மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

கூந்தல் தைலம், குளியல் சோப்பு, கொசு விரட்டி... ஆண்டுக்கு ரூ. 14 லட்சம்... தேங்காய் மதிப்புக்கூட்டல்!

தேங்காய் உலர வைக்கும் பணி
பிரீமியம் ஸ்டோரி
News
தேங்காய் உலர வைக்கும் பணி

மதிப்புக்கூட்டல்

‘‘என்னோட தோட்டத்துக்கு நம்மாழ்வார் 13 முறை வந்திருக்கார். எனக்கு நிறைய ஆலோசனைகள் சொல்லியிருக்கார். ‘ஒரு விவசாயி தன்னோட விளைபொருளை வெற்றிகரமா அறுவடை செஞ்சு விற்பனை செஞ்சிட்டா, பாதிக் கிணத்த தாண்டின மாதிரி. அதுவே தன்னோட விளைபொருளை மதிப்புக்கூட்டி விற்பனைச் செஞ்சா முழுக் கிணத்த தாண்டினதா அர்த்தம்’னு அவர் சொன்ன அந்த வார்த்தைகள் இப்பவும் என் மனசுல ஆழமா பதிஞ்சு கிடக்கு. விவசாயத்துல நான் வளர அவரும் ஒரு முக்கியக் காரணம்’’

மதிப்புக்கூட்டிய பொருள்களுடன்
மதிப்புக்கூட்டிய பொருள்களுடன்

நம்மாழ்வார் குறித்து நெகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மது.ராமகிருஷ்ணன். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயத்தில் தென்னை சாகுபடி செய்து வரும் இவர், நம்மாழ்வாருடன் நெருக்கமாக இருந்தவர். சமீபகாலமாகத் தேங்காய்க்கு லாபகரமான விலை கிடைக்காததால், தென்னை விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வரும் நிலையில், இவர் மதிப்புக்கூட்டுதல் மூலம் கூடுதல் லாபம் பார்த்து வருவது கவனம் ஈர்க்கிறது.

மனைவியுடன்  மது.ராமகிருஷ்ணன்
மனைவியுடன் மது.ராமகிருஷ்ணன்

நம்மாழ்வாருடனான இவருடைய அனுபவம் குறித்தும், தென்னை மதிப்புக்கூட்டுதல் குறித்தும் விரிவாக அறிந்துகொள்ள ஒரு பகல்பொழுதில் இவருடைய தோட்டத்திற்குச் சென்றோம். பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டி பட்டினத்தில் வசித்தாலும், நரிகல்பதி கிராமத்தில்தான் இவருடைய தென்னந்தோட்டம் அமைந்துள்ளது. நாம் அங்கு சென்றபோது, விட்டுவிட்டு பெய்த மழையும் பசுமை சூழலும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தியது. தன்னுடைய தோட்டத்தில் விளைந்த தேங்காய்களிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களான தேங்காய் எண்ணெய், சோப்பு, கொசு விரட்டி உள்ளிட்டவற்றை மேற்பார்வை செய்து கொண்டிருந்த மது. ராமகிருஷ்ணன், புன்சிரிப்புடன் நம்மை வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்,

செக்கு
செக்கு


“விவசாயம்தான் எங்க குடும்பத்தோட ஜீவாதாரம். நான் முதுகலைப் பொறியியல் பட்டப்படிப்பு முடிச்சிட்டு சில வருஷங்கள் கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல இணைப் பேராசிரியரா வேலைப்பார்த்தேன். அதுக்குப் பிறகு உரக்கடை நடத்திக்கிட்டே, எங்க அப்பாவோடு சேர்ந்து விவசாயத்தையும் கவனிச்சிக்கிட்டேன். 1992-ம் வருஷம் என்னோட அப்பா இறந்த பிறகு, முழுமையா விவசாயத்தைக் கவனிச்சிக்க வேண்டிய சூழல் உருவாச்சு. எங்க குடும்பத்துக்குச் சொந்தமான 50 ஏக்கர் நிலத்துல... 30 ஏக்கர்ல தென்னையும், மீதி 20 ஏக்கர்ல தேக்கு, மா, தைல மரம் உள்ளிட்ட பயிர்களும் இருக்கு. ரசாயன இடுபொருள்களுக்குச் செலவு அதிகமானதுனால, தென்னை சாகுபடியில ரொம்பக் குறைவான லாபம்தான் கிடைச்சது. இதுக்கு என்னதான் தீர்வுங்கற தேடுதல்ல தீவிரமா இறங்கினப்பதான் இயற்கை விவசாயம் தொடர்பான புத்தகங்கள் எனக்குக் கிடைச்சது. குறிப்பா ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மசானபு ஃபுகோகா எழுதிய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’, நம்மாழ்வார் எழுதிய ‘இருளில் சில வெளிச்சங்கள்’ உள்ளிட்ட புத்தகங்கள் என் மனசுல பெரிய தாக்கத்தை ஏற்படுத்திச்சு.

