
மரத்தடி மாநாடு
அய்யனார் கோயில் வளாகத்தில்... ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், ‘காய்கறி’ கண்ணம்மா மூவரும் சந்தித்துக் கொண்டார்கள். ‘‘என்ன வாத்தியாரய்யா ரொம்பச் சோர்ந்து போயி இருக்கீங்க. சொல்றேன்னு வருத்துப்பட்டுக்காதீங்க. உங்களுக்கோ வயசாகிப் போச்சு. சித்திரை வெயில் ருத்ர தாண்டவமாடுது. கோடைகாலம் முடியுற வரைக்கு வெளியில தலைகாட்டாதீங்க. அப்புறம் ஏதாவது ஒண்ணுக்கிடக்க ஒண்ணு ஆகப்போகுது’’ என்றார் காய்கறி.
அவரை முறைத்துப்பார்த்த வாத்தியார், “இந்த கிண்டல் தானே வேண்டாங்கறது. சரி அதைவிடு கண்ணம்மா. ஓர் ஆச்சர்யமான சேதி சொல்றேன், கேளு. இந்தியாவிலேயே முதல் முறையா, கேரள மாநில அரசாங்கம், தண்ணீர் பட்ஜெட் திட்டத்தை அறிமுகம் செஞ்சுருக்காங்க’’ என அன்றைய மாநாட்டைத் தொடங்கி வைத்தார். ‘‘என்னது தண்ணிக்கு பட்ஜெட்டா, இது என்ன புதுக் கதையா இருக்கு’’ எனக் கன்னத்தில் கை வைத்தார் காய்கறி.
‘‘கேரளாவுல கோடைகாலத்துல ஏற்படுற தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கத்தான், இப்படியொரு பட்ஜெட் திட்டத்தை நடைமுறைப்படுத்துறதா, அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் சொல்லியிருக்கார். மாநில நீர்வளத் துறை அதிகாரிகள், தகவல் தொழில்நுட்பத் துறை நிபுணர்கள் அடங்கிய குழு, ஒவ்வொரு பஞ்சாயத்து வாரியா ஆய்வு செஞ்சு, தண்ணீர் வரவு-செலவு கணக்கை தயார் பண்ணிக்கிட்டு இருக்கு. எந்தெந்த பயன்பாட்டுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுது, நீர்நிலைகள் மூலம் எவ்வளவு தண்ணீர் கிடைக்குது, எவ்வளவு தண்ணீர் பற்றாக்குறையா இருக்குனு ரொம்பத் துல்லியமா கணக்கெடுத்து, அதுக்கு ஏத்தமாதிரி அந்தந்த பஞ்சாயத்துகள்ல தண்ணீர் சேமிப்பை மேம்படுத்த போறாங்களாம்’’ என வாத்தியார் அந்தத் தகவலை சொல்லி முடித்தார்.

‘‘நீலகிரி மாவட்டம், கொடநாடு பக்கத்துல உள்ள ஒரு வனப்பகுதியில, தனியார் தேயிலை தோட்டத்து ஆளுங்க, சட்டவிரோதமா 2 கிலோமீட்டர் தூரத்துக்குச் சாலை அமைச்ச விவகாரம் இப்ப பூதாகரம் ஆகிக்கிட்டு இருக்கு’’
தனக்குத் தெரிந்த ஒரு தகவலை விவரிக்கத் தொடங்கினார், ஏரோட்டி. ‘‘கொடநாடு பக்கத்துல மேடநாடுனு ஒரு வனப்பகுதி இருக்கு. அங்க சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடுனு ஏகப்பட்ட வனவிலங்குகள், அரிய வகைப் பறவை இனமான இருவாச்சி, பழைமையான மரங்கள், குறிஞ்சிப்புதர்கள் எல்லாம் இருக்குனு வனத்துறை அதிகாரிகள் சொல்றாங்க. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த அந்த வனப்பகுதியிலதான் தனியார் தேயிலை தோட்டத்துக்காரங்க, சட்டவிரோதமா சாலை அமைச்சிருக்காங்க. அதை ஆய்வு பண்ணி உறுதிப்படுத்தின வனத்துறை அதிகாரிகள், அந்தத் தேயிலை தோட்டத்து மேனேஜர் உள்பட மொத்தம் 3 பேர் மேல வழக்குப் பதிவு செஞ்சிருக்காங்க. இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்கள்லயும் பரபரப்பா பேசப்பட்டுக்கிட்டு இருக்கு. இதுக்குக் காரணம், அந்தத் தேயிலை தோட்டம், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனோட மருமகனுக்குச் சொந்தமானதாம். தமிழ்நாடு வனச்சட்டம் 1882-ல் பிரிவு 21-ன் கீழ் அமைச்சர் மருமகன் மீதும் வழக்குப்பதிவு செஞ்சிருக்கு, வனத்துறை.சரி, அடுத்து என்ன நடக்குதுனு பார்ப்போம்’’ என்றார் ஏரோட்டி.
