நாட்டு நடப்பு
Published:Updated:

வேண்டாம் நிலக்கரி சுரங்கம்; வேண்டும் சூரிய சக்தி!

தலையங்கம்
News
தலையங்கம்

தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழும் டெல்டா மாவட்டங்களை ஏதாவது காரணம் சொல்லி சூறையாடத் துடித்து வருகிறது மத்திய அரசு. தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அந்தப் பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி, அங்கு எங்கெல்லாம் நிலக்கரி வளம் உள்ளது. அதை எடுத்து வர எந்த ரயில் நிலையங்களைப் பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பை அண்மையில் வெளியிட்டு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது மத்திய அரசு.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏராளமான நிலக்கரியும் மீத்தேன் வாயுவும் புதைந்து கிடைப்பது உண்மைதான். அதற்காகக் கண்களை விற்றுச் சித்திரம் வாங்க முடியுமா?

தமிழ்நாட்டுக்கு உணவு அளிக்கும் பசுமை நிறைந்த டெல்டா பகுதியை அழித்துவிட்டு, அண்டை மாநிலங்களிடம் அரிசிக்குத் தமிழக மக்கள் கையேந்தி நிற்க வேண்டும் என்று விரும்புகிறதா பிரதமர் மோடியின் அரசு?

‘‘டெல்டாவை அழிப்பது மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். நெல் வயல்கள் இல்லாத டெல்டாவுக்குக் காவிரி நீர் கொடுக்கமாட்டார்கள். அடுத்து, தங்களுக்கு வேண்டிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலக்கரி வயல் அமைத்து லாபம் கொழிக்க ஏற்பாடு செய்வார்கள்’’ என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

ஒரு காலத்தில் வளம் நிறைந்த பகுதியான நெய்வேலியை நிலக்கரி எடுப்பதற்குக் கொடுத்த துன்பமே இன்னும் தொடர்கிறது. இந்தப் பகுதியில் முன்பெல்லாம் வெறும் கையில் மண்ணைத் தோண்டினாலே இயற்கையான ஆர்டீசியன் ஊற்றுகளில் நீர் பொங்கும். ஆனால், இப்போது கடலூர் மாவட்டத்தின் நீர்மட்டம் பாதாளத்துக்குச் சென்றுகொண்டுள்ளது. சூழல் சீர்கேடுகள் இன்னும் அதிகம்.

நெய்வேலிக்குள் நுழைந்த காலமான 1956-ம் ஆண்டு முதலே டெல்டா பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மீது மத்திய அரசு கண் வைத்து வருகிறது. இதில் இரண்டு கட்சிகளுக்கும் வித்தியாசமில்லை. என்ன... காங்கிரஸ் மெதுவாகச் செய்து வந்ததை பி.ஜே.பி வேகமாகச் செய்யத் தொடங்கியிருக்கிறது அவ்வளவுதான்.

கார்பன் உமிழ்வை அதிகப்படுத்தி பூமிப்பந்தை வெப்ப மயமாக்கும் நிலக்கரி சுரங்கம் வெட்டுவதற்குப் பதில், புதிப்பிக்கத்தக்க ஆற்றல் வளமான சூரிய ஒளி, காற்றாலைகள் மூலம் எரிசக்தியை எடுக்கலாம்; மத்திய அரசு மாற்றி யோசிக்க வேண்டும்.

- ஆசிரியர்

கார்ட்டூன்
கார்ட்டூன்