நாட்டு நடப்பு
Published:Updated:

டெல்டாவுக்கு வேட்டு வைக்கும் மத்திய அரசு!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

'காய்கறி’ கண்ணம்மா, தன்னுடைய வீட்டு வாசல் அருகே ஒரு பாத்திரத் தில் தண்ணீர் வைத்துவிட்டு அமர்ந்திருந்தார். பறவைகள் தாகம் தீர்த்துக்கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, ‘‘அடடா... எனக்குக்கூட இந்த யோசனை வந்ததில்லை. நல்ல காரியம் பண்ற கண்ணம்மா’’ எனப் பாராட்டவும், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம் அங்கு வந்து சேரவும் ஆரம்பமானது அன்றைய மாநாடு.

‘‘டெல்லியில புதுசா நாடாளுமன்ற கட்டடம் ரொம்பவே பிரமாண்டமா கட்டிக்கிட்டு இருக்காங்க. இந்த விஷயம், உங்க ரெண்டு பேருக்கும் தெரியுமானு எனக்குத் தெரியலை. அந்த நாடாளுமன்ற வளாகத்துல, இந்தியாவுல உள்ள அனைத்து மாநிலங்களோட பாரம்பர்ய மூலிகைச் செடிகளை நட்டு, தோட்டம் அமைச்சிருக் காங்க. சும்மா சொல்லக் கூடாது... செடி, கொடிகள் மேலயும் விவசாயத்து மேலயும், பிரதமர் மோடி அரசாங்கத்துக்கு எப்பவுமே ஒரு தனிப்பாசம்தான்’’ என்று பீடிகை போட்டார் ஏரோட்டி.

‘‘ஆமாமா, இவங்களோட பாசத்தைப் பத்தி நமக்குத் தெரியாதா. ‘படிக்குறது ராமாயணம்... இடிக்குறது பெருமாள் கோயில்’ங்கற கதையா... டெல்டா விவசாயி களோட வாழ்வாதாரத்தையே குழி தோண்டிப் புதைக்குற மாதிரியில மத்திய அரசாங்கம் அந்த அறிவிப்பை வெளி யிட்டுருக்கு. பச்சைப்பசேலுனு பயிர் விளையுற அந்தப் பூமியில, சுரங்கம் தோண்டி நிலக்கரி எடுக்கணும்ங்கற எண்ணம் எப்படித்தான் வந்துச்சோ தெரியலை’’ என்று கடும் கொந்தளிப்புடன் வார்த்தைகளை உதிர்க்கத் தொடங்கிய வாத்தியாருக்குத் தொண்டை கரகரத்தது. ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார் காய்கறி. அதைக் குடித்துவிட்டு மீண்டும் பேச்சை தொடர்ந்தார் வாத்தியார்.

புதிய நாடாளுமன்ற கட்டடம்
புதிய நாடாளுமன்ற கட்டடம்

‘‘மத்திய அரசின் நிலக்கரிச் சுரங்கத்துறை வெளியிட்ட ஏல அறிவிப்பை பார்த்து, டெல்டா விவசாயிங்க மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுமே அதிர்ச்சியில உறைஞ்சுப் போயிட்டாங்க. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பக்கத்துல உள்ள வடசேரி, கடலூர் மாவட்டம் கிழக்கு சேத்தியாத்தோப்பு, அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி... இந்த மூணு வட்டாரங்கள்லயும், எந்தெந்தக் கிராமங்கள்ல, விவசாய நிலங்களுக்குக் கீழ, எவ்வளவு பழுப்பு நிலக்கரி இருக்கு, எவ்வளவு பரப்பளவுல இருக்கு அதையெல்லாம் தோண்டி எடுத்துக்கிட்டுப் போக என்னென்ன ரயில் வசதிகள் இருக்குனு அந்த ஏல அறிவிப்புல ரொம்பத் துல்லியமா சொல்லப் பட்டுருக்கு’’ என்று, வாத்தியார் அந்தத் தகவலை முழுமையாகச் சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்ட காய்கறி, ‘‘ ‘நானும் டெல்டாகாரன்தான்... விவசாயத்தை அழிக்குற மாதிரியான எந்த ஒரு திட்டத் தையும் அனுமதிக்க மாட்டேன்’னு நம்ம முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்கார். எதிர்க்கட்சிகளும் இந்தத் திட்டத்துக்கு எதிராகக் கருத்து தெரிவிச்சிருக்கு. அதைக் கேட்ட பிறகுதான் என் மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு’’ என நிம்மதி பெருமூச்சு விட்டார்.

‘‘விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்துல, சட்டவிரோதமா, கனிமவள குவாரிகள் நிறைய செயல்பட்டுக்கிட்டு. அதனால கடுமையான பாதிப்புகளைச் சந்திச்சுக்கிட்டு இருக்கோம்னு அந்தப் பகுதி விவசாயிகள் ரொம்ப நொந்து போறாங்களாம்’’ என அடுத்த தகவலுக்குத் தாவினார், ஏரோட்டி.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘மரக்காணம் தாலுகாவுல உள்ள நல்முக்கல், கீழ் அருங்குணம் கிராமங்கள்ல, கனிமவள குவாரிகளை தனியாருக்கு 5 - 10 ஆண்டுக்கால ஒப்பந்த அடிப்படையில, மாவட்ட நிர்வாகம் குத்தகை விட்டுருந்துச்சாம். குத்தகைக்காலம் முடிஞ்சு பல வருஷங்கள் ஆன பிறகும் கூட, சட்டவிரோதமா சில குவாரிகள் செயல் படுதாம். அபாயகரமான வெடிப்பொருள் களைப் பயன்படுத்தி. பாறைகளை உடைக் குறாங்க. அதனால அந்தப் பகுதி விவசாயி களோட உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுதுனு அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருத்தர், உயர்நீதிமன்றத்துல வழக்குப் போட்டுருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தப்ப, தமிழக அரசு தரப்பு, முழுப்பூசணிக்காயை சோத்துல மறைக்குற கதையா, ஒரு விளக்கம் அளிச்சிருக்கு.

‘தமிழ்நாட்டுல சட்டவிரோதமாகக் கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படலை. ஒருவேளை அப்படிச் செயல்படுவது கண்டறியப்பட்டால், அந்தக் குவாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’னு அரசு தரப்புல தெரிவிக்கப்பட்டுருக்கு. இந்த அட்டூழியங்களுக்கு எல்லாம் எப்பதான் விடிவுகாலம் பிறக்குமோ’’ என ஆதங்கப்பட்ட ஏரோட்டி, அங்கிருந்து கிளம்ப, அன்றைய மாநாடு கலைந்தது.

பாலசுப்பிரமணியன்
பாலசுப்பிரமணியன்

வனக்கல்லூரிக்குப் புதிய முதல்வர்!

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வனக்கல்லூரியின் புதிய முதல்வராக முனைவர் பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். “எங்கள் மாணவர்களைப் போட்டித் தேர்வு எழுத வைத்து, இந்திய வனப்பணியில் சேர்க்க வேண்டும். அரசின் உதவியுடன் வேளாண் காடுகள் அமைக்க வேண்டும். மரம் வளர்ப்பு மூலம் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க வேண்டும்... உள்ளிட்டவை என்னுடைய அடுத்தகட்ட லட்சியம்’’ என்று தெரிவித்துள்ளார்.