சுருள் ஈ தாக்குதலுக்குத் தீர்வு...

புறபாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறபாண்டி

வேளாண் கட்டமைப்புக்கு ரூ.2 கோடி கடன்!

தேசிய பல்லுயிர்பெருக்க ஆணையத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பணிகள் பற்றிச் சொல்லுங்கள்?’’

நா.சுவாமி, கோயம்புத்தூர்.

சென்னையில் உள்ள தேசிய பல்லுயிர்பெருக்க ஆணையத்தின் (National Biodiversity Authority) செயலாளர் ஜெஸ்டின் மோகன் ஐ.எஃப்.எஸ் பதில் சொல்கிறார்.

‘‘தேசிய பல்லுயிர்பெருக்க ஆணையம் 2003-ம் ஆண்டு, சென்னையைத் தலைமை யிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் எந்த உயிரினங்கள், தாவரங்கள் அல்லது அதைச் சார்ந்த பாரம்பர்ய அறிவு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றாலும் அதை ஒரு வியாபாரத்துக்காகப் பயன் படுத்துவதென்றாலும், தேசிய பல்லுயிர்பெருக்க ஆணையத்தின் அனுமதியோ, மாநில பல்லுயிர் பரவல் வாரியத்தின் அனுமதியோ பெற்று இருக்க வேண்டும். அனுமதி இல்லையென்றால் அது பல்லுயிர் பரவல் சட்டம், 2002-ன் படி ஒரு கிரிமினல் குற்றமாகக் கருதப்படும்.

ஜெஸ்டின் மோகன்
ஜெஸ்டின் மோகன்

1990-களில் இந்தியாவில் உள்ள மஞ்சள், வேம்பு போன்ற நம் நாட்டின் பொருள்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் காப்புரிமை வாங்கிச் சொந்தம் கொண்டாடி வந்தன. அதைத் தடுக்கும் வகையிலும், இந்தியாவில் பல்லுயிர் மற்றும் பல்லுயிர் சார்ந்த பாரம்பர்ய அறிவைப் பாதுகாத்து மேம்படுத்தும் வகையிலும், இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது. மாநிலம்தோறும் பல்லுயிர்பெருக்க வாரியங்கள் உள்ளன. நாடு முழுவதும் கிராமங்களில் பல்லுயிர் நிர்வாகக் குழுக்களை உருவாக்கி வருகிறோம். இது வரை 2.76 லட்சம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வை எங்கள் ஆணையம் மூலம் ஏற்படுத்தி வருகிறோம்.

செம்மரங்கள்
செம்மரங்கள்



உதாரணத்துக்குக் கற்றாழை என்ற மூலிகையை ஒரு கிராமத்தில் தனியார் நிறுவனம் கொள்முதல் செய்கிறது என்றால், அதில் கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகித தொகையை, அந்தக் கிராமத்தின் வளர்ச்சிக்குக் கொடுக்க வேண்டும். அதற்காக ஓர் ஒப்பந்தம் கையெழுத்து செய்த பிறகுதான் அந்த நிறுவனம், கற்றாழையை நம் நாட்டிலோ, வெளிநாட்டிலோ வியாபாரம் அல்லது உற்பத்தி செய்ய முடியும். அதற்கான அனுமதியை ஆணையம் வழங்கும். அண்மையில்கூட பஞ்சாப் மாநிலத்தில் விளையும் வெந்தயத்தை ஒரு மருந்து தயாரிக் கும் நிறுவனம் வாங்கியது. அதில் குறிப்பிட்ட தொகையை வெந்தயம் பயிரிடப்படும் அந்தப் பகுதி கிராமங்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறோம். ஆக, வனங்கள் மற்றும் விவசாயப் பகுதிகளிலிருந்து விதைகள், இலைகள், மரப்பட்டை, மூலிகைகள்... போன்றவற்றைக் கொள்முதல் செய்ய வேண்டுமென்றால் உள்நாட்டு நிறுவனங்கள் மாநிலத்தில் உள்ள பல்லுயிர்பெருக்க வாரியங்களையும் வெளிநாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தேசிய பல்லுயிர் ஆணையத்திடமும் அனுமதி பெற வேண்டும்.

மூலிகை தாவரம்
மூலிகை தாவரம்

செம்மரங்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா, கார்நூல், ஓங்கோல், நெல்லூர், சித்தூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மட்டுமே உள்ளன. இந்த ஐந்து மாவட்டங் களிலும் உள்ள செம்மரங்களை வெட்டி விற்பனை செய்யும்போது, அதில் 5 சதவிகிதம் தேசிய பல்லுயிர்பெருக்க ஆணையம் அல்லது மாநிலத்தில் உள்ள பல்லுயிர்பெருக்க வாரியங்களுக்குத் தர வேண்டும். அதை அந்தப் பகுதியில் உள்ள கிராமப்புற வளர்ச்சிக்கும், பல்லுயிர் பாதுகாப்புக்கும் வழங்குகிறோம். அண்மையில்கூட 56 கோடி ரூபாய் ஆந்திராவுக்குக் கொடுத்துள்ளோம். அந்தப் பகுதியில் உள்ள மக்கள்தான், அந்தப் பல்லுயிர்களைப் பாதுகாக்கிறார்கள். ஆகையால், அதன் பலன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கிராம மக்களின் உரிமைகளும் பல்லுயிர்களும் இதன் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. இது குறித்துக் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் எங்கள் ஆணையத்தைத் தொடர்புகொள்ளவும்.’’

