ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

பாலை விட பஞ்சகவ்யாவில் வருமானம் அதிகம்!

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

‘‘எங்களிடம் நாட்டு மாடுகள் உள்ளன. பால் வருமானம் போதுமானதாக இல்லை. பசுவின் சாணம், சிறுநீர், பால்... உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி விபூதி, சோப்பு, ஷாம்பு... போன்ற பொருள்கள் தயாரிக்க முடியும் என்று கேள்விப்பட்டேன். இதைப் பற்றிச் சொல்லுங்கள்?’

@ஆர்.காயத்திரி

சென்னையைச் சேர்ந்த பசு நல ஆர்வலரும் தொழில் வழிகாட்டியுமான (Mentor) வரதன் சந்தர் பதில் சொல்கிறார்.

‘‘நம் முன்னோர்கள் பாலுக்காக மாடு வளர்க்கவில்லை. நம் மண்ணை வளப்படுத்தும் நடமாடும் உரத் தொழிற்சாலையாகப் பார்த்தார்கள். இடையில் மாடுகளை மறந்துவிட்டோம். மீண்டும் மாடுகள் மீது கவனம் திரும்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அருகில் உள்ள ‘கோ-விஞ்ஞான்’ கேந்திராவில், நாட்டு மாட்டுப் பொருள்களிலிருந்து அழகு சாதனப் பொருள்கள் முதல் அரிய மருந்துப் பொருள்கள் வரை தயாரிப்பு மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம் பகுதியில் சுரபி கோசாலையிலும் தயாரிப் புடன் பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. பசுக் களிடமிருந்து கிடைக்கும் பொருள்களான, சாணம், சிறுநீர், பால், நெய்... ஆகியவற்றின் மூலம் விபூதி, சோப்பு, ஷாம்பு எனக் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட பொருள்களைத் தயாரிக்க முடியும். இதில் உள்ள ஒரே கட்டுப்பாடு, நம்மிடம் இருக்கும் மாடுகள் நாட்டு மாடுகளாக இருக்க வேண்டும்.

நாட்டு மாடுகள்
நாட்டு மாடுகள்

ஒரே ஒரு மாடு இருந்தால்கூட போதும். தினமும் 15 கிலோ சாணம், 6 லிட்டர் சிறுநீரைக் கொடுக்கும். இதை ஆதாரமாக வைத்துக்கொண்டு விபூதி, சோப்பு, ஷாம்பு, பஞ்சகவ்யா... போன்ற பொருள்களைத் தயாரிக்க முடியும். இதிலிருந்து மாதம் 10,000 ரூபாய் வருமானம் ஈட்டுபவர்கள் தமிழ் நாட்டிலேயே உள்ளார்கள்.

பாலுக்காக மாடு வளர்க்காமல் பஞ்சகவ்யா தயாரிக்க மாடு வளர்த்து, நல்ல லாபம் எடுப்பவர்களும் உள்ளனர். இதைக் கற்றுக் கொள்ள ஆர்வம் இருந்தால் போதும். அற்புதமாகத் தயார் செய்ய முடியும். உதாரணத்துக்கு, சுத்தமான விபூதி கிடைப்பது அரிதாக உள்ளது. 8 கிலோ சாணத்திலிருந்து, ஒரு கிலோ விபூதி கிடைக்கும். ஒரு கிலோ விபூதி 250 ரூபாய் வரையிலும் விற்பனை யாகிறது. தரமான விபூதியாக இருக்கும் பட்சத்தில், தேடி வந்து வாங்கிச் செல்லும் அளவுக்கு விற்பனை வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், தமிழ்நாட்டில் ‘ஆலயம் தோறும் ஆவினச் செல்வம்’ என்ற திட்டத்தைத் தொடங்கும்படி தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்கவுள்ளோம். ஒவ்வோர் ஊரிலும் உள்ள கோயில்கள் அல்லது பொது இடங்களில் கோசாலை அமைத்துப் பசு மூலம் கிடைக்கும் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், அந்தக் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பஞ்சகவ்யா, மண்புழு உரம், ஜீவாமிர்தம்... இயற்கை இடுபொருள் களை நிலத்தில் பயன்படுத்தினால், விளைச்சலும் பெருகும், நஞ்சில்லா உணவும் கிடைக்கும். மாடு என்றால், தமிழில் செல்வம் என்று பொருள். அது 100 சதவிகிதம் உண்மையாவது நாம் இப்படிச் செய்யும் போதுதான். ஆந்திரா, கர்நாடகா... போன்ற மாநிலங்களில் பசுப் பொருள்களைத் தயாரித்து நிறைய விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் அந்த நல்ல மாற்றம் நடக்க வேண்டும். உங்களைப்போல பலரும் முன்வர வேண்டும். வாழ்த்துகள்.’’

