மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

ஊருக்கே உலைவைக்கும் உருக்காலை... விவசாயிகளை வதைக்கும் சர்க்கரை ஆலை!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி ஸ்வெட்டர் அணிந்துகொண்டு தன்னுடைய வீட்டு வாசலில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார். அங்கு வந்த ‘காய்கறி’ கண்ணம்மா சற்று உரத்த குரலில் ‘‘அப்படியென்னதான் அதுல போட்டுருக்கு... உங்க கை காலெல்லாம் இப்படி நடுங்குது. நம்ம ஊருக்குள்ளார சிங்கம், புலி எதுவும் வந்துடுச்சோ’’ நக்கலாகச் சொன்னார். அப்போது ‘ஏரோட்டி’ ஏகாம் பரமும் அங்கு வந்து சேர... ஆரம்பமானது அன்றைய மாநாடு.

‘‘எந்த வருஷமும் இல்லாத அளவுக்கு, இந்த வருஷம் பனி வாட்டி எடுக்குது. குளிர் தாங்க முடியலை...’’ கரகரத்த குரலில் சொன்ன வாத்தியார், ‘‘ஊட்டி, கொடைக்கானல்ல நிலைமை இன்னும் மோசம். அங்க, உறைபனியோட தாக்கம் ரொம்ப ஜாஸ்தியா இருக்காம். அதனால மக்களோட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுருக்கு. பயிர்கள் எல்லாம் கருக ஆரம்பிச்சதுனால, அந்தப் பகுதி விவசாயிங்க கவலையில இருக்காங்க. குளிரை பொறுக்க முடியாம கால்நடைகளும் ரொம்ப சிரமப்படுதுங்க. இதே நிலை நீடிச்சுதுனா, அங்கவுள்ள வனப்பகுதிகள்ல இருக்கக்கூடிய விலங்குகள் இடம்பெயர்ந்து மக்கள் வசிப்பிட பகுதிகளுக்கும் வர்றதுக்கு வாய்ப்பிருக்காம்’’ என்றார்.

‘‘கடுமையான பனியிலயும்கூட ராப்பகலா ரோட்டுல உக்காந்து காத்திருப்புப் போராட்டம் நடத்திக்கிட்டு இருக்குறாங்களே, கரும்பு விவசாயிங்க... அவங்க நிலைமையை நினைச்சு பாருங்க வாத்தியாரய்யா... அதை நினைச்சாதான் எனக்கு ரொம்பவே கவலையா இருக்கு’’ தனக்கு தெரிந்த தகவலை சொல்லத் தொடங்கினார் காய்கறி. ‘‘தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடியில உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலைக்குக் கரும்பு கொடுத்த விவசாயிங்களுக்கு முழுமையா பணம் வந்து சேரல. சுமார் 200 கோடி ரூபாய் வர வேண்டியிருக்குனு அந்தப் பகுதி கரும்பு விவசாயிங்க சொல்றாங்க. இதுக்கிடையில அந்தத் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகள் பேர்ல முறைகேடா வங்கிகள்ல கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செஞ்சுடுச்சாம். நாங்க வாங்காத கடனுக்குக் கடனாளி ஆகி நிக்கிறோம்னு அந்த விவசாயிங்க நொந்து போறாங்க. இந்தப் பிரச்னையில இருந்து எங்களை விடுபட வைக்குறதுக்கும், நாங்க வேர்வை சிந்தி உழைச்சு உற்பத்தி செஞ்சு கொடுத்த கரும்புக் கான பணத்தை வாங்கித் தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கணும்னு தொடர்ந்து வலியுறுத்திக்கிட்டே இருந்தாங்க.

விவசாயிகளின் போராட்ட பொங்கல்
விவசாயிகளின் போராட்ட பொங்கல்


இந்த நிலையிலதான் அந்தச் சர்க்கரை ஆலை, ‘கால்ஸ் குரூப்’ங்கற மதுபான நிறுவனத்துக்குக் கைமாறிடுச்சு. இதுக்கு மேலயும் பொறுமையா இருந்தா, நிலைமை ரொம்ப மோசமா போயிடும்னு பயந்துபோன அந்தப் பகுதி கரும்பு விவசாயிங்க, ஆலை வாசல்ல கடந்த பல வாரங்களா, காத்திருப்புப் போராட்டம் நடத்திக்கிட்டு இருக்காங்க. வெட்டவெளியில விடிய விடிய இந்தப் பனியில கிடந்தா, பாவம், அவங்க உடம்பு என்னத்துக்கு ஆகும். நிறைய பேருக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சாம். கொசுக்கடி வேற புடுங்கித் திங்குதாம். ஆனாலும்கூட அந்த விவசாயிங்க தங்களோட போராட்டத்தைக் கைவிடல. பொங்கல் அன்னைக்குக்கூட அங்கயேதான் இருந்திருக்காங்க. காத்திருப்பு போராட்டத் தோட 47-ம் நாள்ங்கறதுனால, அங்கேயே 47 பானைகள்ல பொங்கல் வச்சு கொண்டாடி யிருக்காங்க. இப்ப வரைக்கும் போராட்டம் தொடர்ந்துகிட்டுதான் இருக்கு. ஆனா, தமிழக அரசுதான் கண்டுக்கவே இல்லை” ஆதங்கத்துடன் சொல்லி முடித்தார் காய்கறி.

