40 சதவிகித மானியத்தில் செக்கு எண்ணெய் இயந்திரங்கள்! அழைப்பு விடுக்கும் வேளாண் பொறியியல் துறை!

பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பொறியியல் துறை, பசுமை விகடன் இணைந்து நடத்திய, லாபம் தரும் செக்கு எண்ணெய் தயாரிப்பு என்ற தலைப்பிலான பயிற்சி கடந்த அக்டோபர் 28-ம் தேதி, சென்னை நந்தனத்தில் உள்ள மாநில வேளாண் இயந்திரவியல் தகவல் மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சுபம் இன்ஜினீயரிங் ஒர்க்ஸ் உணவு உபசரிப்பு செய்திருந்தது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்துகொண்டனர்.

பயிற்சியைத் தொடங்கி வைத்து பேசிய தமிழ்நாடு வேளாண்மைப் பொறியியல் துறையின் தலைமைப் பொறியாளர் முருகேசன், “இன்றைய சூழ்நிலையில், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை மதிப்புக்கூட்டினால்தான் நிறைவான லாபம் பார்க்க முடியும். அதற்கு உதவும் வகையில் வேளாண் பொறியியல் துறை மூலமாகப் பண்ணைக் கருவிகளோடு 17 வகையான மதிப்புக்கூட்டும் இயந்திரங்களை 40 சதவிகித மானியத்தில் வழங்கி வருகிறோம். எள், நிலக்கடலை, தென்னை சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு... செக்கு எண்ணெய் தயாரிப்புத் தொழில் வரப்பிர சாதமாகத் திகழ்கிறது. இதை விவசாயிகள் மட்டுமல்லாமல் தொழில்முனைவோர், உழவர் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

மாநில வேளாண் இயந்திரவியல் தகவல் மையத்தின் உதவி மைய பொறுப்பாளர் சிவலிங்கம், “ஏற்கெனவே தொழில் தொடங்கி நடத்திக்கொண்டிருப்பவர்களுக்கும் புதிதாகத் தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கும் இந்தப் பயிற்சி முகாம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். விளைபொருள்களை உற்பத்தி செய்து அதை மதிப்புக்கூட்டி, அவற்றைத் தரமாகவும், நியாயமான விலையிலும் மக்களிடம் கொண்டு சேர்த்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என்றார்.
வேளாண் இயந்திரங்கள் தகவல் மையத் தின் உதவிப் பொறியாளர் ஜீவா பேசும்போது, “செக்கு எண்ணெய் உற்பத்திக்கான இயந்திரங்கள் தேவைப்படுவோர், மாவட்ட அளவில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளரை அணுகி சிட்டா, அடங்கல், ஆதார் நகல், சாதிச் சான்று நகல் உள்ளிட்ட ஆவணங் களோடு விண்ணப்பித்தால், எங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் நேரடியாக வந்து பார்வையிட்டு பரிந்துரைப்பார்கள். அதற்குப் பிறகு, மானியம் கிடைக்கும். ஒருமுறை விண்ணப்பித்துக் கிடைக்காமல் போனால் கவலைப் பட வேண்டாம். உரிய ஆவணங் களோடு மறுமுறை விண்ணப்பித்தால் கிடைக்கும்” என்றார்.
செக்கு இயந்திரம் மூலம் எண்ணெயை எவ்வாறு தரமாகப் பிழிந்தெடுக்கலாம். இயந்திரத்தை எப்படி இயக்க வேண்டும், பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட விவரங் களைச் செய்முறையோடு செய்து காட்டினார் திருவண்ணாமலை மாவட்டம், மேல்பாலானந்தலில் செயல்படும் சுபம் இன்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனர் விக்னேஷ்.

சென்னையைச் சேர்ந்த செக்கு எண்ணெய் உற்பத்தியாளர் பிரகாஷ் வேல், இந்நிகழ்வில் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டபோது “மரச்செக்கு, இரும்புச் செக்கு இரண்டும் போட்டிருக்கிறேன். வர்த்தகரீதியா கொஞ்சம் பெரிய அளவுல இந்தத் தொழிலை செய்ய விரும்புறவங்களுக்கு இரும்புச்செக்கு உகந்ததா இருக்கும்.
கடலை எண்ணெய் தயாரிப்பைப் பொறுத்தவரைக்கும், தரமான நாட்டு ரகக் கடலையைத் தேர்வு செய்றது முக்கியம். எப்பவும் ஒரே ரகக் கடலையைதான் பயன் படுத்தணும். ரகங்களை மாத்திக்கிட்டே இருந்தா, எண்ணெயோட சுவையும் மணமும் மாறும். அது மாதிரி இருந்தா, வாடிக்கை யாளருங்க விரும்ப மாட்டாங்க” என்றார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள கோட்டப்பூண்டியைச் சேர்ந்த மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி செய்யும் இளம் விவசாயி சதிஷ், “மரச்செக்கு அமைக்க நினைக்குறவங்க, தங்களோட சொந்த இடத்துல இதை அமைக்குறது நல்லது. கடையோட உள்கட்டமைப்பு ரொம்ப எளிமையா இருந்தாலே போதும். ஆடம்பரமா அழகுபடுத்திப் பணத்தை விரயப்படுத்தா தீங்க. மரச்செக்கு எண்ணெய்ங்கறதுனாலயே, உங்க விருப்பத்துக்கு ஏத்தபடி அதிக விலைக்கு விக்கணும்னு நினக்கக் கூடாது. விலை அதிகமா இருந்தா, நடுத்தர மக்கள் வாங்க மாட்டார்கள். நடுத்தர மக்கள் வாங்காத எந்த ஒரு பொருளும் அதிகக் கவனம் பெறாது. நடுத்தர மக்களைக் கவரக்கூடிய வகையில தான் விற்பனை உத்திகளைக் கையாளணும்” என்றார்.

மதியம் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து... வேளாண் இயந்திரங்கள் தகவல் மையத்தை அனைவருக்கும் சுற்றிக் காட்டிய இந்த மையத்தின் பொறியாளர் ஜீவா, எந்தெந்த வேளாண் கருவிகள் எங்கு கிடைக்கும், அதற்கு வழங்கப்படும் மானியங்கள் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவித்தார்.
உணவுத் தரக்கட்டுப்பாட்டு தர நிர்ணய சான்றிதழை எப்படி வீட்டில் இருந்தே பெறுவது என வீடியோ காட்சிகள் மூலம் விளக்கப்பட்டன. பயிற்சி முகாமின் இறுதி நிகழ்வாக விவசாயிகளின் பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.