திண்டுக்கல் எஸ்.கே.சீஸ் ஐவுளிக்கடை சார்பில் இயற்கை விவசாயம் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயற்கை முறையில் விவசாயம் செய்வது மட்டுமில்லாமல் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் விவசாயிகள் கெளரவிக்கப்பட்டனர்.

இயற்கை விவசாயிகளான இரா.வெற்றிமாறன், வெள்ளைச்சாமி, விஜயலட்சுமி, பிரியா ராஜ்நாராயணன், பாலசுப்பிரமணி சங்கீதா ஆகியோரை எஸ்.கே.சீஸ் நிறுவனத்தினர் குப்புசாமி, சண்முகவேலு, பிரவீன்குமார், ஐடியா ப்ளஸ் நிறுவன தலைவர் கிருஷ்ண வரதராஜன் ஆகியோர் கேடயம் கொடுத்து கெளரவித்தனர்.
அப்போது பேசிய இயற்கை விவசாயி வெள்ளைச்சாமி, “இயற்கை விவசாயத்தில் விளைவிக்கும் பொருள்களை நல்ல விலைக்கு விற்க முடியாது என யாரும் நினைக்க வேண்டாம். நல்ல பொருள்களுக்கு நல்ல விலைக்கு கிடைக்கும். ஆனால் தமிழகத்தில் 5 சதவிகிதம் தான் இயற்கை விவசாயம் நடக்கிறது. லாபமே இல்லை என்றாலும் கூட இயற்கை விவசாயத்தை கைவிடக்கூடாது என்ற நோக்கில் விவசாயத்தில் இறங்க வேண்டும். காய்கறி உள்பட அனைத்து உணவுப் பொருள்களிலும் நச்சு இருப்பதால் நோய்க்கு காரணமே உணவாக மாறிவிட்டது. எனவே நச்சில்லா இயற்கை விவசாயத்தை பெருக்க வேண்டும் “ என்றார்.

பாலசுப்பிரமணியன், ``மரபு மாற்றப்பட்ட விதைகளை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். தக்காளி குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வைத்தாலும் சிலநாள்களில் கெட்டுவிடும். அதற்காக பனிகட்டிகளுக்கு கீழே உயிர்வாழும் மீன்களின் ஜின்களை எடுத்து தக்காளிக்கு வைத்து மரபணு மாற்றுகின்றனர். இயற்கைக்கு எதிரானவைகளால் பிரச்னை உருவாகிறது. முன்காலத்தில் விவசாயிகள் செல்வந்தர்களாக இருந்தனர். ஏனென்றால் அவர்கள் நல்ல உணவுப் பொருள்களை விளைவித்துக் கொடுத்தனர். ஆனால் தற்போது மிகவும் சிரமப்படுகின்றனர். அதற்கு பல்வேறு காரணங்களும் இருந்தாலும், நச்சு கலந்த உணவுப் பொருள்களை விளைவித்து கொடுப்பதும் ஒரு காரணமாகிவிட்டது” என்றார்.
இரா.வெற்றிமாறன், “நம்மாழ்வார் இயற்கை வேளாண் விஞ்ஞானி மட்டுமல்ல அவர் ஒரு வாழ்வியல் அறிஞர். அவர் என்னென்ன பயிர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்து பெரும்பாலும் பேசுவது இல்லை. அவர் விவசாயத்துடன் மனிதன் ஒன்றி வாழ்வும் வாழ்க்கை முறையை கற்பித்தார். தற்போது இயற்கை விவசாயம் செய்வோருக்கு தற்போது மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது சந்தைப்படுத்துவது தான். அதற்கான விழிப்புணர்வு தேவை. மூலிகை செடிகள், மரங்களை காப்பாற்ற வேண்டும் அதன் அருமைகளை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் “என்றார்.

பிரியா ராஜ்நாராயணன், “வியாபார நோக்குடன் செயல்படும் சூழல் உள்ளது. நோய் நொடி இல்லாமல் வாழ உணவு முறை நன்றாக இருக்க வேண்டும். வீட்டுத் தோட்டத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். குறிப்பாக அதில் மரபு ரக செடிகளை, மரங்களை வளர்க்க வேண்டும். இடமில்லாமல் இருந்தாலும் கூட விசமில்லா காய்கறிகளை விளைவித்து உணவாக்கி சாப்பிட வேண்டும். மரபு ரக விதைகளை மட்டுமே இயற்கை விவசாயத்தில் பயன்படுத்த வேண்டும். இயற்கை உரம், பூச்சிவிரட்டிகளை பயன்படுத்த வேண்டும். இயற்கை முறையில் விளைவித்து சந்தைக்கு வரும் காய்கறிகளை தேடி வாங்க வேண்டும். அதற்கு 10 ரூபாய் விலை அதிகமாக இருந்தாலும் வாங்க வேண்டும். அப்போது தான் ஆரோக்கியம் கிடைக்கும் மருத்துவமனை செலவுகளை தவிர்க்கலாம். மரபு ரக விதைகளை பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்த வேண்டும்” என்றார்.

விஜயலட்சுமி, ``மதிப்புக்கூட்டல் பொருள்கள் செய்து விற்பனை செய்யலாம். ஆன்-லைன் நுகர்வை தவிர்க்கப் பழகவேண்டும்” என்றார். இவ்விழாவில் இயற்கை விவசாயிகள் விஜயபாரதி, காதர் மீரான், பாரதி, உஸாராணி, தங்கவேல், சரசுலீலா, பரமேஸ், சாந்தி, சீனிவாசன் உள்ளிடோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை ஐடியா ப்ளஸ் நிறுவன அதிகாரி அனு ஒருங்கிணைத்தார்.