
விதை
திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தலில் இயங்கி வரும் சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல்–1 என்ற கேழ்வரகு ரகத்தை அறிமுகம் செய்துள்ளது. இதைப் பயிர் செய்து விவசாயிகளிடம் பரவலாக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது, புதுச்சேரியில் செயல்படும் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம்.
இதுகுறித்து இந்நிலையத்தின் உழவியல் நிபுணர் முனைவர் எஸ்.ரவி , ‘‘விவசாயிகளுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்களை வழங்குவதுதான் எங்களுடைய முதன்மையான பணி. நெல் மற்றும் மணிலா ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறோம். இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று 2023-ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்திருக்கிறது ஐ.நா சபை. அதனடிப்படையில் இந்திய அளவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் தலைமையில் குழுவை அமைத்து, அனைத்து மாநிலங்களிலும் சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாகத்தான் புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையமும் சிறுதானியங்களைப் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்தால் கண்டுபிடிக்கப்பட்ட அத்தியந்தல்-1 கேழ்வரகு ரகத்தை, தமிழக வேளாண் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்தக் கேழ்வரகைப் பயிர் செய்யும் விவசாயிகள், குறைந்த செலவில் அதிக மகசூல் எடுக்க முடியும். இதன் வயது 110 நாள்கள். நன்கு உயரமாக வளர்ந்து, 92 சதவிகிதம் பூக்கும் தன்மை கொண்டது. மணிக்கொத்துகள் என்று சொல்லக் கூடிய கதிர்கள் ஒவ்வொரு கிளையிலும் 5 முதல் 6 கதிர்கள் வரை இருக்கும். தண்ணீர் அதிகமாகத் தேவைப்படாத, வறட்சியான பகுதிகளில்கூட அதிக மகசூலைத் தருவதுதான் இதன் சிறப்பம்சம்.

புதுச்சேரியைப் பொறுத்தவரை 100 சதவிகிதம், நிலத்தடி நீரை உறிஞ்சிதான் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. நவரை பருவத்தின் கடைசியிலும், சொர்ணவாரி ஆரம்பத்திலும் தண்ணீர் குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது. அதன் காரணமாக இரண்டாம் பருவத்தின் முடிவிலும், மூன்றாம் பருவத்தின் ஆரம்பத்திலும் நீரில்லாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதனால் அத்தியந்தல் 1 கேழ்வரகையும், அத்தியந்தல் 1 தினையையும் புதுச்சேரி மற்றும் இதையொட்டி இருக்கும் தமிழக விவசாயிகளிடம் பரவலாக்கம் செய்ய முடிவெடுத்தோம். இந்த இரண்டையும் எங்களுடைய வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் பயிரிட்டோம். சிறப்பான விளைச்சல் கிடைத்துள்ளது.


எங்களுடைய வேளாண் அறிவியல் நிலையத்தில் ஏ.டி.எல்-1 ரக (அத்தியந்தல்) கேழ்வரகு மற்றும் ஏ.டி.எல்-1 ரகத் தினை இரண்டையும் பயிர் செய்து, விதைகளை உற்பத்தி செய்து வைத்திருக்கிறோம். அவற்றை முதல்நிலை செயல் விளக்கமாக விவசாயி களுக்குக் கொடுக்க இருக்கிறோம். ஒரு ஏக்கருக்கு 4 கிலோ விதைகள் மட்டும் போது மானது. இதன்மூலம் குறைந்த செலவில் நிறைந்த லாபத்தை ஈட்ட முடியும். விதையை விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுக்க இருக்கிறோம். அதேபோல புதுச்சேரி வேளாண்துறையும் இந்த விதைகளை அதிக அளவில் விவசாயிகளுக்குக் கொடுக்க இருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.
தொடர்புக்கு, முனைவர் ரவி, செல்போன்: 94432 93376, 94425 26994.