
மாத்தியோசி
அது, 1971-ம் ஆண்டு ஜூலை மாதம்.அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன், சீனாவுக்கு அரசுமுறை பயணம் செய்தார். வெளிநாடுகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் பயணம் செய்யும்போது, செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களையும் உடன் அழைத்துச் செல்வார்கள். அப்படித்தான், நிக்சன் சென்ற சீன பயணக் குழுவில் நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் ஜேம்ஸ் ரெஸ்டன் (James Reston) இடம்பெற்றிருந்தார். சரி, இதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா?
சீன அதிபர் மா சே துங்கும் அமெரிக்கா ஜனாதிபதியும் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கும்போது, ‘‘அய்யோ... வயிறு வலிக்கிறது’’ என்று தரையில் விழுந்து கதறித் துடித்தார் செய்தியாளர் ஜேம்ஸ் ரெஸ்டன். உடனே பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. அந்த இடமே பரபரப்பானது. அவருக்கு ஏற்கெனவே குடல்வால் அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது. சீனாவுக்கு வந்து இறங்கியதிலிருந்து லேசான வயிற்று வலி இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் அது அதிகரித்து, கதறித் துடிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது.
செய்தியாளர் வலியால் துடிப்பதைப் பார்த்தவுடன், உடனடியாக அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கும்படி மா சே துங் உத்தரவிட்டார். உடனே சீன அதிபரின் தனி மருத்துவர் ஒரு மூங்கிலை வேகமாகச் சீவி, அவரின் உடலில் குத்தினார். அவருக்கு வயிற்றுவலி, வந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது. தொடர்ந்து, அக்குபஞ்சர் மருத்துவ முறை மூலம் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு முழுமையாக நலம் பெற வைத்தார்கள்.

அமெரிக்கா திரும்பிய பிறகு ஜேம்ஸ் ரெஸ்டன், தனக்கு அளிக்கப்பட்ட அக்கு பஞ்சர்மருத்துவச் சிகிச்சை பற்றி (Now About My operation in peking- Article, Jul.26, 1971, James Reston, New york Times) நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் விரிவான கட்டுரையை எழுதினார். இதன் மூலம் அந்த மருத்துவம் மேலை நாடுகளில் அறிமுகமானது. இதன் பிறகு, பத்திரிகையாளர் ஜேம்ஸ் ரெஸ்டன், அதைப் பற்றி, பேசுவதையும் எழுதுவதையும் தொடர்ந்து செய்து வந்தார். இதன் மூலம் அமெரிக்காவில் இந்த மருத்துவ முறை பிரபலமானது. முன்பே இந்த மருத்துவ முறை செயல்பட்டு வந்த ஜப்பான், இந்தியா போன்ற கீழ்திசை நாடுகளிலும் இதைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
அக்கு பஞ்சர் என்பது லத்தீன் மொழியில் அகுஸ் (ஊசி), பங்சர் (குத்துதல்) என்ற இரண்டு வார்த்தைகளைச் சேர்த்து உருவான சொல். ஊசியால் குத்துவதன் மூலமாக, உடலில் இருக்கக்கூடிய உயிர் ஆற்றல் பாதைகளில் நேரக்கூடிய அடைப்புகளைச் சரிசெய்வதுதான் அக்குபஞ்சரின் அடிப்படை தத்துவம்.

‘ஒரே ஒரு புள்ளியின் மூலம் ஆயிரக்கணக் கான நோய்களைக் குணப்படுத்த முடியும்’ என்கிறது ஒரு சீனப் பழமொழி. ‘‘அக்குபஞ்சர் மருத்துவம் போதி தர்மன் மூலம், தமிழ்நாட்டிலிருந்து சீனாவுக்குச் சென்றது. நம் பாரம்பர்ய மருத்துவத்தைச் சீனர்களுக்கு உரிமையாக்குவது சரியா?’’ என்று கம்பு சுற்றுபவர்கள் இங்கே உண்டு. ஆனால், அதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதை வரலாறு அறிந்த அறிஞர்கள் அறிவார்கள்.
