
மரத்தடி மாநாடு
ஏரோட்டி’ ஏகாம்பரம் தன்னுடைய வீட்டின் அருகே தண்ணீர்ப் பந்தல் அமைத்திருந்தார். அங்கு வந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி “என்ன ஏகாம்பரம்... நீங்க தண்ணீர்ப் பந்தல் அமைச்ச நேரம், கோடை மழை கொட்டித் தீர்க்குது. ஆனாலும், உங்க நல்ல மனசை பாராட்டியே தீரணும்’’ என்றார். அப்போது ‘காய்கறி’ கண்ணம்மாவும் அங்கு வந்து சேர, ஆரம்பமானது அன்றைய மாநாடு.
‘‘அடிச்ச வெயிலுக்கு ஊரெல்லாம் உஷ்ணம் ஆகி கிடந்துச்சு... இந்தக் கோடை மழை தேவைதான். ஆனா, ஒரு வருத்தமான விஷயம்...’’ எனச் சொல்லிவிட்டு சற்று அமைதி காத்த காய்கறி, கவலை கலந்த தொனியில் அந்தத் தகவலை பகிர்ந்து கொண்டார்.
‘‘தமிழ்நாட்டுல சில பகுதிகள்ல தொடர்ச்சியா பெய்ஞ்ச கனமழையால, கோடைப் பட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கு. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில உள்ள சேகல், பின்னத்தூர், கொருக்கை, கொக்கலாடி, பாமணி, தேசிங்குராஜபுரம் உட்பட இன்னும் சில கிராமங்களைச் சேர்ந்த விவசாயிங்க, கோடைப் பட்டத்துல மானாவாரியா, எள் தெளிக்குறது வழக்கம். இந்த வருஷம் சுமார் 3,000 ஏக்கர்ல எள் விதைச்சிருந்தாங்க. செழிப்பா விளைஞ்ச அந்த எள் பயிர்கள்... நல்லா பூத்து, காய்க்கும் தருணத்துல இருந்திருக்கு. அந்தப் பகுதிகள்ல ஒரே வாரத்துல 178 மி.மீ மழை பெய்ஞ்சு, எள் வயல் எல்லாம் தண்ணிக் காடா மாறிடுச்சாம். இதனால பயிர்கள் அழுக ஆரம்பிச்சுடுச்சுனு அங்கவுள்ள விவசாயிகள் ரொம்பவே வேதனையில இருக்காங்க’’ என்று காய்கறி அந்தத் தகவலை சொல்லி முடித்தார்.
அடுத்து ‘‘நெல் விவசாயிகள் சந்தோஷப்படுற மாதிரி, ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுருக்கார், தமிழ்நாடு உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். அதைப் பத்தி நீங்க எதுவும் கேள்விப்பட்டிங்களா’’ எனக் கேள்வி எழுப்பிய வாத்தியார், அதுகுறித்து விவரித்தார்.
‘‘டெல்டா மாவட்டங்கள்ல போதுமான குடோன் வசதிகள் இல்லாததுனாலதான், ஒவ்வொரு வருஷமும் நெல் கொள்முதல்ல தாமதம் ஏற்படுது. இதனால, அந்த விவசாயிகள் சந்திக்கக்கூடிய துயரம், நான் சொல்லி, உங்க ரெண்டு பேருக்கும் தெரிய வேண்டியதில்லை. மழையில நனைஞ்சு நெல் வீணாப் போகுறதைப் பார்க்கும்போது எனக்கே மனசு பொறுக்காது. அந்த விவசாயிகளுக்கு எப்படி இருக்கும். ‘இனிமே மழைக்காலத்துல இது மாதிரியான பாதிப்பு ஏற்படாமல் இருக்க... 213 இடங்கள்ல, தலா 2.86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில... மேற்கூரை, கான்கிரீட் தளத்துடன்கூடிய குடோன்கள் அமைக்கப்படும்’னு, உணவுத்துறை செயலாளர் சொல்லியிருக்கார். அவர் இன்னொரு முக்கியமான அறிவிப்பையும் வெளியிட்டுருக்கார். அதைக் கேட்டா, ஆச்சர்யத்துல நீ அசந்துப் போயிடுவ கண்ணம்மா. தஞ்சாவூர் பக்கத்துல உள்ள பஞ்சநதிக்கோட்டையில ஒரு கோடி ரூபாய் முதலீட்டுல, நெல் கொள்முதல் பெரு நிலையம் அமைக்கப்போறாங்களாம்’’ என்று வாத்தியார் அந்தத் தகவலை முழுமையாகச் சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்ட காய்கறி, ‘‘பெரு நிலையம்... ஆஹா இந்தப் பேரே அருமையா இருக்கே’’ என்றார்.

