Published:Updated:

`பொங்கல் ‌வெறும் பண்டிகை அல்ல; எங்களுக்கு வாழ்வாதாரமும்கூட!' - சிறப்பு பகிர்வு

பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்கு தயாராக உள்ள பொருள்கள்
News
பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்கு தயாராக உள்ள பொருள்கள்

பொங்கல் என்பது‌ பொங்கல் வைப்பதோடு முடிவதில்லை. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நம் பாரம்பர்யத்தின் முக்கிய அங்கங்களாகப் பார்க்கப்படுபவை. அதற்குத் தயாராகும் காளைகளுக்கெனப் பிரத்யேகமாகப் பல பொருள்கள் ‌விற்கப்படுகின்றன.

Published:Updated:

`பொங்கல் ‌வெறும் பண்டிகை அல்ல; எங்களுக்கு வாழ்வாதாரமும்கூட!' - சிறப்பு பகிர்வு

பொங்கல் என்பது‌ பொங்கல் வைப்பதோடு முடிவதில்லை. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நம் பாரம்பர்யத்தின் முக்கிய அங்கங்களாகப் பார்க்கப்படுபவை. அதற்குத் தயாராகும் காளைகளுக்கெனப் பிரத்யேகமாகப் பல பொருள்கள் ‌விற்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்கு தயாராக உள்ள பொருள்கள்
News
பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்கு தயாராக உள்ள பொருள்கள்

தைத்திருநாளான பொங்கல் பண்டிகை, கிராமப்புறங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை. அதுவும் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டுள்ள தென் மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் கேட்கவே வேண்டாம். கொண்டாட்டங்களுக்குப் பஞ்சமே இருக்காது. பொங்கல் வருவதற்கு சில மாதங்கள் முன்பே ஆயத்தப் பணிகள் களைகட்ட ஆரம்பித்துவிடும்.

கடந்த சில ஆண்டுகளாகவே‌ கொரோனா தொற்றுக் காரணமாகப் பொங்கல் அவ்வளவு சிறப்பாக நடைபெறாமல் போயிருந்தாலும், இந்த வருட பொங்கலை மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த வருடமும் ஒமிக்ரான் அச்சுறுத்தலால் பொங்கல் எப்படி ‌இருக்கும் என்பது தெரியாது என்றாலும் எதிர்பார்ப்பு குறையவில்லை.

பொங்கல் பானைகளில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தயாராகும் பானைகளுக்கு தனிசிறப்பு உண்டு. இது தொடர்பாகப் பேசிய, மண்பானைகள் உற்பத்தியாளர் செல்வம், ``நான் கிட்டத்தட்ட 20 வருஷமா பானை செய்றேன். பொங்கல்‌ கலயம், தண்ணீ பானை, குழம்பு சட்டி‌ மாதிரி கிட்டத்தட்ட 10 வகையான பானைகளைச் செய்வோம். பொங்கப் பானையெல்லாம் இந்தச் சமயத்துலதான்‌ நல்லா விற்கும். மீதி சமயங்கல்ல தண்ணிப்பானை செஞ்சு‌ விற்போம். இல்லைன்னா பொங்கல் சமயத்துக்குத் தேவையான பானைகள செஞ்சு வைச்சிக்குவோம். மழை நேரத்துல பானை செஞ்சா பானை‌ உழைக்காது. அதனால தேவையானத வெயில் காலத்துலயே செஞ்சு வச்சிப்போம்.

பானைகள்
பானைகள்

பானை‌ செய்ற‌ மண்ண‌ காயவெச்சு அப்பறம் தேவையான பதத்துக்குத் தண்ணி ஊத்தி கலந்து சக்கரத்துல வைச்சு செய்வோம். ஒரு நாளைக்கு 10 - 20 பானைகளை செஞ்சுருவோம். அத தட்ட ரெண்டு மூணு நாள்‌ ஆகும். ஒரு பானைய மூணு தடவை தட்டணும். இந்த கொரோனா வந்ததால ரொம்ப நஷ்டம். இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா வியாபாரிங்க வர்றாங்க. இந்த சட்டிப் பானைய‌ தட்டி‌ப் பழகுனவங்க வேற வேலைக்குப் போக மாட்டோம். எப்பவும் இதேதான். எங்களுக்கு வேற‌வேலை தெரியாது‌" என்றார்.

