தென்னை மரங்களுக்குக் காப்பீடு... விவசாயிகள் விரும்பும் கரும்பு... வாழைநாரில் வருமானம்...

நீங்கள் கேட்டவை
‘‘தென்னை மரங்களுக்குக் காப்பீடு செய்வது எப்படி? இதற்கு யாரை அணுகுவது?’’
@கே.சுஜாதா
சென்னையில் செயல்பட்டு வரும் தென்னை வளர்ச்சி வாரியத்தின் தமிழ்நாடு மண்டல இயக்குநர் டி.பாலசுதாகரி பதில் சொல்கிறார்.
‘‘தென்னை மரத்துக்குக் காப்பீடு வழங்கும் திட்டத்தைத் தென்னை வளர்ச்சி வாரியம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின்படி வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல், தீ விபத்து, நில அதிர்வு... இவற்றில் எந்த ஒரு பாதிப்பின் காரணமாக, தென்னை மரங்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ பாதிக்கப்பட்டால் இழப்பீடு பெறலாம்.
காப்பீடு செய்வதற்குத் தென்னை மரங்களைத் தனிப் பயிராகவோ, ஊடுபயிராகவோ சாகுபடி செய்யப்பட்டு இருக்க வேண்டும். வரப்புகளில் குறைந்த எண்ணிக்கையில் தென்னை மரங்கள் இருந்தாலும் காப்பீடு செய்ய முடியும்... இதற்கு குறைந்தபட்சம் 5 தென்னை மரங்கள் இருக்க வேண்டும். குட்டை, ஒட்டு ரகத் தென்னை மரங்கள் 4-ம் ஆண்டு முதல், நெட்டை மரங்கள் 7-வது ஆண்டு முதல் காப்பீடு செய்யலாம். அதிகபட்சமாக 60 ஆண்டுகள் வயதுகொண்ட மரங்களுக்கும்கூட காப்பீடு செய்ய முடியும்.

விவசாயிகள் இந்தக் காப்பீடு திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், பிரீமியம் தொகையில் 50 சத விகிதத்தைத் தென்னை வளர்ச்சி வாரியம் வழங்குகிறது. மீதியுள்ள 25 சதவிகிதத் தொகையை மாநில அரசு செலுத்தும். மீதி 25 சதவிகிதத்தை மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதும். இதன்படி விவசாயிகள் தரப்பில் 4 முதல் 15 வயதுள்ள ஒரு மரத்துக்கு 2.25 ரூபாயும் 16 முதல் 60 வயதுள்ள மரங்களுக்கு 3.50 ரூபாயும் பிரீமியம் செலுத்த வேண்டும்.
எதிர்பாராமல் தென்னை பாதிக்கப்பட்டால் 4 - 15 வயதுடைய மரத்துக்கு 900 ரூபாயும், 16 - 60 வயதுடைய மரத்துக்கு 1,750 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும்.
காப்பீடு படிவத்துடன், ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், சிட்டா, அடங்கல், புல எண் வரைபடம், விவசாயி புகைப்படம் உள்ளிட்டவற்றை அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். தகுதி உள்ள விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
இந்தத் திட்டம் குறித்து கூடுதல் தகவல் தேவைப்பாட்டால் எங்கள் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பயன்பெறவும்.’’
தொடர்புக்கு, இயக்குநர், தமிழ்நாடு மண்டல அலுவலகம், தென்னை வளர்ச்சி வாரியம், 47, டாக்டர் ராமசாமி ரோடு, கே.கே.நகர், சென்னை - 600078.
தொலைபேசி: 044 23662684.