2008-ல் பண்ணையில் நடைபெற்ற நம்மாழ்வார் பயிற்சி
2008-ல் பண்ணையில் நடைபெற்ற நம்மாழ்வார் பயிற்சி

1997-ம் வருஷம் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். 1998-ம் வருஷம் கோயம்புத்தூர் பக்கத்துல உள்ள பேரூர்ல நடந்த இயற்கை விவசாயம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில நம்மாழ்வாரை முதல் முறையா சந்திச்சேன். 2000-ம் வருஷம் நம்மாழ்வார் என்னோட பண்ணைக்கு வந்தார். ‘சந்தோஷ் பண்ணை’னு பெயர் சூட்டி, ஆலமரக்கன்று ஒன்றையும் நடவு செஞ்சிட்டுப் போனாரு. அதுக்குப் பிறகு அடிக்கடி எங்களோட சந்திப்புகள் நிகழ்ந்துச்சு. நம்மாழ்வாரும் நானும் சேர்ந்து ‘இயற்கை வேளாண்மை இதழ்’ங்கற பேர்ல ஒரு பத்திரிகை நடத்தினோம். அவர் நிர்வாக ஆசிரியர், நான் பொறுப்பாசிரியர். ஒரு வருஷம் வரைக்கும்தான் அந்தப் பத்திரிகையை எங்களால நடத்த முடிஞ்சுது. 2008-ம் வருஷம் பசுமை விகடன் சார்புல நம்மாழ்வார் நடத்தின ‘இனியெல்லாம் இயற்கையே’ பயிற்சி வகுப்பு என்னோட தோட்டத்துல நடந்துச்சு. அது ஒரு மறக்க முடியாத அனுபவம்’’ என்று சொன்னவர் தென்னை சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

2008-ல் பண்ணையில் நடைபெற்ற நம்மாழ்வார் பயிற்சி
2008-ல் பண்ணையில் நடைபெற்ற நம்மாழ்வார் பயிற்சி

வருமானம்

தேங்காய் விற்பனை


“இந்த தென்னந்தோட்டத்தோட மொத்த பரப்பு 30 ஏக்கர். ஆரம்பத்துல இங்க 2,000 மரங்கள் இருந்துச்சு. யானைகளோட தாக்குதலாலும், நோய் பாதிப்புகளாலும் 500 மரங்கள் சேதமாயிடுச்சு. இப்ப 1,500 மரங்கள் இருக்கு. இதெல்லாமே 45-75 வருஷ மரங்கள். ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்குச் சராசரியா 100 காய்கள் வீதம் 1,500 மரங்கள் மூலம் மொத்தம் 1,50,000 காய்கள் கிடைக்குது. இதுல 50 சதவிகிதத்தைக் காய்களாகவே விற்பனை செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஒரு காய்க்குக் குறைந்தபட்சம் 8 ரூபாய் வீதம் அதிகபட்சம் 20 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கும். சராசரி விலையா 12 ரூபாய் வீதம் 75,000 தேங்காய்கள் விற்பனை மூலமா வருஷத்துக்கு 9,00,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இடுபொருள், களையெடுப்பு, நீர் பாசனம், அறுவடை உள்ளிட்ட செலவுகள் 3,00,000 ரூபாய் போக, மீதி 6,00,000 ரூபாய் நிகர லாபமா கிடைக்குது.

