மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

75 சென்ட்.... ரூ.1,70,000... ஏற்றம் தரும் ஏத்தன் வாழை! மதிப்புக்கூட்டுதலில் கூடுதல் லாபம்!

வாழைத்தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
வாழைத்தோட்டம்

மகசூல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் வாழை ரகங்களில், ஏத்தன் வாழைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள் விவசாயிகள். இம்மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இந்த ரகம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில்தான் காட்டுப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்ரமணியம் செல்வம், இயற்கை முறையில் ஏத்தன் வாழை சாகுபடி செய்து, இதன் காய்களைப் பதப்படுத்தி, பவுடராக மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறார்.

10.11.2017 தேதியிட்ட இதழில் வெளியான ‘அள்ளிக் கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை!’ என்ற கட்டுரை மூலம், இவர் ஏற்கெனவே பசுமை விகடன் வாசகர்களுக்கு அறிமுகமானவர். தற்போது இவர் மேற்கொண்டு வரும் ஏத்தன் வாழை சாகுபடி குறித்த அனுபவத்தை அறிந்துகொள்ள மீண்டும் இவரைச் சந்திக்கச் சென்றோம்.

வாழைத்தார்களுடன் சுப்ரமணியம் செல்வம்
வாழைத்தார்களுடன் சுப்ரமணியம் செல்வம்

கன்னியாகுமரி மாவட்டம், அழகிய பாண்டியபுரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது காட்டுப்புதூர். இங்குதான் சுப்ர மணியம் செல்வத்தின் ‘அகதா இயற்கை வேளான் பண்ணை’ அமைந்துள்ளது. மழை, தூறல் போட்டுக்கொண்டிருந்த ஒரு காலை வேளையில் இப்பண்ணைக்குச் சென்றோம். வாழைத்தோட்டத்தில் நடைபோட்டுக் கொண்டிருந்த சுப்ரமணியம் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று, ஏத்தன் வாழைப் பழங்கள் சாப்பிடக் கொடுத்து உபரிசத்தார்.

உற்சாகமாகப் பேசத் தொடங்கிய சுப்ரமணியம். ‘‘நாங்க விவசாயக் குடும்பம். பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சிட்டு, பக்கத்து ஊர்ல உள்ள அரிசிக்கடைக்கு வேலைக்குப் போயிகிட்டு இருந்தேன். நேரம் கிடைக்கும்போது, என் அப்பாவுக்கு உதவியா விவசாய வேலைகளைப் பார்த்துக் கொடுத்துக்கிட்டு இருந்தேன். நாளடைவுல எனக்கு விவசாயத்துல ஈடுபாடு அதிகமானதும், முழுநேரமா விவசாயத்துல இறங்கிட்டேன். ரசாயன முறையில நெல், வாழை, மரச்சீனிக் கிழங்கு உட்பட இன்னும் சில பயிர்கள் சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தேன்.

வாழைத்தோட்டம்
வாழைத்தோட்டம்


இந்த நிலையில என்னோட உறவினர் செல்வம், ஜீரோபட்ஜெட் முறையில ஏத்தன் ரக வாழை சாகுபடி செய்றது என் கவனத்துக்கு வந்துச்சு. ஆனா, ஆரம்பத்துல அதை நான் பெருசா கண்டுக்கவே இல்லை. அவரை நான் நேர்ல சந்திக்கப் போயிருந்தப்ப, மாட்டுச் சாணத்தையும், மாட்டுச்சிறுநீரையும் கலந்து கரைசல் தயார் பண்ணி, வாழைக்குக் கொடுத்துக்கிட்டு இருந்தார். இது என்னனு கேட்டேன். ‘இதுதான் ஜீவாமிர்த கரைசல். இதைக் கொடுத்தா பயிர்கள் நல்லா ஊட்டமா வளரும். ரசாயன உரங்கள் போடாம, இயற்கை முறையில விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன்’னு சொன்னார். ரசாயன உரமே போடாம எப்படி விளைச்சல் கிடைக்கும்னு எனக்குள்ள ஒரு கேள்வி எழுந்துச்சு. ஆனா, அதைப் பத்தி அவர்கிட்ட கேட்டுக்கலை.