மூலிகை தாவரம்
மூலிகை தாவரம்

தொடர்புக்கு,

தேசிய பல்லுயிர்பெருக்க ஆணையம்,

டைசல் பார்க், 5-வது மாடி

சி.எஸ்.ஐ.ஆர் சாலை,

தரமணி,

சென்னை - 600113.

‘‘எங்கள் தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் வெள்ளை சுருள் ஈக்கள் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்துவது எப்படி?’’

ம.தயாளன், சின்ன காஞ்சிபுரம்.

காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முனைவர் இளங்கோவன் பதில் சொல்கிறார்.

‘‘இந்தியாவில் முதல் முறையாக 2016-ம் ஆண்டுப் பொள்ளாச்சி சுற்று வட்டா ரப் பகுதிகளில் தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் கண்டறியப்பட்டது. இந்த ஈ அனைத்து ரகத் தென்னையிலும் பாதிப்பு ஏற்படுத்தினாலும் சௌகாட் ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, மலேசியன் பச்சை குட்டை, நெட்டை, வீரிய ஒட்டு ரகங்களில்தான் அதிக அளவில் தாக்குதலை ஏற்படுத்துகின்றன. நாட்டு ரகத் தென்னையில் இதன் தாக்குதல் குறைவாகத்தான் உள்ளது.

தென்னை
தென்னை

தென்னை மட்டுமல்லாமல், மா, கொய்யா, நாவல், வாழை, வெண்டை, சப்போட்டா, எலுமிச்சை, செம்பருத்தி, போன்ற பயிர் களையும் இவை தாக்குகின்றன. ஆனால், இந்தப் பயிர்களில் இதன் சேதம் குறைவாகவே உள்ளது.

பெண் வெள்ளை ஈக்கள், முட்டைகளை ஓலைகளின் அடிப்பகுதியில் இடும். மெழுகுப் பூச்சுடன் காணப்படும் முட்டைகளிலிருந்து வெளிப்படும் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர்ந்த ஈக்கள் ஓலைகளின் அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சும்.

மேலும், இவை தேன் போன்ற திரவத்தை வெளியேற்றும். அவை கீழ்மட்டத்தில் உள்ள ஓலைகளில் படியும். இதன் மீது கரும் பூசணம் படரும். இதன், காரணமாக ஓலையில் ஒளிச்சேர்க்கை நடைபெறுவது தடைப்படும். மஞ்சள் நிறம், வெள்ளை ஈக்களைக் கவர்ந்து இழுக்கும். ஆகையால், மஞ்சள் வண்ண பாலித்தீன் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவி ஒட்டும் பொறிகளாக வைக்கலாம். ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில், 6 அடி உயரத்தில், இந்தப் பொறிகளைத் தொங்கவிட்டு வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.

இளங்கோவன்
இளங்கோவன்

மாலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் விளக்குப் பொறிகளை வைத்து, ஈக்களைக் கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்கு 2 எண்ணிக்கை விளக்குப் பொறிகள் போதும். அடுத்து, ஈக்களின் வளர்ச்சியைத் தடுக்க, ஓலைகளின் அடிப்புறத்தில் தண்ணீரை வேகமாகப் பீய்ச்சி அடிக்கலாம். என்கார்சியா என்ற ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 100 என்ற அளவில் விட வேண்டும்.

கிரைசோபெர்லா என்னும் இரை விழுங்கி களையும் ஏக்கருக்கு 400 எண்ணிக்கையில் விட வேண்டும்.

கரும் பூசணத்தைக் கட்டுப்படுத்திட ஒரு லிட்டர் நீருடன் 25 கிராம் மைதா மாவை கலந்து ஓலையின் மீது தெளிக்க வேண்டும். மைதா மாவு மீது சூரியஒளி படும்போது கறும் பூசணத்துடன் உதிர்ந்துவிடும்.

மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட சாமந்தி, சூரியகாந்தியை வரப்புப் பயிராகவும் பயிரிட்டும் நன்மை செய்யும் பூச்சிகளைக் கவரலாம். தவறியும் கூடப் பூச்சிக்கொல்லி விஷத்தைத் தெளிக்க வேண்டாம். இவை நன்மை செய்யும் பூச்சிகளை அழித்துவிடும் என்பதையும் மறந்து விட வேண்டாம்.’’

புறாபாண்டி
புறாபாண்டி

‘‘மதிப்புக்கூட்டும் தொழிலுக்கு 2 கோடி ரூபாய் வரை பிணை இல்லாமல் கடன் பெறலாம் என்று கேள்விப்பட்டேன். இதற்கு யாரை அணுகுவது?’’

எஸ்.அரங்கநாதன், அந்தியூர்.

‘‘மத்திய அரசின் வேளாண் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் குளிர்பதன கிடங்குகள், மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள், கருவிகள் வாங்க 2 கோடி ரூபாய் வரை கடனுதவி அளிக்கப்படுகிறது. 2 கோடி ரூபாய் வரை பிணை இல்லாமல் கடன் வழங்குவதுதான் இத்திட்டத்தின் சிறப்பம்சம். கூடுதல் விவரங்களுக்கு இந்த agriinfra.dac.gov.in இணையதளத்தைப் பார்க்கவும்.’’