ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

மருந்தே வேண்டாம்... நோயற்ற வாழ்வின் ரகசியம்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் நடைபெற்ற நல்வாழ்வியல் முகாம் சம்பவங் களைக் கடந்த இதழில் சொல்லியிருந்தேன். முகாமை அதகளப்படுத்திய அந்தக் குண்டு நண்பர், முகாம் முடிவில் பேசியதைக் கேட்போம்.

‘‘திருவையாறு பக்கம்தான் சொந்த ஊரு. எட்டாவது வரைக்கும் பள்ளிக்கூடம் போனேன். ஆனா, படிப்பு மண்டையில ஏறல. இதுக்குக் காரணம், வீட்டுல நல்ல வசதி. நிலம், ரைஸ் மில்லுனு வருமானத்துக்குக் குறைவு கிடையாது. ஒரே பையன். அதனால செல்லமா வளர்ந்தேன். என்ன கேட்டாலும் கிடைக்கும். எதுக்கும் குறைச்சல் கிடையாது. கூட்டாளி பயலுவளோட சேர்ந்து ஊரைச் சுத்துறது, கடைத்தெருவுல நிக்கிறதுனு பொழுது போகும். சட்டைப் பையில எப்பவும் பணம் இருக்கும். இதனால, வித விதமா சாப்பிடுவோம். இதுவே எனக்குத் தொல்லையா மாறிடுச்சு. உடம்பு பெருத்து, வயசான தோற்றம் உருவாயிடுச்சு. என்னைப் பார்த்தா 50 வயசு ஆளு மாதிரி தெரியும். ஆனா, 30 வயசுதான் ஆகுது. என்னோட உணவுப்பழக்கம் 20 வயசை அதிகமாக்கிடுச்சு.

எங்க ஊருக்கு வர்ற தபால்காரர் நல்லவர். ‘இப்படியே தின்னுக்கிட்டு இருந்தா இவன், சர்க்கரை, ரத்தக்கொதிப்பு... வந்து போயி சேர்ந்திடுவான். அதனால, ஆடுதுறையில முகாம் நடக்குது. அங்க அனுப்புங்க’னு எங்க அப்பாகிட்ட அக்கறையா சொல்லிப் போயிருக்காரு. ‘ஆடுதுறையில சாப்பிடுற போட்டி நடக்குது. அங்க போனா, மூணு நாளும் விதவிதமா சாப்பிடலாம். நிறையா சாப்பிட்டா பரிசும் கொடுப்பாங்க’னு சொந்தக்காரப் பயலுவ ரெண்டு பேர் சொன்னானுவ. நமக்கும் திருவையாறு, தஞ்சாவூர்னு சாப்புட்டு சலிச்சுப் போச்சு. ஆடுதுறை சாப்பாட்டை சாப்பிடலாம்னு சரின்னு சொன்னேன். அந்தப் பயலுவளே வண்டியிலே கூட்டிக்கிட்டு வந்தானுவ. ஆனா, இங்க வந்து பார்த்தா, எதுவுமே நான் நினைச்சபடி இல்ல. மூணு நாளும் எப்படியாவது இருந்துடுய்யானு கெஞ்சிக் கேட்டுக்கிட்டாரு. அவருக்காக பல்லைக் கடிச்சுக்கிட்டிருந்தேன். இங்க ஒரு நாள் பொழுது ஒரு யுகம் மாதிரி இருந்துச்சு.

ரெண்டாவது நாள் காலையில உடல் கழிவுகளை நீக்க எனிமா கொடுக்கக் கூப்பிட்டாங்க. ‘என்னய்யா, அக்கிரமம் இது. ஆஸ்பத்திரியில நோயாளிக்குத்தான் எனிமா கொடுப்பாங்க. நான் நல்லாத்தானே இருக்கேன். எனக்கு எதுக்கு எனிமா. யாராவது ஏமாந்தவங்க இருப்பாங்க. அவங்களுக்குக் கொடுங்கய்யா’னு சண்டை போட்டேன். முகாம் ஏற்பாடு செஞ்ச தாடிக்கார அண்ணன், எனிமா (நீர் சிகிச்சை) பத்தி பொறுமையா விளக்கிச் சொன்னாரு. ‘இதை எடுத்துக் கிட்டா, உடம்பு உற்சாகமா இருக்கும். செரிமானக்கோளாறு இருக்காது. நல்லா பசிக்கும். நீங்க புது மனுஷனா மாறிடுவீங்க. ஒரு முறை எடுத்துக்குங்க. இது உங்களுக்கு வேலை செய்யலைன்னா இன்னைகே, நீங்க ஊருக்குப் போயிடலாம்’னு சொன்னாரு. அவரு கடைசியா சொன்னது ரொம்பப் புடிச்சிருந்துச்சு. சரி, எனிமா எடுத்துப் பார்ப்போம். அப்புறம் அது வேலை செய்யலைனு பொய் சொல்லிட்டு தப்பிச்சு ஓடலாம்னு பார்த்தேன். ஆனா, எனிமா எடுத்துக்கிட்ட பின்னாடி, என்னோட திட்டம் மாறிடுச்சு. உடம்பும் மனசும் லேசாயிடுச்சு. நான் புதுசா பிறந்த மாதிரி இருந்துச்சு.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