இந்தியாவின் மரபு வழி மருத்துவ முறைகள் பல உள்ளன. அவை மூன்று வகையில் பிரிக்கப்பட்டுள்ளன. அங்கீகாரம் பெற்ற மருத்துவ முறைகள் (சிஸ்டம்ஸ்), சிகிச்சை அனுமதி அளிக்கப்பட்ட மருத்துவ முறைகள் (தெரபிஸ்), அங்கீகரிக்கப்படாத மருத்துவ முறைகள்.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகளாக இருப்பவை சித்த மருத்துவம், ஹோமியோ, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் ஆகியவை. தெரபியாக இருப்பது அக்குபஞ்சர் மட்டுமே. அங்கீகரிக்கப்படாதவையாக மலர் மருத்துவம், காந்த சிகிச்சை... என்று அதன் பட்டியல் நீளும்.
அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவம் போன்ற மருத்துவ முறை களுக்கு அரசு மருத்துவ கவுன்சில்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. தெரபி என்று அழைக்கப்படும் சிகிச்சை முறைக்கு அரசு மருத்துவ கவுன்சில் அமைக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது. இதன்படி, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா என்று இரண்டு மாநிலங்களில் மட்டும் அக்குபஞ்சர் கவுன்சில் செயல்பட்டு வருகின்றன.
மருத்துவ கவுன்சில் என்பது, அந்த மருத்துவ முறையைப் பின்பற்றுபவர்களை நெறிப்படுத்துவது, வழிகாட்டுவது, தவறு நடந்தால் நடவடிக்கை எடுப்பது, அரசுக்கு ஆலோசனை வழங்குவது என ஆக்கபூர்வமான பணியைச் செய்யும் அமைப்பு.
‘‘ஒரு மருத்துவ முறை உலகெங்கும் இப்போது மிக வேகமாகப் பரவி வளர்ந்துள்ளதெனில், அது அக்குபஞ்சரே ஆகும். தமிழ்நாட்டில் அக்குபஞ்சர் மருத்துவ முறைக்கு கவுன்சில் அமைக்கப்பட வேண்டும்’’ என்று அக்கு ஹீலர் அ.உமர் பாரூக், போன்றவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். ஆனால், தமிழக அரசு இதுவரை இதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

சரி, கவுன்சில் அமைக்கவில்லை. வேறு என்ன உதவியைத் தமிழக அரசு செய்கிறது என்று கேட்கிறீர்களா?, அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பவர்கள் மீது தமிழக அரசு சட்டம் அரசாணை எண் - 171 (தேதி 27.06.2016) சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சட்டப்படி போலி மருத்துவர் எதிர்ப்புக் குழுவால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதாவது, அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்தால், போலி மருத்துவர் என்ற பெயரில் குற்றம்சாட்டி சிறையில் அடைப்பதுதான். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது என்பது தனிக்கதை.
ஆக, அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறையே போலியானது என்று தமிழ்நாடு அரசு கருதிக்கொண்டு, அரசாணை வெளியிட்டு தன் கடமையை முடித்துக்கொண்டது. இதற்கு வலுசேர்க்கும் விதமாகச் சில அக்கு ஹீலர்களின் நடவடிக்கை உள்ளதுதான், வேதனையின் உச்சம்.
முறையான பயிற்சி, அனுபவம் எதுவுமில்லாமல், அக்குபஞ்சர் மருத்துவம் பார்க்கச் சிலர் கிளம்பிவிடுகிறார்கள்.
முன்பு நான் வசித்த சாலிகிராமம், சினிமாக்காரார்கள் நிறைந்த பகுதி. எதிர் வீட்டில் நடிகை ஹீரா, பக்கத்து வீட்டில் நடிகை மீனா, அடுத்த தெருவில் சிரிப்பு நடிகை கோவை சரளா... என்று அந்தப் பகுதியே சினிமாக்காரர்களால் சிறப்புப் பெற்றிருந்தது. அந்தச் சினிமாக்காரர்கள் பகுதியில் திடீரென ஒரு நாள் ‘அக்குபஞ்சர் மருத்துவமனை’ என்று பெயர்ப் பலகை தொங்கியது. அதில் குறிப்பிட்டுள்ள பெயரைப் படித்தவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த நபர், தெரு முழுக்க நன்கு அறிமுகமானவர். முன்பு சில தெலுங்குப் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு, வீடு வாடகைக்கு விடுதல், ரியல் எஸ்டேட், மின்சார வேலைகள், குடிநீர் குழாய் சரி செய்வது என்று எல்லா வேலை களும் செய்து வந்தார். இதைச் செய்வதில் சிறுமை ஒன்றும் இல்லை. ஆனால், அவர், அக்குபஞ்சர் மருத்துவமனை தொடங்கி, டாக்டர் என்று பட்டம் போட்ட பெயர் பலகையை மாட்டியிருந்தார். சட்டப்படி பார்த்தால், மருத்துவமனை என்று எழுதி யிருக்கக் கூடாது ‘அக்குபஞ்சர் இல்லம்’ என்றுதான் இருந்திருக்க வேண்டும். டாக்டர் என்று சொல்லக் கூடாது, ஹீலர் (சிகிச்சை அளிப்பவர்) என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
புது பெயின்ட் வாசம் அடித்த அறையின் உள்ளே எட்டிப்பார்த்தேன். ‘‘சார், வாங்க உட்காருங்க. நம்ம ஆஸ்பிட்டல்தான்’’ என்று என்னிடம் பேசிவிட்டு, சிகிச்சைக்கு வந்த முதிய வயது பெண்மணியிடம், மருத்துவ ஆலோசனையை அள்ளி வழங்கினார்.

