Published:Updated:

அழிக்கப்படும் பனை மரங்கள்; காற்றில் பறக்கும் அரசு உத்தரவு; பனைமரங்களுக்கு விடிவு பிறக்குமா?

வெட்டப்படும் பனைமரங்கள்
News
வெட்டப்படும் பனைமரங்கள்

பனை மரங்களை வெட்டக் கூடாது எனத் தடைவிதித்தது தமிழக அரசு. இருப்பினும், பல ஊர்களில் பனை மரங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன.

Published:Updated:

அழிக்கப்படும் பனை மரங்கள்; காற்றில் பறக்கும் அரசு உத்தரவு; பனைமரங்களுக்கு விடிவு பிறக்குமா?

பனை மரங்களை வெட்டக் கூடாது எனத் தடைவிதித்தது தமிழக அரசு. இருப்பினும், பல ஊர்களில் பனை மரங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன.

வெட்டப்படும் பனைமரங்கள்
News
வெட்டப்படும் பனைமரங்கள்

தனியாருக்கு சொந்தமான நிலமாக இருந்தாலும், அரசுக்கு சொந்தமான பொது இடங்களாக இருந்தாலும் பனை மரங்களை வெட்டக் கூடாது... தவிர்க்க முடியாத காரணங்களால், வெட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மாவட்ட ஆட்சியரிடம் முறையாக விண்ணப்பித்து, அவர் ஆய்வு செய்து, ஒப்பதல் அளித்த பிறகே வெட்டலாம் எனத் தமிழக அரசு அரசாணை இயற்றியுள்ளது. ஆனால், திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பனை மரங்கள் அழிக்கப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக தற்போது, வெவ்வேறு இடங்களில் செழிப்பாக விளைந்திருந்த மிகவும் பழைமையான பனை மரங்கள், தீ வைத்தும், திராவகம் ஊற்றியும் அழிக்கப்பட்ட அவலம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களைப் பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. பனை மரங்களைப் பாதுகாக்க தமிழ்நாடு பனைப் பொருள்கள் வளர்ச்சி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

வெட்டப்பட்ட பனைமரங்கள்
வெட்டப்பட்ட பனைமரங்கள்

கடந்த சில மாதங்களாக, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கனக்கான பனை மரங்கள் வெட்டப்பட்டு, திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாயத் தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படு கின்றன. செங்கல் காலவாய்களுக்காகவும் அதிக அளவில் பனை மரங்கள் வெட்டப்படுகின்றன. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் உள்ள பனை மரங்களைத் திருட்டுத்தனமாக வெட்டி எடுத்துச் செல்வதோடு மட்டுமல்லாமல். விவசாய நிலங்களில் உள்ள பனை மரங்களை, ஒரு மரத்துக்கு 200 ரூபாய் வீதம் விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கிச் செல்கிறார்கள். சுற்றுச்சூழலுக்கு பல வகைகளிலும் பெரும் துணையாக உள்ள பனை மரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு சிறப்புத் திட்டங்களையும், கடுமையான சட்டங்களையும் உருவாக்க வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, ``பனையிலிருந்து கிடைக்கும் நுங்கு, பதநீர், பனை வெல்லம், பனங்கிழங்கு போன்றவை உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருள்களாக விளங்குகின்றன. பனை ஓலைகள் கூரை வேயவும், பல்வேறு கைவினைப் பொருள்கள் தயாரிக்கவும், முதிர்ந்த பனை மரங்கள் மரச்சட்டங்கள் செய்யப் பயன்படுகின்றன. பல்வேறு பயன்களைத் தரும் பனையானது கற்பக விருட்சம் என அழைக்கப்படுகிறது. பனை மரமானது 100 அடி உயரம் வளர்ந்து 100 ஆண்டுக்காலம் வாழும் தன்மையுடையது.

ராஜவேலு
ராஜவேலு

இப்படி, பல்வேறு பயனுள்ள பனை மரங்களை வெட்டக் கூடாது எனத் தடைவிதித்தது தமிழக அரசு. இருப்பினும், பல ஊர்களில் பனை மரங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. தூர்வாரும் பணியின்போதும், வயல் வரம்புகளை சுத்தம் செய்யும் போதும் பனை மரங்கள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. சில ஊர்களில் திராவகம் ஊற்றியும் முற்றிலுமாக அழிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தான் பனை மரங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. பனை மரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க ஊராட்சிதோறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைத்திட வேண்டும். வயல் வரப்புகளில் உள்ள பனை மரங்களை அசடு எடுத்து சுத்தம் செய்து தர தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரிய அதிகாரிகள் முன் வர வேண்டும், பனை மரங்களின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு கிராமம்தோறும் வழங்கிட வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை நாச்சிக்குளம் பகுதியில் தூர்வாரும் பணியின்போது 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டப்பட்டுவிட்டது. நன்னிலம் அருகேயுள்ள நெடுஞ்சேரி சாலையில் 10-க்கும் மேற்பட்ட பனை மரங்களில் கதண்டு வண்டுகள் இருப்பதாகக் கூறி தீ வைத்து எரிக்கப்பட்டு விட்டது. நீடாமங்கலம் ஆதனூர் - வடுவூர் சாலையில் முன்னாவல்கோட்டை பகுதியில் பனை மரங்களுக்கு மர்ம நபர்கள் திராவகம் ஊற்றி அழித்துள்ளனர். அதே போன்று லெட்சுமாங்குடி அருகே பனங்காட்டாங்குடி சாலையிலும் பனை மரங்கள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அடியோடு பெயர்த்து எறியப்பட்டுள்ளது. திருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் உள்ள சிங்களாஞ்சேரியில் 25 பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

வெட்டப்பட்ட பனைமரம்
வெட்டப்பட்ட பனைமரம்

பனை மரங்களை வளர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பனை மரங்கள் அழிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. பனையைக் காக்க தொடங்கப்பட்ட தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம், பனை மரங்களை பாதுகாப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்துகிறார்.