
மகசூல்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் ஆற்றல் கிராம்பில் உள்ளதாக ஆயுர்வேத, சித்த மருத்துவ நிபுணர்களால் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கிராம்பு பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மாறாமலை, கரும்பாறை மலைகளில் விளையும் கிராம்புக்கு இந்திய சந்தையில் தனி மதிப்பு உண்டு. கன்னியாகுமரி மாவட்டம், கரும்பாறையில் கிராம்பு விவசாயம் செய்து வரும் லாலாஜியிடம் பேசினோம். இவர் கரும்பாறை மலைத்தோட்ட விவசாயிகள் சங்க செயலாளராகவும் இருக்கிறார்.
கன்னியாகுமரி கிராம்புக்குத் தனிச்சிறப்பு
“கிராம்பு ஒரு நீண்டகாலப் பயிர். ஒரு முறை நட்டா நூறு வருஷத்துக்கு மேல பலன் கொடுக்குது கிராம்பு மரம். கரும்பாறை மலைகள்ல 100 வருஷத்துக்கு மேல பழைமை யான கிராம்பு மரங்கள் நிற்குது. இந்தோனே ஷியாவுல 450 வருஷம் ஆன கிராம்பு மரம் இருக்கிறதா சொல்றாங்க. மழை, வெயில், பனி, கடல் காற்று இந்த நான்கும் சீராக மரத்துக்குக் கிடைச்சா, விளையுற கிராம்பு தரமானதா இருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில இந்த நாலு காலநிலையும் கிராம்பு பயிருக்குக் கிடைக்கிது. அதனால் தான் இந்தியாவிலேயே கன்னியாகுமரி மாவட்ட கிராம்பு நல்லா இருக்கும்னு சொல்வாங்க. மலை, சமதளம்னு எல்லா இடத்திலயும் கிராம்பு வரும். ஆனா, கடல் மட்டத்தில இருந்து 1,000 அடி, 2,500 அடிக்கு மேல உயரத்திலதான் சிறப்பாக வரும். அங்க தான் விளைச்சலும் தரமும் நல்லா இருக்கும். கிராம்புல யூஜினால்னு ஒரு ஆயில் இருக்கு. அது கன்னியாகுமரி மாவட்டத்துல விளையுற கிராம்புல நிறைய இருக்கும். அதுதான் இங்க இருக்கக் கிராம்பின் தனிச்சிறப்பு.
கிராம்பு மரத்துக்கு இடையே சில்வர் ஓக் மரங்களையும் நடலாம். இதன்மீது மிளகுக் கொடியை படரவிட்டு அதன்மூலமாவும் விவசாயிகள் வருமானம் பார்க்கிறாங்க. கிராம்பு பயிருக்கு உரமா எரு, எலும்புப்பொடி தான் பயன்படுத்துறாங்க. பெரும்பாலானவங்க இயற்கை முறையிலதான் விவசாயம் செய்றாங்க” என்றவர், கிராம்பு நடவு மற்றும் பராமரிப்பு பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

15 வருட மரத்திலிருந்து 5 கிலோ
‘‘நடவுக்கு ஒரு ஏக்கர் நிலத்தைச் சுத்தப்படுத்த 50,000 ரூபாய்ச் செலவாகும். நல்ல தை (கன்று) ஒன்று 150 ரூபாய். ஒரு குண்டு (குழி) எடுத்துத் தை நடுறதுக்குக் கூலி 150 ரூபாய். அந்தக் கணக்குல ஒரு தை நடுறதுக்கு 300 ரூபாய் ஆகுது. எல்லாம் சேர்த்து முதல் வருஷம் ஒரு ஏக்கருக்கு கிட்டதட்ட 1 லட்சம் ரூபாய்ச் செலவாகும். ஏக்கருக்கு 100 கன்றுகள் நடவு செய்யலாம்.மரம் வளர்ந்த பிறகு, களை குறையும். ஆனா, சின்னதா இருக்கும்போது ஆரம்பத்தில வருஷத்துக்கு ரெண்டு களை எடுக்கணும். ஒருதடவை களை எடுக்க 25,000 ரூபாயாவது ஆகும். மரம் சின்னதா இருக்கும்போது வருஷம் ரெண்டு தடவை உரம் போடுவாங்க. ஒரு மூட்டுக்குச் சராசரியா 50 கிலோ தொழுவுரம் போடணும். நான் 20 ஏக்கர்ல கிராம்பு பயிரிட்டிருக்கிறேன். 15-20 வருஷம் ஆன ஒரு மரத்தில சராசரியா 5 கிலோ கிராம்பு கிடைக்குது. அந்த வயசு மரங்களா இருந்தா ஒரு ஏக்கர்ல ஆண்டுக்கு 500 கிலோ கிடைக்கும்’’ என்றவர் வருமானம் குறித்துப் பேசத் தொடங்கினார்.

