ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

ஆட்டு எரு, வேப்பங்குச்சி, முட்டை ஓட்டுத்தூள்! அரியலூரிலிருந்து அமேசானில் விற்பனை!

ஆடுகளுடன் அருண்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆடுகளுடன் அருண்ராஜ்

முயற்சி

மேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இணையதள சந்தை நிறுவனங்கள் மூலமாக என்னென்னவோ பொருள்கள் விற்பனை ஆகிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சந்தை, மக்களிடையே பெரிய தாக்கத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கும் சூழலில்... ஆட்டுப்புழுக்கை, வேப்பங்குச்சி, முட்டை ஓட்டுத்தூள் போன்றவற்றையும்கூட இந்தச் சந்தையின் மூலமாக விற்க ஆரம்பித்து ஆச்சர்யப்படுத்துகிறார் அரியலூரைச் சேர்ந்த 21 வயது அருண்ராஜ்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கோடாலி கிராமத்தைச் சேர்ந்த அருண்ராஜை சந்தித்தோம். ஆட்டுப் புழுக்கையைத் தரம் பிரித்துக்கொண்டிருந்தவர் அதை முடித்துக்கொண்டு நம்மிடம் பேசத்தொடங்கினார். ‘‘விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட மிக எளிமை யான குடும்பம். அப்பா விவசாயக்கூலி வேலை பார்க்குறாங்க. எங்க குடும்பத்திலேயே நான்தான் முதல் பட்டதாரி. சின்ன வயசுல இருந்தே நல்லா படிப்பேன். அதோட விளையாட்டுலயும் இருந்ததால எங்க வீட்டுல என்னைப் படிக்க வெச்சாங்க.

ஆடுகளுடன் அருண்ராஜ்
ஆடுகளுடன் அருண்ராஜ்

இ-காமர்ஸ்

கல்லூரி முடிச்ச பிறகு, ‘ஆன்லைன்’ல ஏதாவது வேலை இருக்குமான்னு தேடிக்கிட்டு இருந்தேன். அப்பதான், ‘இ-காமர்ஸ்’ பத்தி தெரிஞ்சுகிட்டு, அதுக்கான படிப்புல சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். படிப்பை முடிச்ச பிறகு, எந்தப் பொருளை விற்பனை செய்யலாம்னு யோசிச்சேன்.

எங்ககிட்ட நாலஞ்சு ஆடுகள் இருந்துச்சு. அதனால முதல்ல ஆட்டுப்புழுக்கை விற்போம்னு ஆரம்பிச்சேன். ஆந்திராவு லிருந்து நாலரை கிலோவுக்கு முதல் ஆர்டர் வந்துச்சு. அதைச் சரியா அனுப்பி வெச்ச பிறகு, ஒரு நம்பிக்கை வந்துச்சு. இயற்கை சார்ந்த பொருள்களுக்கு இருக்க வரவேற்பு... மக்களுக்கு இயற்கையான பொருள்களைக் கொடுக்கணும்ங்கிற ஆர்வத்தைக் கொடுத்துச்சு. தொடர்ந்து, யானை நெருஞ்சி, முருங்கை பவுடர், வேப்பங்குச்சி, பிரண்டை எண்ணெய், முட்டை ஓட்டு பவுடர்னு விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில ஊருக்குள்ள ஆட்டுப்புழுக்கையை வெச்சிருக்கவங்க கிட்ட போய் வாங்கிட்டு வருவேன். அப்ப நிறைய பேர் கேலி பேசுனாங்க. ஏளனமாகப் பார்த்தாங்க. அதையெல்லாம் நான் கண்டுக்கல.

பேக்கிங்கில்
பேக்கிங்கில்


உழைப்புக்கேற்ற ஊதியம்

பக்கத்துல இருக்குற ஹோட்டல்கள், வீடுகள்ல சொல்லி வச்சு முட்டை ஓடுகளை வாங்கிட்டு வருவேன். இதுக்கான உழைப்பு அதிகமாகவே போட வேண்டியிருந்தது. ஆனா, அதுக்கான பலன் கிடைச்சது. அதனால சோர்வில்லாம உழைக்கிறேன்” என்றவர், பொருள்களை எப்படி எடுப்பது அல்லது உற்பத்தி செய்வது, எப்படி ‘பேக்கிங்’ செய்ய வேண்டும் என்பது குறித்துப் பேசினார்.

