மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

வீடுகள்தோறும் ஜல்லிக்கட்டுக் காளைகள்... டெல்டாவில் ஓர் ஆச்சர்ய கிராமம்!

கிராமத்தில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டுக் காளைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கிராமத்தில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டுக் காளைகள்

பாரம்பர்யம்

ஜல்லிக்கட்டுக் காளைகள் என்று சொன்னாலே, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்ப்பு என்பது மிகவும் அரிது. இந்நிலையில்தான் தஞ்சாவூரில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளஅனைத்து வீடுகளிலும் ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்க்கப்படுவது கவனம் ஈர்க்கிறது. ‘‘இது எங்கள் கிராமத்தில் பல தலைமுறைகளாகத் தொடரும் பெருமித அடையாளம்’’ என்கிறார்கள், இப்பகுதி விவசாயிகள்.

தஞ்சாவூரிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள செழிப்பான கிராமம், பொட்டுவாச்சாவடி. காவிரியின் கிளை ஆறான கல்லணை கால்வாய் இங்கு கடந்து செல்வது இவ்வூரின் செழிப்பில் தெரிகிறது. நெல், உளுந்து, கடலை, சோளம் உள்ளிட்ட பலவிதமான பயிர்களும் வெற்றிகரமாக விளையக்கூடிய வளமான மண். இது ஓரு சின்னஞ்சிறு கிராமம். 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. இங்குள்ள விவசாயிகள் பயிர் சாகுபடியோடு, கால்நடை வளர்ப்பிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். தமிழகத்தில் எங்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்தாலும் தங்களுடைய காளைகளைக் களமிறக்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

பாஸ்கர்
பாஸ்கர்

ஒரு காலை வேளையில் பொட்டுவாச்சாவடி கிராமத்திற்குச் சென்றோம். தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் தற்போது ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்க இருப்பதால் அதில் பங்கேற்பதற்காக, தங்களுடைய காளைகளுக்கு இப்பகுதி விவசாயிகள் தீவிர பயிற்சிகள் கொடுத்து கொண்டிருந்தனர். தென்னந்தோப்பின் நடுவில் ஒரு கம்பீரமான காளையைக் கயிறு கட்டி நிற்க வைத்திருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியின்போது, பின் பக்கமாக வந்து அடக்க வரும் மாடு பிடி வீரனை சாதுர்யமாக எதிர்கொள்ள அந்தக் காளைக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார், இதன் உரிமையாளரான பாஸ்கர். கம்பீரமான தோற்றத்தில் இருந்த அந்தக் காளை நம்மைக் கண்டதும் சீறிப் பாய்ந்து முட்ட வந்தது. அதனை லாவகமாகக் கையாண்டு அமைதிப்படுத்திய பாஸ்கர்,

கிராமத்தில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டுக் காளை
கிராமத்தில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டுக் காளை

‘‘பொங்கலுக்கு மூணு மாசத்துக்கு முன்பிருந்தே எங்களோட காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தயார்படுத்த ஆரம்பிச்சுடுவோம். என்கிட்ட மூணு காளைகள் இருக்கு. இதுங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளும் செஞ்சுருக்கேன். கொசுக் கடிக்காம இருக்க, எப்பவும் கொட்டகையில ஃபேன் ஓடிக்கிட்டே இருக்கும். அரிசி தவிடு, கோதுமை தவிடு, உளுந்து தோல், கொண்டைக்கடலை தோல், பருத்திக்கொட்டை, கடலைப் புண்ணாக்கு, எள்ளுப்புண்ணாக்கு... இதையெல்லாம் தண்ணியில கலந்து ஊற வச்சு, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் தீவனமா கொடுப்பேன். பயிர் அறுவடை செய்யப்பட்ட நிலங்கள்ல, ஒரு நீளமான கயிற்றை கட்டி தினமும் மேய்ச்சலுக்கு விடுவேன். இதனால் நல்ல காற்றோட்டம் கிடைக்குறதோட மட்டுமல்லாம... களைகளா வளர்ந்திருக்குற மூலிகைச் செடிகளையும் சாப்பிட்டு, என்னோட காளைகள் நல்லா ஆரோக்கியமா வளருது.

கிராமத்தில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டுக் காளை
கிராமத்தில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டுக் காளை

தினமும் குளிப்பாட்டி நல்லா சுத்தமா பராமரிப்பேன். ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்குறதுக்கு மூணு மாசத்துக்கு முன்பிருந்து என்னோட காளைகளை நடைப்பயிற்சிக்கு தினமும் அழைச்சுக்கிட்டு போவேன். தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடக்கும். ஏரி, குளங்கள்ல நீச்சல் பயிற்சியும் கொடுப்பேன். குத்துச்சண்டைக்குப் பயிற்சி செய்ற மாதிரி இரண்டு மரங்களுக்கு நடுவுல மணல் மூட்டையைக் கட்டி தொங்க விட்டு, அதை முட்டுறதுக்குப் பயிற்சி கொடுப்பேன்.

கிராமத்தில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டுக் காளை
கிராமத்தில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டுக் காளை

மாடு பிடி வீரர்கள் கொடுக்குற சத்தத்துக்குத் தன்னைத் தயார்படுத்தி, தைரியமா நிக்கவும் என்னோட காளைகளுக்குப் பயிற்சி கொடுப்பேன். காளையைச் சுத்திலும் நிறைய ஆள்கள் நின்னுக்கிட்டுச் சத்தம் கொடுத்து பழக்கப்படுத்துவேன். நோய் எதிர்ப்பு சக்திக்காக இரண்டு நாள்களுக்கு ஒரு முறை காளையின் கொம்பு, புருவம், கண் இமையிலயும், உடம்பு பகுதி முழுக்கவும் வேப்ப எண்ணெய் தேய்ப்பேன். காளை படுக்குற இடத்துல தண்ணீரில் மஞ்சள் தூளை கலந்து தெளிப்பேன்.