இலை, குச்சி எல்லாமே காசு
“ஒரு கிலோ கிராம்பு சராசரியாக 800 ரூபாய் வரைக்கும் விலை கிடைச்சுட்டு இருந்தது. போன வருஷம் கொரோனா ஊரடங்குல விலை குறைஞ்சு, ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை ஆனது. பிறகு 650 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஊரடங்கு காரணமா டெல்லி, மும்பை சந்தைகள் மூடியிருக்கு. அதனால இப்ப என்ன விலைன்னு தெளிவா தெரியல. எனக்கு ஒரு ஏக்கர்ல இருந்து 500 கிலோ கிராம்பு கிடைக்குது. 20 ஏக்கர்லயும் இந்த மகசூல் கிடைக்காது. எல்லா வயசுலயும் கிராம்பு மரங்கள் இருக்கு. 15 வயசுக்கு மேல ஆன 100 மரங்கள்ல இருந்து 500 கிலோ கிடைக்கும். சராசரி விலை 600 ரூபாய்னு வெச்சுகிட்டாலும் 3 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதைத் தவிர கிராம்பு குச்சி (காம்பு), இலை மூலமாவும் வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கரில் வருஷத்துக்கு 170 கிலோ குச்சி கிடைக்கும், கிலோ 60 ரூபாய். இதன் மூலமா 10,200 ரூபாய் கிடைக்கும். ஒரு ஏக்கரில் வருஷம் 500 கிலோ இலை கிடைக்கும். ஒரு கிலோ 20 ரூபாய். இதன் மூலமா 10,000 ரூபாய் கிடைக்கும். அந்த வகையில் 20,200 ரூபாய் கிடைக்கும். உரம், கூலி உள்ளிட்ட செலவு வருஷத்துக்கு 2,00,000 ஆகிடும். அதுபோக மீதியிருக்க 1,20,200 ரூபாய் லாபமாகக் கிடைக்கும்’’ என்றவர் நிறைவாக,

முக்கியத்துவம் தேவை
‘‘கன்னியாகுமரி மாவட்டத்துல ரப்பர் பயிர் அதிகளவு பயிரிடுறதால கிராம்பு பயிர் விரிவாக்கம் செய்யப்படாம இருக்கு. கிராம்பு பயிருக்குத் தோட்டக்கலைத்துறை உதவி செய்யுது. ஆனால், நறுமணப்பொருள்கள் வாரியம் ஏலக்காய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் கிராம்பைவிட ஏலக்காய் விவசாயம் அதிகம். ஏலக்காய் அளவுக்குக் கிராம்புக்கு முக்கியத்துவம் கிடைக்கல. ஏலக்காய்க்கு நடவிலிருந்து மகசூல் வரைக்கும் முழு ஆதரவு கொடுக்குறாங்க. அது மாதிரி கிராம்பு பயிருக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும். இப்ப விவசாயத்துறையின் கீழதான் கிராம்பு இருக்கு. ஏலக்காய் மாதிரி கிராம்பும் நறுமணப்பொருள்கள் வாரியத் துக்குக் கீழே இருந்தால் நல்லா இருக்கும்’’ என்றார்.
தொடர்புக்கு,
லாலாஜி,
செல்போன்: 94447 56600
இப்படித்தான் கிராம்புச் சாகுபடி!
கிராம்புச் சாகுபடி செய்யும் முறைகள் குறித்து லாலாஜி பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே பாடமாக இடம்பெறுகின்றன.
ஆண்டு மழையளவு 150-200 செ.மீ, 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் கிராம்பு நடவு செய்யலாம். ஜூன் - ஜூலை மாதங்கள் நடவுக்கு ஏற்றது. செடிக்குச் செடி, வரிசைக்கு வரிசை 20 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 100 கன்றுகள் நடவு செய்யலாம். நடவுசெய்த 7-ம் ஆண்டிலிருந்து கிராம்பு பலன் கொடுக்கும். முழுமையான மகசூல் வருவதற்கு 15-20 ஆண்டுகள் ஆகும். ஜூன், ஜூலை மாதம் மழை வரும். அதனால் ஏப்ரல், மே மாதங்களில் களை எடுக்க வேண்டும். ஜூன் மாதம் உரம் இட வேண்டும். கிராம்பு பயிருக்கு உரமாக எலும்புப்பொடி கலந்த தொழுவுரம் 50 கிலோ பயன்படுத்த வேண்டும்.