‘‘கோ- 86032’ கரும்பு ரகத்தைப் பயிர் செய்ய விரும்புகிறோம். இதன் சாதக, பாதங்களைச் சொல்லுங்கள்?’’
கே.சண்முகம், முண்டியம்பாக்கம், விழுப்புரம்.
கோயம்புத்தூரில் உள்ள மத்திய அரசின் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத் தின் விரிவாக்க அலுவலர் முனைவர் ரஜூலா சாந்தி பதில் சொல்கிறார்.
‘‘தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயி களின் முதல் தேர்வு ‘கோ - 86032’ ரகம்தான். இந்த ரகத்தை 2000-ம் ஆண்டு வெளியிட்டோம். இதற்கு முன்பே பல ஆண்டுகள் விவசாயி களின் வயலில் களப் பரிசோதனைகள் நடந்தன. இதைக் கரும்பு ரகங்களின் அதிசயம் என்றே சொல்லி வருகிறோம். இந்த ரகத்தின் மூலம் ஏக்கருக்கு 100 டன்னுக்கு மேல் மகசூல் எடுக்கும் விவசாயிகள் உள்ளனர். இந்த ரகம் சர்க்கரை ஆலைகளுக்கும் ஏற்றது. வெல்லம் உற்பத்திக்கும் சிறப்பாக இருக்கிறது. இதன் சர்க்கரை கட்டுமானம் 9 முதல் 10.5 என்ற அளவில் உள்ளது. வறட்சியைத் தாங்கி வளரும். மண் வளம் குறைவாக இருந்தாலும் தாக்குப்பிடித்து மகசூல் கொடுக்கும். பக்கக் கிளைகள் உருவாகி விளைச்சலைக் கூட்டும். கரும்புத் தோகையை உரித்துவிட்டால், சுணை இல்லாமல் இருக்கும். மேலும், காற்றோட்டம், சூரிய ஒளி நன்றாகப் பயிருக்குக் கிடைக்கும். கரும்புத் தோகை மாடுகளுக்கு அருமையான தீவனம். ஆக, தோகை உரிப்பதால் கரும்பு விளைச்சலும் கூடும். கால்நடைகளுக்குத் தீவனமும் கிடைக்கும் என்பதெல்லாம் இதன் சிறப்புத் தன்மைகள்.

இந்தக் கரும்பு மென்மையாக இருக்கும். இதனால், எலித் தொல்லை அதிகமாக இருக்கும். இளங்குருத்துப் புழு மற்றும் இடைக் கணுப்புழு தாக்குதலைத் தாங்கு வதற்குச் சக்தியற்றது. இளங்குருத்துப் புழுவின் தாக்குதல் வறட்சியான கோடைக் காலத்திலும், கட்டைப் பயிரிலும் அதிகமாகக் காணப்படுகிறது. கரும்பு நடவு செய்த 35-வது நாளில் ஸ்டர்மியாப்சிஸ் ஒட்டுண்ணிகளை விட்டு இந்தத் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
அடுத்து, நீண்ட காலமாக இந்த ரகத்தை விவசாயிகள் மீண்டும் மீண்டும் பயிர் செய்து வருவதால், கரும்பு மெல்லியதாக மாறி வருகிறது. இதைத் தவிர்க்கத் திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்படும் கரும்பு நாற்றுகளைப் பயன்படுத்தும்படி ஆலோசனை வழங்கி வருகிறோம். இதன் மூலம் நன்கு திரட்சியான கரும்பு விளைச்சல் கிடைத்து வருகிறது. எங்கள் நிறுவனத்திலும் திசு வளர்ப்பு நாற்றுகள் உற்பத்தி செய்து வழங்கி வருகிறோம்.’’
தொடர்புக்கு, கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம், வீரகேரளம், கோயம்புத்தூர் மாவட்டம். தொலைபேசி; 0422 2472621/ 219,
செல்போன்: 94421 86812.

‘‘வாழைநார் மூலம் என்ன வகையான பொருள்கள் செய்யலாம். இதற்கு எங்கு பயிற்சி கொடுக்கிறார்கள்?’’
@கே.பாலமுருகன், மோகனூர்.
‘‘அறுவடைக்குப் பின் வீணாகும் வாழை நார்க் கழிவுகளைக் கொண்டு, கைப்பைகள், கூடைகள், சட்டைகள், சேலைகள்... என்று பல விதமான கைவினைப்பொருள்கள் தயாரிக்க முடியும். உள்ளூரில் மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் இதை ஏற்றுமதி செய்து நல்ல வருமானம் எடுக்கும் விவசாயிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இதற்கான பயிற்சி திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தில் கொடுத்து வருகிறார்கள்.’’
தொடர்புக்கு, இயக்குநர், தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், திருச்சி - 620 102,
தொலைபேசி: 0431 2618125.