சென்னை நந்தனத்தில் நடைப்பெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் வேளாண்மை ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் பூமி ஞானசூரியனின் `பூமியை யோசி மரங்களை நேசி' என்ற புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த விழாவுக்கு நபார்டு வங்கியின் முன்னாள் தலைமைப் பொது மேலாளர் முனைவர் நாகூர் அலி ஜின்னா தலைமை தாங்கினார். இந்த விழாவில் தஞ்சவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம.ராஜேந்திரன், இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பிரபாகரன், எழுத்தாளார் பாரதி பாலன், பபாசி தலைவர் வயிரவன் ஆகியோரின் முன்னிலையில், அகில இந்திய வானொலியின் மேனாள் நிலைய இயக்குநர் விஜய திருவேங்கடம் புத்தகத்தை வெளியிட்டார். புத்தகத்தின் முதல் பிரதியை திரைப்பட இயக்குநர் அகத்தியன் பெற்றுக்கொண்டார்.
இந்தப் புத்தகத்தைப் பற்றி இயக்குநர் அகத்தியன், ``இந்தப் புத்தகம் ஒரு மரங்களின் கலைக்களஞ்சியம். இந்தப் புத்தகத்தில் நூலாசிரியர் 108 மரங்களைப் பற்றிக் கூறியுள்ளார். அவை அனைத்துமே 108 சிறுகதைகள் போல் உள்ளன. இந்தப் புத்தகத்தைப் படித்தால், நம்மை பூமியைப் பற்றி யோசிக்கவும், மரங்களை நேசிக்கவும் வைத்துவிடும். இந்தப் புத்தகம் என்றும் நம் மனதைவிட்டு நீங்காது" என்று கூறினார்.
`பூமியை யோசி மரங்களை நேசி' என்னும் இந்தப் புத்தகத்தில், நூலாசிரியர் ஞானசூரியன் 108 மரங்கள் பற்றியும், அதன் அறிவியல் செய்திகள், மருத்துவப் பயன்கள், சரித்திர சம்பவங்கள் பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.
இந்தப் புத்தகத்தைப் பற்றி பூமி ஞானசூரியன் கூறியதாவது, ``தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக பருவநிலை மாற்றம் இருந்து வருகிறது. இதற்கு கார்பன் டை ஆக்சைடு அதிகம் வெளியாவதே முக்கிய காரணம் ஆகும். இந்த கார்பன் டை ஆக்சைடை சுலபமாக மாற்றக்கூடிய ஒரே வழி மரங்கள் தான். ஒரு காலத்தில் நமக்கு உடை, உணவு, உறைவிடம் என எல்லாமுமாக மரங்கள் இருந்தன.
என்னுடைய முதல் புத்தகமான 'தினம் தினம் வனம் செய்வோம்' என்ற புத்தகத்தில்கூட 108 மரங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 'பூமியை யோசி மரங்களை நேசி' என்னும் இந்தப் புத்தகத்திலும் 108 மரங்களைப் பற்றி எழுதியுள்ளேன். அதில் 64 மரங்கள் ஏறத்தாழ இந்திய மரங்கள். மீதி 44 மரங்கள் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அங்கே நான் பார்த்த மரங்கள் ஆகும். இது நமக்கு வெளிநாடுகளில் வளரும் மரங்களை பற்றிய விழிப்புணர்வைக் கொடுக்கும்.
இந்தப் புத்தகத்தில் உள்ள தகவல்கள் மற்றும் செய்திகள் இளைஞர்களை சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அரசாங்கம்தான் பருவநிலை மாற்றம், மாசுபாடுகள் பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்காமல், நாமே முயற்சி எடுக்கலாம் என நினைக்கும் அனைவருக்கும் இந்தப் புத்தகம் ஒரு கையேடாக இருக்கும்.
இந்தப் புத்தகம் அனைத்துக் குடும்பகளிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய புத்தகம். எனக்கு பணவசதி இருந்தால், இந்தப் புத்தகத்தை மக்களுக்கு நிச்சயம் இலவசமாகக் கொடுப்பேன். தற்போது என் நண்பர்களிடம் நன்கொடை பெற்று இந்தப் புத்தகத்தின் விலையை குறைக்கும் யோசனையில் உள்ளேன். இன்னும் நிறைய மரங்கள் உள்ளன. தொடர்ந்து அவற்றைப் பற்றியும், இயற்கை வளங்களை பாதுகாப்பது பற்றியும் எழுதவுள்ளேன்" என்று பேசினார்.