தென்னந்தோட்டம்
தென்னந்தோட்டம்

மதிப்புக்கூட்டுதல்

என்னோட தோட்டத்துல விளையுற தேங்காய்கள்ல 50 சதவிகிதத்தை... தேங்காய் எண்ணெயாகவும் விர்ஜின் தேங்காய் எண்ணெயாகவும் மதிப்புக்கூட்டி விற்பனைச் செய்றேன். அதுமட்டுமில்லாம, தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி குளியல் சோப்பு, காயத்தை ஆற்றக்கூடிய களிம்பு, கொசு விரட்டி உள்ளிட்ட பொருள்களும் தயார் பண்ணி விற்பனை செய்றேன். 75,000 தேங்காய்கள்ல இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயார் செஞ்சு விற்பனை செய்றது மூலம் வருஷத்துக்குச் சராசரியா 11,50,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. சாகுபடி செலவு, மதிப்புக்கூட்டுதலுக்கான செலவுகள் போக, மதிப்புக் கூட்டுறது மூலமா வருஷத்துக்கு 8,00,000 ரூபாய் நிகர லாபமா கிடைக்குது. காய்களா விற்பனை செய்றது மூலம் கிடைக்குற லாபத்தை விட, மதிப்புக்கூட்டுறது மூலமா 2 லட்சம் ரூபாய் கூடுதலா லாபம் கிடைக்குது. அதாவது 33 சதவிகிதம் கூடுதல் லாபம். ஆக, மொத்தம் 14,00,000 ரூபாய் லாபம் கிடைக்குது. என்னோட உழைப்புக்கும் அனுபவத்துக்கும் கிடைக்குற வெகுமதி இது.

தென்னந்தோட்டம்
தென்னந்தோட்டம்

பராமரிப்பு

வருஷத்துக்கு ஒரு தடவை, ஒரு மரத்துக்கு 50 கிலோ மாட்டு எரு, 20 கிலோ ஆட்டு எரு, 10 கிலோ மண்புழு உரம் கொடுக்குறேன். இங்க தண்ணிக்குப் பிரச்னை இல்லை. இருந்தாலும் தண்ணியைச் சிக்கனப்படுத்துறதுக்காகவும், அதேசமயம் தேவையை விட அதிகமா தண்ணி கொடுத்துட கூடாதுங்கறதுகாகவும், சொட்டு நீர்ப் பாசனம் அமைச்சு, மண்ணோட ஈரத்தன்மைக்கு ஏற்ப தண்ணி கொடுக்குறேன். ஒரு தென்னந்தோட்டம் எப்படி இருந்தா, அது வெற்றிகரமான விளைச்சல் கொடுக்கும்ங்கறதுக்கு நம்மாழ்வார் ஒரு தத்துவம் சொல்வார்... ‘மேலே பார்த்தா வானம் தெரியக்கூடாது... கீழே பார்த்தா மண் தெரியக்கூடாது’. இதுக்கு என்ன அர்த்தம்னா... தென்னை மரங்களோட மட்டைகள் நல்லா நீளமா வளர்ந்து, ஒண்ணோடு ஒண்ணு உரசிக்கிட்டு இருக்கணும். சூரிய ஒளி நேரடியா மண்ணுல படாத அளவுக்கு, களைகள் மண்டி உயிர் மூடாக்கு உருவாகி இருக்கணும். பொதுவா தென்னை விவசாயிகள் தங்களோட தென்னந்தோட்டங்களை ரொம்பத் தூய்மையா வச்சக்கணும்னு நினைப்பாங்க. ஒரு சின்னக் களைச்செடிகள்கூட இருக்கக் கூடாதுனு நினைப்பாங்க. ஆனா அதுமாதிரி இருக்குறது ரொம்பத் தவறுனு நம்மாழ்வார் சொல்வார்.