‘‘அம்மா, உங்களுக்கு சுகர் 300-க்கு மேல இருக்கு. கவலைப்படாதீங்க. இனி அலோபதி மருந்து, மாத்திரைகளை எடுத்துக்க வேணாம். அதைத் தூக்கி எறிங்க. இன்னையில இருந்து உங்களுக்குப் புடிச்ச இனிப்பை வயிறு நிறையச் சாப்பிடுங்க. பசி எடுத்தா சாப்பிட ணும். தாகம் எடுத்தா தண்ணி குடிக்கணும். தூக்கம் வந்தா தூங்கணும்’’ என்று யாரோ சொல்லிக்கொடுத்ததை மனப்பாடமாகச் சொல்லி முடித்தார்.
‘‘இப்படி ஒரு டாக்டரை நான் பார்த்ததே இல்ல. இப்பவே, லட்டு, ஜாங்கிரியை வாங்கிச் சாப்பிடுறேன்’’ என்று சிரித்தபடி சொல்லி விட்டு, தள்ளாடி சென்றார், அந்த முதிய பெண்மணி. அந்தக் காட்சியைப் பார்த்த எனக்குத்தான் பயமாக இருந்தது.
‘‘என்ன சார், என்னோட மருத்துவத்தைப் பார்த்தா ஆச்சர்யமாக இருக்கா. போன வாரம், சனி, ஞாயிறு ரெண்டு நாள்கள் அக்கு பஞ்சர் பயிற்சிக்குப் போனேன். சர்டிஃபிகேட் கொடுத்தாங்க. மருத்துவமனை ஆரம்பிச்சுட்டேன். இப்போயெல்லாம் வேற வேலை எதுவும் செய்ய நேரமில்ல. முழு நேரமும் இங்கேதான் இருக்கேன். மக்கள் நிறைய பேர் வர்றாங்க. பார்த்தீங்க இல்ல’’ என்றார் அந்த இரண்டு நாள் மருத்துவர்.
இரண்டு நாளில் பயிற்சி முடித்து மருத்துவம் பார்க்கலாமா? என்றேன். ‘‘வழக்கமா ஒரு வருஷ படிப்பு முடிக்கணும். கூடவே சில மாசம் பயிற்சி முடிச்சாதான் சிகிச்சை செய்யணும். ஆனா, பணம் கொடுத்தா ஒரு வருஷம் வேணாம். ரெண்டு நாள் போதும்...’’ என்று கண் சிமிட்டியபடி சொல்லிக்கொண்டே போனார். எனக்குத் தலைசுற்றியது. இது ஒரு சோறு பதம்தான்.

மருந்தில்லா மருத்துவம். செலவில்லா மருத்துவம்... என்ற கவர்ச்சிகரமான பேசும் போலி அக்குபஞ்சர் ஹீலர்கள்தான், இந்த மருத்துவ முறையை வளராமல் தடுப்பவர்கள்.
உண்மையில் அக்குபஞ்சர் என்பது நம் சித்த மருத்துவம்போல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் மருத்துவ முறை. நானே கூட, பரிசோதனைக்காக அனுபவம் வாய்ந்த அக்கு ஹீலர் நண்பர் மூலம் சிகிச்சையை எடுத்துப் பார்த்துள்ளேன். இதன் பலனும் சிறப்பாகத்தான் இருந்தது.