கிராமத்தில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டுக் காளை
கிராமத்தில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டுக் காளை

செரிமான சக்திக்காக 15 நாள்களுக்கு ஒரு முறை பிரண்டை, மிளகாய், பூண்டு, மிளகு, வெங்காயம், கல் உப்பு... இதையெல்லாம் ஒண்ணா கலந்து இடிச்சி... அதுல கொஞ்சம் தண்ணி சேர்த்து உருண்டையா உருட்டி ஊட்டி விடுவேன். இந்த ஊர்ல ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்க்குற எல்லாருமே மாடுகளுக்குப் பேர் வச்சு அழைக்குறோம். என்கிட்ட உள்ள காளைகளுக்கு... கருப்பன், அப்பு, கொம்பன்னு பேர் வச்சிருக்கேன். எங்க வீட்டுப்புள்ளைங்களை எப்படிப் பாசமா பார்த்துக்குவோமா, அதுமாதிரிதான் இந்தக் காளைகளையும் அரவணைக்குறோம். என்னோட கருப்பன், அலங்காநல்லூர் போட்டியில மூணு தடவை ஜெயிச்சு, பரிசுகள் வாங்கியிருக்கான். போட்டியில கலந்துக்கிட்டு ஊருக்கு திரும்பி வர்றப்ப, கருப்பனை சுத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூடி நிப்பாங்க. நாட்டு மாடு இனம் அழியாமல் காக்கவும், எங்களோட முன்னோர்கள் கடைப்பிடிச்ச பாரம்பர்யத்தைத் தொடரணும்ங்கற நோக்கத்துனாலதான், எங்க ஊர் விவசாயிங்க எல்லாருமே இப்ப வரைக்கு ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்க்குறதை தொடர்ந்துக்கிட்டு இருக்கோம்’’ எனத் தெரிவித்தார்.

கிராமத்தில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டுக் காளை
கிராமத்தில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டுக் காளை
செளந்தரராஜன்
செளந்தரராஜன்

நம்மிடம் பேசிய முதியவர் செளந்தரராஜன் ‘‘எனக்கு இப்ப வயசு 85. என்னோட தாத்தா காலத்துல இருந்தே எங்க ஊர்ல உள்ள எல்லா வீடுகள்லயும் ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்த்துக்கிட்டு வர்றாங்க. முப்பது வருஷங்களுக்கு முன்னாடி இந்த ஊர்ல பொங்கல் சமயத்துல ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையா நடந்துக்கிட்டு இருந்துச்சு. தமிழ்நாட்டுல உள்ள பல மாவட்டங்கள்ல இருந்தும் காளைகள் பங்கெடுக்கும். மற்ற பகுதிகள்ல உள்ள மாடு பிடி வீரர்களும் இங்க வந்து போட்டியில் கலந்துக்குவாங்க.

சுத்துப்பட்டுக் கிராமங்கள்ல இருந்தெல்லாம் ஏகப்பட்ட ஜனங்க, எங்க ஊர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வருவாங்க. 1990-ம் வருஷத்துக்குப் பிறகு... சில காரணங்களால ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துறதை நிறுத்திட்டோம். ஆனாலும் கூட ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்க்குறதை எங்க ஊர் மக்கள் கைவிடல. டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரைக்கும்... ஒரு ஊர்ல இரண்டு அல்லது மூணு வீடுகள்ல ஜல்லிக்கட்டுக் காளைகள் இருந்தாலே அதிசயமா பார்ப்பாங்க. எங்க ஊர்ல எல்லா வீடுகள்லயும் ஜல்லிக்கட்டுக் காளைகள் இருக்குறதை பலரும் பெருமையா பேசுறாங்க’’ என்றார்.

 பொட்டுவாச்சாவடி கிராமம்
பொட்டுவாச்சாவடி கிராமம்
செந்தில்குமார்
செந்தில்குமார்

இதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் நம்மிடம் பேசியபோது ‘‘எங்க ஊர்ல ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துறது நின்னு போனதால, மாட்டுப்பொங்கல் அன்னைக்கு அய்யனார் கோயிலில் மந்தை நடத்துறதை வழக்கமா வச்சிருக்கோம். காளைகளை அவுத்துவுட்டா, வீரர்கள் பிடிச்சிக்கிட்டு வருவாங்க.

ஒரு ஜல்லிக்கட்டுக் காளை வளர்க்க, ஒரு வருஷத்துக்குச் சுமார் 50,000 ரூபாய் செலவாகுது. ஆனா எங்க பகுதி மக்கள் இந்தச் செலவை, ஒரு சுமையா நினைச்சது கிடையாது. எங்க முன்னோர்கள் காலம் காலமாகக் கடைப்பிடிச்சுக்கிட்டு வந்த காளை வளர்ப்பை, இன்னும் பல தலைமுறைகள் தொடர்ந்துகிட்டே இருக்கணும்ங்கறது எங்க ஊர் மக்களோட எதிர்பார்ப்பு’’ எனத் தெரிவித்தார். ஊர்மக்களிடம் பொங்கல் வாழ்த்து சொல்லிவிட்டு விடைபெற்றோம்.