இனி இறைச்சிக்குக் கால்நடைகள் தேவையில்லை! - ஆய்வகத்தில் கிடைக்கும் செயற்கை இறைச்சி!

கால்நடை
ஆய்வகங்களில் உருவாக்கும் செயற்கை இறைச்சி விற்பனைக்கு அனுமதியளித்துள்ளது சிங்கப்பூர் அரசு. இது உலகம் முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
‘ஈட் ஜஸ்ட்’ (Eat Just) எனும் கலிஃபோர்னிய நிறுவனம் செயற்கைக் கோழி இறைச்சி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த வகை இறைச்சியானது கோழியின் ‘செல்’களைப் பிரித்தெடுத்து, அவற்றுடன் சில சத்துப்பொருள்களைக் கலந்து ஆய்வகத்தில் உருவாக்கப்படுகிறது.
‘சிங்கப்பூரில்தானே விற்பனைக்கு வருகிறது என நாம் கடந்து சென்றுவிட முடியாது. காலப்போக்கில் இந்தியாவிலும் காலூன்றலாம். அப்படி நடக்கும்பட்சத்தில் இறைச்சிகளுக்கான கால்நடைகளின் தேவை குறைய வாய்ப்புள்ளது’ என்பதுதான் விவசாயிகளின் அச்சம்.

இதுதொடர்பாகத் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வத்திடம் பேசினோம், “இறைச்சி என்பது இயற்கை, சூழலியல், உயிர் சார்ந்த விஷயம். கோழியின் செல்லை மட்டும் எடுத்து ஆய்வுக்கூடத்தில் வளர்த்து அதைக் கோழி இறைச்சி என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? கோழியிலிருந்து வந்தால்தானே அது கோழி இறைச்சி? ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்படுவது இறைச்சியைப் போல இருக்குமே ஒழிய, இறைச்சியாக இருக்கவே முடியாது. தவிர இது முழுக்க முழுக்க வணிகம் சார்ந்த விஷயம். உலகம் முழுவதும் மாறிவரும் உணவு உற்பத்தி முறையினால்தான் காடுகள் அழிப்பு ஏற்பட்டிருக்கிறது. கரியமில வாயு அதிகமாகியிருக்கிறது. ரசாயன உரங்கள் அதிகரித்திருக்கின்றன. உணவு, தொழிற்சாலைகளின் கையில் சிக்கியிருக்கிறது. அதிலிருந்து மீள்வதற்கு இயற்கை சார்ந்து உணவு உற்பத்தி முறையை மாற்றி அமைப்பதுதான் தீர்வு. அதைவிடுத்து, செயற்கை இறைச்சியை நாடுவோமானால் அது வேறு மாதிரியான விளைவுகளை உருவாக்கும்” என்றார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள இறைச்சி அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியர் ஒருவரிடம் பேசினோம். “1908-ம் ஆண்டிலிருந்தே செயற்கை இறைச்சி தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘இன்னும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இறைச்சி சந்தையில் செயற்கை இறைச்சிதான் ஆதிக்கம் செலுத்தும்.’ இந்த செயற்கை வகை இறைச்சி `டிசைனர் மீட்’ (Designer Meat) என்றும் அழைக்கப்படுகிறது.

உயிர்களைக் கொல்லாமல் இறைச்சி உண்ண விரும்புகிறவர்கள், தங்களுக்குத் தேவையான சத்துகள் சரிவிகிதத்தில் உள்ள இறைச்சிகளை மட்டுமே உண்ண விரும்புகிறவர்களுக்கு இந்தச் செயற்கை இறைச்சி மாற்றாக அமையும். ஆனால், இதைத் தயாரிப்பதற்கான முக்கியமான மூலக்கூறான `Bovine serum albumin’ மிகவும் விலை உயர்ந்தது. எனவே, இதன் விலை அதிகமாக இருக்கும். உற்பத்தி பெருகும்போது விலை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேவேளையில் இயற்கைக்கு மாறான விஷயங்களைச் செய்யும்போது ஏதோவொரு பக்க விளைவு ஏற்படும் என்பதுதான் இயற்கையின் நீதி. இதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது.
இந்தியா போன்ற விவசாயப் பின்புலம் கொண்ட நாடுகளில் செயற்கை இறைச்சி காலூன்ற வெகுகாலம் பிடிக்கலாம். ஏனெனில், இந்தியர்களின் மனநிலை முற்றிலும் வேறானது. இதை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு, குடிநீர் பணத்துக்கு விற்கப்படும் என நாம் எதிர்பார்த்திருப்போமா? அந்த வகையில் ஒருவேளை எதிர்காலத்தில் செயற்கை இறைச்சியும் நமக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளது” என்றார்.
இதுகுறித்துச் சூழலியல் ஆர்வலர் ரவீந்திரன் நடராஜனிடம் பேசினோம், “ஒரு விஷயத்தை மக்கள் மத்தியில் திணிக்க என்ன வேண்டுமானால் காரணம் சொல்வார்கள். இதன் சூட்சமத்தை எளிமையாக விளங்கிக்கொள்ளக் கள் விவகாரத்தை எடுத்துக்கொள்ளலாம். முன்பு கள் என்பது உடலுக்கு நன்மை தரும் பானமாக இருந்தது. ஏதேதோ காரணம் சொல்லி அதைத் தடை செய்துவிட்டு, இப்போது உடலுக்குக் கேடு விளைவிக்கும் மதுபானங்களை அரசே தயாரித்து விற்கிறது. அதே நிலைதான் இறைச்சி விவகாரத்திலும் நடக்கும். இது ஒருபோதும் இந்தியப் பொருளாதாரத்துக்கு ஒத்துவராது. இங்கு நடுத்தர வர்க்கத்துக்குக் கீழே உள்ளவர்கள் கால்நடைகளையே நம்பியிருக்கிறார்கள். இங்கு செயற்கை இறைச்சி அனுமதிக்கப்பட்டால் கொஞ்சம் கொஞ்சமாக மேய்ச்சலுக்குத் தடை விதிப்பார்கள். கால்நடைகள் எண்ணிக்கையைக் குறைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வார்கள். உணவுக்காகக் குறிப்பிட்ட நிறுவனத்தைச் சார்ந்து இருக்கும் சூழலை உருவாக்குவார்கள். எனவே அதனை எக்காலத்திலும் இங்கு அனுமதிக்கக் கூடாது” என்றார் உறுதியுடன்.