பொங்கலுக்காக பிரத்யேகமாகச் செய்யப்படும் இந்தப் பொங்கல் பானைகள்‌ சிங்கம்புணரியின் நகர்ப்பகுதியில் வெவ்வேறு கடைகளில் ‌அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் வைக்கப் பயன்படும் மண் அடுப்புகளும் நிறைந்துள்ளன. பொங்கல் வியாபாரம் குறித்து வியாபாரியான‌ பலராமனிடம் கேட்டபோது, ``பொங்கலுக்குனு எப்பவுமே விக்கிறது பொங்கல் முட்டி, சட்டி அப்புறம் சின்னக் கின்னி. சிலபேர் ஒரு படி முட்டிங்குற‌ பெரிய பொங்கப் பானையும் வாங்குவாங்க. இது மாட்டுக்குப் பொங்க வைக்கிறவங்க அதிகம் வாங்குறது. பொங்கலுக்கு மண் அடுப்புகளும் நல்லா போகும்" என்கிறார்.

பொங்கல் என்பது‌ பொங்கல் வைப்பதோடு முடிவதில்லை. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நம் பாரம்பர்யத்தின் முக்கிய அங்கங்களாகப் பார்க்கப்படுபவை. அதற்குத் தயாராகும் காளைகளுக்கெனப் பிரத்யேகமாகப் பல பொருள்கள் ‌விற்கப்படுகின்றன. அப்படி மஞ்சுவிரட்டு சம்பந்தமான பல பொருள்கள் விற்பனை செய்யும் கடையான‌ சாரதி ஸ்டோர்ஸ் உரிமையாளர்‌ செந்தில்குமார்‌ அவர்கள் கூறியது, ``எங்க கடை‌ பாரம்பர்யம் கிட்டத்தட்ட நூறு வருஷத்துக்கு மேல இருக்கு. நான்‌ 25 வருஷமா பார்த்துக்கிறேன். எங்க கடையில மாடு சம்பந்தமான பொருள்கள்னு பார்த்தீங்கனா மாட்டுக்குப் பிடி கயிறு, மூக்குக் கயிறு, கழுத்துக் கயிறு, மேலப்பாளையம் கயிறுனு எல்லா வகையான கயிறும் விக்கிறோம்.

கயிறு
கயிறு

பிறந்த நாளைக்கு நம்ம புதுசு உடுத்துற மாதிரி மாட்டுக்கும் பொங்கலுக்கும் கயிறு எல்லாம் புதுசு மாத்துவாங்க. அப்புறம் மாடு கழுத்துல கட்டுற மணி விக்கிறோம். இது இங்க மட்டுமே பிரத்யேகமா தைக்கிறது. இந்த மணியெல்லாம் தனியா வாங்கி தைச்சு விக்கிறது. 1,200-ல இருந்து 2,000 ரூவா வரை கிடைக்கும். மாடுகளுக்கு அலங்கார பொருள்கள் நிறையா இருக்கு. மாட்டோட கொம்புக்கு இடையில கட்டுற நெத்திப்பாறை, கழுத்துல கட்டுற பித்தளை சங்கிலி அப்பறம் மாட்டோட காதுல மாட்டுற அரசிலை விக்கிறோம். மாடு கால்ல கட்டுற சலங்கையும் இருக்கு. இது மட்டுமல்லாம மாட்டுக்கு அலங்காரம் பண்ண தேவையான சாயம் ஜிகினா இதெல்லாம்கூட இருக்கு. எங்க ஊரோட சிறப்பு கழுத்து மணிதான். இந்த மணிகளை துவரங்குறிச்சிங்கிற ஊருல இருந்து வாங்கி இங்கயே குஞ்சம் வைச்சு தைச்சு விக்கிறோம்" என்கிறார்.