‘‘என்ன நடக்கும்... முன்ஜாமீன் வாங்கிகிட்டு ஜாலியா சுத்தப்போறாங்க. அவ்வளவுதான். சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும். திருப்பூர் மாவட்டம், அனுப்பட்டி கிராமத்துல இயங்கிகிட்டு இருக்குற தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலையினால, அந்தப் பகுதி விவசாயிங்க ரொம்ப அவதிப்பட்டுக்கிட்டு இருக்காங்க. அந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா’’ என்று மிகுந்த ஆதங்கத்தோடு கேள்வி எழுப்பினார், காய்கறி. ‘‘ஆமா கண்ணம்மா, அந்தப் பகுதி விவசாயிகள் ரொம்பக் கொந்தளிப்போடு பேசுற வீடியோவை எல்லாம், நானும் போன்ல பார்த்தேன். வேதனையா இருக்கு’’ என்று சொன்ன வாத்தியார், ஆதங்கத்துடன் தன் பேச்சைத் தொடர்ந்தார்.
‘‘கீரை விவசாயமும், கால்நடை வளர்ப்பும்தான் அந்தப் பகுதி விவசாயிகளோட முக்கிய வாழ்வாதாரம். அந்த ஊர்ல கடந்த 15 வருஷமா இயங்கிக்கிட்டு இருக்குற இரும்பு உருக்காலையில இருந்து வெளியாகக்கூடிய புகையினால, கீரை, தீவனப்புல் எல்லாம் கருகிப் போயிடுதாம். அங்கவுள்ள விவசாயிகள்ல நிறைய பேருக்கு நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட்டுருக்கு. மாசுக்கட்டுப்பாடு வாரியம் உருவாக்கியிருக்குற விதிமுறைகளை, அந்த உருக்காலை நிர்வாகம் ஒழுங்கா கடைப்பிடிக்காததுனாலதான், அந்த ஊர்ல மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுருக்கு.

ஆனா, இதுல என்ன கொடுமைனா, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வெளிப்படையாவே அந்த ஆலைக்கு ஆதரவா செயல்படுறாங்க. அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட உரிமம் மார்ச் 30-ம் தேதியோட முடிவடைஞ்சதுனால, அதை மறுபடியும் புதுப்பிக்கக் கூடாதுனு சொல்லி, அந்த ஊர் விவசாயிகள் கடந்த பல நாள்களா காத்திருப்புப் போராட்டம் நடத்திக்கிட்டு இருக்காங்க. இதுக்கிடையில அந்தப் பகுதி வட்டாட்சியர், அந்த உருக்காலைக்கு இடைக்காலத் தடையும் விதிச்சிருந்தார். ஆனால், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அந்த ஆலை தொடர்ந்து இயங்குறதுக்கான முயற்சிகள்ல ஈடுபட்டுக்கிட்டு இருக்காங்களாம். இதையெல்லாம் பார்க்குறப்ப மனசு கொதிக்குது’’ என்றார் வாத்தியார்.