சோலார் உலர்த்தி
சோலார் உலர்த்தி

மண்ணுல ஈரப்பதம் தக்க வைக்கப்படுறதுக்கும், நுண்ணுயிரிகள் பெருகுறதுக்கும் உயிர் மூடாக்கு ரொம்ப அவசியம். என்னோட தென்னந்தோட்டத்தைப் பொறுத்த வரைக்கும் பார்த்தீனியம் செடிகளை மட்டும் தான் வேரொடு புடுங்கி அப்புறப்படுத்திக்கிட்டே இருப்பேன். காரணம் பார்த்தீனியம் செடிகள் ரொம்ப வேகமா பரவா கூடியது. ஒரு செடிக்கு 400-500 பூக்கள் உருவாகி, காய்களா மாறி, விதைகளா விழும். இதனால பார்த்தீனியம் செடிகளைக் கட்டுப்படுறதுல ரொம்ப கவனமா இருப்பேன். என்னோட தோட்டத்துல எந்த இடத்துல பார்த்தீனியம் பார்த்தா கூட, உடனே வேரோடு புடுங்கி அப்புறப்படுத்திடுவேன். மற்ற களைச்செடிகள், புற்களை அப்படியே விட்டுடுவேன். தேங்காய்களைப் பொறுக்க முடியாத அளவுக்கு அதிகமா களைகள் மண்டின பிறகு ரோட்டோவேட்டர் மூலம் உழவு ஓட்டி அந்தக் களைகளை மண்ணுக்கு உரமாக்கிடுவேன். மண்ணுக்கு உயிர் மூடாக்கு ரொம்ப அவசியம்ங்கறதை நம்மாழ்வார் தாரக மந்திரம் மாதிரி வலியுறுத்திக்கிட்டே இருந்தார். இது மனசுல ரொம்ப எளிமையா பதியுற மாதிரி, ‘தோட்டத்துல பாதியை குப்பை மேடாக்கு... உழைப்புல பாதியை மிச்சமாக்கு’னு சொல்வாரு. அவரோட வார்த்தைகள் இப்பவும் என்னோட காதுகள்ல ஒலிச்சிக்கிட்டே இருக்கு’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

தொடர்புக்கு, மது. ராமகிருஷ்ணன், செல்போன்: 94424 16543

(மாலை 6-8 மணி வரை)

செக்கு எண்ணெய் தயாரிப்பு
செக்கு எண்ணெய் தயாரிப்பு

சோலார் டிரையர்!

“அதிக வெயில் இல்லாத நாள்கள்ல கூடத் தேங்காய்களை உலர்த்தி, கொப்பரை தயார் செய்றதுக்காகச் சோலார் டிரையர் அமைச்சிருக்கேன். தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக மரச்செக்கும் அமைச்சிருக்கேன். இயற்கை விவசாயத்துல விளைஞ்ச தேங்காய்கள்ல இருந்து தயார் செய்யப்பட்ட மரச்செக்கு எண்ணெய்ங்கறதுனால மக்கள் ரொம்ப ஆர்வத்தோடு என்னோட தேங்காய் எண்ணெயை வாங்குறாங்க’’ என்கிறார் மது.ராமகிருஷ்ணன்.

எப்படியெல்லாம் கை மாறுகிறது!

“என் தோட்டத்துல விளைஞ்ச தேங்காய்களை வியாபாரிகள்கிட்ட விற்பனை செஞ்ச பிறகு, எப்படியெல்லாம் கைமாறுதுனு உன்னிப்பா கவனிச்சேன். ஒரு சிறு வியாபாரி என்கிட்ட தேங்காய்களை வாங்கி, அதைப் பெரிய வியாபாரிகிட்ட விக்கிறார். பெரிய வியாபாரி அதைக் கொப்பரை உற்பத்தியாளர்கிட்ட கொடுக்குறார். அவர் அதை எண்ணெய் ஆலைகளுக்கு விற்பனை செய்றார். அந்த ஆலை தயார் செய்யக்கூடிய எண்ணெய், டீலர்கள் மூலம் கடைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, கடைசியாதான் வாடிக்கையாளர்கள் கைக்குப் போகுது.

தேங்காய் உலர வைக்கும் பணி
தேங்காய் உலர வைக்கும் பணி

ஒவ்வொருத்தரும் சுமார் 10 சதவிகிதம் லாபம் வைத்து வச்சி விக்கிறதுனால, மொத்தம் 79 சதவிகித லாபம் பகிரப்படுது. நம்ம தோட்டத்துல விளையுற தேங்காய்களை நாமளே மதிப்புக்கூட்டி விற்பனை செஞ்சா, நமக்கும் கூடுதல் லாபம் கிடைக்கும்... மக்களுக்கும் கொஞ்சம் குறைவான விலையில நம்ம பொருள்களை விற்பனைச் செய்யமுடியும்னு முடிவெடுத்தேன்’’ என்கிறார் மது.ராமகிருஷ்ணன்.

