மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

தினை, வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு... மாதம் ரூ.50,000.. சிறுதானியங்களில் அனைத்தும் சமைக்கலாம்!

இயற்கை அங்காடி
பிரீமியம் ஸ்டோரி
News
இயற்கை அங்காடி

நல்உணவு

நம்மாழ்வார், தான் கலந்துகொள்ளும் கூட்டங்களில் விவசாயத்தைப் பற்றிப் பேசுவதோடு மட்டுமல்லாமல்... உடல்நலனுக்கு ஏற்ற உணவுகள் குறித்தும் வழிகாட்டுவார். குறிப்பாக, சிறுதானியங்களின் மகத்துவம் பற்றி விரிவாக எடுத்துரைப்பது வழக்கம். இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, தமிழக மக்களிடையே சிறுதானியங்களுக்கான வரவேற்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இவற்றில் பலவிதமான உணவு வகைகளை எளிதாகச் சமைப்பதற்கு வசதியாக மதிப்புக்கூட்டி ரெடி மிக்ஸாக விற்பனை செய்து வருகிறார், சென்னையைச் சேர்ந்த பட்டதாரி பெண் சாரதா. இவர், சென்னை அம்பத்தூர் பகுதியில் ‘சங்கரா பசுமையகம்’ என்ற பெயரில் இயற்கை அங்காடி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இயற்கை அங்காடியில் சாரதா
இயற்கை அங்காடியில் சாரதா

ஒரு காலைப்பொழுதில் இந்த அங்காடிக்குச் சென்றோம். தினை லட்டுத் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டிருந்த சாரதா மிகுந்த உற்சாகத்தோடு நம்மை வரவேற்றார். “எனக்குத் திருநெல்வேலிதான் பூர்வீகம் எம்.ஏ சோஷியாலஜி படிச்சிருக்கேன். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்ல பதிப்பகத்துறை பொறுப்பாசிரியரா இருந்தேன். நம்மாழ்வார் எழுதின புத்தகங்களெல்லாம் விரும்பி படிப்பேன். அதோட தாக்கம்தான், சிறு தானியங்களை நோக்கி என்னைப் பயணப்பட வச்சது.

நம்மாழ்வார் உயிரோடு இருந்த வரைக்கும் அவரைப் பார்த்துப் பேசக்கூடிய சந்தர்ப் பங்கள் அமையல. அவர் இறந்த பிறகு, தஞ்சாவூருக்குப் போய் அஞ்சலி செலுத்தி விட்டு வந்தேன். ‘நம்மை ஆள்பவரெல்லாம் ஆள்வோரல்ல, நம்மாழ்வாரே இனி நம்மை ஆள்வார்’னு ஒரு கவிதை எழுதினேன். என் மனசுல நம்மாழ்வார் விதைச்ச சிறுதானிய விழிப்புணர்வு விதைதான், எங்க குடும்பத்தை இப்ப வாழ வெச்சுகிட்டு இருக்கு.

சிறுதானிய உணவு பொருள்கள்
சிறுதானிய உணவு பொருள்கள்

2013-ம் வருஷம் இந்த அங்காடியை ஆரம்பிச்சேன். தினை, வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம்... இதையெல்லாம் விவசாயிகள்கிட்ட இருந்து விலைக்கு வாங்கி மாவாக அரைச்சு விற்பனை செய்யத் தொடங்கினேன். அடுத்தகட்டமா, சிறுதானியங்களை மக்கள் ரொம்ப எளிதா சமைக்குற வகையில புட்டு, இடியாப்பம், சூப், கஞ்சி, இட்லி, தோசை, அடை, பொங்கல் உட்பட இன்னும் பல வகையான ரெடிமிக்ஸ் உணவுகளைத் தயார் பண்ணி விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். இதுக்கு மக்கள் மத்தியில அதிக வரவேற்பு இருக்கு. பாரம்பர்ய அரிசி வகைகள்லயும் பலவிதமான ரெடிமிக்ஸ் தயார் பண்ணி விற்பனை செய்றோம்’’ என்றவர், இந்தத் தொழிலில் கடந்து வந்த ஆரம்பகால நிலை குறித்து விவரித்தார்.

