ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ, தோற்றத்தையோ குறிக்கும் வகையில் ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னத்தைப் புவிசார் குறியீடு (Geographical indication- GI) எனப்படும். இந்த குறியீடுகள் அப்பொருளின் தரத்தையோ, நன்மதிப்பையோ விளக்கும் சான்றாக இருக்கும்.
இந்நிலையில், புவிசார் குறியிடப்பட்ட முக்கிய வேளாண் பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் பிரதமரின் `உள்ளூர் பொருள்களுக்கு குரல் கொடுப்போம்' மற்றும் `சுயசார்பு இந்தியா' போன்ற திட்டங்களின் அடிப்படையில், உலகளாவிய புதிய சந்தைகளில் புவிசார் குறியீடு பொருள்களுக்கு ஏற்றுமதி எளிதாக்கப் பட்டுள்ளது. டார்ஜிலிங் தேயிலை மற்றும் பாசுமதி அரிசி ஆகிய இந்த இரண்டு வேளாண் பொருள்களும் உலக அளவில் சந்தைகளைக் கொண்டுள்ளன.
அதைத் தொடர்ந்து கறுப்பு உப்பு, நாகலாந்து மிளகாய், அஸ்ஸாம் காஜி நேமு, பெங்களூர் ரோஸ் ஆனியன், நாக்பூர் ஆரஞ்சு, ஷாஹி லிச்சி, பாலியா கோதுமை, மதுரை மல்லி, பர்தமான் மிஹிதானா மற்றும் சிதாபோக், தஹானு கோல்வாட் சப்போட்டா, ஜல்கான் வாழை, வாழைக்குளம் அன்னாசி மற்றும் மறையூர் வெல்லம் போன்ற பொருள்களுக்கு உலகளாவிய புதிய சந்தைகளில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ( அபீடா- APEDA) மூலம், சோதனை அடிப்படையிலான ஏற்றுமதி எளிதாக்கப்பட்டுள்ளது.

மேலும் புவிசார் குறியிடப்பட்ட வேளாண் பொருள்களுக்கென உலக அளவில் தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர். இந்நிலையில், மதுரை மல்லியை புவிசார் குறியிடப்பட்ட முக்கிய வேளாண் பொருள்களாக ஏற்றுமதி செய்ய தேர்ந்தெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.