‘‘அங்க அப்படி. திருவள்ளூர் மாவட்டத்துல இப்ப என்ன நடந்துக்கிட்டு இருக்குனு உங்களுக்குத் தெரியுமா’’ என்று சொன்ன ஏரோட்டி, அது தொடர்பான தகவலை விவரிக்கத் தொடங்கினார்.
‘‘கோடை பட்ட நெல் சாகுபடிக்காக, இப்ப அந்தப் பகுதி விவசாயிகள், நாற்று விடும் பணிகள்ல மும்முரமா ஈடுபட்டுக்கிட்டு இருக்காங்க. இதனால் அங்கவுள்ள உரக்கடைகள்ல விதைநெல் விற்பனை படு ஜோராக நடந்துக்கிட்டு இருக்கு. ஆந்திரா மாநிலத்துல இருந்து கொண்டு வரப்பட்ட உரிமம் பெறாத தரமற்ற விதைநெல் விற்பனை செய்யப்படுறதா புகார் எழுந்திருக்கு. இது சம்பந்தமா, சென்னை மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் உரக்கடைக்காரங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கார்.
சான்று பெற்ற விதைகளை மட்டும்தான் விற்பனை செய்யணும். அறிவிக்கப்படாத மற்றும் சான்று பெறாத நெல் விதைகளை விற்பனை செஞ்சா, விதை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்னு எச்சரிக்கை செஞ்சுருக்கார். அதுமட்டுமில்லாம, விதை நிறுவனங்கள், உரக்கடைகளோட கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி விவசாயிகள் ஏமாறக்கூடாது. விழிப்போடு இருக்கணும். இது சம்பந்தமா ஏதாவது சந்தேகங்கள் ஏற்பட்டா, வேளாண்மைத்துறை அதிகாரிகளை அணுகலாம்னு சொல்லியிருக்கார்.’’
ஏரோட்டி அந்தத் தகவலை முடித்ததும், ‘‘நீங்க இப்ப விதையைப் பத்தி பேசின பிறகுதான், ஊட்டியில ஒருத்தர் செஞ்ச அந்த நல்ல விஷயமே ஞாபகத்துக்கு வருது’’ என்ற காய்கறி சொன்ன சுவாரஸ்யமான அந்தத் தகவல்-
‘‘அந்த ஊர்ல வசிக்குற ஜார்ஜ், தன்னோட பையன் கல்யாணத்துக்காக, 5,000 அழைப்பிதழ்களைத் தயார் பண்ணியிருக்கார். அதை எப்படித் தயார் பண்ணியிருக்காருனு தெரிஞ்சா, நீங்க அசந்துப் போயிடுவீங்க. சணல் பைகள்ல பழ மர விதைகளை வச்சு, அந்த அழைப்பிதழை தயார் பண்ணியிருக்கார். அதை வாங்கிப் பார்த்த அவரோட நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் ரொம்பச் சந்தோஷப்பட்டுப் போயி, அந்த விதைகளை, தங்களோட வீட்டுத் தோட்டங்கள்ல விதைச்சிருக்காங்களாம்.’’

‘‘நாமளும் அந்த பொண்ணு- மாப்பிள்ளையை வாழ்த்துவோம்’’ என்று வாத்தியார் சொல்ல...
‘‘இயற்கையைப் போற்றும் புதுமணத்தம்பதி இயற்கை போல் என்றும் வாழட்டும்’’ என்று மூவருமே ஒரே குரலில் வாழ்த்த, அன்றைய மாநாடு கலைந்தது.
வாத்தியார் சொன்ன கொசுறு...
கோவை மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை இருந்து வருகிறது. இந்த நிலையில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி கூலிக்கடவு - சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் அம்மாநில அரசு சார்பில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ஆற்றை மறித்து கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகள் 90 சதவிகிதம் முடிவடைந்திருக்கின்றன. இது கோவை மாவட்ட விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இரு மாநில அதிகாரிகளும் ஆய்வு செய்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.