“100 கிராம் சிறுதானியத்துல 6 கிராம் புரதச்சத்து இருக்கு. ஆனா, 100 கிராம் அரிசியில 2 கிராம்தான் புரதம் இருக்கு. சிறுதானியம் உடம்புக்கு ரொம்ப நல்லதுனு தெரிஞ்சாலும்கூட, முன்னாடியெல்லாம் மக்கள் இதை வாங்க ரொம்ப தயங்குவாங்க. காரணம் இதுல சுவையான உணவு வகைகள் எப்படிச் சமைக்குறதுனு நிறைய பேருக்குத் தெரியாம இருந்துச்சு.

சிறுதானிய உணவு பொருள்கள்
சிறுதானிய உணவு பொருள்கள்

அந்த மாதிரியான சூழல்லதான், நிறைய நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டு சிறுதானியங் களைப் பத்தியும், அதுல என்னவெல்லாம் சமைக்க முடியும்னு பேசினேன். அடுத்தகட்ட முயற்சியா மீடியாக்கள் மூலம் இதை மக்கள் கிட்ட பரவலா கொண்டு போகலாம்ங்கற ஒரு யோசனை வந்துச்சு. பிரபல சமையல் கலை நிபுணர் செப் தாமு உதவியோட, டிவியில சிறுதானிய சமையல் நிகழ்ச்சி நடத்தினேன்.

சிறுதானியங்கள்ல புட்டு, இடியாப்பம், பொங்கல், இட்லி, தோசை மாதிரியான உணவு வகைகள் மட்டுமல்லாமல், பர்பி, லட்டு, அல்வா உட்பட இன்னும் பல வகையான இனிப்பு வகைகள், முறுக்கு, சீடை, மிக்சர், காரசேவ் மாதிரியான நொறுக்குத் தீனிகளும் செய்ய முடியும்ங் கிறதை செஞ்சு காட்டினேன்.

லட்டு தயாரிப்பில்
லட்டு தயாரிப்பில்

தமிழ்நாட்டுல பல்வேறு பகுதிகள்ல நடந்த கண்காட்சிகள்ல சிறுதானிய உணவு வகைகளைக் காட்சிப்படுத்தி, மக்கள்கிட்ட இதைப் பத்தி எடுத்து சொன்னேன். படிப் படியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிச்சது. ஆர்டர் கொடுக்குற வங்களுக்குச் சிறுதானிய உணவு வகைகள் சமைச்சும் கொடுக்குறேன்.

என்னோட அனுபவங்கள வெச்சு ‘சுவைதரும் சிறுதானியங்கள்’-னு ஒரு புத்தகம் எழுதினேன். இந்தப் புத்தகத்த படிச்சுட்டு நிறைய பேர் எங்களுக்கு சொல்லித் தர முடியுமான்னு கேட்டாங்க. அவங்களுக்கு சிறுதானிய சமையல் எப்படிச் செய்றதுனு வகுப்புகளும் எடுத்தேன். இவ்வளவுக்கும் சிறுதானிய தயாரிப்புக்குனு எங்க போயும் பயிற்சி எடுத்துக்கல. அனுபவம் மூலமாவே செஞ்சு கத்துக்கிட்டதுதான்” என்றவர் சிறுதானிய கொள்முதல் குறித்துப் பேசினார்.

“எனக்குத் தேவையான சிறுதானியங்களைப் பெரும்பாலும் தேனி மாவட்டத்துல இருந்துதான் கொள்முதல் செய்றேன். காரணம் அங்கதான் சிறுதானியங்கள் தோல் நீக்குற அரவை ஆலைகள் நிறைய இருக்கு. வியாபாரிகள், சிறுதானியங்களை எங்க வாங்கினாலும் தோல் நீக்க தேனிக்குக் கொண்டு வந்துடறாங்க. அதனால, எந்த வகையான சிறுதானியத்தைக் கேட்டாலும் உடனடியா கிடைச்சிடுது.

