
கருத்து
கடந்த 25.2.2023 தேதியிட்ட இதழில் வெளியான ‘இனி கருவிகளே கைகள்’ பகுதியில் ட்ரோன் தொழில்நுட்பம் குறித்த கட்டுரை இடம்பெற்றிருந்தது. அதுகுறித்து மண்புழு விஞ்ஞானியும் மாநில திட்டக்குழு உறுப்பினருமான சுல்தான் இஸ்மாயில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
‘‘இன்றைக்கு, வேளாண்துறையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுடன் கூடிய விரைவில், ‘ட்ரோன்’ தொழில்நுட்பமும் இணைய விருக்கிறது. பிரதமர் இதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதால், இது தொடர்பான பயிற்சி களைப் பல நிறுவனங்கள் கொடுக்க ஆரம்பித்துவிட்டன.

ட்ரோன் நல்ல தொழில்நுட்பம்தான். நான் அதற்கு எதிரானவன் அல்ல. ஆனால், அதன் மூலம், கொடிய விஷத்தன்மை வாய்ந்த ரசாயனங்கள் தெளிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். காற்றின் திசை காரணமாக அது மக்கள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் நீர்நிலைகளில் சென்று சேரக்கூடிய ஆபத்து நிகழலாம்.
கேரளாவில் தாழப் பறக்கும் விமானங் களைப் பயன்படுத்தி வான் வழியே எண்டோ சல்பான் தெளித்ததால் குழந்தைகள் உட்பட ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். அந்த ரசாயனத்தின் வீரியத்தால் அந்தக் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இன்றைக்கும் தொடர்கின்றன.
ட்ரோன் மூலமாகப் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் முறை விவசாயிகளுக்கு உதவிகர மாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித் திருக்கிறது. ஒரு விவசாயி தன்னுடைய பயிர்களுக்கு ரசாயன உரத்தை ட்ரோன் மூலம் தெளிக்கையில், அது அருகிலிருக்கும் இயற்கை விவசாயியின் பயிர்களின் மீதும் படும்தானே... ரசாயன உரங்களை ட்ரோன் வழியே தெளிப்பதற்கு முன்னால், எவ்வளவு உயரத்திலிருந்து தெளிக்கவிருக்கிறோம்; அந்த நேரத்தில் காற்றின் அழுத்தம், திசை மற்றும் வேகம் எப்படியிருக்கும்; விவசாய நிலத்தில் மட்டுமே தெளிக்கப்படுவதற்கான கோணம் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டு செயலில் இறங்க வேண்டும்.
அப்படித் தெளித்தாலுமே, ரசாயனத்தின் அடர்த்தியைப் பொறுத்தும், திடீரென வீசும் காற்றைப் பொறுத்தும் அது எந்த திசையில் வேண்டுமானாலும் பரவலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, ரசாயன இடுபொருள்களுக்குப் பதிலாக பஞ்சகவ்யா, மீன் அமிலம், தேமோர் கரைசல், வெர்மி வாஷ் போன்ற இயற்கை இடுபொருள் களை ட்ரோன் மூலமாகப் பயிர்களுக்குத் தெளிக்க விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.
இதுகுறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயிற்சியளித்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தலாம். ஆனால், அதைப் பாதுகாப்பாக செய்ய வேண்டும்’’ என்றார்.