மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

பிப்ரவரி- மார்ச் மாதங்களில்... வாழைக்கு என்ன விலை கிடைக்கும்?

வாழை
பிரீமியம் ஸ்டோரி
News
வாழை

அறிவிப்பு

விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்ய வேண்டிய பயிர் மற்றும் ஏற்கெனவே பயிர் செய்யப்பட்டு அறுவடைக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் விளைபொருள் களுக்கான விற்பனை வாய்ப்புகள் குறித்தும் முன்கூட்டியே திட்டமிடுவதற்கு வழிகாட்டும் வகையில்... சந்தை நிலவரம் குறித்த விலை முன் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம். அந்த வகையில் பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் வாழை ரகங்களுக்கான விலை முன்னறிவிப்பைத் தற்போது வெளியிட்டுள்ளது.

‘‘புதுடெல்லியில் அமைந்துள்ள மத்திய அரசின் வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் மூன்றாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2021-22-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் 9.59 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு 351.31 லட்சம் டன் தார்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது.

ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வாழை அதிக அளவில் பயிரிடப்படும் முக்கிய மாநிலங்களாகும். தமிழகத்தைப் பொறுத்த வரை தற்போது, 1.01 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு 39.39 லட்சம் டன் தார்கள் உற்பத்தி செய்யப் பட்டுள்ளன.

வாழை
வாழை

கோயம்புத்தூர், தேனி, திருச்சி, திருநெல் வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. திருச்சி, திருநெல்வேலி, கடலூர், தேனி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகள் வாழை விற்பனைக்கான முக்கியச் சந்தைகளாகத் திகழ்கின்றன. குறிப்பாக, திருச்சி சந்தையிலிருந்து அதிக அளவிலான வாழைத்தார்கள் மற்ற பகுதி களுக்கு அனுப்பப்படுகின்றன. தற்போது திருச்சி சந்தைக்கு... லால்குடி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, முசிறி, நாமக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் வாழைத்தார்களை அதிகமாக அனுப்பி வருகிறார்கள். வர்த்தக மூலங்களின் படி, இனிவரும் மாதங்களில் வாழையின் தேவை சந்தைகளில் அதிகரிக்கக்கூடும்.

இந்தச் சூழலில் விலை முன்னறிவிப்பு குழு, கடந்த 20 ஆண்டுகளாகக் கோயம்புத்தூர் சந்தைகளில்... பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் வாழைத்தார்களுக்கு நிலவிய விலை நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வு முடிவின்படி... 2023-ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவுக்கு 20-25 ரூபாய், கற்பூரவள்ளி வாழையின் பண்ணை விலை கிலோவுக்கு 23-28 ரூபாய், நேந்திரன் வாழையின் விலை கிலோவுக்கு 40-45 ரூபாய் இருக்குமெனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கேற்ப விவசாயிகள் தகுந்த விற்பனை முடிவை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’ என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தொடர்புக்கு,

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம்,

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர் - 641 003.

தொலைபேசி: 0422 2431405.