மற்றொரு கடையான உரிமையாளர் அன்புராஜிடம் பேசிய போது, ``எங்க கடையில மாட்டுக்குத் தேவையான மணி, கழுத்து சலங்கை, கால் சலங்கை, நெத்திப்பாறை எல்லாம் விக்கிறோம். தும்புக் கயிறு, சங்குக் கயிறு, சங்கு கம்பிளிக் கயிறு இது மாதிரி கயிறும் விக்கிறோம். கழுத்து மணில துவரங்குறிச்சி, அரியக்குடி மணி னு இரண்டு வகை இருக்கு. அரியக்குடி மணி ரொம்ப சிறப்பு வாய்ந்தது. இது சாதாரணமா பண்ண முடியாது. பழங்காலத்துல பண்ணுவது இப்ப புது டைப்பா பண்ணி வருது. துவரங்குறிச்சி மணில செய்ற பெல்ட் 1,700 ரூபாதான். ஆனா, இந்த அரியக்குடி மணில செய்றது 5,000 ரூபாய். துவரங்குறிச்சி மணி ஒரு மணி 70 ரூபாய் ஆனா அரியக்குடி 450 ரூபாய். அதுதான் இதோட சிறப்பு" என்கிறார்.

அரியக்குடி மணி
அரியக்குடி மணி

இந்த அரியக்குடி மணி சிவகங்கை மாவட்டம் அரியக்குடியில் பண்டைய காலம் முதலே தயாரிக்கப்படும் மணி. அந்த காலத்தில் அரசர்களின் குதிரைகளுக்குக் கட்ட பயன்படுத்தப்பட்டது. இந்த மணியின் வடிவமே பார்க்க வித்தியாசமாக இருக்கும். இதிலிருந்து தோன்றும் ஒலியும் கேட்கவே இனிமையாக இருக்கும். இந்த மணியைச் செய்யும் கலை கிட்ட தட்ட அழிந்து போயிருந்தாலும் இப்போது மீண்டும் இதைச் செய்கிறார்கள். பண்டைய காலத்தில் செய்யப்பட்ட அரியக்குடி மணி ஐந்து உலோகங்கள் கலந்து செய்யப் பட்டது. இப்போது‌ செய்யப்படும் மணி பித்தளையால் ஆனது. இப்போது இப்படி செய்யப்பட்டாலும் அந்தப் பண்டைய காலத்தில் செய்யப்பட்ட அரியக்குடி மணிக்கு மவுசு அதிகமாம். அதை சேகரித்து வைத்திருப்பவர்களுக்கே அதன் மதிப்பு தெரியும் என்கிறார்கள்.

மஞ்சுவிரட்டு மாடுகளுக்கென பிரத்யேகமாக விற்கப்படும் இந்த மணிகள் தவிர‌ பசு மாடுகளுக்கும், காளை மாடுகளுக்கும் ஏற்ற‌ சில மணிகள்கூட உள்ளன. நாக்கு மணி எனப்படுவது பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து மாடுகள் கழுத்திலும் கட்டப்படுவது. சிண்டு மணி‌ என்றும் அழைக்கப்படும் இது அழகுக்கு கட்டப்படுவது இல்லை. இப்படி மணி கட்டப்படுவதால் அதிலிருந்து வரும் ஒலி அதிர்வால் விஷ பிராணிகள் மாட்டின் அருகில் வராது என்று ஒரு காரணம் உள்ளதாம். புடலை மணி‌ என்னும் வகை மணி செம்பு கோட்டிங் செய்யப்பட்டது. இந்த மணியின் சத்தம்‌ அதிக தூரம் கேட்குமாம். இது மேய்ச்சலுக்கு செல்லும்‌ மாடுகளுக்கு ஏற்றது. இப்படி பல்வேறு‌ வகையான மணிகள் பொங்கல் சமயங்களில் விற்கப்படுகின்றன.