“முட்டை ஓடுகளை எடுத்துட்டு வந்து, நல்லா கொதிக்குற தண்ணியிலப் போட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு, எடுத்து அரைச்சு பொடியாக்குவேன். வேப்பங்குச்சியைப் பொறுத்தவரை என்கிட்ட பார்சலை வாங்கிட்டுப் போறவரு வரும்போதுதான் வெட்டி, சுத்தம் பண்ணி, பேக் பண்ணுவேன். அதனால 8 நாள்கள் ஆனாலும் வேப்பங்குச்சி காயாம அப்படியே இருக்கும். முருங்கை இலையை எடுத்துக் காய வெச்சு, அதோட மிளகு, சீரகம் சேர்த்து அரைப்பேன். யானை நெருஞ்சியை உலர்த்தி அரைச்சு எடுத்துக்குவேன். இதுல முக்கியமான விஷயம் எந்தப் பொருளையும் அரைக்க ‘மெஷின்’ எதையும் பயன்படுத்துறதில்ல. ஏன்னா... இயற்கையை இயற்கை யான முறையில மக்களுக்குக் கொடுக்க நினைக்கின்றேன்’’ என்றவர், தமிழகம் முழுக்கச் சில இளைஞர்களையும் இணைத்துக் கொண்டு செயல்படுவதைப் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

முட்டை ஓட்டுத்தூள், பிரண்டை, முருங்கை இலை, யானை நெருஞ்சினு முப்பதுக்கும் மேற்பட்ட பொருள்களை ஆன்லைன் மூலமா விற்பனை செய்றேன்.


இளைஞர்களை இணைக்கும் ‘வாட்ஸ் அப்’ குழு

‘‘தமிழ்நாட்டைத் தவிர கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மாதிரியான வெளி மாநிலங்கள்ல இருந்துதான் எனக்கு அதிகமான ‘ஆர்டர்’ வருது. என்னால கொடுக்க முடியல. இயற்கை மேல ஆர்வமான இளைஞர்கள் தமிழகம் முழுக்க இருக்காங்க. அவங்களை ஒருங்கிணைச்சு, ஒரு ‘வாட்ஸ் அப்’ குழு ஆரம்பிச்சிருக்கேன். எந்தெந்த மாவட்டத்தில என்னென்ன கிடைக்கிதுங்கற தகவலை அந்தக் குழுவுல பதிவு செய்வாங்க. அதோட, அவங்க கையிருப்புல இருக்குற பிரண்டை, ஆட்டுப்புழுக்கை, வேப்பங்குச்சி, முருங்கை இலை, முட்டை ஓட்டுத்தூள், யானை நெருஞ்சி, வேப்பங்குச்சி எத்தனை கிலோ இருக்குதுங்கிற தகவலைக் குழுவுல பதிவு செய்வாங்க.

எடுத்துக்காட்டாக, திருச்சியில இருக்க ஒரு நபர் ஆட்டுப்புழுக்கை 5 கிலோ ‘ஆர்டர்’ இருந்தும், பொருள் அவர்கிட்ட இல்லைன்னா என்கிட்ட இருக்க ஆட்டுப்புழுக்கையை அவருக்கு ‘கூரியர்’ மூலமா அனுப்பிடுவேன். அவர், அதை ‘ஆர்டர்’ கொடுத்தவங்களுக்கு அனுப்பி வைப்பார். அதுல கிடைக்குற வருமானத்தைப் பிரிச்சுக்குவோம்’’ என்றவர் தொடர்ந்தார்.

விற்பனை செய்யும் பொருள்கள்
விற்பனை செய்யும் பொருள்கள்

‘‘நான் கத்துகிட்ட ‘இ-காமெர்ஸ்’ தொழில் பற்றியும், இயற்கைப் பொருள்களை ‘ஆன்லைன்’ல எப்படி விற்பனை செய்றதுங் கறத பற்றியும் கிராமத்து இளைஞர்களுக்குச் சொல்லிக் கொடுத்துகிட்டு இருக்கிறேன். தமிழகம் முழுக்க 40 பேருக்கு மேல என்னோட குழுவுல இருக்காங்க. நான் அவங்களுக்கு இயற்கைப் பொருள்கள், அதன் பயன்கள், விற்பனை செய்யும் முறைகள் பற்றியும் நான் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன்’’ என்றவர் நிறைவாக,

“ஆட்டுப்புழுக்கையை நேர்ல வாங்குற வங்களுக்கு கிலோ 100 ரூபாய். அமேசான்ல 320 ரூபாய் விலையில கொடுக்குறேன். 10 வேப்பங்குச்சி இருக்கக் கட்டு 50 ரூபாய், முட்டை ஓட்டுத்தூள், பிரண்டை, முருங்கை இலை, யானை நெருஞ்சினு முப்பதுக்கும் மேற்பட்ட பொருள்களை ஆன்லைன் மூலமா விற்பனை செய்றேன். இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன். செலவெல்லாம் போக மாசம் 5,000 ரூபாய் லாபம் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. இந்த லாபம் குறைவுதான். இனி போகப்போகத்தான் லாபம் அதிகமாகும்’’ என்றார் நம்பிக்கையுடன்.

தொடர்புக்கு, அருண்ராஜ்,

செல்போன்: 93845 69918.