எரிச்சல், கோபம், சோர்வுனு எதுவும் இல்லை. எப்படிச் சாப்பிடணும், எதைச் சாப்பிடணும்னு தெளிவா தெரிஞ்சு கிட்டேன். வகை தொகை இல்லாமா முன்னாடி சாப்பிடுவேன். இதனால கடுமையான மலச்சிக்கல் இருந்துச்சு. ‘மலச்சிக்கல்தான் மனச்சிக்கலுக்குக் காரணம்’னு பயிற்சியில சொல்லும்போது, நான் நம்பவே இல்ல. என் அனுபவத்துல சொல்றேன். இதுல கூச்சப்பட எதுவும் கிடையாது. மலச்சிக்கல் இல்லாத மனுஷன்தான் ஆரோக்கியமான முழுமையான மனுஷன். இது சத்தியமான உண்மை. அதுக்கு நானே சாட்சி. ஆரம்பத்துல நான் தொல்லை கொடுத்ததுக்கு என்னை எல்லாரும் மன்னிச்சுடுங்க’’ என்று கைகூப்பி வணங்கி விட்டு உட்கார்ந்தார் அந்தக் குண்டு நண்பர். மூன்று நாளில் ஆளே மாறிப்போய், துடிப்பாக இருந்தார். சரியான உணவு, வாழ்க்கை முறை ஒரு மனிதனை மாற்றும் என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள முடிந்தது.

நல்வாழ்வியல் முகாமில் மூச்சுப்பயிற்சி தொடங்கி எனிமா வரை பலவிதமான விஷயங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. குறிப்பாக, எனிமாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்கு முன்பு தகுந்த இயற்கை மருத்துவர் அல்லது அனுபவ மருத்துவர் அந்த நபருக்கு நாடிப்பார்த்து, வேறு நோய்கள் ஏதாவது உள்ளதா என்று விசாரித்துவிட்டுத்தான் எனிமா என்ற நீர் சிகிச்சையைத் தொடங்குவார்கள். நிற்க.

"மலச்சிக்கல் இல்லாத மனுஷன்தான் ஆரோக்கியமான முழுமையான மனுஷன். இது சத்தியமான உண்மை.’’

இன்றைக்கு உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நீரிழிவு (சர்க்கரை) உள்ளிட்ட பல நோய்களுக்கு அடிப்படைக் காரணம் மலச்சிக்கல்தான் என்று அன்றே சித்த மருத்துவத்தில் சொல்லி வைத்துள்ளார்கள். ‘மலச்சிக்கல் இருப்பவர் ஒன்று நீரிழிவு நோயாளியாக இருப்பார் அல்லது வருங்காலத்தில் நீரிழிவு நோயாளி யாக மாறுவார்’ என்பதை சித்த மருத்துவச் சுவடிகள் தெளிவாகச் சொல்கின்றன.

நம் எல்லோருக்கும் பரிச்சயமான திருக்குறளும்கூட இதைத்தான் வலுயுறுத்திச் சொல்கிறது.

‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்’ (குறள்: 942)

உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை என்பதுதான் இதன் பொருள்.

