திருப்பூர் மாவட்டம், தண்டுகாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேலுசாமி. இவர் ஆத்திக்காட்டுபாளையத்தைச் சேர்ந்த மகுடேஸ்வரனின் 0.67 ஹெக்டேர் நிலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் வாங்கி உள்ளார். பட்டாவில் 0.67 ஹெக்டேர் என்பதற்குப் பதிலாக 3.67 ஹெக்டேர் என தவறுதலாக இருந்ததை, திருத்தம் செய்ய அவிநாசி நில அளவைத் துறையில் கடந்த நவம்பர் மாதம் விண்ணப்பித்தார்.

பட்டாவில் திருத்தம் செய்ய அவிநாசி தலைமை நில அளவையர் மோகன்பாபு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதுடன், இரண்டு மாதங்களாக வேலுசாமியை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த வேலுசாமி உள்ளிட்ட விவசாயிகள் அவிநாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்குள் கடந்த டிசம்பர் மாதம் 30 -ஆம் தேதி இரவு முழுக்க உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி வட்டாட்சியர், கோட்டாட்சியர் பேச்சுவார்த்தையை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால், மோகன்பாபு மீது நடவடிக்கை எடுக்காததால், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் உள்ளிட்ட விவசாயிகள் சங்கங்கள் சார்பில், லஞ்சத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் அளிப்பதற்கான முகாம்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், நில அளவையர் மோகன்பாபு அவிநாசியில் இருந்து நீலகிரி மாவட்டம் குந்தாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் ஈசன் முருகசாமி கூறுகையில், “தலைமை நில அளவையர் மோகன்பாபு மீது பல்லடத்தில் பணியாற்றியபோது, லஞ்ச குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் அவிநாசிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அவிநாசிக்கு வந்தும் அதே பாணியைக் கடைப்பிடித்துள்ளார். அவர் மீது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்காமல், கண்துடைப்புக்காக நீலகிரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மோகன்பாபு மீது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும் வரையில் எங்களின் போராட்டம் தொடரும்“ என்றார்.