ஷாம்பூ, மூலிகை கொசுவிரட்டி

“நான் தயார் செய்யக்கூடிய குளியல் சோப்புகளை நிறைய வாடிக்கையாளர்கள் ஷாம்பாகவும் பயன்படுத்துறாங்க. ரசாயன கலப்பு இல்லாம, தேங்காய் எண்ணெயையும் மூலிகைகளையும் மட்டுமே பயன்படுத்தித் தயார் செய்றதுனால, இதைத் தாரளமாகத் தலைக்குப் பயன்படுத்தலாம். வெட்டிவேர் அதிகளவு சேர்க்கப்பட்ட சோப்பும் தயாரிக்கிறோம். அந்தச் சோப்பை பயன்படுத்திக் குளிச்சா நல்ல புத்துணர்ச்சி ஏற்படுறதை உணர முடியும். கடல்பாசியிலயும் சோப்பு தயார் செய்றோம்.

சோப்பை உலர வைத்தல்
சோப்பை உலர வைத்தல்

மூலிகை கொசுவிரட்டி

தேங்காய் எண்ணெயையும்... நொச்சி, சோற்றுக்கற்றாழை, மிளகு உள்ளிட்ட இன்னும் சில பொருள்களைக் கலந்து மூலிகை கொசுவிரட்டி தயார் செஞ்சு விற்பனை செஞ்சிக்கிட்டு இருக்கேன். கடைகள்ல கிடைக்ககூடிய வழக்கமான கொசுவிரட்டியை கொளுத்தி வச்சா, சுவாச பிரச்னை ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் அதிகம். ஆனா, நான் தயார் செய்யக்கூடிய மூலிகை கொசு விரட்டியினால எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. அதேசமயம் இந்தக் கொசுவிரட்டி, கொசுக்களை நல்லாவே கட்டுப்படுத்துது.

வெர்ஜின் தேங்காய் எண்ணெய்

விர்ஜின் தேங்காய் எண்ணெய் தயாரிக்கிறோம். இந்த எண்ணெய் அதிக மருத்துவக் குணம் கொண்டது. இதுவும் தேங்காயில் இருந்து எண்ணெய் எடுப்பது போலதான். ஆனா இதற்கான செயல்முறை வித்தியாசமானது. விர்ஜின் எண்ணெயைப் பொறுத்தவரை, தேங்காயை உடைச்சி, நாம சட்னிக்கு எடுப்பதுபோலத் தேங்காய்ப்பூ திருகி எடுப்போம். அதை மிக்ஸி அல்லது கிரைண்டர்ல அரைச்சி, பால் பிழிஞ்சி எடுப்போம். சக்கையை நீக்கிட்டு, அந்தப் பாலை நொதிக்கவிட்டு, எண்ணெயை தனியா பிரிச்சி எடுப்போம். இதுக்குப் பேர்தான் விர்ஜின் தேங்காய் எண்ணெய். ஒரு லிட்டர் விர்ஜின் தேங்காய் எண்ணெய் தயார் செய்ய, 40 தேங்காய்கள் தேவைப்படும்’’ என்கிறார் மது.ராமகிருஷ்ணன்.

சோப்பு கட்டிகள் தயாரிக்கும் பணி
சோப்பு கட்டிகள் தயாரிக்கும் பணி

மூலிகைகள் கலந்த
குளியல் சோப்பு

‘‘தேங்காய் எண்ணெயையும் மூலிகைகளையும் கலந்து குளியல் சோப்பு தயார் செய்யலாம்னு முடிவெடுத்து, அதுக்கான பயிற்சிகள்ல கலந்துகிட்டேன். முழுமையா பயிற்சி பெற்ற பிறகு இதுக்கான தயாரிப்புல இறங்கினேன். நான் தயார் செய்யக்கூடிய மூலிகை சோப்புகளுக்கு விற்பனை வாய்ப்பு பிரகாசமா இருக்கு. சந்தனம், எலுமிச்சை, பப்பாளினு மூணு விதமான நறுமணங்கள்ல சோப்பு தயார் செய்றோம். சோற்றுக்கற்றாழை அதிகமா சேர்க்கப்பட்ட சோப்பும் தயார் செய்றோம். அதுல எந்த ஒரு நறுமணத்தையும் ஏற்படுத்த முடியாது. ஆனாலும் இதை வாங்குறதுக்குனு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்காங்க’’ என்கிறார் மது.ராமகிருஷ்ணன்.