கடந்த நூற்றாண்டில் உலகின் கவனத்தை ஈர்த்த மாபெரும் தலைவர் ஒருவர், எனிமா எடுத்துக்கொள்வதை மிகவும் ஊக்கப் படுத்தினார். ‘‘உடலைத் தூய்மையாக வைத்திருக்க விரும்பினால், முதலில் நம் குடலைத்தான் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்வார். இதற்காக உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் செய்துபார்த்தார். குடலைத் தூய்மையாக வைத்திருக்க எனிமா கொடுத்துக்கொள்வார். தனக்குப் பிடித்தமான சீடர்களுக்கு எனிமா கொடுப்பதை மகாத்மா காந்தி மகிழ்ச்சியாகச் செய்வார். காந்தியிடம் எனிமா எடுத்துக்கொள்வது அவரிடம் தீட்சை வாங்குவதற்குச் சமம்’’ என்று லூயி ஃபிஷர் டேவிட் குறிப்பிட்டுள்ளார். தி லைப் ஆஃப் மகாத்மா காந்தி (The Life of Mahatma Gandhi) என்ற பெயரில் காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்த அமெரிக்கப் பத்திரிகையாளர் இவர்.

‘பல ரூபங்களில் காந்தி’ புத்தகம்
‘பல ரூபங்களில் காந்தி’ புத்தகம்

சென்னை அண்ணாசாலையில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில் கதர் சட்டைகள் மட்டுமல்ல, தரமான உணவுப் பொருள்களும், அக்குபிரசர் செருப்பு, எனிமா கேன், கண், மூக்குத் தூய்மைப்படுத்தும் குவளை என்று விதவிதமான இயற்கை மருத்துவம் சார்ந்த பொருள்கள் வைத்துள்ளார்கள். கூடவே மகாத்மா காந்தி, இயற்கை மருத்துவம், சித்தர் பாடல்கள்... போன்றவை குறித்த புத்தகங்களும் சகாய விலைக்கு வைத்திருக்கிறார்கள். மாலை நேரங்களில் சில சமயம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நம்முடன் கூடையைத் தூக்கிக்கொண்டு சில்லுக்கருப்பட்டியோ, மோர் மிளகாயோ வாங்கும் அரிய காட்சியையும்கூட காணலாம்.

அது, கூகுள்பே, அமேசான் பே... வராத காலம். ஒருமுறை பொருள் வாங்கிவிட்டு, பில் போடும்போது, சில்லறை இல்லாமல் போகவே, எனக்கு ஒரு நூலை மிக மிகத் தள்ளுபடி விலையில் கொடுத்தார்கள். தள்ளுபடியில் நம்மிடம் தள்ளிவிட்டார்களே என்று சிறிது அச்சத்துடன் நூலை எடுத்துப் பார்த்தேன்.

காந்தி
காந்தி

‘பல ரூபங்களில் காந்தி’ அனுபந்தோ பாத்யாயா; தமிழில்: எம்.ஆர்.ராஜகோபாலன் என்று கொட்டை எழுத்திலிருந்தது. ‘பஹு ரூப் காந்தி’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம். சில சமயம் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்களை வாசிப்பது, பெரும் சித்ரவதையாக இருக்கும். அதற்கு மூல நூலையே படித்து விடலாம் என்று கதற வைத்துவிடும். ஆனால், அதற்கு மாறாக இருந்தது, இந்த நூல். அப்போதைய இந்தியப் பிரதமர் நேரு ‘இப்புத்தகம் குழந்தைகளுக்காக எழுதப் பட்டது; இருப்பினும், பெரியவர்களும் படித்துப் பயன்பெறலாம்’ முன்னுரை எழுதியிருந்தார். பிரபல கார்டூனிஸ்ட் ராசிபுரம் கிருஷ்ணசாமி லஷ்மன் எனப்படும் ஆர்.கே.லஷ்மன் படம் வரைந்திருந்தார். இவை எல்லாவற்றையும்விட அதிலிருந்த தலைப்புகள் சுண்டி இழுத்தன.

காந்திஜி ஒரு உழைப்பாளி, காந்திஜி ஒரு மருத்துவர், காந்திஜி ஒரு விவசாயி, காந்திஜி ஒரு பிச்சைக்காரர், காந்திஜி ஒரு கொள்ளைக் காரர், காந்திஜி ஒரு பத்திரிகையாளர், காந்திஜி ஒரு சமையல்காரர்... என்று வித்தியாசமான தலைப்புகளில் 180 பக்கங்களுக்கு நீண்டிருந்தது புத்தகம். ஆனால், ஒரே மூச்சில் படித்து முடித்துவிடலாம். சுவையான சம்பவங்களுடன் காந்தியின் இயற்கை மருத்துவம், இயற்கை விவசாய ஆர்வத்தைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. அதைப் பற்றி அடுத்த இதழில் சொல்கிறேன்.