சென்னைக்குப் பக்கத்துல சிறுதானியங்கள் கிடைச்சாலும்கூட தோல் நீக்கி அரைக்கிறதுக்கு இடம் தேட வேண்டியதா இருக்கு. பாரம்பர்ய அரிசிகளுக்கு பிரச்னை இல்லை. திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள்ல உள்ள இயற்கை விவசாயிகள்கிட்ட இருந்து பாரம்பர்ய அரிசிகள் வாங்குறேன். இயற்கை விவசாயத்துல விளைவிக்கப்பட்ட துவரை, உளுந்து, நிலக்கடலை, பாசிப்பருப்பு, பாசிப்பயறு, வேர்க்கடலை, புளி, மஞ்சள், மிளகாய் உள்ளிட்ட பொருள்களையும் விவசாயிகள்கிட்ட இருந்து வாங்கி என்னோட அங்காடி மூலம் மக்கள்கிட்ட விற்பனை செய்றேன்.

இந்த அங்காடி மூலம் மாசத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்குது. எல்லாச் செலவும் போக 50,000 ரூபாய் லாபம் கிடைக்குது. முன்னாடி என்னோட கணவர் ராமச்சந்திரன் இந்தத் தொழில்ல எனக்கு உறுதுணையா இருந்து, நிறைய வேலைகள்ல பங்கெடுத்துக்குவார். நாங்க ரெண்டு பேருமே சமாளிச்சதுனால வேலையாள்கள் அதிகம் தேவைப்படலை. அப்பெல்லாம் கூடுதல் லாபம் கிடைச்சுக்கிட்டு இருந்துச்சு. இப்போ அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால சம்பளத் துக்கு வேலையாள் வச்சிருக்கோம். லாபம் குறையுதேனு நான் கவலைப்படலை. இப்ப எங்க குடும்பத்துக்கு இதுதான் வாழ்வாதாரம். அதேசமயம், சிறுதானியங்கள் மக்கள்கிட்ட பரவலா போயி சேர, நாமளும் ஒரு காரணமா இருக்கோம்ங்கற ஆத்ம திருப்தியும் என்னை உற்சாகமா இயங்க வைக்குது.

சிறுதானிய உணவு பொருள்கள்
சிறுதானிய உணவு பொருள்கள்

நம்மாழ்வார் ஏற்படுத்திய தாக்கத்துனால என்னுடைய சிறுதானிய பயணத்தை 2013-ம் வருஷம் தொடங்கினேன். அடுத்த வருஷம் 2023-ல சர்வதேச சிறுதானிய ஆண்டுல அடியெடுத்து வைக்கிறேன். வாடிக்கையாளர்களோட ஆதரவுனால தொடர்ந்து 10 வருஷமா இந்தத் தொழிலை வெற்றிகரமா செஞ்சுகிட்டு இருக்கேன். இந்தத் தொழில், எங்களுக்கு ஒரு வகையான நிம்மதியையும், சந்தோஷத்தையும் கொடுக்குது. இதுக்குக் காரணமாயிருந்த நம்மாழ்வாருக்கு நன்றி சொல்லிக்கிறோம். மக்களோட ஆரோக்கியம்தான் எங்களுடைய இலக்கு. அதை நம்மாழ்வார் வழியில் மக்களிடையே கொண்டு சேர்க்க, என்னென்ன செய்ய முடியுமோ அதைத் தொடர்ந்து செய்ய முயற்சி செய்வோம்” எனத் தெரிவித்தார்.

தொடர்புக்கு, சாரதா,

செல்போன்: 94447 55797.

முன்மாதிரி

செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கத்தில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலைய இணைப் பேராசிரியை விமலாராணி சாரதாவின் செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பேசிய பேசியபோது, “சாரதா கடந்த 10 வருஷமா சிறுதானிய உணவு தயாரிப்புல ஈடுபட்டுக்கிட்டு வர்றாங்க. நாங்க நடத்தக்கூடிய மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானிய உணவுகள் தயாரிப்பு பயிற்சிக்கு வகுப்பெடுப்பாங்க. அவங்களுக்கு எல்லா உணவு வகைகளையும் சுவையாகவும் தரமாகவும் செய்யத் தெரியும். இயற்கை அங்காடி நடத்துற நிறையப் பேருக்கு, இவங்க முன்மாதிரியா இருக்காங்க” எனத் தெரிவித்தார்.