புடலை மணி‌
புடலை மணி‌

மஞ்சுவிரட்டு மாட்டின் கழுத்தில் கட்டும் மணி‌ பெல்ட்டை தைப்பவரான ராஜா அவர்களிடம் அது குறித்து கேட்டபோது, ``எங்க பாட்டன் பூட்டன் காலத்துல இருந்து இதைச் செய்றோம். இந்த மாட்டுக் கழுத்துல கட்டுற மணியை மஞ்சுவிரட்டுக்காகச் செய்யுறோம். இது வருஷத்துல எல்லா சமயத்துலயும் செய்வோம். இந்த ஊருல கிடைக்கிற இந்த மணியோட ஸ்பெஷல் தைக்கிறது விதம்தான். குஞ்சம் வைச்சு தைக்கிறப்ப ஒரே மாதிரி இருக்கும். கையில் தைச்சதே மிஷின்ல தைச்சது போல ஒரே மாதிரி அழகா இருக்கும். இதுலயே மொத்தம் ஆறு வகை இருக்கு. பித்தளை மணி, சில்வர் மணி, அரியக்குடி மணி‌ இதுமாதிரி ஆறு வகை இருக்கு. அந்த அரியக்குடி மணி ரொம்ப‌ ஸ்பெஷல். இங்க தைக்கிற‌ மணியை‌ வாங்க‌ எல்லா ஊருல இருந்தும் ஆளுங்க வருவாங்க. மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை... எல்லா இடத்துல இருந்தும்‌ வருவாங்க... எங்களுக்கு ஒரு பெல்ட் தைக்க ஒரு மணிநேரம் ஆகும். கொரோனா வந்ததுக்கப்புறோம் எங்க தொழில்லயும் நிறைய பாதிப்பு... ரெண்டு வருஷமா சரியா மஞ்சுவிரட்டு நடக்கல... இந்த வருஷத்த நம்பிதான் இருக்கோம்... மஞ்சுவிரட்டு நடந்தால்தான் எங்க வேலை... இல்லைனா வீட்லதான்‌ இருக்கனும்…" என்கிறார்.

மாடுகளுக்கென்று இவ்வளவு பொருள்கள் அலங்காரத்துக்காக இருப்பது ஆச்சர்யமாகவே உள்ளது. நெத்திப்பாறை‌ என்னும் அணிகலன் மாட்டின் கொம்புக்கு இடையில் நெற்றியில் கட்டப்படுகிறது. இது எவர்சில்வரில் இலை, நிலா, வட்டம் போன்ற வித்தியாச வித்தியாச உருவங்களாகச் செய்யப்பட்டு பின்பு மாலை போல கோக்கப்பட்டு மாட்டுக்கு அணிவிக்கப் படுகிறது. இப்படி‌ எவர்சில்வரில் செய்யப்படும் ‌நெத்திப்பாறை 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதே போலவே எவர்சில்வரில் அரச‌ மர இலை போல் உள்ள வடிவம் மாட்டின் காதுகளில் தோடு போல போடப்படுகிறது. இதன் விலை ஐம்பது ரூபாய். இந்த நெத்திப்பாறையும், அரசிலையும் வெள்ளியில்கூட கிடைக்கின்றன.

நெத்திப்பாறை
நெத்திப்பாறை

சிங்கம்புணரியிலேயே அமைந்துள்ள காந்திமதி நகை மாளிகையில் வெள்ளியில் செய்யப்பட்ட நெத்திப்பாறையும், அரசிலையும் விற்கப்படுகின்றன. வெள்ளி நெத்திப்பாறையின் விலை 18,000 முதல் 30,000 ரூபாய் வரை இருக்குமாம். அரசிலை ஆயிரம் ரூபாய். இவை விலை உயர்வாக இருந்தாலும் மாடுகளைப் பிள்ளைகள் போல் வளர்க்கும் அதன்‌ உரிமையாளர்கள் இவற்றை‌ வாங்கவே செய்கிறார்கள்.

பொங்கல் ஒரு‌ பண்டிகை என்பதோடு நில்லாமல், பல தொழிலாளிகள் மற்றும் வியாபாரிகளுக்கு முக்கியமான ஒரு பண்டிகை. ஜல்லிக்கட்டும் மஞ்சுவிரட்டும் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல அதன்‌பின்பு பலரின் வாழ்வாதாரமும் அடங்கி உள்ளது என்பதற்கு இதுவே சான்று.