அதுக்குப் பிறகு சில நாள்கள் கழிச்சு, குமரி எஃப்.எம் ரேடியோவுல ஒலிபரப்பான ‘உழவர் உலகம்’ நிகழ்ச்சியில குமரி மாவட்ட நஞ்சில்லா இயற்கை வேளாண்மை சங்கத் தலைவர் தாஸ், இயற்கை விவசாயத்தைப் பத்தி பேசினார். அவர் சொன்ன விஷயங் களைக் கேட்டதும். இயற்கை விவசாயத்து மேல எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுச்சு.

அவரோட வீட்டுக்குப் போயி நேர்ல சந்திச்சுப் பேசினேன். இயற்கை விவசாயத் தோட மகத்துவத்தைப் பத்தி விளக்கமா எடுத்து சொன்னதோடு மட்டுமல்லாம... தன்னோட தோட்டத்துல சாகுபடி செஞ்சிருந்த வாழை, தென்னை, வெண்டை எல்லாத்தையும் என்கிட்ட காட்டினார். அந்தப் பயிர்கள் எல்லாமே நல்லா திடகாத்திரமா இருந்ததைப் பார்த்து நான் ஆச்சர்யப்பட்டுப் போனேன். இயற்கை விவசாயம் மேல மிகப் பெரிய நம்பிக்கை வந்துச்சு. உடனடியா இயற்கை விவசாயத்துல இறங்கணும்னு முடிவெடுத்தேன்.

இயற்கை இடுபொருள்
இயற்கை இடுபொருள்

முதல்கட்டமா, பலதானிய விதைப்பு செஞ்சு, மண்ணை வளப்படுத்தி, இயற்கை முறையில 50 சென்ட்ல ஆனைக்கொம்பன் வெண்டையும், ஒரு ஏக்கர்ல ஏத்தன் ரக வாழையும் பயிர் பண்ணினேன். முதல் தடவை குறைவான மகசூல்தான் கிடைச்சது. ஆனா, நான் அதைப் பத்தி பெருசா கவலைப்படலை. அடுத்தடுத்த சாகுபடியில மகசூல் படிப்படியா அதிகரிச்சது. ‘இயற்கை விவசாயம் செய்ற விவசாயிகிட்ட, குறைந்தபட்சம் ஒரு நாட்டு மாடாவது இருக்கணும்’னு நம்மாழ்வார் சொல்வாரு.

அதனால நாட்டு மாடு வாங்குறதுக்கான முயற்சியில இறங்கினேன். பல ஊர்களுக்கும் தேடிப்போனேன். நான் எதிர்பார்த்த விலைக்கு மாடு கிடைக்கலை. அதிக விலை சொன்னாங்க. அது எனக்குக் கட்டுப்படியாகலை. அந்த நிலையிலதான், நாகர்கோவில்ல அடிமாடாக பர்கூர்ல இருந்து வந்த மாடுகள்ல ஒரு பசுமாட்டைத் தேர்வு செஞ்சு வாங்கினேன். அதுல இருந்து கிடைக்கிற சாணம், சிறுநீரைப் பயன்படுத்தி இயற்கை இடுபொருள்கள் தயார் பண்ணி, என்னோட பயிர்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சேன்.

வாழைப்பழ மாவு
வாழைப்பழ மாவு


குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்திலுள்ள வேளாண் பல்கலைக் கழகத்துல நடந்த இயற்கை விவசாயப் பயிற்சியில ஆத்மா திட்டம் மூலம் கலந்துகிட்டேன். இயற்கை விவசாயம் தொடர்பான தேடல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே இருந்துச்சு. எங்கெல்லாம் இது தொடர்பான கருத்தரங்குகள், பயிற்சிகள் நடக்குதோ அங்கெல்லாம் போயி கலந்துகிட்டேன்.