ஆனால், இந்தத் துறையில் இயங்குபவர்கள் இரண்டு நாள் பயிற்சியில் கை நிறையப் பணம் பெற்றுக்கொண்டு, ஹீலர்களை உருவாக்கி, தமிழ்நாடு முழுக்க உலவ விட்டு வருகிறார்கள். அனுபவம் இல்லாத இவர்களால், ஒட்டுமொத்த அக்கு ஹீலர்களும் போலியானவர்கள் என்ற பார்வை வெகுமக்கள் மனதில் பதிந்துள்ளது. அக்கு பஞ்சர் கவுன்சில் அமைத்து நெறிப்படுத்த வேண்டிய மாநில அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.
‘‘மண்ணுக்கும் மக்களுக்கும் நன்மை விளைவிக்கும் எல்லாவற்றையும் நாடு, இனம், மதம், மொழி கடந்து போற்றி வாழ்த்துவதுதான் இயற்கை நேசர்களின் அடிப்படைக் குணம்.’’
இதனால்தான், நினைவில் வாழும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், அக்குபஞ்சர் மருத்துவம் பற்றிப் பேசியபோது, அவரின் நலனில் அக்கறையுள்ளவர்கள், ‘‘நம்ம அய்யாவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’’ என்று சொல்லியதைக் கேட்டுள்ளேன்.
‘‘இயற்கை வேளாண்மையை முன்னிறுத்திய கோ.நம்மாழ்வார் ஏன் சித்த மருத்துவத்தை முன்னிறுத்தவில்லை?’’ என்று சித்த மருத்துவம் பற்றிப் பேசும் சுளுந்தீ நாவல் ஆசிரியரான முத்துநாகு சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். நம்மாழ்வாரே ஒரு சித்த மருத்துவர்தான். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளிமலை என்ற சித்த மருத்துவர் பற்றியும் சித்த மருத்துவத்தின் சிறப்புகள் பற்றியும் பலமுறை குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவை முன்னிறுத்தப்படாமல், அக்குபஞ்சர் சிகிச்சையை மட்டுமே நம்மாழ்வார் போற்றி, புகழ்ந்தார் என்று மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதனால்தான், மூத்த பத்திரிகையாளரான முத்துநாகு போன்றவர்கள்கூட கேள்வி எழுப்பும் நிலை உருவாகியுள்ளது.
‘‘நம்மாழ்வார் அய்யா அக்குபஞ்சர் மருத்துவத்தைத்தான் சிறந்தது என்றார். அதைத்தான் நாம் எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று நமக்கு வழிகாட்டினார்; கட்டளையிட்டார்’’ என்று சிலர் சொல்லி வருகின்றனர்.
நம்மாழ்வாரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், நிச்சயம் இதை நம்பவே மாட்டார்கள். கம்பத்திலிருந்து அக்கு ஹீலர் அ.உமர் பாரூக், வானகம் சென்று அக்குபஞ்சர் மருத்துவப் பயிற்சி வகுப்பு நடத்தினார். அதன் நன்மைகளை அனுபவபூர்வமாக உணர்ந்த நம்மாழ்வார், அப்போது அதன் சிறப்புகள் பற்றிப் பேசினார். ஒரு வேளை வாணியம் பாடியிலிருந்து வந்து அக்பர் கவுசர், காசினி (புளிச்சைக்கீரை போன்றது) கீரை சிறந்தது. யுனானி முறை செலவில்லாத மாற்று மருத்துவம் என்று சொல்லியிருந்தாலும், அதைப் பற்றியும் நம்மாழ்வார் பாராட்டிப் பேசியிருப்பார்.
இயற்கையை நேசிப்பவர்களுக்குச் சீனாவும் ஒன்றுதான், வாணியம்பாடியும் ஒன்றுதான். மண்ணுக்கும் மக்களுக்கும் நன்மை விளைவிக்கும் எல்லாவற்றையும் நாடு, இனம், மதம், மொழி கடந்து போற்றி வாழ்த்துவதுதான் இயற்கை நேசர்களின் அடிப்படைக் குணம்.
நிற்க, இயற்கை வாழ்வியலைப் போற்றும் அமைதியான ‘நல்வாழ்வு’ முகாம்களில் வெண்கலக் கடைக்குள் யானை புகுந்தது போல சில சம்பவங்கள் நடக்கும். அதைப் பற்றி அடுத்த இதழில் சொல்கிறேன்.