‘‘எங்களுக்கு வர வேண்டிய கரும்பு பணத்தைதான் தமிழக அரசாங்கத்தால வாங்கித் தர முடியலை... குளிர்ல கிடந்து போராடுற எங்களுக்குப் போர்வையாவது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாங்கித் தரணும்னு அந்த விவசாயிகள் இப்ப கோரிக்கை வச்சுருக்காங்க. அது ஒருபக்கம் இருக்கட்டும். ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் பக்கத்துல உள்ள நொச்சிக்குட்டை ஊராட்சியில இயங்கிக்கிட்டு இருக்குற தனியார் உருக்காலையினால, அங்க சுற்றுச் சூழல் பாதிக்கப்பட ஆரம்பிடுச்சாம்” ஏரோட்டி சொன்னதைக் கேட்டு பதறிப் போன காய்கறி, ‘‘அச்சச்சோ... என்ன ஆச்சு’’ எனத் தன்னுடைய தாடையில் கை வைத்தார்.

‘‘அந்த உருக்காலையில இருந்து வெளியேறக் கூடிய கரும்புகை காத்துல கலக்குறதுனால... ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பாதிப்புகள் ஏற்பட்டு அந்தப் பகுதி மக்கள் அவஸ்தைப் பட்டுக்கிட்டு இருக்காங்களாம். கால்நடை களும் பாதிக்கப்படுதாம். இதனால கொந்தளிச்சுப் போன அந்தப் பகுதி மக்கள், அந்த உருக்காலையை மூடி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கணும்... இல்லைனா, கடுமையான போராட்டங்கள் வெடிக்கும்னு எச்சரிக்கை விடுத்திருக்காங்க. இதனால, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா உளவுத்துறையினர், அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க. அதனால அதிர்ச்சி அடைஞ்ச மாவட்ட நிர்வாகம்... கிராம மக்களையும், ஆலை நிர்வாகத்தையும் அழைச்சு, பேச்சுவார்த்தை நடத்தியிருக் காங்க. உருக்காலையை மூடினாதான் நாங்க நிம்மதியா வாழ முடியும்னு அந்த மக்கள் உறுதியா சொல்லிட்டாங்களாம். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முழுமை யான ஆய்வுகள் செஞ்சு அறிக்கை தாக்கல் செய்ற வரைக்கும், உருக்காலை இயங்கக் கூடாதுனு அரசு தரப்பு உத்தரவிட்டுருக்காம்’’ என்றார் ஏரோட்டி.

‘‘அறிக்கை, அந்த உருக்காலைக்குச் சாதகமா வந்துடுமோனு எனக்குச் சந்தேகமா இருக்கு. ச்சேச்சே... எல்லாத்தையும் சந்தேகப் படக் கூடாது’’ தன்னுடைய தலையில் லேசாகத் தட்டிக்கொண்ட காய்கறி, ‘‘அந்த மக்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்னு நம்புவோம். சரி, நான் ஒரு சேதி சொல்றேன்’’ என்றார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘பசுமை தமிழ்நாடு இயக்கம்னு சொல்லிக்கிட்டு தமிழக முதலமைச்சர் கோடி கோடியா நிதி ஒதுக்குறாரு. ஆனா, இன்னொரு பக்கம் என்னான்னா, பசுமையைப் பாதுகாத்துக்கிட்டு இருக்குற பழைமையான மரங்கள் எல்லாம், சாலை விரிவாக்கம்ங்கற பேர்ல அழிக்கப்பட்டுக்கிட்டு இருக்கு. முதலமைச்சர் சாலை மேம்பாட்டு நிதியில, விழுப்புரம் மாவட்டத்துல சாலை விரிவாக்கப் பணிகள் நடந்துகிட்டு இருக்கு. திண்டிவனம்-மரக்காணம் சாலையில ரெண்டு பக்கமும், நூறு வருஷத்தைக் கடந்த, மிகப் பெரிய புளிய மரங்கள், அந்தச் சாலை முழுக்கப் பந்தல் போட்ட மாதிரி நிழல் கொடுத்துக்கிட்டு இருந்துச்சு... அந்தச் சாலையில வாகனங்கள்ல போகுறவங்களுக்கு வெயிலோட தாக்கம் ரொம்ப இருக்காது. அந்தப் பகுதியில கல்குவாரிகள் அதிகம். அங்கயிருந்து வரக் கூடிய தூசுகளையும் கனரக வாகனங்கள்ல இருந்து வெளியேறக்கூடிய புகையையும், அந்தப் புளிய மரங்கள் கட்டுப்படுத்தியிருக்கு. ஆனா, இப்ப சாலை விரிவாக்கம்ங்கற பேர்ல, அந்த மரங்களையெல்லம் வெட்டி அகற்றிக் கிட்டு இருக்காங்க. அந்தந்த ஊராட்சிகளுக்குப் புளி விற்பனை மூலம் கிடைச்சுக்கிட்டு இருந்த வருமானமும் போச்சு. சரிங்க வாத்தியாரய்யா நான் கிளம்புறேன். பனி ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. வீட்டுக்குள்ளார போயி உட்கார்த்து நியூஸ் பேப்பர் படிங்க. வயசான காலம்... ஏதாவது உடம்புக்கு முடியாம போயிடப்போகுது’’ என்று சொன்ன காய்கறி, அங்கிருந்த கிளம்பினார். அன்றைய மாநாடு கலைந்தது.