கடந்த 7 வருஷமா இயற்கை முறையில ஏத்தன் வாழை, வெண்டை, மரச்சீனிக்கிழங்கு உட்பட இன்னும் சில பயிர்கள் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். எனக்கு மொத்தம் 2 ஏக்கர் நிலம் இருக்கு. இப்ப 75 சென்ட்ல சாகுபடி செஞ்ச ஏத்தன் ரக வாழை அறுவடை நிலையில இருக்கு. மீதி பரப்புல மரச்சீனிக்கிழங்கும், தீவனச்சோளமும் பயிர் பண்ணியிருக்கேன்’’ என்று சொன்னவர், ஏத்தன் வாழை சாகுபடி குறித்த அனுபவத்தை விவரிக்கத் தொடங்கினார்.

‘‘குலையா விற்பனை செய்றதைவிட, அதுல இருந்து காய்களைத் தனியா பிரிச்செடுத்து, அதைப் பதப்படுத்தி, பவுடரா மதிப்புக்கூட்டி விற்பனை செஞ்சா கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கும்னு தோணுச்சு.’’


“கன்னியாகுமரி மாவட்டத்துல பெரும்பாலான பகுதிகள்ல ஏத்தன் வாழை சாகுபடி செய்யப்படுது. இதைச் சாகுபடி செய்ற விவசாயிங்க பெரும்பாலும் ஒரே பட்டத்துலதான் நடவு செய்வாங்க. அப்போ அறுவடையும் ஒரே சமயத்துலதான் நடக்கும். அறுவடை சீஸன் தொடங்குறப்ப, ஏத்தன் ரக வாழை ஒரு கிலோவுக்கு 40 ரூபாய்க்கு மேல விலை கிடைக்கும். ஆனா, அடுத்தடுத்த நாள்கள்ல, விலை பாதியாக் குறைஞ்சுடும். அறுவடை செஞ்ச குலைகளை என்ன செய்றதுனு தெரியாம, கேரள வியாபாரிங்க கிட்ட, அவங்க கேட்ட விலைக்கே விவசாயிங்க கொடுத்துடுவாங்க. நானும்கூட அப்படித்தான் கொடுத்துக்கிட்டு இருந்தேன். இதனால எனக்கு மன உளைச்சல் ஏற்பட ஆரம்பிச்சது. இதுக்கு என்னதான் மாற்று வழினு யோசிக்க ஆரம்பிச்சேன்.

அப்பதான் எனக்கு ஒரு யோசனை தோணுச்சு. குலையா விற்பனை செய்றதைவிட, அதுல இருந்து காய்களைத் தனியா பிரிச்செடுத்து, அதைப் பதப்படுத்தி, பவுடரா மதிப்புக்கூட்டி விற்பனை செஞ்சா கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கும்னு தோணுச்சு. என்னோட மகன் நல்ல பெருமாள்கிட்ட என்னோட யோசனையைச் சொன்னேன். இது சம்பந்தமா இணைய தளங்கள்ல தேடிப் பார்த்துட்டு, ‘வாழைப் பவுடருக்கு நல்ல வரவேற்பும் தேவையும் இருக்குப்பா. தைரியமா செய்ங்க’னு சொன்னான்.

வழைப் பவுடருடன்
வழைப் பவுடருடன்

இதுக்கான தொழில்நுட்பத்தைக் கத்துக் கிட்டு, ஏத்தன் வாழை பவுடர் தயார் செஞ்சு முதல்கட்டமா, எங்க பகுதியில உள்ள மக்கள் கிட்ட சோதனை முயற்சியா கொடுத்துப் பார்த்தேன். இதைப் பால்ல கலந்து சாப்பிட்டுப் பார்த்துட்டு ரொம்ப சுவையாவும் வாசனை யாவும் இருக்குனு எல்லாரும் சொன்னாங்க. குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் இதை விரும்புறாங்க. இதை ஊட்டச்சத்துப் பானமா பயன்படுத்தலாம். ரொம்பவே சத்தானது. உணவுப் பாதுகாப்புத்துறையில முறையான சான்று பெற்று கடந்த 4 வருஷமா ஏத்தன் வாழை பவுடர் தயார் செஞ்சு, விற்பனை செஞ்சுக்கிட்டு இருக்கேன்.

கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாம வெளி மாவட்டங்கள்லயும்கூட எனக்கு நிறைய வாடிக்கையாளருங்க இருக்காங்க. கூரியர் மூலம் அனுப்பிக்கிட்டு இருக்கேன். என்னோட மகன், ஆன்லைன் மூலமாவும் இதை விற்பனை செஞ்சு கொடுத்துக்கிட்டு இருக்கான். இதை விற்பனை செய்றதுல, எனக்கு இதுவரைக்கும் எந்த ஒரு சிரமமும் ஏற்பட்டதில்லை’’ என்று சொன்னவர், மகசூல் மற்றும் வருமானம் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அட்டவணை
அட்டவணை

வருமானம்

75 சென்ட் பரப்புல மொத்தம் 600 வாழைகள சாகுபடி செய்றது வழக்கம். இதுல 570 குலைகள் நல்ல தரமா தேறி வரும். ஒரு குலை 3 கிலோவுல இருந்து அதிகபட்சம் 7 கிலோ வரை எடை இருக்கும். 570 குலைகள்ல இருந்தும் காய்களைப் பிரிச்செடுத்து, அதை இயற்கை முறையில பதப்படுத்தி, பவுடரா மதிப்புக்கூட்டினா, 485 கிலோ பவுடர் கிடைக்கும். ஒரு கிலோ 500 ரூபாய்னு விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன்.

அந்த வகையில 485 கிலோ பவுடர் விற்பனை மூலமா 2,42,500 ரூபாய் வருமானமாக் கிடைக்கும். வாழை சாகுபடி செய்றதுக்கான செலவு, பவுடரா மதிப்புக் கூட்டுறதுக்கான செலவு எல்லாம் போக 1,76,200 ரூபாய் லாபமா கிடைக்கும். இது எனக்கு நிறைவான லாபம்” என்று சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, சுப்பிரமணியம்,

செல்போன்: 93456 72375

சிப்ஸ்
சிப்ஸ்

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

75 சென்ட் பரப்பில் ஏத்தன் ரக வாழை சாகுபடி செய்ய சுப்ரமணியம் செல்வம் சொல்லும் செயல்முறைகள்... இங்கு பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

தேர்வு செய்த நிலத்தை 15 நாள் இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை 9 அடி, கன்றுக்குக் கன்று 6 அடி இடைவெளியில்... 1 அடி சுற்றளவு, 1 அடி ஆழம் கொண்ட குழி எடுக்க வேண்டும். குழிகளை 5 நாள்கள் வரை ஆற விட வேண்டும். ஒரு டன் எருவுடன் 5 கிலோ சிப்பிச் சுண்ணாம்புத் தூள் கலந்து கலவையாக்கிக்கொள்ள வேண்டும். இதில், தலா 2 கிலோ எடுத்து குழியில் அடியுரமாக இட வேண்டும். ஜீவாமிர்தத்தில் நனைத்த விதைக் கிழங்கை, நடவு செய்து மண் அணைக்க வேண்டும்.

வாழை
வாழை

விதைநேர்த்தி

200 லிட்டர் ஜீவாமிர்தத்தில் 2 கிலோ சூடோமோனஸ் கலந்துகொள்ள வேண்டும். அக்கரைசலிலில் விதைக் கிழங்குகளை நனைத்து எடுத்து, 15 - 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி, அதன் பிறகு நடவு செய்ய வேண்டும். விதைக்கிழங்குகள் ஒன்றரை முதல் 2 கிலோ எடை உடையதாக இருக்க வேண்டும். விதைக்கிழங்குக்குள் காற்றுப் புகாமல் தடுக்க, இறுக்கமாக மண் அணைக்க வேண்டும். அதே நாளில் தலா 4 கிலோ தக்கைப்பூண்டு, உளுந்து விதைப்புச் செய்து, 40 - 45 நாள்களில் பூ பூக்கும் தருணத்தில் மடக்கி உழுது, வாழையின் தூர்ப்பகுதியில் வைத்து மண் அணைத்து விட வேண்டும்.