‘‘விவசாயிகள் கொண்டு வரக்கூடிய நெல்ல, தூத்துறது தொடங்கி சாக்குமூட்டை கள்ல நிரப்பி தைக்குறது வரைக்கும் எல்லாத் துக்குமே மெஷின்கள்தான். அந்தப் பெரு நிலையத்துல ஒரு நாளைக்கு 400 டன் நெல் கொள்முதல் செய்ய முடியுமாம். அது வெற்றிகரமா செயல்பட்டா, தமிழ் நாடு முழுக்க இது மாதிரியான பெரு கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுமாம்’’ என்றார் வாத்தியார்.
‘‘நீங்க சொல்றத கேக்குறப்பவே, காது குளிருது. ஆனா, இதெல்லாம் ஒழுங்கா நடக்கணுமே? எல்லாத்துக்கும் மேல நெல் கொள்முதல் நிலையங்கள்ல நடக்குற லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க, ஆள்களே இல்லாம, ரோபோ கொண்டு வந்தாதான் சரியா இருக்கும். ஆனா, அதையும்கூட லஞ்சம் வாங்குற ரோபோவா நம்ம அதிகாரிகள் மாத்தி னாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை’’ என்று ஆதங்கத்துடன் சொல்லிவிட்டு, அடுத்த செய்திக்குத் தாவினார் ஏரோட்டி. ‘‘திருப்பூர் மாவட்டம் அனுப்பப்பட்டியில உள்ள இரும்பு உருக் காலையை மூடச் சொல்லி, காத்திருப்புப் போராட்டம் நடத்தின விவசாயிகள் மேல, தமிழக அரசு எடுத்திருக்குற நடவடிக்கையைக் கேட்டீங்கனா, கொந்தளிச்சுப் போயிடுவீங்க. அந்தப் போராட்டம் வெற்றிகரமா தொடர்ந்து நடக்கக் காரணமா இருந்த 7 விவசாயிகள் மேல, வன்கொடுமை சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செஞ்சுருக் காங்க.
இரும்பு உருக்காலையால விவசாயம், கால்நடைகள் பாதிக்கப்படுது. அங்கவுள்ள விவசாயிகள், சுவாச நோய்களுக்கும் ஆளாகி இருக்காங்க. விவசாயிகள் தங்களைப் பாதுகாத் துக்கப் போராட்டம் நடத்துறது ஒரு குற்றமா. 7 விவசாயி கள் மேல வழக்குப் பதிவு செஞ்சதை கண்டிச்சு, தமிழ்நாடு முழுக்கப் போராட்டங்கள் வெடிக் கும்னு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை செஞ்சிருக்காங்க’’ என்றார்.

‘‘தென்காசியில நடந்த ஒரு சுவாரஸ்யமான விஷயம் பத்தி சொல்றேன் கேளுங்க’’ என்று சொன்ன காய்கறி, அதை விவரித்தார். ‘‘அந்த மாவட்டத்துல உள்ள நெல்கட்டும் செவல்ங்கற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகேஷ்வரன், மாவட்ட கலெக்டருக்கு ஒரு முக்கியமான கடிதம் அனுப்பியிருக்கார். ‘நாலு ஏக்கர்ல விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன். களை எடுக்குறதுக்கும் மற்ற பராமரிப்புப் பணிகள் செய்றதுக்கும் வேலை யாள்கள் கிடைக்கல. எங்க பகுதியில உள்ள விவசாயத் தொழிலாளர்கள் எல்லாம், நூறு நாள் வேலைத் திட்டத்துக்குப் போயிட்டாங்க. இப்ப நான் பருத்தி சாகுபடி செஞ்சுருக்கேன். 50 நாள் களுக்குள்ள களை எடுத்தாகணும். இல்லைனா, முதலுக்கே மோசம் வந்துடும். அதனால, உங்க கலெக்டர் ஆபீஸ்ல உபரியா இருக்குற ஊழியர் களை, என்னோட தோட்டத்துக்கு வேலைக்கு அனுப்புங்க. அவங்களுக்குச் சம்பளம், பஞ்சபடி, பயணபடி, மதிய சாப்பாடு எல்லாம் கொடுக்கத் தயாரா இருக்கேன்’னு அந்த விவசாயி, எழுதி யிருக்கார். இது மாதிரி தமிழ்நாட்டுல உள்ள விவசாயிகளும் கலெக்டருங்களுக்கு கடிதம் போட்டா, என்ன ஆகும்’’ என்று சொன்ன காய்கறி, அங்கிருந்து கிளம்ப, அன்றைய மாநாடு கலைந்தது.