சோப்பு தயாரிப்பு
சோப்பு தயாரிப்பு

மூலிகைக் கூந்தல் தைலம்

“துளசி, சோற்றுக்கற்றாழை, செம்பருத்தி, வெந்தயம் உள்பட இன்னும் பல பொருள்களைத் தேங்காய் எண்ணெயில கலந்து மூலிகைக் கூந்தல் தைலம் தயார் செய்றோம். இதுக்குப் பெண்கள் மத்தியில அதிக வரவேற்பு இருக்கு. இதுல எந்த ஒரு ரசாயனமும் கலக்காததுனால, கூந்தலுக்கு நல்ல ஆரோக்கியம் கொடுக்குது’’ என்கிறார் மது.ராமகிருஷ்ணன்.

தேக்கு இலை நிறமி!

‘‘சோப்பு தயார் செய்ய, ரசாயனம் கலந்த செயற்கை நிறமிகள் பயன்படுத்துறதுதான் வழக்கம். ஆனா, நாங்க தேக்கு இலையில இருந்து இயற்கை நிறமியை எடுத்து பயன்படுத்துறோம். சோப்புக் கெட்டித்தன்மை அடையுறதுக்கு, இந்தத் தொழில்ல உள்ளவங்க பெரும்பாலும் ரசாயனம்தான் பயன்படுத்துவாங்க. ஆனா நாங்க க்யூரிங் எனப்படும் இயற்கையான முறையைக் கடைப்பிடிச்சிக்கிட்டு இருக்கேன். காற்றுல வச்சிட்டா தானா இறுகிடும். இந்த முறையில சோப்புக் கெட்டியாக, 30 நாள்கள் தேவைப்படும். நாட்கள் அதிகமானாலும்கூட ரசாயனத்தைத் தவிர்க்கணும்ங்கறதுனால இந்த முறையைக் கடைப்பிடிச்சிக்கிட்டு இருக்கோம்.

இவர்கள்தான் என் வாடிக்கையாளர்கள்

தோட்டத்தைப் பார்வையிட நிறைய பேர் வருவாங்க. நாங்க செய்யக்கூடிய சோப்புகளை வாங்கிப் பயன்படுத்திப் பார்த்துட்டு அவங்க நாலஞ்சு பேர்கிட்ட சொல்றாங்க. இப்படியேதான் எங்களோட சோப்பு பிரபலமடைஞ்சுக்கிட்டே இருக்கு. வெளியூர்கள்ல உள்ள வாடிக்கையாளர்களுக்கு கூரியர், பார்சல் சர்வீஸ் மூலம் சோப்புகளை அனுப்பிக்கிட்டு இருக்கோம். தமிழ்நாட்டுல பல மாவட்டங்கள்லயும் இருக்கக்கூடிய இயற்கை அங்காடிகளுக்கும் பொருள்களை அனுப்பிக்கிட்டு இருக்கோம். மூலிகைகள்ல தயார் செய்யப்பட்ட வழக்கமான சோப்பை 60-90 ரூபாய் விலையில விற்பனைச் செய்றோம். விர்ஜின் எண்ணெயில தயார் செய்யப்பட்ட சோப்புக்கு 120 ரூபாயும், கடல்பாசி சோப்புக்கு 150 ரூபாயும் விலை நிர்ணயம் செஞ்சிருக்கோம். விர்ஜின் தேங்காய் எண்ணெய் விலை... 100 மி.லி 200 ரூபாய். சமையல் தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் 300 ரூபாய். கூந்தலுக்கான மூலிகை எண்ணெய் 100 மி.லி 60 ரூபாய்னு விற்பனை செஞ்சிக்கிட்டு இருக்கோம்.

தென்னையில் மதிப்புக் கூட்டிய பொருள்கள்
தென்னையில் மதிப்புக் கூட்டிய பொருள்கள்

தீக்காயங்களைக் குணப்படுத்தும் களிம்பு

விர்ஜின் தேங்காய் எண்ணெயையும், தேக்கு மரத் துளிரையும் பயன்படுத்தி, ஒரு களிம்பு தயார் செஞ்சு விற்பனை செஞ்சுக்கிட்டு இருக்கோம். உடல்ல வெட்டுக் காயம், தீக்காயம் ஏற்பட்ட பகுதியில இந்தக் களிம்பு மருத்தை தடவினா, ரொம்ப விரைவா குணமாகிடும். இதை விடவும் முக்கியச் சிறப்பம்சம் என்னென்னா, காயம் ஆறின பிறகு அங்க தழும்பு இருக்காது. இந்தக் களிம்போட விலை... 30 கிராம் 150 ரூபாய்’’ என்கிறார் மது.ராமகிருஷ்ணன்.