கிராம்பைப் பொறுத்தவரை, தண்டு துளைப்பான் தாக்கினால் மரத்தின் தண்டில் ஓட்டை விழுந்து அவை பட்டுப்போய்விடும். நல்ல பனி மூட்டம் தொடர்ந்து இரண்டு மூன்று நாள்கள் இருக்கும்போது இலைகள் உதிர்ந்து போய்விடும். இவை இரண்டும்தான் கிராம்பு பயிரில் ஏற்படும் பிரச்னை. ஜூன், ஜூலை மாதத்தில் கிராம்பில் அரும்பு வரும் நேரம். நவம்பர், டிசம்பர் மாதத்தில் மலைப்பகுதியில் பலமான காற்று வீசும். அந்தச் சமயத்தில் நிறைய பூக்கள் உதிந்துவிடும். அது மகசூலைக் குறைக்கும். தண்டு துளைப்பானுக்கு ஆரம்பத்தில் வேப்பெண்ணெய் கரைசல் தெளிக்கலாம்.
நவம்பர் முதல் ஜனவரி வரை பூக்கள் பூக்கும். இந்தப் பூக்கள்தான் கிராம்பு. பூத்ததிலிருந்து 120 முதல் 180 நாள்களில் பூ மொக்குகள் பச்சை நிறத்திலிருந்து இளம் சிவப்பு நிறமாக மாறும். அதுதான் அறுவடை பருவம். இளம் சிவப்பாக மாறிய சில நாள்களில் பூக்கள் இதழ் விரியத் தொடங்கும். அதற்கு முன்பாகப் பறித்து விட வேண்டும். கொத்துக் கொத்தாகத் தோன்றும் மொட்டுக்களைக் கைகளால் அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக்குப் பிறகு, இளம் வெயிலில் 5 நாள்கள் காய வைக்க வேண்டும். 7-ம் ஆண்டில் ஒரு மரத்தில ஆண்டுக்கு அரைக்கிலோ அல்லது ஒரு கிலோ கிராம்புதான் கிடைக்கும். 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒரு மரத்திலிருந்து 5 முதல் 10 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
எது அசல் கிராம்பு?
ஏலக்காய், கிராம்பு, நல்ல மிளகு, பட்டை, ஜாதிக்காய் ஆகிய ஐந்தும் நறுமணப்பொருள்களில் மிக முக்கிய மானவை. நாம் இப்போது கடைகளில் வாங்கும் கிராம்பு கறுப்பு நிறத்தில் இருக்கும். அவை, எண்ணெய் எடுக்கப்பட்டவை. அந்தக் கறுப்புக் கிராம்புகள் பெரும்பாலும் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப் படுகின்றன. ஆனால், எண்ணெய் எடுக்காத சுத்தமான கிராம்புகள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
காய்களிலிருந்து புதிய கன்றுகள்
கிராம்பு மொட்டுகளைத் தொழிலாளர்கள் பறித்து எடுக்கிறார்கள். அதில் சில கிராம்பு மொட்டுகள் பறிக்கப் படாமல் மறைவாகக் கிடக்கும். அவை பூவாகி, பிஞ்சாகி, காயாகி மரத்திலிருந்து கீழே விழுந்து கிடக்கும். அந்தக் காய்களைச் சேகரித்து நடவு செய்து புதிய கன்றுகள் உருவாக்கப்படுகின்றன. பதியன் முறையிலும் கன்றுகளை உற்பத்தி செய்யலாம்.

கிராம்பு எண்ணெய்
கிராம்பு மதிப்புக்கூட்டல் பற்றிப் பேசிய லாலாஜி, ‘‘ஆரம்பகாலங்கள்ல சம்பளம் குறைவு என்பதால் விளைந்த மொட்டுக்களை மட்டும் பறிச்சு எடுப்பாங்க. ஆனா, இப்போ ஒரு கொத்தை அப்படியே பறிச்சு எடுக்கிறாங்க. அதில் மொட்டு, விரிந்தது எனப் பல வகையாக இருக்கும். அதைச் சாயங்கால நேரத்தில தனித்தனியாகத் தரம் பிரிச்சு எடுப்பாங்க. கிராம்பு கொத்தில் உள்ள காம்பைத் தனியாக எடுப்பாங்க. அதுக்கும் தனி விலை கிடைக்கும். அந்தக் காம்பைக் காய வெச்சு, கிராம்பு ஆயில் தயாரிக்கவும், மசாலா தயாரிக்கவும் பயன்படுத்துறாங்க. அதுபோலக் கிராம்பின் இலையும் காய வெச்சு மசாலா தயாரிக்கப் பயன்படுத்துறாங்க.
கிராம்பு மரத்தின் இலை, ஒரு கிலோ 20 ரூபாய். கிராம்பு இலையில இருந்து எண்ணெய் தயாரிக்கக் கூடங்குளத்தில் அரசு ஒரு தொழிற்சாலை அமைச்சு கொடுத்திருக்கு. அதுல கிராம்பு விவசாயிகள் இலையிலிருந்து எண்ணெய் எடுத்து விற்பனை செய்றாங்க. கிராம்பு இலையில் இருந்தும், காம்பில் இருந்தும் எடுக்கும் எண்ணெய், பல் வலிக் கான மருந்து தயாரிக்கவும், உணவுப் பொருள்களுக்கும் பயன்படுது’’ என்றார்.