வரதன் சந்தர்
வரதன் சந்தர்


1. தொடர்புக்கு, Govigyan Anusandhan Kendra, Kamadhenu Bhavan, Ghtae wada (Near bachharaj vyas chowk), Chitar oil, Mahal, Nagpur-32. Phone: 0712 2772273, 2734182. Cell: 94221 01324

2. தொடர்புக்கு, சுவாமி ஆத்மானந்தா,

செல்போன்: 94432 29061.

3. தொடர்புக்கு, வரதன்சந்தர்,

செல்போன்: 87544 66164.


‘‘இயற்கை வழி விவசாயம் மூலம் பருத்திச் சாகுபடி செய்ய முடியுமா? இதற்கான நுட்பங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?’’

கு.த.திலகர், சாத்தனூர்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை வழி பருத்தி விவசாயி கலைவாணி பதில் சொல்கிறார்.

‘‘நிச்சயமாகச் சாகுபடி செய்யலாம். அதற்குச் சில தொழில்நுட்பங்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஏக்கருக்கு 2 டன் தொழுவுரம், 500 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைக் கொட்டி சமன்படுத்தி, இரண்டு உழவு ஓட்ட வேண்டும். பிறகு, கம்பு, சோளம், கேழ்வரகு, எள், தக்கைப்பூண்டு, சணப்பு ஆகிய விதைகளை மொத்தமாக 20 கிலோ அளவுக்கு எடுத்து விதைத்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 45-ம் நாள் இவை நன்கு வளர்ந்திருக்கும். அவற்றை ரோட்டோவேட்டர் மூலம், மடக்கி உழவு செய்ய வேண்டும்.

பிறகு, மண்கட்டிகள் உடையும்படி கலப்பையால் உழுது, பார் பாத்தி அமைத்து, ஒன்றரை அடி இடைவெளியில், இரண்டிரண்டு பருத்தி விதைகளாக ஊன்ற வேண்டும். ஏக்கருக்கு 3 கிலோ அளவுக்கு விதைகள் தேவைப்படும்.

விதைத்த 10-ம் நாள் துளிர்க்கத் தொடங்கும். மண்ணின் தன்மையைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. 15 நாள்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசல் அல்லது ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 20-ம் நாளில் களை எடுத்து, 2 லிட்டர் பஞ்சகவ்யாவை 100 லிட்டர் நீரில் கலந்து தெளித்து... அன்றே 50 கிலோ கடலைப் பிண்ணாக்கைத் தூளாக்கி, செடிகளின் தூர்களில் வைத்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 40-ம் நாளில் களை எடுத்து, 50 கிலோ வேப்பம் பிண்ணாக்கைத் தூளாக்கி, செடிகளின் தூரில் வைத்து வைத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 60-ம் நாளில் களை எடுக்க வேண்டும். பிறகு, களை எடுக்கத் தேவையில்லை.

பருத்தி வயல்
பருத்தி வயல்

இந்த நேரத்தில், செடி முழுவதும் காய்கள் காய்த்துவிடும் என்பதால், காய்ப்புழுக்கள் தாக்க வாய்ப்பிருக்கிறது. ஆமணக்குக் கரைசல் கவர்ச்சிப் பொறி, ஆமணக்கு நடவு போன்றவற்றின் மூலம் கட்டுப்படுத்தலாம். ஒட்டுண்ணிகள், இனக்கவர்ச்சிப் பொறிகள் பயன்படுத்துவதன் மூலமும் காய்ப்புழுக் களைக் கட்டுப்படுத்தலாம். பருத்தி விதைக்கும்போதே 20 அடி இடைவெளியில், ஆமணக்கு விதையை வயல் முழுவதும் விதைத்து விட்டால், பருத்தி, காய் பருவத்தில் இருக்கும்போது ஆமணக்குச் செடிகளும் 10 அடி உயரத்துக்கு மேல் வளர்ந்துவிடும். காய்களைத் தாக்க வரும் பெரும்பகுதிப் புழுக்களை, ஆமணக்குச் செடிகள் ஈர்த்துக் கொள்வதால், பருத்தியில் சேதம் ஏற்படாது. இந்த நுட்பங்களைப் பின்பற்றினால், நிச்சயம் இயற்கை வழி பருத்திச் சாகுபடியில் வெற்றி பெற முடியும்.’’

புறா பாண்டி
புறா பாண்டி

‘‘தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மக்காச்சோள விதைகள் எங்கு கிடைக்கும்?’’

ம.சாந்தி, பெரம்பலூர்.

‘‘மக்காச்சோள ஆராய்ச்சி மையம், திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு அருகே உள்ள வாகரையில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மக்காச்சோள ரகங்களின் விதைகள் இங்கு கிடைக்கும்.

தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம், வாகரை, பழனி, திண்டுக்கல் மாவட்டம்.

தொலைபேசி: 04545 292900/292910/267373.