மாடுகளுடன்
மாடுகளுடன்

20 நாள்களுக்கு ஒருமுறை ஒரு வாழைக்கு 1 லிட்டர் வீதம் ஜீவாமிர்தம் அல்லது அமுதக் கரைசலை தூர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். பாசன நீருடன் கலந்து விடுவதைவிடத் தூர்ப்பகுதியில் ஊற்றுவது நல்ல பலனைத் தருகிறது. 45 நாள்களுக்கு ஒருமுறை களை எடுக்க வேண்டும். இயற்கை முறையில் சாகுபடி செய்வதால்... தூர்வெடிப்பு, இலைப்புள்ளி, வேர் அழுகல், தண்டுத்துளைப்பான் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டாவது மாதத்திலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி, இஞ்சி-பூண்டு-மிளகாய்க் கரைசல் அல்லது மூலிகைக்கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும். 8-ம் மாதம் வாழையின் தூர்ப்பகுதியில்... 2 கிலோ எருவுடன் 100 கிராம் வேம்பம் பிண்ணாக்கு, 100 கிராம் கடலைப் பிண்ணாக்கு கலந்து அடியுரமாக இட வேண்டும். குலைகள் முதிர்ச்சி அடைந்து 11-ம் மாதம் அறுடைக்கு வரத் தொடங்கும்.

மதிப்புக் கூட்டிய பொருள்கள்
மதிப்புக் கூட்டிய பொருள்கள்

மாவாக மதிப்புக்கூட்டுவது எப்படி?

குலைகளில் ஓரிரு காய்கள் மஞ்சள் நிறம் ஏறி வெடித்த நிலையில் காணப்படும். அந்தப் நிலையில் குலைகளை வெட்டி காய்களைத் தனித் தனியாகப் பிரித்துத் தண்ணீரில் சுத்தமாகக் கழுவி, கத்தியால் தோலை நீக்க வேண்டும். அதன் பிறகு காய்களைச் சிப்ஸ்களாகச் சீவ வேண்டும். அவற்றை பிளாஸ்டிக் தாளில் பரப்பி மூன்று நாள்கள் இளம் வெயிலில் காய வைக்க வேண்டும். மூன்றாவது நாளில் நன்றாகக் காய்ந்துவிடும்.

பின்னர், 15 கிலோ கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பைகளில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம். பைகளில் சேகரிக்கும்போது பிளாஸ்டிக் தாளின் அடிப்பகுதியில் 50 கிராம் வசம்பு, 10 மிளகாய் வத்தலை பரப்பி அதன் மீது 5 கிலோ சிப்ஸை நிரப்ப வேண்டும். அதன் மீது 50 கிராம் வசம்பு, 10 மிளகாய் வத்தலைப் பரப்பி 5 கிலோ சிப்ஸை நிரப்ப வேண்டும். இவ்வாறு ஒவ்வோர் அடுக்கிலும் வசம்பு, மிளகாய் வத்தலை பரப்ப வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பூச்சித்தாக்குதல் ஏற்படாமல் சிப்ஸ்கள் நீண்டநாள்களுக்குப் பாதுகாக்கப்படும். 6 முதல் 8 மாதங்கள் வரை தரம் குறையாமல் இருப்பு வைக்கலாம். தேவையைப் பொறுத்து சிப்ஸை அரவை மில்லில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளலாம். அரைத்த மாவை சல்லடையால் சலித்துச் சுத்தப்படுத்தி, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்குச் செய்யலாம். மாவாக அரைப்பதற்கு முன், 2 முதல் 3 மணி நேரம் இளம் வெயிலில் உலர வைப்பது அவசியம். அதன் பிறகுதான் அரைக்க வேண்டும். இதற்கெனத் தனி அரவை மெஷின்கள் உள்ளன. சொந்தமாக அரவை மெஷின் வாங்கி வீட்டிலேயேகூட மாவாக்கலாம்.